06.01 – சிவன் சிலேடைகள்
2010-01-28
06.01.112 - சிவன் - திருமால் - சிலேடை
-----------------------------------------------
வானரர் வாழ்த்தும் அரவணைநீர் மையரவர்
கானலர் சூடுவர்அஞ் சக்கரர் - மானடிப்பார்
காத்தருள்வார் வெற்புவில் கையேந்தி ஆரழல்சேர்
நேத்திரனார் நீலவண்ணர் நேர்.
சொற்பொருள்:
வானரர் - வான் நரர்; / வானரர்;
வான் - தேவர் (இடவாகுபெயர்);
அணைதல் - பொருந்துதல்; / படுத்தல் (To lie down);
அணை - மெத்தை; படுக்கை;
அரவணை நீர்மையரவர் - அரவு அணை (வினைத்தொகை) நீர் மையர்; அவர் / அரவு அணை (படுக்கை) நீர்மையர்; அவர்;
நீர் - கடல்;
மை - கருநிறம்; விஷம்;
நீர்மை - தன்மை; சிறந்த குணம்;
நீர்மையர் - கடல் விடத்தர்; (நீர் - கடல்; மை - விஷம்); / தன்மையர்; கடல் நடுவில் இருப்பவர்; (மையம் - நடு); (நாராயணன் - நீரை இடமாக உடையவன் - திருமால்);
கான் - வாசனை;
அலர் - பூ;
நலர் - நல்லர் (நல்லவர்கள்) - இடைக்குறையாக வந்தது;
கானலர் - கான் அலர் சூடுவர் (கான் + அலர்) / கால், ந[ல்]லர் சூடுவர் (கால் + நலர்);
அம் - அழகு;
அக்கரம் - எழுத்து;
அஞ்சக்கரர் - அஞ்சு அக்கரர் / அம் சக்கரர்;
மான் - பெருமான்; பெரியோன் (Great person or being); / மான் என்ற விலங்கு;
மால் - திருமால்; கருமை; பெருமை;
நடித்தல் - 1. கூத்தாடுதல்; 2. பாசாங்கு செய்தல்;
மானடிப்பார் - மான் நடிப்பார் (பெருமான்; நாட்டியம் ஆடுவார்); / மான் அடிப்பார் (இராமனாய் மான் வேடத்தில் வந்த மாரீசனைப் புடைப்பார்); மால் நடிப்பார் (கிருஷ்ணனாய் மிகப் பாசாங்கு செய்வார்);
வெற்பு - மலை;
வெற்புவில் - 1) மேருமலை ஆகிய வில்; 2) வெற்பும் வில்லும் - உம்மைத்தொகை.
நீலவண்ணர் - கரிய நிறத்தினர் - விஷ்ணு;
திருமால்:
வானரர் வாழ்த்தும், அரவணை நீர்மையர்; - (இராமனாக வந்தபோது) வானரர்கள் போற்றுகின்ற, (நீர் நடுவே) நாகப் படுக்கை உடையவர்;
அவர் கால் நலர் சூடுவர் - அவர் திருவடியை நல்லவர்கள் (தங்கள் உச்சியில்) சூடுவார்கள்;
அம் சக்கரர் - அழகியவர்; சக்கராயுதம் உடையவர்;
மான் அடிப்பார் (--அல்லது-- மால் நடிப்பார்) - இராமனாய் மானைப் புடைப்பார்; (--அல்லது-- கிருஷ்ணனாய் மிகப் பாசாங்கு செய்வார்);
காத்தருள்வார் வெற்பு, வில் கை ஏந்தி - கிருஷ்ணனாய் மலையைக் குடையாக உயர்த்திப் பிடித்தும், இராமனாய் வில்லைக் கையில் ஏந்தியும் காப்பார்;
நீல வண்ணர் - கரிய நிறம் உடைய விஷ்ணு;
சிவன்:
வான் நரர் வாழ்த்தும், அரவு அணை, நீர் மையர் - வானவர்களும் மனிதர்களும் வணங்குகின்ற, பாம்புகள் பொருந்தும் திருமேனியர்; கடல் விஷம் உண்டவர்;
அவர் கான் அலர் சூடுவர் - அவர் வாச மலர்களை அணிவார்;
அஞ்சு அக்கரர் - திருவைந்தெழுத்தானவர்;
மான் நடிப்பார் - பெருமான்; திருநடம் செய்வார்;
காத்தருள்வார் வெற்புவில் கை ஏந்தி - (முப்புரம் எரித்தபொழுது) மேருமலையாகிய வில்லை ஏந்திக் காத்தருள்பவர்;
ஆரழல் சேர் நேத்திரனார் - தீ இருக்கும் நெற்றிக்கண் உடையவர்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment