Saturday, October 29, 2022

V.026 - அம்புதை - (மடக்கு)

2013-02-20

V.026 - அம்புதை - (மடக்கு)

--------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)


அம்புதை சடையின் மேலோர்

.. அணிமதி சூடும் அண்ணல்

அம்புதை ஏவும் வேளை

.. அனங்கனென் றாக்கும் கண்ணன்

அம்புதை கேழற் பின்போய்

.. அருச்சுனற் கருளும் வேடன்

அம்புதை நாவ லூர்க்கோன்

.. அவர்முடி வைத்தான் தானே.


அம் புதை சடையின்மேல் ஓர் அணி-மதி சூடும் அண்ணல் - கங்கையை ஒளித்த சடையின்மேல் அழகிய சந்திரனைச் சூடும் தலைவன்; (அம்புதை - 1a. அம்+புதை சடை = நீரை உள்ளடக்கிய சடை; 1b. அம்பு+உதை சடை = அலைமோதுகின்ற சடை; "அம்பு - நீர்" என்ற பொருளில்); (அம் - நீர்; அம்பு - நீர்); (புதை - புதைத்தல் (ஒளித்துவைத்தல்));

அம் புதை ஏவும் வேளை அனங்கன் என்று ஆக்கும் கண்ணன் - அழகிய மலர்க்கணையை ஏவிய மன்மதனை உடலற்றவன் ஆக்கிய நெற்றிக்கண்ணன்; (அம்புதை - 2. அம்+புதை = அழகிய அம்பு = மலர்க்கணை); (அம் - அழகு); (புதை - அம்பு); (வேள் - காமன்); (அங்கம் - உடல்);

அம்பு தை கேழற்பின் போய் அருச்சுனற்கு அருளும் வேடன் - வேடனாகிக் காட்டில் அம்பு தைத்த பன்றிப்பின் சென்று அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருளியவன்; (அம்புதை - 3. அம்பு+தை = அம்பு தைத்த); (தை - தைத்தல்; அம்பு முதலியன ஊடுருவுதல்); (கேழல் - பன்றி);

அம்பு-உதை நாவலூர்க்கோன்அவர் முடி வைத்தான்தானே - (திருவதிகையில் முதியவர் உருவில் சென்று) சுந்தரர் உறங்கும்போது அவர் தலையில் அன்போடு உதை வைத்த சிவபெருமான்; (அம்புதை - 4. அம்பு+உதை = அன்பு உதை; அன்பு, "அம்பு" என மருவியது); (அப்பர் தேவாரம் - 5.1.1 - "அன்னம் பாலிக்கும் .... என்னம் பாலிக்குமாறு ....." -- என் அன்பு எனப் பிரிக்க. அன்பு என்பது அம்பு என மருவிற்று); (நாவலூர்க்கோன் - சுந்தரமூர்த்திநாயனார்; அவர் - பகுதிப்பொருள்விகுதி);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

Thursday, October 27, 2022

T.171 - பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - சோம்பித் திரிமனப் பாங்குற்று

2013-02-06

T.171 - பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - சோம்பித் திரிமனப் பாங்குற்று

--------------

(வண்ணவிருத்தம்;

தாந்தத் தனதனத் தாந்தத் தனதனத்

தாந்தத் தனதனத் .. தனதான)

(Somewhat similar to the syllabic pattern of - காந்தட் கரவளை - திருப்புகழ் - பாண்டிக்கொடுமுடி - but with தனதனத் instead of தனதன in the pattern)


சோம்பித் திரிமனப் பாங்குற் றிடர்மிகத்

.. .. தோன்றக் கவலையுற் .. றலைநீரில்

.. தூண்டிற் கயலையொத் தேங்கித் துயரிடைத்

.. .. தோய்ந்தித் தரைமிசைச் .. சுழலாமல்

சாம்பற் பொலிவினைத் தாங்கிப் பிறவியைத்

.. .. தாண்டிச் சுகமுறற் .. கருளாயே

.. தாங்கற் கருநெருப் பேந்திப் புனலினைத்

.. .. தாங்கித் திகழ்மழுப் .. படையானே

ஓம்பித் தொழநினைப் பாங்கற் றவர்நடுக்

.. .. கோங்கத் தழலுருக் .. கொளுமீசா

.. ஊண்பெற் றிடவிரப் பாம்பெற் றியசிரித்

.. .. தூன்றித் தசமுகற் .. செறுபாதா

பாம்பைப் புதுமலர்க் கோங்கைச் சிறுமதிப்

.. .. பாங்கிற் புனைசுடர்ச் .. சடையானே

.. பாய்ந்தெற் றிடுபுனற் பாங்கர்த் திகழ்திருப்

.. .. பாண்டிக் கொடுமுடிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

சோம்பித் திரி மனப்பாங்கு உற்று, இடர் மிகத்

.. .. தோன்றக் கவலையுற்று, அலைநீரில்

.. தூண்டிற் கயலை ஒத்து ஏங்கித், துயரிடைத்

.. .. தோய்ந்து, இத்-தரைமிசைச் சுழலாமல்,

சாம்பற் பொலிவினைத் தாங்கிப் பிறவியைத்

.. .. தாண்டிச் சுகம் உறற்கு அருளாயே;

.. தாங்கற்கு அரு-நெருப்பு ஏந்திப், புனலினைத்

.. .. தாங்கித் திகழ் மழுப்-படையானே;

ஓம்பித் தொழ நினைப்பு ஆங்கு அற்றவர் நடுக்கு

.. .. ஓங்கத் தழல்-உருக் கொளும் ஈசா;

.. ஊண் பெற்றிட இரப்பு ஆம் பெற்றிய; சிரித்து

.. .. ஊன்றித் தசமுகற் செறு-பாதா;

பாம்பைப், புதுமலர்க் கோங்கைச், சிறுமதிப்

.. .. பாங்கிற் புனை சுடர்ச்-சடையானே;

.. பாய்ந்து எற்றிடு புனற் பாங்கர்த் திகழ் திருப்

.. .. பாண்டிக் கொடுமுடிப் பெருமானே.


சோம்பித் திரி மனப்பாங்குற்று, டர் மிகத் தோன்றக்வலையுற்று - நற்செயல்கள் செய்யாது அலையும் மனநிலையினால், துன்பம் மிகவும் வர, அதனால் கவலையடைந்து; (சோம்புதல் - மந்தமாதல்); (திரிதல் - அலைதல்; தன்மைகெடுதல்); (மனப்பாங்கு - மனநிலை; பாங்கு - இயல்பு);

லைநீரில் தூண்டிற் கயலைத்து ஏங்கித் - அலைக்கின்ற (/ அலையுடைய) நீரில் தூண்டிலில் சிக்கிய மீன் போல வருந்தி; (கயல் - ஒருவகை மீன்); (ஏங்குதல் - மனம்வாடுதல்; அஞ்சுதல்);

துயரிடைத் தோய்ந்து, த்-தரைமிசைச் சுழலாமல் - துயரத்தில் மூழ்கி, இந்தப் பூமியில் பிறவிகளில் சுழலாமல்; (தோய்தல் - முழுகுதல்); (சுழல்தல் - சுற்றுதல்; சஞ்சலப்படுதல்);

சாம்பற் பொலிவினைத் தாங்கிப் பிறவியைத் தாண்டிச் சுகம் உறற்கு அருளாயே - திருநீற்றைப் பூசிப் பிறவிக்கடலைக் கடந்து இன்பம் அடைவதற்கு அருள்வாயாக; (சாம்பல் - திருநீறு); (உறல் - உறுதல் - அடைதல்; பெறுதல்); (அப்பர் தேவாரம் - 4.102.1 - "சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட்டு உய்ம்மின்களே");

தாங்கற்கு அரு-நெருப்பு ஏந்திப், புனலினைத் தாங்கித் திகழ் மழுப்-படையானே - கையில் தாங்குவற்கு அரிய நெருப்பை ஏந்தி, முடிமேல் கங்கையைத் தாங்கித் திகழ்கின்ற, மழுவாயுதத்தை ஏந்தியவனே;

ஓம்பித் தொழ நினைப்பு ஆங்கு அற்றவர் நடுக்கு ங்கத் தழல்-ருக் கொளும் ஈசா - உன்னைப் பேணி வழிபட எண்ணாத பிரமனும் திருமாலும் அங்கு மிக அஞ்சும்படி ஜோதிவடிவாக அவர்முன் தோன்றிய ஈசனே; (ஓம்புதல் - பேணுதல்; போற்றுதல்); (ஆங்கு - அங்கு; அசைச்சொல்லாகவும் கொள்ளலாம்); (நடுக்கு - நடுக்கம் - அச்சம்; துன்பம்);

ஊண் பெற்றிட இரப்பு ஆம் பெற்றிய - உணவு பெற யாசித்தலை உடைய பெருமையினனே; (ஊண் - உணவு); ( இரப்பு - யாசித்தல்); (பெற்றிய - பெற்றியனே; பெற்றி - பெருமை);

சிரித்து ஊன்றித் தசமுகற் செறு-பாதா - சிரித்துத் திருப்பாதவிரலை ஊன்றி இராவணனை நசுக்கியவனே; (தசமுகன் - இராவணன்); (செறுதல் - வருத்துதல்); (தசமுகற் செறு - தசமுகனைச் செற்ற; இரண்டாம்வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் உள்ள ன் ஒற்று ற் ஒற்றாகத் திரியும்); (அப்பர் தேவாரம் - 4.80.10 - "மலைமகள்கோன் சிரித்து அரக்கன் மணிமுடி பத்தும் அணிதில்லை அம்பலவன் நெருக்கி மிதித்த விரல்");

பாம்பைப், புதுமலர்க் கோங்கைச், சிறுமதிப் பாங்கிற் புனை சுடர்ச்-சடையானே - பாம்பையும், புதிய கோங்கமலரையும், இளந்திங்களின் பக்கத்தில் அணிந்த ஒளியுடைய சடையை உடையவனே; (கோங்கு - கோங்கமலர்); (பாங்கு - பக்கம்); (அப்பர் தேவாரம் - 4.33.3 - "சிறுமதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து");

பாய்ந்து எற்றிடு புனற் பாங்கர்த் திகழ் திருப்பாண்டிக்கொடுமுடிப் பெருமானே - பாய்ந்து அலைமோதும் காவிரியின் கரையில் திகழ்கின்ற பாண்டிக்கொடுமுடியில் எழுந்தருளிய பெருமானே; (எற்றுதல் - மோதுதல்); (பாங்கர் - பக்கம்);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

S.136 - சிவன் - புயல் - சிலேடை

2012-10-29

S.136 - சிவன் - புயல் - சிலேடை

-------------

நீர்வெளி வல்வளியாய் நிற்கும் நிலமஞ்சும்

பேர்தரும் உச்சமழை பெய்யுமால் - ஆரும்

துணையாம் புணையென்று சொல்வர் புயலோர்

கணையால் எயிலெய்தான் காண்.


சொற்பொருள்:

வெளி - 1. பரப்பு (open space); / 2. ஆகாயம்;

வல் - வலிமை; விரைவு;

வளி - காற்று;

அஞ்சும் - 1. பயப்படும்; / 2. ஐந்தும்;

பேர் - பெயர்;

பேர்தல் - போதல் (To depart, go away);

தருதல் - 1. ஒரு துணைவினை (An auxiliary added to verbs); / 2. கொடுத்தல்;

உச்சம் - 1. அறுதியளவு (Extreme limit); / 2. உச்சந்தலை;

மழை - 1. மாரி (Rain); / 2. நீர்;

ஆல் - 1. ஓர் அசைச்சொல்; / 2. ஆலம் - விஷம்;

ஆர் - யார்;

ஆர்தல் - உண்ணுதல்;

புணை - தெப்பம்; மரக்கலம்;

சொல்லுதல் - 1. கூறுதல் / 2. புகழ்தல்;

எயில் - கோட்டை;

காண் - பார்; முன்னிலை அசைச்சொல்;


புயல்:

நீர்வெளி வல்வளியாய் நிற்கும் - கடற்பரப்பில் மிக வலிமை உடைய காற்றாகத் தோன்றும்;

நிலம் அஞ்சும் - உலகம் அதனைக் கண்டு அச்சம்கொள்ளும்;

பேர்தரும் - (அந்த அச்சத்தால்) வேறு இடங்களுக்கு நீங்கிச்செல்வார்கள் (evacuation to safer places ahead of storm's landfall); (தருதல் - ஒரு துணைவினை); (இக்காலத்தில் புயல்களுக்குப் பெயர் வைக்கும் பழக்கத்தை ஒட்டி, "அதற்கு ஒரு பெயரைக் கொடுக்கும்" என்றும் பொருள்கொள்ளலாம்);

உச்சமழை பெய்யுமால் - மிக அதிக மழை பெய்யும்; (ஆல் - அசைச்சொல்);

ஆரும் "துணை ஆம் புணை" என்று சொல்வர் - (புயலால் வெள்ளமும் ஏற்படுவதால்) எவரும் "ஒரு படகு இருந்தால் உதவும்" என்று சொல்வார்கள்;

புயல் - பேய்க்காற்றும் பெருமழையும் உடைய புயல் (cyclone / hurricane);


சிவன்:

நீர் வெளி வல்வளியாய் நிற்கும் - நீர், ஆகாயம், வலிய காற்று, என ஐம்பூதங்களாய் நிற்பவன்; (தீ, நிலம் என்ற மற்ற இருபூதங்களும் குறிப்பால் பெறப்பட்டன);

நிலம் அஞ்சும் - உலகோர் (இறைவனுக்குப்) பயப்படுவர்; ((அப்பர் தேவாரம் - 5.23.9 - "அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும் நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ");

பேர் தரும் - (ஒரு பெயரும் இல்லாத அவனுக்குப்) பல பெயர்கள் தருவர்;

("நிலம் அஞ்சும் பேர் தரும்" - தமிழ் இலக்கணம் சொல்வதுபோல், "குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற இயற்கையான ஐந்துநிலப்பிரிவுகளில் உள்ளோர் கடவுளுக்கு முருகன், திருமால், முதலிய வெவ்வேறு பேர்கள் தருவர்" என்றும் பொருள்கொள்ளலாம்);

உச்சம் மழை பெய்யும் - அவன் உச்சந்தலையில் கங்கை பொழியும்; (இலக்கணக் குறிப்பு: "உச்சம் + மழை = உச்சமழை" - என்று ஈற்று ம் கெட்டுப் புணரும்); (சம்பந்தர் தேவாரம் - 1.115.3 - "தழைமயில் ஏறவன் தாதையோதான் மழைபொழி சடையவன்");

ஆல் ஆரும் - விஷத்தை உண்பான்;

துணை ஆம் புணை என்று சொல்வர் - (பிறவிக்கடலைக் கடக்க) உதவும் தெப்பம் என்று புகழ்வார்கள்;

ஓர் கணையால் எயில் எய்தான் - ஒரு கணையால் முப்புரங்களை எய்து அழித்த சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- -----------

S.135 - சிவன் - காகம் - சிலேடை

2012-10-20

S.135 - சிவன் - காகம் - சிலேடை

-------------

உண்டிக் கெனவுழலுங் கண்ட விடமுண்ணுங்

கண்டங் கறுக்குங் கரவாமை - கொண்டு

கரையும் நரர்க்கு நலம்செய்யுங் காக்கை

திரைநதிசேர் சென்னிச் சிவன்.


சொற்பொருள்:

கண்டவிடம் - 1. கண்ட விடம் (காணப்பட்ட நஞ்சு); 2. எவ்விடமும்;

கரவாமை - வஞ்சனை இன்மை;

கொண்டு - 1. கொள்ளுதல் - மேற்கொள்ளுதல் (To adhere to, observe;); 2. மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு;

கரைதல் - 1. மனம் உருகுதல்; 2. ஒலித்தல்;

திரை - அலை; திரைத்தல் - அலைமோதுதல்;

சென்னி - தலை;


காகம்:

உண்டிக்கு என உழலும் - உணவுக்கு என்று அலையும்;

கண்ட இடம் உண்ணும் - பாகுபாடு இன்றி இரை கண்ட எந்த இடத்திலும் தின்னும்;

கண்டம் கறுக்கும் - கழுத்துக் கறுப்பாக இருக்கும்;

கரவாமை கொண்டு கரையும் - வஞ்சனையின்மையால் கரைந்து தன் இனத்தோடு பகிர்ந்து உண்ணும்; (திருக்குறள் - 527 - "காக்கை கரவா கரைந்துண்ணும்");

நரர்க்கு நலம் செய்யும் காக்கை - (இறந்த பிராணிகளின் ஊனையும் மற்றவற்றையும் உண்டு) மனிதர்க்குப் புறச்சூழல் சுத்தமாக இருக்க உதவும் காகம். ("பிண்டபோஜனம் செய்து மானிடர்களின் பித்ருக்கள் வழிபாட்டுக்கு உதவி செய்யும்" என்றும் பொருள்கொள்ளக்கூடும்);


சிவன்:

உண்டிக்கு என உழலும் - (மண்டையோட்டை ஏந்திப் பிச்சையாக இடும்) உணவுக்குத் திரிவான்; (உழலும் - உழல்பவன்; செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று);

கண்ட விடம் உண்ணும் - காணப்பட்ட நஞ்சை (ஆலகாலத்தை) உண்பான்;

கண்டம் கறுக்கும் - மிடறு கருமையாக இருக்கும்; ("கண்டங்கறுக்கும் = கண்டு அங்கு அறுக்கும் - பக்தர்களைக் கடைக்கண்ணால் பார்த்து அவர்கள் குறைகளைத் தீர்ப்பான்" என்றும் பொருள்கொள்ளலாம்);

கரவாமை கொண்டு கரையும் நரர்க்கு நலம் செய்யும் - வஞ்சனையின்றி உள்ளம் உருகும் பக்தர்களுக்கு நன்மை செய்வான்; ("வஞ்சனையின்றி" என்பதைச் சிவனுக்கும் அடைமொழியாகக் கொள்ளலாம்);

திரைநதி சேர் சென்னிச் சிவன் - அலைக்கும் கங்கையைத் தலைமேல் ஏற்ற சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

----------- -----------

M.058 - சேயவன் - பேரான்றன் - மடக்கு - (முருகன் / சிவன்)

2012-08-10 (ஆடிக்கிருத்திகை நாள்)

M.058 - சேயவன் - பேரான்ன் - மடக்கு - (முருகன் / சிவன்)

--------------

சேயவன் முக்கண்ணன் தேவர் தொழஅருள்செய்

சேயவன் வந்தனை செய்யார்க்குச் - சேயவன்

பேரான்றன் தாள்பேணும் பெற்றியரை ஆயிரம்

பேரான்றன் சீர்நாவே பேசு.


முற்குறிப்பு: இப்பாடலை முருகன் பாடலாகவும் சிவன் பாடலாகவும் பொருள்கொள்ளக்கூடும்;


சொற்பொருள்:

சேய் - செம்மை; மகன்; தலைவன்; தூரம்;

சே - எருது;

பேர்தல் - பெயர்தல் - நீங்குதல்; விலகுதல்;

பேர் - பெயர்; நாமம்;

சேயவன் - 1. சிவந்தவன்; 2. a. விடையவன் (இடபவாகனன்); b. மகன்; 3. தூரத்தில் உள்ளவன்;

பேரான்தன் - 1. நீங்கான் தன்னுடைய; 2. பெயர் உடையவனுடைய;

பெற்றி - குணம்;

சீர் - புகழ்;


முருகன்:

சேயவன் - செம்மேனியன்;

முக்கண்ணன் தேவர் தொழ அருள்செய் சேய் அவன் - தேவர்கள் தொழ, அவர்களுக்கு இரங்கி முக்கண்ணன் அருளிய திருமகன்;

வந்தனை செய்யார்க்குச் சேயவன் - போற்றி வழிபடாதவர்களுக்குத் தொலைவில் உள்ளவன்;

பேரான் தன் தாள் பேணும் பெற்றியரை - தன் திருவடியைப் போற்றும் குணம் உடைய அடியவர்களை அகலாமல் அவர்களோடு இருப்பவன்;

ஆயிரம் பேரான்தன் சீர் நாவே பேசு - ஆயிரம் திருநாமங்கள் உடைய அவனது புகழை, நாக்கே நீ பேசு;


சிவன்:

சேயவன் - செம்மேனியன்;

முக்கண்ணன் - நெற்றிக்கண்ணன்;

தேவர் தொழ அருள்செய் சேயவன் - தேவர்கள் தொழ, அவர்களுக்கு இரங்கி அருளிய, இடபவாகனன்; (விடை - விடையவன்; அது போலச், சே - சேயவன்); (சம்பந்தர் தேவாரம் - 3.57.1 - "விடையவன் விண்ணுமண்ணும் தொழ நின்றவன்");

வந்தனை செய்யார்க்குச் சேயவன் - போற்றி வழிபடாதவர்களுக்குத் தொலைவில் உள்ளவன்;

பேரான் தன் தாள் பேணும் பெற்றியரை - தன் திருவடியைப் போற்றும் குணம் உடைய அடியவர்களை அகலாமல் அவர்களோடு இருப்பவன்;

ஆயிரம் பேரான்தன் சீர் நாவே பேசு - ஆயிரம் திருநாமங்கள் உடைய அவனது புகழை, நாக்கே நீ பேசு;


வி. சுப்பிரமணியன்

----------- -----------

N.022 - சுந்தரர் துதி - பொல்லாத வினைக்கடலில்

2012-07-20

N.022 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2012

--------------

1) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

பொல்லாத வினைக்கடலில் புணையாக வருமரனே

வெல்லோலை ஒன்றாலே மீளாத அடிமைகொண்டு

பல்லூரில் தமிழ்பாடிப் பரவென்று பணித்தவர்தம்

சொல்லாரும் தமிழ்பாடில் துன்பங்கள் நில்லாவே.


(* ஈசன் அடிமையோலை காட்டிச் சுந்தரரைத் தடுத்தாட்கொண்டான்);

பொல்லாத வினைக்கடலில் புணையாக வரும் அரனே வெல்-லை ஒன்றாலே மீளாத அடிமைகொண்டு - தீவினையாகிய கடலில் காக்கும் தெப்பமாக வரும் சிவனே வழக்கில் வெல்லும் அடிமைப்பத்திரம் ஒன்றால் நிரந்தர-அடிமை ஆக்கி ஏற்றருளி; (புணை - தெப்பம்);

"பல்லூரில் தமிழ் பாடிப் பரவு" என்று பணித்தவர்தம் - பல தலங்களில் தமிழ்ப்பாமாலைகளைப் பாடிப் போற்று" என்று பணித்தருளப்பெற்றவரான சுந்தரர் பாடியருளிய; (பரவுதல் - துதித்தல்);

சொல் ஆரும் தமிழ் பாடில் துன்பங்கள் நில்லாவே - செஞ்சொல் நிறைந்த தேவாரத்தை நாம் பாடினால் நம் துன்பமெல்லாம் நம்மை விட்டு நீங்கும்;


2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

விழிகாட்டும் நுதலீசா வேலைவிடம் மிடற்றினிலே

எழில்கூட்டும் ஐயாறா என்றிறைஞ்ச அவனருளால்

சுழிகாட்டும் காவிரிநீர் விலகிநின்று துளக்கமிலா

வழிகாட்டும் வன்றொண்டர் மலர்ப்பாதம் வாழியவே.


(* திருவையாற்றில் காவிரிவெள்ளம் விலகிச் சுந்தரர்க்கு வழிவிட்டது);

விழி காட்டும் நுதல் ஈசா - நெற்றிக்கண்ணுடைய ஈசனே; (நுதல் - நெற்றி);

வேலைவிடம் மிடற்றினிலே எழில் கூட்டும் ஐயாறா என்று இறைஞ்ச - "பாற்கடலில் தோன்றிய ஆலகாலம் கண்டத்தில் அழகுசெய்யும் ஐயாறனே" என்று இறைஞ்சவும்; (வேலை - கடல்); (மிடறு - கண்டம்);

அவன் அருளால் சுழி காட்டும் காவிரிநீர் விலகிநின்று துளக்கம் இலா வழி காட்டும் வன்றொண்டர் மலர்ப்பாதம் வாழியவே - ஈசன் அருளால் சுழித்தோடும் காவிரிவெள்ளம் விலகி, நடந்து செல்ல நல்ல வழியைக் காட்டிய சுந்தரரது மலர்ப்பாதம் வாழ்க; (துளக்கம் - நடுக்கம்; அச்சம்); (வன்றொண்டர் - வன்தொண்டர் - சுந்தரர்);


3) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

பொய்யாற்றில் நாமுழன்று புகலின்றி வாடாமே

மெய்யாற்றில் நின்றுபழ வினைதீரத் தமிழ்தந்தார்

மையேற்ற கண்டத்தன் வண்கச்சூர் தனிற்பிச்சை

கையேற்றுண் பித்தருளும் வன்றொண்டர் கழல்போற்றி.


(* திருக்கச்சூரில் சிவபெருமான் உணவை இரந்துவந்து சுந்தரர்க்கு அளித்துப் பசீதீர்த்தான்);

பொய்யாற்றில் நாம் உழன்று புகல் இன்றி வாடாமே மெய்யாற்றில் நின்று பழவினை தீரத் தமிழ் தந்தார் - பொய்ந்நெறியில் நாம் உழன்று புகலிடம் இன்றி வருந்தாதபடி மெய்ந்நெறியில் நின்று நம் பழவினை தீரத் தமிழ்ப்பாமாலைகளைப் பாடியருளியவர்; (ஆறு - வழி; நெறி); (புகல் - அடைக்கலம்);

மை ஏற்ற கண்டத்தன் வண்-கச்சூர்தனில் பிச்சை கையேற்று உண்பித்தருளும் வன்தொண்டர் கழல் போற்றி - நீலகண்டன் வளம் மிகுந்த திருக்கச்சூரில் பிச்சையேற்று அளித்த உணவை உண்டு பசியாறியவரான சுந்தரரின் திருவடிகளுக்கு வணக்கம்; (மை - கறுப்பு); (வண்மை - வளம்); (உண்பித்தல் - உணவளித்தல்);


4) --- (கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு) ---

தெங்கம்பொழில் திகழும்திருப் புகலூர்தனிற் செங்கல்

அங்கம்பொனின் கல்லாகிட அரனாரருள் பெற்றார்

பங்கங்களை பாமாலைகள் பலபாடுவன் தொண்டர்

பொங்கும்புகழ் உடையாரவர் பொற்றாளிணை போற்றி.


(* திருப்புகலூரில் கோயில்-முற்றத்தில் செங்கற்களைத் தலையணையாக வைத்துச் சுந்தரர் துயின்றபொழுது சிவன் அருளால் அக்கற்கள் பொன்னாக மாறின);

தெங்கம்பொழில் திகழும் திருப்புகலூர்தனில் செங்கல் அங்கு அம்பொனின் கல் ஆகிட அரனார் அருள் பெற்றார் - தென்னஞ்சோலை திகழும் திருப்புகலூரில் செங்கற்கள் பொன்னாகுமாறு சிவனருள் பெற்றவர்; (தெங்கம்பொழில் - தென்னஞ்சோலை); (அங்கு - அசைச்சொல்); (அம்பொன் - சிறந்த பொன்);

பங்கம் களை பாமாலைகள் பல பாடு-வன்தொண்டர் - நம் குற்றத்தைப் போக்கும் தேவாரப் பதிகங்கள் பல பாடியருளிய வன்தொண்டர் (சுந்தரர்); (பங்கம் - குற்றம்);

பொங்கும் புகழ் உடையார்அவர் பொற்றாள்-இணை போற்றி - ஓங்கும் புகழ் உடைய அவரது இருபொன்னடிகளுக்கு வணக்கம்; (இணை - இரட்டை; இரண்டு);


5) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

ஏழையொரு கூறுடைய எம்பெருமான் இணையடியை

ஏழிசையார் இன்தமிழால் ஏத்தியவர் அவனுக்குத்

தோழமையும் பெற்றவர்வான் சூழநொடித் தான்மலைக்கு

வேழமிசைச் சென்றடைந்தார் விரைமலர்த்தாள் வாழியவே.


(* திருவாரூரில் ஈசன் தன்னைச் சுந்தரர்க்குத் தோழனாகத் தந்தருளினான்);

(* சுந்தரர் ஈசன் அனுப்பியருளிய வெள்ளையானையின்மேல் ஏறிக் கயிலாயத்தை அடைந்தார்);

ஏழை ஒரு கூறு உடைய எம்பெருமான் இணையடியை ஏழிசை ஆர் இன்தமிழால் ஏத்தியவர் - உமையொருபங்கனான எம்பெருமானது இருபாதங்களை ஏழுசுரம் பொருந்திய இனிய தமிழ்ப்பாமாலைகளால் துதித்தவர்; (ஏழை - பெண்);

அவனுக்குத் தோழமையும் பெற்றவர் - ஈசன் தன்னைத் தோழனாகத் தரப்பெற்றவர்;

வான் சூழ நொடித்தான்மலைக்கு வேழமிசைச் சென்றடைந்தார் விரைமலர்த்தாள் வாழியவே - தேவர்கள் சூழக் கயிலைமலைக்கு யானைமேல் சென்ற அவரது வாசமலர்த்திருவடி வாழ்க; (வான் - தேவர்கள்); (நொடித்தான்மலை - கயிலைமலை); (வேழமிசை - யானையின்மேல்); (விரை - வாசனை); (வாழி - வாழ்க);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

Tuesday, October 25, 2022

V.025 - சிவன் - திருமால் - பிரமன் - சிலேடை

2012-07-13

V.025 - சிவன் - திருமால் - பிரமன் - சிலேடை

-------------

பூமிசை அண்ணலும் அங்கலைம கட்கிறையும்

பூமியும் வானும்போய்ப் போற்றிநிற்கும் - சாமியெனும்

பொற்பினனு முந்திமலர் நீர்மையனும் புள்ளேறி

பொற்சடையன் நான்முகன் போல்.


சொற்பொருள்:

பூ - 1. மலர்; 2. மண்;

மிசை - மேல்; ஏழாம் வேற்றுமை உருபு;

மிசைதல் - உண்ணுதல்;

அங்கலைமகட்கு - 1. அம் கலைமகட்கு; 2. அங்கு அலைமகட்கு;

அம் - அழகு;

அங்கு - அசை;

கலைமகள் - சரஸ்வதி;

அலைமகள் - லக்ஷ்மி;

இறை - கணவன்;

பொற்பு - தன்மை; அழகு;

உந்தி - 1. நாபி; கொப்பூழ்; 2. கடல்;

முந்தி - முன்பு; (முந்துதல் - காலம் இடம் முதலியவற்றால் முற்படுதல் - To be prior in time, place, etc.);

மலர் - பூ;

மலர்தல் - தோன்றுதல்; பிறத்தல்; (To appear; to rise to view);

நீர்மை - தன்மை; அழகு;

புள் - பறவை;

போல் - அசை;


பிரமன்:

பூமிசை அண்ணலும் - பூவின்மேல் இருப்பவனும்;

ம்-கலைமகட்கு இறையும் - அழகிய சரஸ்வதிக்குக் கணவனும்;

பூமியும் வானும் போய்ப் போற்றிநிற்கும் சாமி எனும் பொற்பினனும் - மண்ணுலகோரும் வானுலகோரும் வணங்கும் தேவனும்; (மும்மூர்த்திகளில் ஒருவன்);

உந்தி மலர் நீர்மையனும் - (திருமாலின்) நாபியில் உதித்த தன்மையை உடைவனும்;

நான்முகன் - நான்கு முகங்களையுடைய பிரமன்.


திருமால்:

பூ மிசை அண்ணலும் - மண்ணை உண்டவனும்; (திருவாசகம் - திருத்தோணோக்கம் - 8.15.9 - "எத்தனையோ பிரமர்களும் மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் தோணோக்கம்");

ங்கு அலைமகட்கு இறையும் - பாற்கடலில் தோன்றிய திருமகளுக்குக் கணவனும்;

பூமியும் வானும் போய்ப் போற்றிநிற்கும் சாமியெனும் பொற்பினனும் - மண்ணுலகோரும் வானுலகோரும் வணங்கும் தேவனும்; (மும்மூர்த்திகளில் ஒருவன்);

உந்தி மலர் நீர்மையனும் - நாபியில் மலரை உடையவனும்;

புள் ஏறி - (கருடன் என்ற) பறவையை ஊர்தியாக உடைய திருமால்;


சிவன்:

பூமிசை அண்ணலும் அங்கு அலைமகட்கு இறையும் பூமியும் வானும் போய்ப் போற்றி நிற்கும் சாமி எனும் பொற்பினனும் - தாமரைப்பூமேல் இருக்கும் பிரமனும் திருமகள் கேள்வனான திருமாலும் நிலத்தை அகழ்ந்து சென்றும் வானில் பறந்து சென்றும் (அடிமுடி தேடிக் காணாமல்) அவர்களால் வணங்கப்பட்ட தலைவனும்;

முந்தி மலர் நீர்மையனும் - எல்லாவற்றிற்கும் முன்னமே இருந்தவனும்; (அப்பர் தேவாரம் - 4.15.11 - "முந்தித் தானே முளைத்தானை" - ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டுத் தோன்றியவன்);

பொற்சடையன் - பொற்சடையை உடைய சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- -----------