Monday, January 10, 2022

S.111 - சிவன் - சிங்கம் - முருகன் - சிலேடை

2010-01-09

S.111 - சிவன் - சிங்கம் - முருகன் - சிலேடை

------------------

கானில் நடமாடும் கண்ணிற் பொறிபறக்கும்

மான்மேலே பாயுமா றோடுமே - கோனென்று

வான்புகழ்நற் கோலமா மானஞ்சு கண்டமுடை

யான்மிசையூர் மைந்தன் அரி.


சொற்பொருள்:

கான் - 1. சுடுகாடு; 2. காடு;

நடமாடுதல் - 1. திருநடம் செய்தல்; 2. சஞ்சரித்தல்;

பொறிபறத்தல் - 1. தீப்பொறி சிதறுகை; 2. சினத்தோடு பார்த்தல்;

மான் - 1. ஒரு விலங்கு - Deer; 2. மான் போன்ற பெண்; 3. பெரியோன் - e.g. "எம்மான்";

பாயுமாறு - 1. பாயும் ஆறு; 2. பாயும்படி;

ஓடு - 1. மண்டையோடு; 2. ஓடுதல்;

வான் புகழ் - 1. வானோர் புகழும்; 2. பெரும்புகழ் உடைய;

கோலம் - 1. வேடம்; 2. உருவம்; அழகு; தன்மை;

கோலமா மானஞ்சு - 1. கோலம் ஆம், மால் நஞ்சு/ஆல் நஞ்சு; 2. கோலம் ஆம், மான் அஞ்சு/ஆன் அஞ்சு;

மால் - 1. கருமை (Blackness); 2. பெருமை (greatness);

ஆல் - ஓர் அசைநிலை;

ஆல் நஞ்சு - ஆலகாலமாகிய விஷம்;

மால் நஞ்சு - கரிய விடம்;

ஆன் - 1. இடபம்; 2. எருமை, பெற்றம், மரை இவற்றின் பெண்;

கண்டம் - 1. தொண்டை; கழுத்து; 2. குரல்;

ஆன் மிசை ஊர் - இடபத்தின்மேல் செல்லும்;

மைந்தன் - 1. வீரன்; 2. மகன்; 3. இளையோன்;

அரி - சிங்கம்;


சிங்கம்:

கானில் நடமாடும் - காட்டில் சஞ்சரிக்கும்;

கண்ணிற் பொறிபறக்கும் - சினத்தோடு பார்க்கும் - மிகுந்த கோபம் உடையது;

மான்மேலே பாயுமாறு ஓடுமே - மான்மேல் பாயும்படி ஓடும்;

கோன் என்று வான்புகழ் நற்கோலம் ஆம் - காட்டுக்கு அரசன் என்று சொல்லும்படி பெரும்புகழ் உடைய வடிவம்/தன்மை இருக்கும்;

மான்/ஆன் அஞ்சு கண்டம் உடை - மிருகங்கள் அஞ்சி நடுங்கும்படி குரலை உடைய (கர்ஜிக்கின்ற);

அரி - சிங்கம்;


முருகன்:

கானில் நடமாடும் கண்ணில் பொறிபறக்கும் மான் மேலே பாயுமாறு ஓடுமே - காட்டில் வாழ்கின்ற, கோபிக்கும் கண்ணைக் காட்டும், மான் போன்ற வள்ளி அஞ்சித் தன் மேல் பாய்ந்து கட்டிக்கொள்ளும்படி (அந்தத் தினப்புனத்தை) விரைந்து அடைந்தவன்;

கோன் என்று வான் புகழ் நற்கோலம் ஆமால் - தலைவன் என்று தேவர்கள் புகழும் அழகிய கோலம் உடையவன்;

நஞ்சு கண்டம் உடையான்மிசை ஊர் மைந்தன் - (குழந்தையாக) நீலகண்டன்மேல் ஏறி அமர்ந்து வரும் (விளையாடும்) மகன்; (ஈசன் தோளில் இருந்து காதில் பிரணவத்தைச் சொன்னவன்);


சிவன்:

கானில் நடம் ஆடும் - சுடுகாட்டில் திருநடம் செய்பவன்;

கண்ணிற் பொறிபறக்கும் - நெற்றிக்கண்ணில் தீப்பொறி பறக்கின்றவன்;

மான், மேலே பாயும் ஆறு, ஓடுமே கோன் என்று வான் புகழ் நற்கோலம் ஆம் - அரசன் என்று தேவர்கள் எல்லாம் புகழும் வேடமாக (ஒரு கையில்) மானையும், தலைமேல் பாயும் கங்கையையும், (பிரமனின்) மண்டையோட்டையுமே தாங்குவார்; (--அல்லது-- "கண்ணிற் பொறிபறக்கும் மான், மேலே பாயும் ஆறு ஓடுமே" - நெற்றிக்கண்ணில் தீப்பொறி பறக்கும் சுவாமி, உச்சிமேல் பாயும் கங்கை ஓடும் - என்றும் கொள்ளலாம்);

மால்/ஆல் நஞ்சு கண்டம் உடை - கரிய ஆலகாலமாகிய விஷத்தைக் கண்டத்தில் உடைய;

ஆன்மிசை ஊர் மைந்தன் - இடபத்தின்மேல் வரும் வீரனான சிவபெருமான்;


பிற்குறிப்பு - இலக்கணக் குறிப்புகள்:

  • மால் நஞ்சு = மானஞ்சு --- # 154/155 காண்க.

  • கோலம் ஆம் மான் அஞ்சு = கோலமா மானஞ்சு --- # 146 காண்க.

ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம்:

146. மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும்.

154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.

155. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும்.)


வி. சுப்பிரமணியன்

------------- -------------

Wednesday, January 5, 2022

S.110 - சிவன் - இணையக்குழு (internet group) - சிலேடை

2010-01-02

S.110 - சிவன் - இணையக்குழு (internet group) - சிலேடை

------------------

பித்தரென்றே பேசிப் பெரிதுவக்கும் அன்பருளர்

பத்திரம் தாமிட்டுப் பார்த்திருப்பர் - எத்தனையோ

பேர்திகழப் பெண்ணாணும் ஆவர்காண் ஓர்குழு

வார்சடைமேல் வன்னியணி வார்.


சொற்பொருள்:

பித்தர் - பைத்தியம்;

பத்திரம் - 1. கடிதம் / மடல் (letter / posting); 2. இலை;

பார்த்தல் - 1. எதிர்பார்த்தல்; 2. வணங்குதல்; 3. கண்ணால் நோக்குதல்;

பேர் - 1. பெயர்; நாமம்; 2. மனிதர்கள்;

காண் - 1. காணுதல்; 2. முன்னிலை அசைச்சொல்;


இணையக்குழு (an internet group):

பித்தர் என்றே பேசிப் பெரிது உவக்கும் அன்பர் உளர் - மடலாடல்களில் தமக்கு ஏற்பில்லாத கருத்தைச் சொல்வோரை ஏசி மகிழ்வோரும் உள்ளனர்; (--அல்லது-- பித்தரைப் போலவே தொடர்பின்றிப் பேசி வாதம் செய்து மகிழ்வோரும் இருப்பார்கள் --அல்லது-- chat முதலியவற்றில் பெரும்பித்தாக இருப்போர் உள்ளனர்);

பத்திரம் தாம் இட்டுப் பார்த்திருப்பர் - பல மடல்களை இட்டு மற்றோர் அதற்குக் கூறும் மறுமொழிகளை (replies / responses) எதிர்பார்த்திருப்பர்;

எத்தனையோ பேர் திகழப் பெண்ணும் ஆவர் - ஒருவரே பல பெயர்களில் (இஷ்டப்படி தங்களுக்குப் பெயர்சூட்டிக்கொண்டு), ஆண் ஒரு பெண் போலவும், பெண் ஓர் ஆண் போலவும் குழுவில் மாறுவேடத்தில் இருப்பதும் உண்டு; (--அல்லது-- குழுக்களில் ஆண்கள் பெண்கள் எனப் பலர் இருப்பார்கள்);

காண் ஓர் குழு - இப்படிக் காண்பது ஓர் இணையக் குழு (internet group);


சிவன்:

பித்தர் என்றே பேசிப் பெரிது உவக்கும் அன்பர் உளர் - "பித்தரே" என்று போற்றி மகிழும் பக்தர்கள் உள்ளனர்;

பத்திரம் தாம் இட்டுப் பார்த்திருப்பர் - வில்வம் போன்ற இலைகளைத் திருவடியில் இட்டு வணங்குவர்;

எத்தனையோ பேர் திகழப் பெண்ணாணும் ஆவர் காண் - எண்ணற்ற நாமங்கள் உடையவர்; அர்த்தநாரீஸ்வரர்;

வார்சடைமேல் வன்னி அணிவார் - நீண்ட சடைமேல் வன்னியை அணியும் சிவபெருமானார்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


M.045 - இழுக்குமொழி - நஞ்சுகந்தான் - மடக்கு

2009-12-30

M.045 - இழுக்குமொழி - நஞ்சுகந்தான் - மடக்கு

--------------

இழுக்குமொழி பேசுவிழிப் பெண்களையும், என்றும்

இழுக்குமொழி சொல்வோர்கூட் டென்னும் - இழுக்குமொழி

நஞ்சுகந்தான் தாளிணையை நாளும் தொழுநிலைக்கும்

நஞ்சுகந்தான் தீரும் நலிவு.


பதம் பிரித்து:

இழுக்கும் மொழி பேசு விழிப் பெண்களையும், என்றும்

இழுக்கு-மொழி சொல்வோர் கூட்டு என்னும் - இழுக்கும் ஒழி;

நஞ்சு உகந்தான் தாளிணையை நாளும் தொழு; நிலைக்கும்

நம் சுகம் தான்; தீரும் நலிவு.


சொற்பொருள்:

இழுக்குமொழி - 1. இழுக்கும் (ஈர்க்கின்ற) மொழி; 2. இழுக்கு மொழி (வழு/குற்றம் உடைய சொற்கள்); 3. இழுக்கும் ஒழி (குற்றத்தையும் நீங்கு);

கூட்டு - உறவு; சினேகம்;

நஞ்சுகந்தான் - 1. நஞ்சு உகந்தான் (ஆலகாலத்தை விரும்பியவன்); 2. நம் சுகம்தான்;

நலிவு - துன்பம்;


இழுக்கும் மொழி பேசு விழிப் பெண்களையும், என்றும் இழுக்கு-மொழி சொல்வோர் கூட்டு என்னும் இழுக்கும் ஒழி - ஈர்க்கின்ற மொழியைக் கண்களால் பேசும் பெண்களையும், எப்பொழுதும் குற்றமுடைய வார்த்தைகளையே பேசுபவர்களது சினேகம் என்ற இழுக்கையும் நீங்கு;

நஞ்சு உகந்தான் தாளிணையை நாளும் தொழு - ஆலகாலத்தை விரும்பி உண்ட ஈசனது இருதிருவடிகளைத் தினமும் வணங்கு;

நிலைக்கும் நம் சுகம்தான் - நம் சுகம் என்றும் நிலைக்கும்; (தான் - தேற்றச்சொல்; அசைச்சொல் என்றும் கொள்ளலாம்);

தீரும் நலிவு - துன்பம் தீரும்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

Saturday, December 18, 2021

S.109 - சிவன் - குளம் - சிலேடை

திருவெம்பாவை ஸ்பெஷல்!

2009-12-28

S.109 - சிவன் - குளம் - சிலேடை

------------------

தன்னடைந்தார் தாகந் தணிவிக்கும் மேலும்நீர்

மன்னி யிருக்கும் மலர்களுந் - துன்னுமே

ஆடவரும் பெண்களு மங்கே படியடைவர்

கோடனிலாச் சூடி குளம்.


சொற்பொருள்:

அடைதல் - 1. சேர்தல்; 2. சரண்புகுதல்;

தாகம் - 1. நீர்வேட்கை; 2. ஆசை;

தணிவித்தல் - 1. நீக்குதல்; தீர்த்தல்; 2. பூர்த்திசெய்தல்; நிறைத்தல்; (11.20.5 - "விநாயகனே வேட்கை தணிவிப்பான்");

மேலும் - 1. பின்னும்; 2. மேலே; (உம் - அசை);

மன்னுதல் - 1. நிலைபெறுதல்; 2. தங்குதல்; 3. மிகுதல்;

துன்னுதல் - செறிதல்; பொருந்துதல்; நெருங்குதல்;

ஆடுதல் - நீராடுதல்;

ஆடவரும் - 1. நீராட வருகின்ற; 2. ஆண்களும்;

படி - 1. படிக்கட்டு (steps); 2. நிலம்;

கோடனிலா - கோடல் நிலா - 1. வளைவுடைய சந்திரன்; 2. காந்தள்மலரும் சந்திரனும்;

கோடல் - 1. கோடுதல்; வளைதல்; - வளைவு; (சம்பந்தர் தேவாரம் - 3.23.11 - "கோடல்வெண் பிறையனை"); 2. காந்தள்மலர்; (சம்பந்தர் தேவாரம் - 2.29.9 - "கோடலொடு கூன்மதி குலாய சடைதன்மேல்");


குளம்:

தன் அடைந்தார் தாகம் தணிவிக்கும் - தன்னை அடைந்தவர்களின் தாகத்தைத் தீர்க்கும்;

மேலும், நீர் மன்னியிருக்கும் - அதன்பின்னும், நீர் மிகுந்திருக்கும்;

மலர்களும் துன்னுமே - தாமரை முதலிய பூக்கள் செறிந்திருக்கும்; (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.13 - "பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்");

ஆட வரும் பெண்களும் அங்கே படி அடைவர் - நீராட வருகிற பெண்களும் அங்கே படிக்கட்டைச் சேர்வார்கள்;

குளம் - ஒரு குளம்;


சிவன்:

தன் அடைந்தார் தாகம் தணிவிக்கும் - தன்னைச் சரணடைந்தவர்களின் ஆசைகளைத் தீர்ப்பான்; (அவர்கள் வேண்டும் வரங்கள் தருவான்);

மேலும் நீர் மன்னியிருக்கும்; மலர்களும் துன்னுமே - அவன் உச்சிமேல் கங்கை என்றும் தங்கியிருக்கும்; பூக்களும் பொருந்தியிருக்கும்;

ஆடவரும் பெண்களும் அங்கே படி அடைவர் - ஆண்களும் பெண்களும் நிலத்தில் வீழ்ந்து வணங்குவார்கள்;

கோடல்-நிலாச் சூடி - காந்தள்மலரையும் வளைந்த திங்களையும் சூடிய சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

S.108 - சிவன் - வாழையிலை - புறச்சமயிகள் - சிலேடை

2009-12-24

S.108 - சிவன் - வாழையிலை - புறச்சமயிகள் - சிலேடை

------------------

(இப்பாடலை மூன்று விதமாகப் பொருள்கொள்ளலாம்)


கூறார்மெய் வண்ணங் கொடுதரையை உற்றாலு

மாறா மதியோடு வந்தவர் - வேறாப்

பொருள்பட வென்றும் புகல்வார் சடையோ

டிருப்பவர்வான் வாழையிலை யென்று.


சொற்பொருள்:

கூறு - பாதி; பங்கு;

கூறுதல் - சொல்லுதல்;

ஆர்தல் - பொருந்துதல்;

மெய் - 1. உடல்; 2. உண்மை;

வண்ணம் - குணம்; இயல்பு; நிறம்; வடிவு;

கொடு - கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு;

தரை - பூமி; நிலம்;

உறுதல் - அடைதல்;

மாறுதல் - 1. வேறுபடுதல்; 2. சரிப்படுதல்;

மாறு - வேறுபாடு (Mutation, change);

மதி - 1. சந்திரன்; 2. அறிவு;

- இடபம்; எருது;

ஓடு - 1. மூன்றாம்வேற்றுமை உருபு; 2. மண்டையோடு;

வேறு - 1. பிறிது (Other, that which is different); 2. எதிரிடையானது (That which is opposite); 3. சிறப்புடையது (That which is special or distinct);

புகல்தல் - சொல்லுதல்;

வார்தல் - நெடுமையாதல்;

வான் - வானுலகம்; பெருமை; அழகு; நன்மை;

இலை - 1. மரத்தின் இலை; 2. இல்லை;

- தலைவன்; அரசன்;

ஐயில் - அயில் - முதற்போலி. (மயல் - மையல் என்று வருவது போல). (கம்பராமாயணம் - "பெருகு ஐயில் பெயர்த்தனர், தலையைப் பேணவர்" - ஐயில் - அயில் - முதற்போலி); (Digital Tevaram on IFP site: சம்பந்தர் தேவாரம் - 3.114.2 - "பரந்து இலங்கு ஐயில் சூலம் (அது) என்பதே" - ஐயில் - அயில் (போலி: syllable or letter resembling another in sound));

அயில் - வேல்; இங்கே மூவிலைவேல் - திரிசூலம்;

ஐயில் ஐ - 1. சூலபாணி; 2. தலைவரில் தலைவன்; (இல், இன் - ஐந்தாம் வேற்றுமை உருபு);


வாழையிலை:

கூறு ஆர் மெய் வண்ணம் கொடு தரையை உற்றாலும்,

மாறா மதியோடு வந்தவர், வேறாப்

பொருள்பட என்றும் புகல்வார் --- சடையோடு

இருப்பவர் --- வான் வாழையிலை என்று.


(முழு இலையாக அல்லாமல்) ஒரு பகுதியாக இருக்கும் வடிவத்தோடு (ஏடு), (பசிய) நிறத்தோடு, (பந்தியில்) தரையை வந்தடைந்தாலும், நிலையான ஞானத்தோடு வந்தவர்களான சடையுடையவர்கள் (தவசிகள்), அதனைச் சிறப்பித்து "உயர்ந்த வாழையிலை" என்று சொல்வார்கள்.

(அது தரையில் இருந்தாலும், அதனை "வான் இலை" என்றே சொல்வார்கள்).

(பச்சைநிறம் அல்லாமல் வேறு நிறத்தோடு உள்ள சருகை உண்கலமாக இட்டாலும் சிறப்பாக ஏற்பர் - என்றும் பொருள்கொள்ளல் ஆம்);


புறச்சமயிகள்:

கூறார் மெய்; வண்ணம்கொடு தரையை உற்றாலும்,

மாறு ஆம் மதியோடு வந்து, அவர் வேறாப்

பொருள்பட என்றும் புகல்வார் --- "சடையோடு

இருப்பவர் வான் வாழ் ஐ இலை" என்று.


உண்மையைச் சொல்லமாட்டார்கள்; (இறைவன் சகுணமாகி) உருவத்தோடு பூமியில் தோன்றினாலும், முரண்பட்ட கருத்தோடு (திரிந்த அறிவோடு) அவர்கள் வேறுவிதமாகப் பேசுவார்கள் - "சடையோடு இருப்பவர் வானுலகில் உறையும் தலைவன் இல்லை" என்று.


சிவன்:

கூறு ஆர் மெய் வண்ணம்கொடு தரையை உற்றாலும்,

ஆறு ஆ மதி ஓடு உவந்தவர்; வேறாப்

பொருள்பட, என்றும் புகல், "வார்-சடையோடு

இருப்பவர், வான் வாழ் ஐயில்-" என்று.


அர்த்தநாரீஸ்வரக் கோலத்தோடு பூமியில் தோன்றினாலும், கங்கையையும் இடபம் சந்திரன் பிரமனது மண்டையோடு இவற்றை விரும்புபவர் (/ இவற்றோடு வந்தவர்); "நீண்ட சடையோடு இருப்பவர்; வானுலகில் இருக்கின்ற, சூலம் ஏந்தும் தலைவர்" என்று அவரைச் சிறப்பித்து என்றும் சொல்வாயாக. ("ஐயில் ஐ - தலைவரின் தலைவர்" என்றுகொண்டு, தேவர்கோவிற்கும் தலைவன் என்றும் பொருள்கொள்ளலாம்);


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Tuesday, December 14, 2021

S.107 - சிவன் - தமிழ்நாட்டுப் பேருந்து (Bus in Tamil Nadu) - சிலேடை

2009-12-20

S.107 - சிவன் - தமிழ்நாட்டுப் பேருந்து (Bus in Tamil Nadu) - சிலேடை

------------------

ஓர்பக்கம் பெண்ணுக்கென் றுண்டுவந் தூரேறும்

பாரிடம் போற்றுமுன்னும் பின்னுமுறும் - பேரிருக்கும்

ஆர்க்கும் அரவம் அமரும் இருக்கைமலி

சீர்த்திப்பே ருந்து சிவன்.


சொற்பொருள்:

உண்டுவந்தூரேறும் - 1. உண்டு; வந்து ஊர் ஏறும்; 2. உண்டு; உவந்து ஊர் ஏறும்;

ஊர் ஏறும் - 1. ஊர் மக்கள் ஏறுவர்; 2. ஊர்கின்ற இடபமும்;

பாரிடம் - 1. பூமி; தேசம்; 2. பூதகணம்;

முன் - 1. இடத்தால் முன்; 2. காலத்தால் முன்;

பின் - 2. இடத்தால் பின்; 2. காலத்தால் பின்;

உறுதல் - இருத்தல்;

பேர் - 1. பெயர்; 2. புகழ்;

ஆர்த்தல் - 1. ஒலித்தல்; 2. கட்டுதல்;

அரவம் - 1. ஒலி; சத்தம்; 2. பாம்பு;

அமர்தல் - 1. இருத்தல் (உட்கார்தல்); 2. விரும்புதல்;

இருக்கை - 1. ஆசனம்; 2. வேதத்தை; (இருக்கு - ரிக்வேதம்; வேதம்);

மலிதல் - மிகுதல்;

சீர்த்தி - புகழ்;

பேருந்து - Bus;


தமிழ்நாட்டுப் பேருந்து:

ஓர் பக்கம் பெண்ணுக்கு என்று உண்டு - பெண்களுக்கு ஒரு-பக்கத்து இருக்கைகளை ஒதுக்கியிருப்பர்;

வந்து ஊர் ஏறும் - ஊர்மக்கள் வந்து ஏறுவார்கள்;

பாரிடம் போற்றும் - நாட்டிலுள்ளோர் போற்றுவர்; (பார் - பூமி; தேசம்); (சம்பந்தர் தேவாரம் - 2.104.4 - "பார்கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை");

முன்னும் பின்னும் உறும் பேர் - முற்பக்கத்திலும் பிற்பக்கத்திலும் (நிறுவனத்தின் & செல்லும் ஊரின்) பெயர் எழுதப்பெற்றிருக்கும்;

இருக்கும் ஆர்க்கும் அரவம் - ஒலிக்கும் சத்தம் இருக்கும்;

அமரும் இருக்கை மலி சீர்த்திப் - உட்காரும் ஆசனங்கள் நிறைந்த புகழுடைய;

பேருந்து - (தமிழ்நாட்டுப்) பேருந்து (bus in Tamil Nadu);


சிவன்:

ஓர் பக்கம் பெண்ணுக்கு என்று உண்டு - அர்த்தநாரீஸ்வரன்;

உவந்து ஊர்-ஏறும் பாரிடம் போற்றும் - மகிழ்ந்து ஊர்கின்ற இடபத்தையும் உலகம் போற்றும்;

பாரிடம் போற்றும் - பூதகணங்கள் போற்றும்;

முன்னும் பின்னும் உறும் பேர் இருக்கும் - காலத்தைக் கடந்தவன் என்ற புகழ் இருக்கும்;

ஆர்க்கும் அரவம் - பாம்பை (அரைநாணாகக்) கட்டியவன்;

அமரும் இருக்கை - வேதத்தை விரும்பியவன்;

மலி சீர்த்திச் சிவன் - மிகுந்த புகழுடைய சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

T.121 - பொது - வேதனைக்கிடமான

2009-12-19

T.121 - பொது - வேதனைக்கிடமான

-----------------

(வண்ணவிருத்தம்;

தான தத்தன தான தத்தன

தான தத்தன .. தனதான)


வேத னைக்கிட மான இப்புவி

.. .. மீது மற்றொரு .. வடிவோடு

.. மீள வைத்திடு தீவி னைப்பொதி

.. .. வேர றுத்திட .. நினையாயோ

வாதை யற்றுல வாத நற்றிரு

.. .. வாழ்வி லுற்றிட .. மனமேநீ

.. வார முற்றிரு போது(ம்) மெச்சிடு

.. .. வால்வி டைப்பரன் இருபாதம்

ஆத ரத்தொடு பூச லுட்செயும்

.. .. ஆக மத்தளி .. மகிழீசன்

.. ஆவி பற்றிடு கால னைக்கழ

.. .. லாலு தைத்தவன் .. அருளாளன்

வேதன் அச்சுதன் நேட மிக்கொளி

.. .. வீசி டத்தழல் .. உருவானான்

.. வேணி யிற்புனல் ஆர உத்தமி

.. .. மேனி யிற்றிகழ் .. பெருமானே.


பதம் பிரித்து:

வேதனைக்கு இடம் ஆன இப்புவி

.. .. மீது மற்றொரு வடிவோடு

.. மீளவைத்திடு தீவினைப்-பொதி

.. .. வேரறுத்திட நினையாயோ?

வாதையற்று உலவாத நற்றிரு

.. .. வாழ்வில் உற்றிட, மனமே, நீ

.. வாரம்-உற்று இருபோது(ம்) மெச்சிடு

.. .. வால்-விடைப்-பரன் இருபாதம்;

ஆதரத்தொடு பூசல் உட்செயும்

.. .. ஆகமத்-தளி மகிழ் ஈசன்;

.. ஆவி பற்றிடு காலனைக்

.. .. கழலால் உதைத்தவன்; அருளாளன்;

வேதன் அச்சுதன் நேட மிக்கு ஒளி

.. .. வீசிடத் தழல் உரு ஆனான்;

.. வேணியில் புனல் ஆர, உத்தமி

.. .. மேனியில் திகழ் பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

வேதனைக்கு இம் ஆன இப்புவி மீது மற்றொரு வடிவோடு மீளவைத்திடு தீவினைப்-பொதி வேரறுத்திட நினையாயோ - துன்பங்களுக்கு இடமான இவ்வுலகில் இன்னொரு உடம்பில் மீண்டும் பிறவி அளிக்கும் பாவமூட்டையை முற்றிலும் தீர்ப்பதற்கு எண்ணமாட்டாயா?

வாதைற்றுலவாத நல்-திரு வாழ்வில் உற்றிட - வாழ்வில் படும் துன்பங்கள் நீங்கி என்றும் அழியாத பாக்கியத்தைப் பெறுவதற்கு; (வாதை - துன்பம்); (உலத்தல் - அழிதல்; குறைதல்);

மனமே, நீ வாரம்-உற்று இருபோது(ம்) மெச்சிடு வால்-விடைப்-பரன் இருபாதம் - மனமே, நீ அன்போடு காலையும் மாலையும், வெண்ணிற எருதை வாகனமாக உடைய பரமனது இருபாதங்களைத் துதி; (வாரம் - அன்பு); (மெச்சுதல் - புகழ்தல்; துதித்தல்); (வால் - வெண்மை); (அப்பர் தேவாரம் - 4.63.9 - "வாலுடை விடையாய்");

ஆதரத்தொடு பூசல் உள் செயும் ஆகமத்-தளி மகிழ் ஈசன் - பூசலார் நாயனார் பெருவிருப்போடு தம் உள்ளத்தில் எழுப்பிய ஆகமவிதிப்படி அமைந்த கோயிலில் மகிழ்ந்து எழுந்தருளிய ஈசன்; (ஆதரம் - அன்பு); (பூசல் - பூசலார் நாயனார்); (உள் - உள்ளம்); (செயும் - செய்யும்); (தளி - கோயில்); (* பூசலார் நாயனார் மனத்தில் கோயில் கட்டிய வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

ஆவி பற்றிடு காலனைக் கழலால் உதைத்தவன் - (மார்க்கண்டேயரின்) உயிரைக் கொல்ல வரும் எமனைத் திருவடியால் உதைத்தவன்;

அருளாளன் - பேரருள் உடையவன்;

வேதன் அச்சுதன் நேட மிக்கு ஒளி வீசிடத் தழல் உருனான் - பிரமனும் திருமாலும் அடிமுடி தேடுமாறு மிகுந்த ஒளி வீசச் சோதியாகி நின்றவன்; (நேடுதல் - தேடுதல்);

வேணியில் புனல் ஆர, உத்தமி மேனியில் திகழ் பெருமானே - சடையில் கங்கை பொருந்தத், திருமேனியில் உமையை ஒரு கூறாக உடைய பெருமான்; (வேணி - சடை); (ஆர்தல் - பொருந்துதல்); (- ஈற்றசை);


வி. சுப்பிரமணியன்

----------- --------------