2009-12-19
T.121 - பொது - வேதனைக்கிடமான
-----------------
(வண்ணவிருத்தம்;
தான தத்தன தான தத்தன
தான தத்தன .. தனதான)
வேத னைக்கிட மான இப்புவி
.. .. மீது மற்றொரு .. வடிவோடு
.. மீள வைத்திடு தீவி னைப்பொதி
.. .. வேர றுத்திட .. நினையாயோ
வாதை யற்றுல வாத நற்றிரு
.. .. வாழ்வி லுற்றிட .. மனமேநீ
.. வார முற்றிரு போது(ம்) மெச்சிடு
.. .. வால்வி டைப்பரன் இருபாதம்
ஆத ரத்தொடு பூச லுட்செயும்
.. .. ஆக மத்தளி .. மகிழீசன்
.. ஆவி பற்றிடு கால னைக்கழ
.. .. லாலு தைத்தவன் .. அருளாளன்
வேதன் அச்சுதன் நேட மிக்கொளி
.. .. வீசி டத்தழல் .. உருவானான்
.. வேணி யிற்புனல் ஆர உத்தமி
.. .. மேனி யிற்றிகழ் .. பெருமானே.
பதம் பிரித்து:
வேதனைக்கு இடம் ஆன இப்புவி
.. .. மீது மற்றொரு வடிவோடு
.. மீளவைத்திடு தீவினைப்-பொதி
.. .. வேரறுத்திட நினையாயோ?
வாதையற்று உலவாத நற்றிரு
.. .. வாழ்வில் உற்றிட, மனமே, நீ
.. வாரம்-உற்று இருபோது(ம்) மெச்சிடு
.. .. வால்-விடைப்-பரன் இருபாதம்;
ஆதரத்தொடு பூசல் உட்செயும்
.. .. ஆகமத்-தளி மகிழ் ஈசன்;
.. ஆவி பற்றிடு காலனைக்
.. .. கழலால் உதைத்தவன்; அருளாளன்;
வேதன் அச்சுதன் நேட மிக்கு ஒளி
.. .. வீசிடத் தழல் உரு ஆனான்;
.. வேணியில் புனல் ஆர, உத்தமி
.. .. மேனியில் திகழ் பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;
வேதனைக்கு இடம் ஆன இப்புவி மீது மற்றொரு வடிவோடு மீளவைத்திடு தீவினைப்-பொதி வேரறுத்திட நினையாயோ - துன்பங்களுக்கு இடமான இவ்வுலகில் இன்னொரு உடம்பில் மீண்டும் பிறவி அளிக்கும் பாவமூட்டையை முற்றிலும் தீர்ப்பதற்கு எண்ணமாட்டாயா?
வாதை அற்று உலவாத நல்-திரு வாழ்வில் உற்றிட - வாழ்வில் படும் துன்பங்கள் நீங்கி என்றும் அழியாத பாக்கியத்தைப் பெறுவதற்கு; (வாதை - துன்பம்); (உலத்தல் - அழிதல்; குறைதல்);
மனமே, நீ வாரம்-உற்று இருபோது(ம்) மெச்சிடு வால்-விடைப்-பரன் இருபாதம் - மனமே, நீ அன்போடு காலையும் மாலையும், வெண்ணிற எருதை வாகனமாக உடைய பரமனது இருபாதங்களைத் துதி; (வாரம் - அன்பு); (மெச்சுதல் - புகழ்தல்; துதித்தல்); (வால் - வெண்மை); (அப்பர் தேவாரம் - 4.63.9 - "வாலுடை விடையாய்");
ஆதரத்தொடு பூசல் உள் செயும் ஆகமத்-தளி மகிழ் ஈசன் - பூசலார் நாயனார் பெருவிருப்போடு தம் உள்ளத்தில் எழுப்பிய ஆகமவிதிப்படி அமைந்த கோயிலில் மகிழ்ந்து எழுந்தருளிய ஈசன்; (ஆதரம் - அன்பு); (பூசல் - பூசலார் நாயனார்); (உள் - உள்ளம்); (செயும் - செய்யும்); (தளி - கோயில்); (* பூசலார் நாயனார் மனத்தில் கோயில் கட்டிய வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);
ஆவி பற்றிடு காலனைக் கழலால் உதைத்தவன் - (மார்க்கண்டேயரின்) உயிரைக் கொல்ல வரும் எமனைத் திருவடியால் உதைத்தவன்;
அருளாளன் - பேரருள் உடையவன்;
வேதன் அச்சுதன் நேட மிக்கு ஒளி வீசிடத் தழல் உரு ஆனான் - பிரமனும் திருமாலும் அடிமுடி தேடுமாறு மிகுந்த ஒளி வீசச் சோதியாகி நின்றவன்; (நேடுதல் - தேடுதல்);
வேணியில் புனல் ஆர, உத்தமி மேனியில் திகழ் பெருமானே - சடையில் கங்கை பொருந்தத், திருமேனியில் உமையை ஒரு கூறாக உடைய பெருமான்; (வேணி - சடை); (ஆர்தல் - பொருந்துதல்); (ஏ - ஈற்றசை);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment