Thursday, October 27, 2022

M.058 - சேயவன் - பேரான்றன் - மடக்கு - (முருகன் / சிவன்)

2012-08-10 (ஆடிக்கிருத்திகை நாள்)

M.058 - சேயவன் - பேரான்ன் - மடக்கு - (முருகன் / சிவன்)

--------------

சேயவன் முக்கண்ணன் தேவர் தொழஅருள்செய்

சேயவன் வந்தனை செய்யார்க்குச் - சேயவன்

பேரான்றன் தாள்பேணும் பெற்றியரை ஆயிரம்

பேரான்றன் சீர்நாவே பேசு.

முற்குறிப்பு: இப்பாடலை முருகன் பாடலாகவும் சிவன் பாடலாகவும் பொருள்கொள்ளக்கூடும்;

சொற்பொருள்:

சேய் - செம்மை; மகன்; தலைவன்; தூரம்;

சே - எருது;

பேர்தல் - பெயர்தல் - நீங்குதல்; விலகுதல்;

பேர் - பெயர்; நாமம்;

சேயவன் - 1. சிவந்தவன்; 2. a. விடையவன் (இடபவாகனன்); b. மகன்; 3. தூரத்தில் உள்ளவன்;

பேரான்தன் - 1. நீங்கான் தன்னுடைய; 2. பெயர் உடையவனுடைய;

பெற்றி - குணம்;

சீர் - புகழ்;

முருகன்:

சேயவன் - செம்மேனியன்;

முக்கண்ணன் தேவர் தொழ அருள்செய் சேய் அவன் - தேவர்கள் தொழ, அவர்களுக்கு இரங்கி முக்கண்ணன் அருளிய திருமகன்;

வந்தனை செய்யார்க்குச் சேயவன் - போற்றி வழிபடாதவர்களுக்குத் தொலைவில் உள்ளவன்;

பேரான் தன் தாள் பேணும் பெற்றியரை - தன் திருவடியைப் போற்றும் குணம் உடைய அடியவர்களை அகலாமல் அவர்களோடு இருப்பவன்;

ஆயிரம் பேரான்தன் சீர் நாவே பேசு - ஆயிரம் திருநாமங்கள் உடைய அவனது புகழை, நாக்கே நீ பேசு;

சிவன்:

சேயவன் - செம்மேனியன்;

முக்கண்ணன் - நெற்றிக்கண்ணன்;

தேவர் தொழ அருள்செய் சேயவன் - தேவர்கள் தொழ, அவர்களுக்கு இரங்கி அருளிய, இடபவாகனன்; (விடை - விடையவன்; அது போலச், சே - சேயவன்); (சம்பந்தர் தேவாரம் - 3.57.1 - "விடையவன் விண்ணுமண்ணும் தொழ நின்றவன்");

வந்தனை செய்யார்க்குச் சேயவன் - போற்றி வழிபடாதவர்களுக்குத் தொலைவில் உள்ளவன்;

பேரான் தன் தாள் பேணும் பெற்றியரை - தன் திருவடியைப் போற்றும் குணம் உடைய அடியவர்களை அகலாமல் அவர்களோடு இருப்பவன்;

ஆயிரம் பேரான்தன் சீர் நாவே பேசு - ஆயிரம் திருநாமங்கள் உடைய அவனது புகழை, நாக்கே நீ பேசு;

வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment