Tuesday, December 7, 2021

P.278 - வலிவலம் - கண்புனை நெற்றியன்

2015-03-13

P.278 - வலிவலம்

------------------

(சந்த வஞ்சிவிருத்தம் - தானன தானன தானதனா)

(தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா/தானதானா என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.1 - "இன்குரல் இசைகெழும் யாழ்முரலத்")


1)

கண்புனை நெற்றியன் காமனைமுன்

வெண்பொடி ஆக்கிட விழிசெய்தவன்

தண்புனல் தாங்கிய சடையனிடம்

வண்வயல் சூழ்திரு வலிவலமே.


கண் புனை நெற்றியன் - நெற்றிக்கண்ணன்;

காமனை முன் வெண்பொடி ஆக்கிட விழிசெய்தவன் - முன்பு மன்மதனைச் சாம்பலாக்கிட நெற்றிக்கண்ணால் பார்த்தவன்; (சம்பந்தர் தேவாரம் 2.85.8 - "வேள்பட விழிசெய்தன்று" - விழிசெய்து - நெற்றிவிழி திறந்து எரித்து); (இலக்கணக் குறிப்பு - "விழிசெய்தவன்" - தனதனனா என்ற சந்தமாகக் கொள்ளவேண்டும். சந்தப்பாடல்களில் இடையின ஒற்று சில இடங்களில் அலகிடப்படா; சம்பந்தர் தேவாரம் - 1.113.1 - "திருவல்லமே" என்ற சொற்றொடரைக் காண்க);

தண்-புனல் தாங்கிய சடையன் இடம் - குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கிய பெருமான் உறையும் தலம்;

வண்வயல் சூழ் திரு வலிவலமே - வளமையான வயல் சூழ்ந்த திருவலிவலம்;


2)

பேர்பல உடையவன் பெற்றமேறி

மார்பினில் நூலினன் வரியதளன்

கார்மலி நஞ்சணி கண்டனிடம்

வார்பொழில் சூழ்திரு வலிவலமே.



பேர் பல உடையவன் - எண்ணற்ற திருநாமங்களை உடையவன்;

பெற்றம்-றி - இடபவாகனன்; (பெற்றம் - எருது);

மார்பினில் நூலினன் - திருமார்பில் பூணூல் அணிந்தவன்;

வரியதளன் - புலித்தோலை ஆடையாகக் கட்டியவன்; (அப்பர் தேவாரம் - 4.22.5 - "புலியுரி யதளனார்");

கார் மலி நஞ்சு அணி கண்டன் இடம் - கருநிறம் மிகுந்த விஷத்தைக் கண்டத்தில் அணிந்தவன் உறையும் தலம்;

வார்-பொழில் சூழ் திரு வலிவலமே - நீண்ட சோலை சூழ்ந்த திருவலிவலம் ஆகும்;


3)

தேனமர் மலரணி செஞ்சடையன்

வானவர் வேண்டவும் வல்விடத்தைப்

போனகம் செய்தருள் புண்ணியனூர்

வானுயர் பொழிலணி வலிவலமே.


தேன் அமர் மலர் அணி செஞ்சடையன் - வண்டுகள் விரும்பும் மலர் (/தேன் திகழும் மலர்) அணிந்த செஞ்சடையினன்;

வானவர் வேண்டவும் வல்விடத்தைப் போனகம் செய்தருள் புண்ணியன் ஊர் - தேவர்கள் இறைஞ்ச, இரங்கிக் கொடிய விஷத்தை உண்ட புண்ணிய உறையும் தலம்; (போனகம் - உணவு);

வான் உயர் பொழில் அணி வலிவலமே - வானில் ஓங்கும் சோலை சூழ்ந்த திருவலிவலம்;


4)

வெஞ்சினக் கூற்றுயிர் வீட்டியவன்

செஞ்சடை மேலிளந் திங்களினான்

குஞ்சரம் உரிசெய்த குழகனிடம்

மஞ்சடை பொழிலணி வலிவலமே.


வெஞ்சினக் கூற்று-யிர் வீட்டியவன் - கடும்-கோபமுடைய காலனது உயிரைப் போக்கியவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.75.2 - "வலிய காலனுயிர் வீட்டினான்");

செஞ்சடைமேல் இளம்-திங்களினான் - சிவந்த சடையின்மீது பிறையைச் சூடியவன்;

குஞ்சரம் உரிசெய்த குழகன் இடம் - யானையை உரித்த இளைஞன் உறையும் தலம்;

(குஞ்சரம் - யானை); (குழகன் - இளைஞன்; அழகன்);

மஞ்சு அடை பொழில் அணி வலிவலமே - மேகங்கள் வந்து அடைகின்ற சோலை திகழும் திருவலிவலம் ஆகும்; (மஞ்சு - மேகம்);


5)

அளிமனம் உடையவர்க் கருளுடையான்

இளமயில் அன்னவள் இடமுடையான்

துளிமணி மிடறுடைத் தூயவனூர்

வளவயல் சூழ்திரு வலிவலமே.


அளி-மனம் உடையவர்க்கு அருள் உடையான் - குழைகின்ற மனமும் அளிக்கின்ற மனமும் உடையவர்களுக்கு அருள்செய்பவன்; (அளிதல் - குழைதல்; அளித்தல் - கொடுத்தல்); (அப்பர் தேவாரம் - 4.38.10 - "இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்");

இளமயில் அன்னவள் இடம் உடையான் - இளைய மயில் போன்ற உமாதேவியை இடப்பாகமாக உடையவன்;

துளி-மணி மிடறுடைத் தூயவன் ஊர் - விஷம் மணிபோல இருக்கும் கண்டம் உடைய பரிசுத்தன் உறையும் தலம்; (துளி - விடம்); (சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி உண்டு நிறம்வந்த கண்டன்");

வளவயல் சூழ் திருவலிவலமே - வளம் மிக்க வயல் சூழ்ந்த திருவலிவலம் ஆகும்;


6)

கண(ம்)முழ வார்த்திடக் கடுவிருளில்

பிணமெரி காட்டிடைப் பெருநடத்தான்

பணமுடைப் பாம்பணி பரமனிடம்

மண(ம்)மலி பொழிலணி வலிவலமே.


கணம் முழவு ஆர்த்திடக் கடுவிருளில் பிணம் எரி காட்டிடைப் பெருநடத்தான் - பூதகணங்கள் முழவுகளை ஒலித்திடச் செறிந்த இருளில் சுடுகாட்டில் பெருங்கூத்து ஆடுபவன்; (கடுமை - மிகுதி); (சுந்தரர் தேவாரம் - 7.29.3 - "காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும் வேடனே");

பணம்உடைப் பாம்பு அணி பரமன் இடம் - படத்தை உடைய நாகப்பாம்புகளை அணிகின்ற பரமன் உறையும் தலம்; (பணம் - பாம்பின் படம்);

மண(ம்) மலி பொழில் அணி வலிவலமே - மணம் மிகுந்த சோலை சூழ்ந்த திருவலிவலம் ஆகும்;


7)

மான்மறிக் கையினன் வார்சடைமேல்

கூன்பிறை சூடிய கூத்தனிடம்

தேன்மலர் நாடிய சிறையளியார்

வான்பொழில் சூழ்திரு வலிவலமே.


மான்மறிக் கையினன் - கையில் மான்கன்றை ஏந்தியவன்;

வார்சடைமேல் கூன்பிறை சூடிய கூத்தன் இடம் - நீள்சடைமேல் வளைந்த பிறையைச் சூடிய கூத்தன் உறையும் தலம்; (கூன் - வளைவு);

தேன்மலர் நாடிய சிறையளி ஆர் வான்-பொழில் சூழ் திருவலிவலமே - தேன் நிறைந்த பூக்களை நாடிய சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற உயர்ந்த சோலை சூழ்ந்த திருவலிவலம் ஆகும்; (சிறை - சிறகு); (அளி - வண்டு); (வான் - பெருமை; அழகு);


8)

தலைமலி மாலையன் தானுறையும்

மலைபெயர் தசமுகன் வாய்களெல்லாம்

அலறிட ஊன்றிய அடிகளிடம்

மலர்மலி பொழிலணி வலிவலமே.


தலைமலி மாலையன் - தலைமாலை அணிந்தவன்;

தான் உறையும் மலை பெயர் தசமுகன் வாய்களெல்லாம் அலறிட ஊன்றிய அடிகள் இடம் - அவன் உறையும் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துவாய்களும் அலறும்படி பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கிய கடவுள் உறையும் தலம்;

மலர் மலி பொழில் அணி வலிவலமே - மலர் நிறைந்த சோலை சூழ்ந்த திருவலிவலம் ஆகும்;


9)

தாமரைக் கண்ணனும் சதுர்முகனும்

தாமறி யாவொரு தழலுருவன்

தூமறை நான்கினைச் சொன்னவனூர்

மாமதில் சூழ்திரு வலிவலமே.


தாமரைக்கண்ணனும் சதுர்முகனும் தாம் அறியாரு தழல்-ருவன் - தாமரை மலர்போன்ற கண்களை உடைய திருமால் நான்குமுகங்களை உடைய பிரமன் இவர்களால் அறிய ஒண்ணாத ஒப்பற்ற ஜோதிவடிவினன்;

தூ-மறை நான்கினைச் சொன்னவன் ஊர் - தூய வேதங்களைப் பாடியருளியவன் உறையும் தலம்;

மாமதில் சூழ் திருவலிவலமே - பெரிய மதில் சூழ்ந்த திருவலிவலம் ஆகும்;


10)

பிழைமலி நெஞ்சினர் பேச்சுநஞ்சு

குழையுரை பொருளெனக் கொள்ளன்மினீர்

குழையொரு காதணி கூத்தனிடம்

மழைநுழை பொழிலணி வலிவலமே.


பிழை மலி நெஞ்சினர் பேச்சு - குற்றம் மிகுந்த மனத்தை உடையவர்களது பேச்சு;

நஞ்சு குழை உரை - நஞ்சைக் குழைத்த உரை - விஷம் கலந்த வார்த்தைகள்; (குழைத்தல் - கலத்தல்);

பொருள் எனக் கொள்ளன்மினீர் - அவற்றை நீங்கள் மதிக்கவேண்டா; (கொள்ளன்மினீர் - கொள்ளல்மின் நீர்); (அல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி; மின் - ஏவல் பன்மை விகுதி);

குழை ஒரு காது அணி கூத்தன் இடம் - ஒரு காதில் குழையை அணிந்த (உமை ஒரு பங்கனான) ஆடல்வல்லான் உறையும் தலம்;

மழை நுழை பொழில் அணி வலிவலமே - மேகங்கள் நுழையும்படி உயர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவலிவலம் ஆகும்; (மழை - மேகம்);


11)

அந்தமும் ஆதியும் ஆயசிவன்

சந்திரன் ஏறிய தாழ்சடையன்

முந்தெயில் மூன்றெரி முதல்வனிடம்

வந்தவர் வரமகிழ் வலிவலமே.


அந்தமும் ஆதியும் ஆய சிவன் - உலகங்களைப் படைத்துப் பின் ஒடுக்கும் சிவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்");

சந்திரன் ஏறிய தாழ்சடையன் - தாழும் சடையின்மேல் சந்திரனை அணிந்தவன்;

முந்து எயில் மூன்று எரி முதல்வன் இடம் - முன்பு முப்புரங்களை எரித்த முதல்வன் உறையும் தலம்; (முந்து - முன்னர்); (எயில் - கோட்டை);

வந்தவர் வரம் மகிழ் வலிவலமே - 1. வந்து வழிபட்ட அடியவர்கள் வரங்கள் பெற்று மகிழ்கின்ற திருவலிவலம் ஆகும்; 2. வந்து தரிசித்தவர்கள் மீண்டும் வந்து தரிசிக்க விரும்புகின்ற திருவலிவலம் ஆகும்; (வரமகிழ் = 1. வரம் மகிழ்; 2. வர மகிழ்);


வி. சுப்பிரமணியன்

---------- ----------

No comments:

Post a Comment