Thursday, October 27, 2022

S.136 - சிவன் - புயல் - சிலேடை

2012-10-29

S.136 - சிவன் - புயல் - சிலேடை

-------------

நீர்வெளி வல்வளியாய் நிற்கும் நிலமஞ்சும்

பேர்தரும் உச்சமழை பெய்யுமால் - ஆரும்

துணையாம் புணையென்று சொல்வர் புயலோர்

கணையால் எயிலெய்தான் காண்.


சொற்பொருள்:

வெளி - 1. பரப்பு (open space); / 2. ஆகாயம்;

வல் - வலிமை; விரைவு;

வளி - காற்று;

அஞ்சும் - 1. பயப்படும்; / 2. ஐந்தும்;

பேர் - பெயர்;

பேர்தல் - போதல் (To depart, go away);

தருதல் - 1. ஒரு துணைவினை (An auxiliary added to verbs); / 2. கொடுத்தல்;

உச்சம் - 1. அறுதியளவு (Extreme limit); / 2. உச்சந்தலை;

மழை - 1. மாரி (Rain); / 2. நீர்;

ஆல் - 1. ஓர் அசைச்சொல்; / 2. ஆலம் - விஷம்;

ஆர் - யார்;

ஆர்தல் - உண்ணுதல்;

புணை - தெப்பம்; மரக்கலம்;

சொல்லுதல் - 1. கூறுதல் / 2. புகழ்தல்;

எயில் - கோட்டை;

காண் - பார்; முன்னிலை அசைச்சொல்;


புயல்:

நீர்வெளி வல்வளியாய் நிற்கும் - கடற்பரப்பில் மிக வலிமை உடைய காற்றாகத் தோன்றும்;

நிலம் அஞ்சும் - உலகம் அதனைக் கண்டு அச்சம்கொள்ளும்;

பேர்தரும் - (அந்த அச்சத்தால்) வேறு இடங்களுக்கு நீங்கிச்செல்வார்கள் (evacuation to safer places ahead of storm's landfall); (தருதல் - ஒரு துணைவினை); (இக்காலத்தில் புயல்களுக்குப் பெயர் வைக்கும் பழக்கத்தை ஒட்டி, "அதற்கு ஒரு பெயரைக் கொடுக்கும்" என்றும் பொருள்கொள்ளலாம்);

உச்சமழை பெய்யுமால் - மிக அதிக மழை பெய்யும்; (ஆல் - அசைச்சொல்);

ஆரும் "துணை ஆம் புணை" என்று சொல்வர் - (புயலால் வெள்ளமும் ஏற்படுவதால்) எவரும் "ஒரு படகு இருந்தால் உதவும்" என்று சொல்வார்கள்;

புயல் - பேய்க்காற்றும் பெருமழையும் உடைய புயல் (cyclone / hurricane);


சிவன்:

நீர் வெளி வல்வளியாய் நிற்கும் - நீர், ஆகாயம், வலிய காற்று, என ஐம்பூதங்களாய் நிற்பவன்; (தீ, நிலம் என்ற மற்ற இருபூதங்களும் குறிப்பால் பெறப்பட்டன);

நிலம் அஞ்சும் - உலகோர் (இறைவனுக்குப்) பயப்படுவர்; ((அப்பர் தேவாரம் - 5.23.9 - "அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும் நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ");

பேர் தரும் - (ஒரு பெயரும் இல்லாத அவனுக்குப்) பல பெயர்கள் தருவர்;

("நிலம் அஞ்சும் பேர் தரும்" - தமிழ் இலக்கணம் சொல்வதுபோல், "குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற இயற்கையான ஐந்துநிலப்பிரிவுகளில் உள்ளோர் கடவுளுக்கு முருகன், திருமால், முதலிய வெவ்வேறு பேர்கள் தருவர்" என்றும் பொருள்கொள்ளலாம்);

உச்சம் மழை பெய்யும் - அவன் உச்சந்தலையில் கங்கை பொழியும்; (இலக்கணக் குறிப்பு: "உச்சம் + மழை = உச்சமழை" - என்று ஈற்று ம் கெட்டுப் புணரும்); (சம்பந்தர் தேவாரம் - 1.115.3 - "தழைமயில் ஏறவன் தாதையோதான் மழைபொழி சடையவன்");

ஆல் ஆரும் - விஷத்தை உண்பான்;

துணை ஆம் புணை என்று சொல்வர் - (பிறவிக்கடலைக் கடக்க) உதவும் தெப்பம் என்று புகழ்வார்கள்;

ஓர் கணையால் எயில் எய்தான் - ஒரு கணையால் முப்புரங்களை எய்து அழித்த சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment