Thursday, March 17, 2022

06.01.113 - சிவன் - மரம் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்


2010-01-30

06.01.113 - சிவன் - மரம் - சிலேடை

-----------------------------------------------

இலைமலர் மேல்திகழு மெய்ப்பை அகற்றி

நலம்தரும் தாள்நிழல் நாளு - மலைபவர்க்

கென்றுமில்லா மாண்பிருக்கும் ஏகபா தங்காட்டும்

மன்றினடம் ஆடி மரம்.


சொற்பொருள்:

மெய்ப்பை - உடலாகிய கூடு;

எய்ப்பு - இளைப்பு (Weariness); / வறுமைக் காலம் (Time of adversity);

திகழுமெய்ப்பை - 1. திகழும்; எய்ப்பை / 2. திகழும்; மெய்ப்பை

நிழல் - 1. Shade, shadow; சாயை. / 2. ஒளி; புகலிடம்; தானம்;

அலைபவர் - திரிபவர்;

மலைபவர் - மயங்குபவர்; மாறுபடுபவர்;

இல்லாமாண்பு - 1. இல் ஆம் மாண்பு / 2. இல்லா மாண்பு;

பாதம் - 1. மரத்தின் அடியிடம்; அடித்தண்டு; / 2. திருவடி;

ஏகபாதர் - ஒற்றைத் தாளர் ஆகிய சிவமூர்த்தம்; (A manifestation of Šiva with one foot);

(அப்பர் தேவாரம் - 6.35.2 - "பாதந் தரிப்பார்மேல் வைத்த பாதர்....ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்");

மன்றினடம் ஆடி - மன்றில் நடம் ஆடி - அம்பலத்தில் நடனம் செய்பவன்;


மரம்:

இலை மலர் மேல் திகழும் - இலையும் பூக்களும் மேலே இருக்கும்.

எய்ப்பை அகற்றி நலம்தரும் தாள் நிழல் - (வெயிலில்) அதன் கீழ் இருக்கும் நிழல் (மக்கள்) களைப்பைப் போக்கி நலம் அளிக்கும்.

நாளும் அலைபவர்க்கு என்றும் இல் ஆம் மாண்பு இருக்கும் - எப்போதும் ஊர் ஊராகத் திரிபவர்க்கு மரத்தடியே வீடும் ஆகும். (பஜகோவிந்தம் - 18: "சுர மந்திர தரு மூல நிவாஸ: .....")

ஏக பாதம் காட்டும் மரம் - ஒரே ஒரு அடிமரம் காட்டும் மரம்.


சிவன்:

இலை மலர் மேல் திகழும் - திருமுடிமேல் மலர்களும் வில்வம் முதலிய இலைகளும் சூடுவான்.

மெய்ப்பை அகற்றி நலம் தரும் தாள்நிழல் - பக்தர்கள் உடலாகிய கூட்டை அடையாதபடி வினைதீர்த்து நலம் அளிப்பான். (தாள் நிழல் - திருவடி);

நாளும் மலைபவர்க்கு என்றும் இல்லா மாண்பு இருக்கும் - என்றும் மயங்கி முரண்படுபவர்களுக்கு இல்லாதவன். (அவர்களால் அறியப்படாதவன்; அவர்களுக்கு அருளில்லாதவன்);

ஏகபாதம் காட்டும் - ஏகபாத மூர்த்தி.

மன்றில் நடம் ஆடி - தில்லையம்பலத்தில் ஆடுகிற நடராஜன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment