2012-07-20
N.022 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2012
--------------
1) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
பொல்லாத வினைக்கடலில் புணையாக வருமரனே
வெல்லோலை ஒன்றாலே மீளாத அடிமைகொண்டு
பல்லூரில் தமிழ்பாடிப் பரவென்று பணித்தவர்தம்
சொல்லாரும் தமிழ்பாடில் துன்பங்கள் நில்லாவே.
(* ஈசன் அடிமையோலை காட்டிச் சுந்தரரைத் தடுத்தாட்கொண்டான்);
பொல்லாத வினைக்கடலில் புணையாக வரும் அரனே வெல்-ஓலை ஒன்றாலே மீளாத அடிமைகொண்டு - தீவினையாகிய கடலில் காக்கும் தெப்பமாக வரும் சிவனே வழக்கில் வெல்லும் அடிமைப்பத்திரம் ஒன்றால் நிரந்தர-அடிமை ஆக்கி ஏற்றருளி; (புணை - தெப்பம்);
"பல்லூரில் தமிழ் பாடிப் பரவு" என்று பணித்தவர்தம் - பல தலங்களில் தமிழ்ப்பாமாலைகளைப் பாடிப் போற்று" என்று பணித்தருளப்பெற்றவரான சுந்தரர் பாடியருளிய; (பரவுதல் - துதித்தல்);
சொல் ஆரும் தமிழ் பாடில் துன்பங்கள் நில்லாவே - செஞ்சொல் நிறைந்த தேவாரத்தை நாம் பாடினால் நம் துன்பமெல்லாம் நம்மை விட்டு நீங்கும்;
2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
விழிகாட்டும் நுதலீசா வேலைவிடம் மிடற்றினிலே
எழில்கூட்டும் ஐயாறா என்றிறைஞ்ச அவனருளால்
சுழிகாட்டும் காவிரிநீர் விலகிநின்று துளக்கமிலா
வழிகாட்டும் வன்றொண்டர் மலர்ப்பாதம் வாழியவே.
(* திருவையாற்றில் காவிரிவெள்ளம் விலகிச் சுந்தரர்க்கு வழிவிட்டது);
விழி காட்டும் நுதல் ஈசா - நெற்றிக்கண்ணுடைய ஈசனே; (நுதல் - நெற்றி);
வேலைவிடம் மிடற்றினிலே எழில் கூட்டும் ஐயாறா என்று இறைஞ்ச - "பாற்கடலில் தோன்றிய ஆலகாலம் கண்டத்தில் அழகுசெய்யும் ஐயாறனே" என்று இறைஞ்சவும்; (வேலை - கடல்); (மிடறு - கண்டம்);
அவன் அருளால் சுழி காட்டும் காவிரிநீர் விலகிநின்று துளக்கம் இலா வழி காட்டும் வன்றொண்டர் மலர்ப்பாதம் வாழியவே - ஈசன் அருளால் சுழித்தோடும் காவிரிவெள்ளம் விலகி, நடந்து செல்ல நல்ல வழியைக் காட்டிய சுந்தரரது மலர்ப்பாதம் வாழ்க; (துளக்கம் - நடுக்கம்; அச்சம்); (வன்றொண்டர் - வன்தொண்டர் - சுந்தரர்);
3) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
பொய்யாற்றில் நாமுழன்று புகலின்றி வாடாமே
மெய்யாற்றில் நின்றுபழ வினைதீரத் தமிழ்தந்தார்
மையேற்ற கண்டத்தன் வண்கச்சூர் தனிற்பிச்சை
கையேற்றுண் பித்தருளும் வன்றொண்டர் கழல்போற்றி.
(* திருக்கச்சூரில் சிவபெருமான் உணவை இரந்துவந்து சுந்தரர்க்கு அளித்துப் பசீதீர்த்தான்);
பொய்யாற்றில் நாம் உழன்று புகல் இன்றி வாடாமே மெய்யாற்றில் நின்று பழவினை தீரத் தமிழ் தந்தார் - பொய்ந்நெறியில் நாம் உழன்று புகலிடம் இன்றி வருந்தாதபடி மெய்ந்நெறியில் நின்று நம் பழவினை தீரத் தமிழ்ப்பாமாலைகளைப் பாடியருளியவர்; (ஆறு - வழி; நெறி); (புகல் - அடைக்கலம்);
மை ஏற்ற கண்டத்தன் வண்-கச்சூர்தனில் பிச்சை கையேற்று உண்பித்தருளும் வன்தொண்டர் கழல் போற்றி - நீலகண்டன் வளம் மிகுந்த திருக்கச்சூரில் பிச்சையேற்று அளித்த உணவை உண்டு பசியாறியவரான சுந்தரரின் திருவடிகளுக்கு வணக்கம்; (மை - கறுப்பு); (வண்மை - வளம்); (உண்பித்தல் - உணவளித்தல்);
4) --- (கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு) ---
தெங்கம்பொழில் திகழும்திருப் புகலூர்தனிற் செங்கல்
அங்கம்பொனின் கல்லாகிட அரனாரருள் பெற்றார்
பங்கங்களை பாமாலைகள் பலபாடுவன் தொண்டர்
பொங்கும்புகழ் உடையாரவர் பொற்றாளிணை போற்றி.
(* திருப்புகலூரில் கோயில்-முற்றத்தில் செங்கற்களைத் தலையணையாக வைத்துச் சுந்தரர் துயின்றபொழுது சிவன் அருளால் அக்கற்கள் பொன்னாக மாறின);
தெங்கம்பொழில் திகழும் திருப்புகலூர்தனில் செங்கல் அங்கு அம்பொனின் கல் ஆகிட அரனார் அருள் பெற்றார் - தென்னஞ்சோலை திகழும் திருப்புகலூரில் செங்கற்கள் பொன்னாகுமாறு சிவனருள் பெற்றவர்; (தெங்கம்பொழில் - தென்னஞ்சோலை); (அங்கு - அசைச்சொல்); (அம்பொன் - சிறந்த பொன்);
பங்கம் களை பாமாலைகள் பல பாடு-வன்தொண்டர் - நம் குற்றத்தைப் போக்கும் தேவாரப் பதிகங்கள் பல பாடியருளிய வன்தொண்டர் (சுந்தரர்); (பங்கம் - குற்றம்);
பொங்கும் புகழ் உடையார்அவர் பொற்றாள்-இணை போற்றி - ஓங்கும் புகழ் உடைய அவரது இருபொன்னடிகளுக்கு வணக்கம்; (இணை - இரட்டை; இரண்டு);
5) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
ஏழையொரு கூறுடைய எம்பெருமான் இணையடியை
ஏழிசையார் இன்தமிழால் ஏத்தியவர் அவனுக்குத்
தோழமையும் பெற்றவர்வான் சூழநொடித் தான்மலைக்கு
வேழமிசைச் சென்றடைந்தார் விரைமலர்த்தாள் வாழியவே.
(* திருவாரூரில் ஈசன் தன்னைச் சுந்தரர்க்குத் தோழனாகத் தந்தருளினான்);
(* சுந்தரர் ஈசன் அனுப்பியருளிய வெள்ளையானையின்மேல் ஏறிக் கயிலாயத்தை அடைந்தார்);
ஏழை ஒரு கூறு உடைய எம்பெருமான் இணையடியை ஏழிசை ஆர் இன்தமிழால் ஏத்தியவர் - உமையொருபங்கனான எம்பெருமானது இருபாதங்களை ஏழுசுரம் பொருந்திய இனிய தமிழ்ப்பாமாலைகளால் துதித்தவர்; (ஏழை - பெண்);
அவனுக்குத் தோழமையும் பெற்றவர் - ஈசன் தன்னைத் தோழனாகத் தரப்பெற்றவர்;
வான் சூழ நொடித்தான்மலைக்கு வேழமிசைச் சென்றடைந்தார் விரைமலர்த்தாள் வாழியவே - தேவர்கள் சூழக் கயிலைமலைக்கு யானைமேல் சென்ற அவரது வாசமலர்த்திருவடி வாழ்க; (வான் - தேவர்கள்); (நொடித்தான்மலை - கயிலைமலை); (வேழமிசை - யானையின்மேல்); (விரை - வாசனை); (வாழி - வாழ்க);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment