Saturday, October 29, 2022

V.026 - அம்புதை - (மடக்கு)

2013-02-20

V.026 - அம்புதை - (மடக்கு)

--------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)


அம்புதை சடையின் மேலோர்

.. அணிமதி சூடும் அண்ணல்

அம்புதை ஏவும் வேளை

.. அனங்கனென் றாக்கும் கண்ணன்

அம்புதை கேழற் பின்போய்

.. அருச்சுனற் கருளும் வேடன்

அம்புதை நாவ லூர்க்கோன்

.. அவர்முடி வைத்தான் தானே.


அம் புதை சடையின்மேல் ஓர் அணி-மதி சூடும் அண்ணல் - கங்கையை ஒளித்த சடையின்மேல் அழகிய சந்திரனைச் சூடும் தலைவன்; (அம்புதை - 1a. அம்+புதை சடை = நீரை உள்ளடக்கிய சடை; 1b. அம்பு+உதை சடை = அலைமோதுகின்ற சடை; "அம்பு - நீர்" என்ற பொருளில்); (அம் - நீர்; அம்பு - நீர்); (புதை - புதைத்தல் (ஒளித்துவைத்தல்));

அம் புதை ஏவும் வேளை அனங்கன் என்று ஆக்கும் கண்ணன் - அழகிய மலர்க்கணையை ஏவிய மன்மதனை உடலற்றவன் ஆக்கிய நெற்றிக்கண்ணன்; (அம்புதை - 2. அம்+புதை = அழகிய அம்பு = மலர்க்கணை); (அம் - அழகு); (புதை - அம்பு); (வேள் - காமன்); (அங்கம் - உடல்);

அம்பு தை கேழற்பின் போய் அருச்சுனற்கு அருளும் வேடன் - வேடனாகிக் காட்டில் அம்பு தைத்த பன்றிப்பின் சென்று அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருளியவன்; (அம்புதை - 3. அம்பு+தை = அம்பு தைத்த); (தை - தைத்தல்; அம்பு முதலியன ஊடுருவுதல்); (கேழல் - பன்றி);

அம்பு-உதை நாவலூர்க்கோன்அவர் முடி வைத்தான்தானே - (திருவதிகையில் முதியவர் உருவில் சென்று) சுந்தரர் உறங்கும்போது அவர் தலையில் அன்போடு உதை வைத்த சிவபெருமான்; (அம்புதை - 4. அம்பு+உதை = அன்பு உதை; அன்பு, "அம்பு" என மருவியது); (அப்பர் தேவாரம் - 5.1.1 - "அன்னம் பாலிக்கும் .... என்னம் பாலிக்குமாறு ....." -- என் அன்பு எனப் பிரிக்க. அன்பு என்பது அம்பு என மருவிற்று); (நாவலூர்க்கோன் - சுந்தரமூர்த்திநாயனார்; அவர் - பகுதிப்பொருள்விகுதி);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment