Thursday, October 27, 2022

S.135 - சிவன் - காகம் - சிலேடை

2012-10-20

S.135 - சிவன் - காகம் - சிலேடை

-------------

உண்டிக் கெனவுழலுங் கண்ட விடமுண்ணுங்

கண்டங் கறுக்குங் கரவாமை - கொண்டு

கரையும் நரர்க்கு நலம்செய்யுங் காக்கை

திரைநதிசேர் சென்னிச் சிவன்.


சொற்பொருள்:

கண்டவிடம் - 1. கண்ட விடம் (காணப்பட்ட நஞ்சு); 2. எவ்விடமும்;

கரவாமை - வஞ்சனை இன்மை;

கொண்டு - 1. கொள்ளுதல் - மேற்கொள்ளுதல் (To adhere to, observe;); 2. மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு;

கரைதல் - 1. மனம் உருகுதல்; 2. ஒலித்தல்;

திரை - அலை; திரைத்தல் - அலைமோதுதல்;

சென்னி - தலை;


காகம்:

உண்டிக்கு என உழலும் - உணவுக்கு என்று அலையும்;

கண்ட இடம் உண்ணும் - பாகுபாடு இன்றி இரை கண்ட எந்த இடத்திலும் தின்னும்;

கண்டம் கறுக்கும் - கழுத்துக் கறுப்பாக இருக்கும்;

கரவாமை கொண்டு கரையும் - வஞ்சனையின்மையால் கரைந்து தன் இனத்தோடு பகிர்ந்து உண்ணும்; (திருக்குறள் - 527 - "காக்கை கரவா கரைந்துண்ணும்");

நரர்க்கு நலம் செய்யும் காக்கை - (இறந்த பிராணிகளின் ஊனையும் மற்றவற்றையும் உண்டு) மனிதர்க்குப் புறச்சூழல் சுத்தமாக இருக்க உதவும் காகம். ("பிண்டபோஜனம் செய்து மானிடர்களின் பித்ருக்கள் வழிபாட்டுக்கு உதவி செய்யும்" என்றும் பொருள்கொள்ளக்கூடும்);


சிவன்:

உண்டிக்கு என உழலும் - (மண்டையோட்டை ஏந்திப் பிச்சையாக இடும்) உணவுக்குத் திரிவான்; (உழலும் - உழல்பவன்; செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று);

கண்ட விடம் உண்ணும் - காணப்பட்ட நஞ்சை (ஆலகாலத்தை) உண்பான்;

கண்டம் கறுக்கும் - மிடறு கருமையாக இருக்கும்; ("கண்டங்கறுக்கும் = கண்டு அங்கு அறுக்கும் - பக்தர்களைக் கடைக்கண்ணால் பார்த்து அவர்கள் குறைகளைத் தீர்ப்பான்" என்றும் பொருள்கொள்ளலாம்);

கரவாமை கொண்டு கரையும் நரர்க்கு நலம் செய்யும் - வஞ்சனையின்றி உள்ளம் உருகும் பக்தர்களுக்கு நன்மை செய்வான்; ("வஞ்சனையின்றி" என்பதைச் சிவனுக்கும் அடைமொழியாகக் கொள்ளலாம்);

திரைநதி சேர் சென்னிச் சிவன் - அலைக்கும் கங்கையைத் தலைமேல் ஏற்ற சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment