Tuesday, December 14, 2021

T.120 - பொது - தீனருக்களியாது

2009-12-17

T.120 - பொது - தீனருக்களியாது

-----------------

(வண்ணவிருத்தம்;

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன .. தந்ததான)

(ஏது புத்திஐ யாஎ னக்கினி - திருப்புகழ் - திருத்தணிகை)


தீன ருக்களி யாது நற்றவ

.. .. சீல ருக்களி யாது பற்றொடு

.. .. தேடி வைக்கிற மாடும் எத்துணை .. நெஞ்சமேமா

.. சேனை சுற்றிட நாடு பற்பல

.. .. ஆள லுற்றவர் காலன் உய்த்திடு

.. .. சேவ கர்த்தடு காவ லற்றவர் .. வென்றிலாரே

ஊனை விட்டுயிர் ஓட லுற்றதும்

.. .. ஓவெ னக்குடி ஓல மிட்டழு

.. .. தூரி னப்புறம் ஈமம் இட்டிட .. வெந்தநீறே

.. ஓவும் அத்தினம் ஆர்நி னைத்திடு

.. .. நாளு(ம்) மட்டலர் தூவி நற்றமிழ்

.. .. ஓதில் இத்தரை மீது(ம்) நிச்சயம் .. இன்பமாமே

வான வர்க்கமு தாக அப்பெரு

.. .. வாரி கக்கிய கார்வி டத்தினை

.. .. மாமி டற்றினி லேம றைத்தருள் .. உம்பர்நாதன்

.. மாழை மைக்கணி கோம ளக்கொடி

.. .. மாது மைக்கொரு கூறு வைத்தவன்

.. .. வார ணத்துரி மார்பு றப்புனை .. கின்றவீரன்

ஞான மெய்ப்பொருள் வாளி உய்த்திடு

.. .. வேள்த னைச்சுடும் ஓர்நு தற்கணன்

.. .. நார ணற்கலர் மேல னுக்கரி .. தென்றசோதி

.. நாம(ம்) நித்தலு(ம்) நாவு ரைத்தவர்

.. .. நேயன் அற்புத சேம வைப்பவன்

.. .. நாக(ம்) நற்புனல் ஏறு பொற்சடை .. எம்பி ரானே.


பதம் பிரித்து:

தீனருக்கு அளியாது, நற்றவ

.. .. சீலருக்கு அளியாது, பற்றொடு

.. .. தேடி வைக்கிற மாடும் எத்துணை நெஞ்சமே? மா-

.. சேனை சுற்றிட நாடு பற்பல

.. .. ஆளலுற்றவர் காலன் உய்த்திடு

.. .. சேவகர்த் தடு- காவல் அற்றவர்; வென்றிலாரே;

ஊனை விட்டு உயிர் ஓடலுற்றதும்,

.. .. "" எனக் குடி ஓலமிட்டு அழுது,

.. .. ஊரின் அப்புறம் ஈமம் இட்டிட, வெந்த நீறே;

.. ஓவும் அத்தினம் ஆர்? நினைத்திடு;

.. .. நாளு(ம்) மட்டு-அலர் தூவி, நற்றமிழ்

.. .. ஓதில், இத்-தரை மீது(ம்) நிச்சயம் இன்பம் ஆமே;

வானவர்க்கு அமுது ஆக, அப்-பெரு-

.. .. வாரி கக்கிய கார்-விடத்தினை

.. .. மா-மிடற்றினிலே மறைத்தருள் உம்பர்-நாதன்;

.. மாழை மைக்-கணி, கோமளக்-கொடி,

.. .. மாது-உமைக்கு ஒரு கூறு வைத்தவன்;

.. .. வாரணத்து உரி மார்புறப் புனைகின்ற வீரன்;

ஞான மெய்ப்பொருள்; வாளி உய்த்திடு

.. .. வேள்தனைச் சுடும் ஓர் நுதற்கணன்;

.. .. நாரணற்கு அலர்மேலனுக்கு அரிது என்ற சோதி;

.. நாம(ம்) நித்தலு(ம்) நா உரைத்தவர்

.. .. நேயன், அற்புத சேமவைப்பு-அவன்;

.. .. நாக(ம்) நற்புனல் ஏறு பொற்சடை எம்பிரானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

தீனருக்கு அளியாது, நற்றவ-சீலருக்கு அளியாது, பற்றொடு தேடி வைக்கிற மாடும் த்துணை நெஞ்சமே? - நெஞ்சே! வறியோர்க்கும் நல்ல தவமுடையவர்களுக்கும் அன்போடு கொடுத்து மகிழாமல், ஆசையாய்த் தேடிச் சேர்த்துவைக்கின்ற பொருளெல்லாம் எதுவரை? (உயிரோடு) துணையாக வருமா? (தீனர் - வறியவர்); (அளிதல் - அன்புகொள்தல்; கனிதல்); (அளித்தல் - கொடுத்தல்); (மாடு - செல்வம்; பொருள்); (துணை - அளவு; காப்பு; எத்துணை - எவ்வளவு; எக்-காப்பு);

மா-சேனை சுற்றிட நாடு பற்பல ஆளலுற்றவர் காலன் உய்த்திடு சேவகர்த் தடு- காவல் அற்றவர்; வென்றிலாரே - பெரிய படைகள் சூழப் பல நாடுகளை ஆண்ட அரசர்களும் எமதூதர்களைத் தடுக்கின்ற காவல் இல்லாதவர்கள்; அத்தூதர்களை அவர் எவரும் வென்றது இல்லை; (உய்த்தல் - அனுப்புதல்); ("சேவகர்த் தடு காவல் அற்றவர்" - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி வல்லொற்று மிகும்);

ஊனை விட்டுயிர் ஓடலுற்றதும், "" னக் குடி ஓலமிட்டு அழுது, ரின் அப்புறம் ஈமம் இட்டிட, வெந்த நீறே - உடம்பிலிருந்து உயிர் பிரிந்தபின், "" என்று குடும்பத்தினர் ஒப்பாரிவைத்து அழுது, பிறகு ஊரின் புறத்தே உள்ள சுடுகாட்டில் எரியில் இட்டபின் சுட்ட சாம்பலே; (குடி - குடும்பம்; வீடு); (ஊரின் அப்புறம் - ஊரின் வெளியே); (ஈமம் - சுடுகாடு);

ஓவும் அத்தினம் ஆர்? - ஆயுள் முடிகின்ற அந்த நாளில் யார் துணை? (ஓவுதல் - நீங்குதல்; முடிதல்);

நினைத்திடு - எண்ணு;

நாளு(ம்) மட்டு-லர் தூவி, நற்றமிழ் தில், இத்-தரை மீது(ம்) நிச்சயம் இன்பம் ஆமே - தினமும் வாசமலர்களைத் தூவி, நல்ல தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வழிபட்டால், (மறுமை-இன்பம் மட்டுமல்லாமல்) இம்மை-இன்பங்களும் உறுதியே;

வானவர்க்கு அமுது ஆ, அப்-பெரு-வாரி கக்கிய கார்-விடத்தினை மா-மிடற்றினிலே மறைத்தருள் உம்பர்-நாதன் - தேவர்களுக்கு அமுதம் கிட்டுமாறு, அந்தப் பெரிய பாற்கடல் உமிழ்ந்த கரிய விஷத்தை அழகிய கண்டத்தில் ஒளித்தருளிய தேவதேவன்; (வாரி - கடல்); (கார் - கரிய); (மா - அழகு); (மிடறு - கண்டம்);

மாழை மைக்-கணி, கோமளக்-கொடி, மாது-மைக்கு ஒரு கூறு வைத்தவன் - மாவடு ஒத்த, மை அணிந்த கண்களை உடையவளும், மென்மையான கொடி போன்றவளுமான அழகிய உமைக்கு ஒரு பாகத்தை வைத்தவன்; (மாழை - மாவடு); (மை - கண்ணுக்கு இடும் அஞ்சனம்); (கணி - கண்ணி); (கோமளம் - மென்மை);

வாரணத்துரி மார்புறப் புனைகின்ற வீரன் - யானைத்தோலை மார்பில் படும்படி போர்த்த வீரன்; (வாரணம் - யானை); (உரி - தோல்);

ஞான மெய்ப்பொருள் - ஞானமே வடிவான மெய்ப்பொருள்;

வாளி உய்த்திடு வேள்தனைச் சுடும் ஓர் நுதற்கணன் - கணை தொடுத்த மன்மதனைச் சுட்ட ஒப்பற்ற நெற்றிக்கண்ணன்; (வாளி - அம்பு); (வேள் - மன்மதன்);

நாரணற்கு அலர்மேலனுக்கு அரிது என்ற சோதி - நாராயணனுக்கும் பூமேல் இருக்கும் பிரமனுக்கும் காண அரிது என்று உயர்ந்த ஜோதி; (அலர் - பூ; இங்கே, தாமரைப்பூ);

நா(ம்) நித்தலு(ம்) நாரைத்தவர் நேயன், அற்புத சேமவைப்பு-வன் - திருநாமத்தைத் தினமும் நாவால் சொல்லும் பக்தர்களுக்கு அன்பன்; அவர்களுக்கு அற்புதமான சேமநிதி ஆனவன்; (சேமவைப்பு - சேமநிதி; வைப்புநிதி);

நாக(ம்) நற்புனல் ஏறு பொற்சடை எம்பிரானே - பாம்பையும் நல்ல கங்கையையும் பொற்சடையில் சூடிய எம்பெருமான்; (- ஈற்றசை);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment