Saturday, October 29, 2022

S.137 - சிவன் - சாளரம் (window) - சிலேடை

2013-02-24

S.137 - சிவன் - சாளரம் (window) - சிலேடை

-------------

வளியொளி செல்லும் வழியாகும் உள்ளும்

வெளியும் உளபொருள் தோற்றும் - எளிதில்

அடைநீர்மை உண்டுகார் கண்டவிடத் தந்தாழ்

சடையீசன் சாளரம் தான்.


சொற்பொருள்:

வளி - காற்று;

ஒளி - வெளிச்சம்;

வழி - பாதை; நெறி;

தோற்றுதல் - 1. காட்டுதல்; 2. படைத்தல்;

அடைதல் - சேர்தல்; பெறுதல்;

அடைத்தல் - சாத்துதல்;

நீர்மை - தன்மை;

கார் - 1. மழை; / 2. கருமை;

கண்டவிடத்தே - கண்ட இடத்தே;

இடம் - 1. பொழுது; / 2. தானம் (ஸ்தானம்);

அம் - அழகு;

தாழ் - தாழ்ப்பாள்;

தாழ்தல் - நீண்டுதொங்குதல்;

தான் - அசைச்சொல்;


சாளரம் (window):

வளி ஒளி செல்லும் வழி ஆகும் - காற்றும் வெளிச்சமும் செல்லும் வழி ஆகும்;

உள்ளும் வெளியும் உள பொருள் தோற்றும் - (வெளியில் இருப்போர்க்கு) உள்ளே இருப்பதையும், (உள்ளிருப்போர்க்கு) வெளியே இருப்பதையும் காட்டும்;

எளிதில் அடை நீர்மை உண்டு கார் கண்ட இடத்து அம் தாழ் - மழை வரும்போது அழகிய தாழ்ப்பாளால் சுலபமாகச் சாத்தும் தன்மை இருக்கும்.

சாளரம் - ஜன்னல்;


சிவன்:

வளி, ஒளி, செல்லும் வழி ஆகும் - காற்று (முதலிய ஐம்பூதங்கள்), ஒளி (சூரியன் முதலியன), நாம் செல்லும் நன்னெறி, இவையெல்லாமாக இருப்பவன்; (திருவாசகம் - திருச்சதகம் - 8.5.15 - "வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி");

உள்ளும் வெளியும் உள பொருள் - பிரபஞ்சத்தின் உள்ளேயும் புறத்தேயும் இருக்கும் மெய்ப்பொருள்; நமக்கு உள்ளும் இருப்பவன்; வெளியிலும் இருப்பவன்; ("கடவுள்");

உள பொருள் தோற்றும் - உள்ள எல்லாவற்றையும் படைப்பவன்; ("உள பொருள்" என்பதை இடைநிலைத்தீவகமாக இப்படி இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளுமாறு அமைந்தது);

எளிதில் அடை நீர்மை உண்டு - பக்தர்களால் எளிதில் அடையப்படும் இயல்பு உடையவன்;

உண்டு கார் கண்ட-இடத்து - கண்டத்தில் கருமை உண்டு; ("உண்டு" என்ற சொல் இடைநிலைத்தீவகமாக இப்படி இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளுமாறு அமைந்தது);

அம்-தாழ்-சடை ஈசன் - அழகிய தாழும் சடையை உடைய சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment