Thursday, December 9, 2021

P.279 - வலிவலம் - சூழைவர் வஞ்சம்

2015-03-26

P.279 - வலிவலம்

------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - "வேதியா வேத கீதா")

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

சூழைவர் வஞ்சம் செய்யத் .. தொடர்ந்திடர் உற்று வாடும்

ஏழையேன் தனக்கி ரங்கி .. இன்பமார் வாழ்வு நல்காய்

தாழவிர் சடையின் மீது .. தண்மதி ஏற்று கந்தாய்

மாழையொண் கண்ணி பங்கா .. வலிவலம் உடைய கோவே.


சூழ் ஐவர் வஞ்சம் செய்யத் தொடர்ந்து இடர் உற்று வாடும் - சுற்றியுள்ள ஐம்புலன்களின் தாக்குதலால் தொடர்ந்து துன்பமே அடைந்து வாடுகின்ற;

ஏழையேன்-தனக்கு இரங்கி இன்பம் ஆர் வாழ்வு நல்காய் - அடியேனுக்கு இரங்கி இன்பம் மிக்க வாழ்வை அருள்வாயாக;

தாழ்-அவிர்-சடையின்மீது தண்மதி ஏற்று உகந்தாய் - தாழ்கின்றதும் ஒளியுடையதுமான சடையின்மேல் குளிர்ந்த சந்திரனை அணிந்து மகிழ்ந்தவனே; (அவிர்தல் - பிரகாசித்தல்);

மாழை-ண்-கண்ணி பங்கா - மாவடுப் போன்ற, அழகிய, ஒளியுடை கண்களை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே; (மாழை - அழகு, இளமை; மாவடு); (* மாழையொண்கண்ணி - திருவலிவலத்து இறைவி திருநாமம்); (சம்பந்தர் தேவாரம் - 1.136.6 - "மாழையொண்கண் மடவாளையொர் பாகமகிழ்ந்தவர்"); (திருவாசகம் - அடைக்கலப்பத்து - 8.24.8 - "மாவடு வகிரன்ன கண்ணிபங்கா")

வலிவலம் உடைய கோவே - திருவலிவலத்தில் உறைகின்ற தலைவனே;


2)

புயலென ஆசை வீசப் .. பொருவினை சூழ்ந்து தாக்க

அயர்வுறு வேற்கி ரங்கி .. அஞ்சலென் றேன்று கொள்ளாய்

கயலன கண்ணி பங்கா .. கதிர்மதி சூடும் எந்தாய்

வயலிடை வாளை பாயும் .. வலிவலம் உடைய கோவே.


புயலென ஆசை வீசப், பொருவினை சூழ்ந்து தாக்க - ஆசைகள் புயல் போல வீசப், போர்செய்யும் பழவினைகள் சுற்றித் தாக்க; (பொருதல் - போர்செய்தல்); (அப்பர் தேவாரம் - 4.88.4 - "பொருவினை யெல்லாம் துரந்தனைப்");

அயர்வுறுவேற்கு இரங்கி, "அஞ்சல்" ன்று ஏன்றுகொள்ளாய் - அதனால் தளர்ந்த எனக்கு இரங்கி, "அஞ்சாதே" என்று அபயம் அளித்து, என்னைக் காத்தருள்வாயாக; (அயர்வுறுவேற்கு - அயர்வுறுவேன்+கு); (அயர்வுறுதல் - தளர்தல்; சோர்தல்); (ஏன்றுகொள்ளுதல் - ஏற்றுக்கொள்ளுதல்; தாங்குதல்);

கயல் அன கண்ணி பங்கா - கயல்மீன் போன்ற கண்ணை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே; (அன - அன்ன - போன்ற);

கதிர்மதி சூடும் எந்தாய் - கதிர்களை உடைய சந்திரனைச் சூடிய எம் தந்தையே;

வயலிடை வாளை பாயும் வலிவலம் உடைய கோவே - வாளைமீன்கள் பாய்கின்ற வயல்கள் சூழ்ந்த திருவலிவலத்தில் எழுந்தருளிய எம் தலைவனே;


3)

கலிகடல் போலச் சூழ்ந்த .. கடுவினை தன்னில் ஆழ்ந்து

மெலிவுறு வேற்கி ரங்காய் .. வெண்டலை ஒன்றை ஏந்திப்

பலிதிரி கின்ற பண்பா .. பரவுவார்க் கென்றும் அன்பா

மலிபுனல் வாவி சூழ்ந்த .. வலிவலம் உடைய கோவே.


கலிகடல் போலச் சூழ்ந்த கடுவினை-தன்னில் ஆழ்ந்து மெலிவுறுவேற்கு இரங்காய் - ஒலிக்கின்ற கடல் போலச் சூழ்ந்த கொடிய வினையில் மூழ்கி வருந்தும் எனக்கு இரங்கியருள்க; (கலித்தல் - ஒலித்தல்); (மெலிவு - தளர்ச்சி; கஷ்டம்);

வெண்லை ஒன்றை ஏந்திப் பலிதிரிகின்ற பண்பா - வெண்மையான மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்குத் திரிபவனே; (பலி - பிச்சை);

பரவுவார்க்கு என்றும் அன்பா - துதிப்பார்களுக்கு என்றும் அன்பு உடையவனே; (பரவுதல் - துதித்தல்);

மலி-புனல் வாவி சூழ்ந்த வலிவலம் உடைய கோவே - நீர் நிறைந்த குளம் சூழ்ந்த திருவலிவலத்தில் எழுந்தருளிய எம் தலைவனே; (மலிபுனல்வாவி - புனல் மலி வாவி; வாவி - குளம்; நீர்நிலை);


4)

பண(ம்)மனை பதவி என்ற .. படுகடல் தன்னில் மூழ்கித்

திணறுகின் றேற்கி ரங்காய் .. திகழ்மதி சென்னி வைத்தாய்

பிணமெரி காட்டில் அல்லிற் .. பெருநடம் ஆடும் நாதா

மண(ம்)மலி சோலை சூழ்ந்த .. வலிவலம் உடைய கோவே.


பணம் மனை பதவி என்ற படுகடல்-தன்னில் மூழ்கித் திணறுகின்றேற்கு இரங்காய் - பொருள், குடும்பம், பதவி என்ற பெரிய கொடிய மாயக்கடலில் மூழ்கித் திணறுகின்ற எனக்கு இரங்கி அருள்வாயாக; (படுகடல் - கொடிய பெரிய கடல்; ஒலிக்கின்ற கடல்); (படு - 1. பெரிய. 2. கொடிய); (படுதல் - ஒலித்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.67.7 - "பந்தித்தவ் வல்வினைப் பற்றறப் பிறவிப் படுகடற் பரப்புத் தவிர்ப்பானைச்");

திகழ்-மதி சென்னி வைத்தாய் - ஒளிவீசும் சந்திரனைத் திருமுடிமேல் அணிந்தவனே;

பிணம் எரி காட்டில் அல்லில் பெருநடம் ஆடும் நாதா - பிணம் எரியும் சுடுகாட்டில் நள்ளிருளில் திருக்கூத்து ஆடும் நாதனே; (அல் - இருள்);

மணம் மலி சோலை சூழ்ந்த வலிவலம் உடைய கோவே - வாசம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவலிவலத்தில் எழுந்தருளிய எம் தலைவனே;


5)

மண்டிவல் வினைகள் வந்தென் .. மதியினை மறைக்கு(ம்) முன்னே

வண்டமிழ் பாடி உன்னை .. வாழ்த்திவ ணங்க நல்காய்

பண்டரு நஞ்சை உண்ட .. பரமனே பாவை பங்கா

வண்டறை சோலை சூழ்ந்த .. வலிவலம் உடைய கோவே.


மண்டி வல்வினைகள் வந்து என் மதியினை மறைக்கு(ம்) முன்னே - வலிய வினைகள் திரண்டு நெருங்கிவந்து என் அறிவை மறைப்பதன் முன்பே; (மண்டுதல் - நெருங்குதல்; மிகுதல்); (சுந்தரர் தேவாரம் - 7.83.1 - "அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி முந்தி எழும் பழைய வல்வினை மூடாமுன்");

வண்தமிழ் பாடி உன்னை வாழ்த்தி வணங்க நல்காய் - தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைப் பாடி உன்னைப் போற்றி வணங்க அருள்க; (வண்டமிழ் - வண்தமிழ் - தேவாரம், திருவாசகம்);

பண்டு அருநஞ்சை உண்ட பரமனே - முற்காலத்தில் ஆலகாலத்தை உண்டருளிய பரமனே; (பண்டு - முற்காலத்தில்);

பாவைபங்கா - உமைபங்கனே;

வண்டு அறை சோலை சூழ்ந்த வலிவலம் உடைய கோவே - வண்டுகள் ஒலிக்கும் செய்யும் பொழில் சூழ்ந்த திருவலிவலத்தில் எழுந்தருளிய எம் தலைவனே; (அறைதல் - ஒலித்தல்);


6)

தீவினை யான தீரத் .. தினமுமுன் நாமம் ஓதிப்

பாவினைப் பாடிப் பாதம் .. பணிந்திடும் எண்ண(ம்) நல்காய்

தேவியைப் பாகம் வைத்தாய் .. சேவினைக் கொடியில் வைத்தாய்

வாவியில் மாதர் ஆடும் .. வலிவலம் உடைய கோவே.


தீவினையான தீரத், தினமும் உன் நாமம் ஓதிப், பாவினைப் பாடிப், பாதம் பணிந்திடும் எண்ணம் நல்காய் - தீவினையெல்லாம் தீரும்படி, தினமும் உன் திருநாமத்தை ஓதிப், பாமாலைகளைப் பாடித், திருவடியை வணங்கும் எண்ணத்தை எனக்கு அளிப்பாயாக; (பா - பாடல்);

தேவியைப் பாகம் வைத்தாய் - உமாதேவியை ஒரு பாகமாக மகிழ்ந்தவனே;

சேவினைக் கொடியில் வைத்தாய் - இடபக்கொடி உடையவனே; (சே - எருது);

வாவியில் மாதர் ஆடும் வலிவலம் உடைய கோவே - குளத்தில் பெண்கள் குளிக்கும் திருவலிவலத்தில் எழுந்தருளிய எம் தலைவனே; (வாவி - குளம்; நீர்நிலை); (ஆடுதல் - நீராடுதல்; குளித்தல்);


7)

மதனனை எரித்த கண்ணா .. வல்வினை மாய உன்றன்

பதமலர் பரவி நாளும் .. பணிந்திடும் எண்ணம் நல்காய்

மதுகர(ம்) நாடு கொன்றை .. வளர்மதி சூடும் எந்தாய்

மதகரி உரிவை போர்த்தாய் .. வலிவலம் உடைய கோவே.


மதனனை எரித்த கண்ணா - காமனை எரித்த நெற்றிக்கண்ணனே; (மதனன் - மன்மதன்);

வல்வினை மாய உன்றன் பதமலர் பரவி நாளும் பணிந்திடும் எண்ணம் நல்காய் - வலிய வினையெல்லாம் தீரும்படி, உன் திருவடித்தாமரையைத் துதித்துத் தினமும் வணங்கும் எண்ணத்தை எனக்கு அளிப்பாயாக; (பதம் - பாதம்);

மதுகரம் நாடு கொன்றை, வளர்-மதி சூடும் எந்தாய் - வண்டுகள் விரும்பும் கொன்றைமலரையும் என்றும் வளர்கின்ற இளந்திங்களையும் சூடிய எம் தந்தையே; (மதுகரம் - தேனீ; வண்டு);

மதகரி உரிவை போர்த்தாய் - மதயானையின் தோலைப் போர்த்தவனே; (கரி - யானை); (உரிவை - தோல்);

வலிவலம் உடைய கோவே - திருவலிவலத்தில் எழுந்தருளிய எம் தலைவனே;


8)

மானமர் கையாய் உன்றன் .. மலைதனைப் பேரி லங்கைக்

கோனழ முடிகள் பத்தைக் .. குரைகழ லால்நெ ரித்தாய்

தேனமர் கொன்றை மத்தம் .. திகழ்மதி உச்சி வைத்தாய்

வானமர் மாடக் கோயில் .. வலிவலம் உடைய கோவே.


மான் அமர் கையாய் - மானைக் கையில் ஏந்தியவனே;

உன்றன் மலைதனைப் பேர்-இலங்கைக் கோன் அழ முடிகள் பத்தைக் குரைகழலால் நெரித்தாய் - உன் மலையைப் பேர்த்த இலங்கைமன்னனான இராவணன் அழும்படி அவனது பத்துத் தலைகளையும் ஒலிக்கும் கழல் அணிந்த திருப்பாதத்தால் நசுக்கியவனே;

தேன் அமர் கொன்றை, மத்தம், திகழ்-மதி உச்சி வைத்தாய் - வண்டுகள் விரும்பும் தேன் திகழும் கொன்றைமலரையும், ஊமத்தமலரையும், சந்திரனையும் தலைமேல் அணிந்தவனே; (தேன் - மது; வாசனை; வண்டு); (அமர்தல் - இருத்தல்; விரும்புதல்);

வான் அமர் மாடக்கோயில் வலிவலம் உடைய கோவே - வானளாவும் (& வானோர் விரும்பித் தொழும்) மாடக்கோயிலான திருவலிவலத்தில் எழுந்தருளிய எம் தலைவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.57.4 - "திருநல்லூர் வானமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே");


9)

பூமனும் அயனு(ம்) மாலும் .. போற்றிட நின்ற சோதீ

காமனைக் காய்ந்த நெற்றிக் .. கண்ணனே கால காலா

மாமனைத் தலைய ரிந்து .. மகத்தினைத் தகர்த்த வீரா

மாமறை நாலும் ஓது .. வலிவலம் உடைய கோவே.


பூ மனும் அயனும் மாலும் போற்றிட நின்ற சோதீ - தாமரைப்பூவில் உறையும் பிரமனும் திருமாலும் வணங்கும்படி ஓங்கிநின்ற ஜோதியே; (பூமனும் = பூ மன்னும்; இடைக்குறை விகாரம்); (மன்னுதல் - தங்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.21.9 - "பூமனும் திசைமுகன் தானும் பொற்பமர் வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கெரி");

காமனைக் காய்ந்த நெற்றிக் கண்ணனே - மன்மதனை எரித்த முக்கண்ணனே;

காலகாலா - காலனுக்குக் காலன் ஆனவனே;

மாமனைத் தலை அரிந்து மகத்தினைத் தகர்த்த வீரா - தக்கனது தலையை வெட்டி, அவன் செய்த அவவேள்வியை அழித்த வீரனே; (அரிதல் - வெட்டுதல்); (மகம் - வேள்வி);

மாமறை நாலும் ஓது - நால்வேதங்களையும் பாடியருளிய;

வலிவலம் உடைய கோவே - திருவலிவலத்தில் எழுந்தருளிய எம் தலைவனே;


10)

பொய்யினை நீங்க மாட்டாப் .. புன்னெறி மிண்டர்க் கில்லாய்

மெய்யினில் நீற ணிந்து .. வேதியா விமலா என்று

கையினைக் கூப்பி வாழ்த்தும் .. காதலர்க் கென்றும் உள்ளாய்

மையணி கண்டம் காட்டும் .. வலிவலம் உடைய கோவே.


பொய்யினை நீங்க மாட்டாப் புன்னெறி மிண்டர்க்கு இல்லாய் - என்றும் பொய்யே சொல்லும் புன்னெறிகளைச் சேர்ந்த கல்நெஞ்சர்களுக்கு (அருள்) இல்லாதவனே; (மிண்டன் - கல்நெஞ்சன்);

மெய்யினில் நீறு அணிந்து, "வேதியா! விமலா!" என்று கையினைக் கூப்பி வாழ்த்தும் காதலர்க்கு என்றும் உள்ளாய் - உடம்பில் திருநீற்றைப் பூசி, "வேதியனே! பரிசுத்தனே!" என்று தம் கைகளைக் கூப்பி வாழ்த்தும் அன்பர்களுக்கு என்றும் அருள் உள்ளவனே; (காதலர் - அன்பர்; பக்தர்);

மை அணி கண்டம் காட்டும் - கண்டத்தில் கறையை அணிந்த;

வலிவலம் உடைய கோவே - திருவலிவலத்தில் எழுந்தருளிய எம் தலைவனே;


11)

பூத்தொடுத் திருகை கூப்பிப் .. பொன்னடி போற்றி நின்று

தீத்திரள் போலும் மேனிச் .. சிவபெரு மானே கங்கை

ஆர்த்திடு வேணி மேலோர் .. அரவமும் அணிந்தாய் என்று

வாழ்த்திடு வார்கட் கீயும் .. வலிவலம் உடைய கோவே.


பூத் தொடுத்து இருகை கூப்பிப் பொன்னடி போற்றி நின்று - பூக்களைத் தொடுத்து மாலைகள் அமைத்து அணிவித்து, இருகைகளைக் கூப்பி, அழகிய பொன் போன்ற திருவடிகளை வணங்கி;

"தீத்திரள் போலும் மேனிச் சிவபெருமானே - "தீப் போன்ற செம்மேனியை உடைய சிவபெருமானே;

கங்கை ஆர்த்திடு வேணிமேல் ஓர் அரவமும் அணிந்தாய்" என்று - கங்கைநதி ஒலிக்கின்ற சடையின்மேல் ஒரு பாம்பையும் அணிந்தவனே" என்று போற்றி; (ஆர்த்தல் - ஒலித்தல்); (வேணி - சடை); (அரவம் - பாம்பு);

வாழ்த்திடுவார்கட்கு ஈயும் - வாழ்த்துவார்களுக்கு வரங்கள் அளிப்பான்; (ஈயும் - ஈவான்; செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று);

வலிவலம் உடைய கோவே - திருவலிவலத்தில் எழுந்தருளிய எம் தலைவன்; (- ஈற்றசை);


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

No comments:

Post a Comment