Tuesday, April 26, 2022

S.123 - சிவன் - பிள்ளையார் - சிலேடை

2010-09-11

S.123 - சிவன் - பிள்ளையார் - சிலேடை

------------------

மூத்தவனைத் தந்த முதல்வனை மாதங்க

மூர்த்தியை மோதகத்தைக் கைகாட்டிக் - காத்தருளும்

அண்ணலை நீற்றை அணிகர மைந்தனை

எண்ணி இருப்பேன் இனி.


சொற்பொருள்:

மாதங்கம் - 1. மாதங்கம் (யானை); / 2. மாது அங்கம்;

மோதகம் - 1. மோதகம் (கொழுக்கட்டை); / 2. மோது அகம்;

கரமைந்தன் - 1. கரம் ஐந்தன்; / 2. கர மைந்தன்;

கரம் - 1. கை; 2. (gara) நஞ்சு;

மைந்தன் - 1. மகன்; / 2. வீரன்;


பிள்ளையார்:

மூத்தவனை - மூத்த குமாரனை;

தந்த-முதல்வனை - தந்தத்தை உடைய முதற்பொருளை;

மாதங்க-மூர்த்தியை - யானைமுகம் உடையவனை;

மோதகத்தைக் கைகாட்டிக் காத்தருளும் அண்ணலை - கொழுக்கட்டையைக் கையில் வைத்திருக்கும் தலைவனை;

நீற்றை அணி கரம்-ஐந்தனை - திருநீற்றைப் பூசிய ஐந்து-கரத்தனை;

எண்ணி இருப்பேன் இனி - என்றும் தியானிப்பேன்; (இனி - இப்பொழுது; இனிமேல்);


சிவன்:

மூத்தவனைத் தந்த முதல்வனை - பிள்ளையாரை ஈன்ற பெருமானை;

மாது அங்க மூர்த்தியை - திருமேனியில் உமை ஒரு பாகம் திகழும் அர்த்தநாரீஸ்வரனை; (அங்கம் - உடல்);

மோது-அகத்தைக் கைகாட்டிக் காத்தருளும் அண்ணலை - (ஆசைகள்) அலைமோதுகின்ற / தாக்குகின்ற மனத்தை அபய-கரத்தைக் காட்டிக் காக்கும் தலைவனை; (மோதுதல் - தாக்குதல்);

நீற்றை அணி கர-மைந்தனை - திருநீற்றைப் பூசிய கரங்களை உடைய வீரனை;

(Note: "நீற்றை அணிகர மைந்தனை" என்ற சொற்றொடரில் "அணி" என்ற சொல்லை இருமுறை இயைத்து, "நீற்றை அணி மைந்தனை & அணி கர மைந்தனை" என்று கொண்டு, "அணிகர(ம்) மைந்தனை" = "கரம் அணி மைந்தனை" என்று சொற்களை முன்பின் ஆக்கிப் பொருள்கொள்ளுதலும் கூடும். அப்படிக் கொண்டால் - "திருநீற்றைக் கையில் பூசிய வீரனை & விடத்தை அணிந்த வீரனை");

எண்ணி இருப்பேன் இனி - என்றும் தியானிப்பேன்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

1 comment: