2009-11-02
T.117 - ஒற்றியூர் - மின்னொத்த காலவளவு
-----------------
(வண்ணவிருத்தம்;
தன்னத்த தானதன .. தனதான )
மின்னொத்த காலவள .. வுளவாழ்வில்
.. விண்ணெட்டும் ஆசையுகை .. வினையேன்நான்
உன்னித்தொ ழாதுதுயர் .. உறல்வீட
.. உண்ணெக்கு நாளுமுனை .. நினைவேனோ
சென்னிக்க ணாக(ம்)மதி .. அணிவோனே
.. திண்ணெட்டு நீறுதிகழ் .. புயநாதா
உன்னைப்ப ராவுசுரர் .. உயவாலம்
.. உண்ணொற்றி யூரிலுறை .. பெருமானே.
பதம் பிரித்து:
மின் ஒத்த கால-அளவு உள வாழ்வில்
.. விண் எட்டும் ஆசை உகை வினையேன் நான்
உன்னித் தொழாது துயர் உறல் வீட,
.. உள் நெக்கு நாளும் உனை நினைவேனோ?
சென்னிக்கண் நாக(ம்) மதி அணிவோனே;
.. திண் எட்டு நீறு திகழ் புய-நாதா;
உன்னைப் பராவு சுரர் உய ஆலம்
.. உண், ஒற்றியூரில் உறை பெருமானே.
மின் ஒத்த கால-அளவு உள வாழ்வில் - மின்னலைப் போலத் தோன்றி மறையும் இந்த வாழ்க்கையில்; (மின் - மின்னல்);
விண் எட்டும் ஆசை உகை வினையேன் நான் - வானளாவும் ஆசைகள் என்னைச் செலுத்துகின்ற (உந்துகின்ற) வினைகள் செய்யும் நான் (/ தீவினையுடைய நான்); (உகைத்தல் - செலுத்துதல்); (வினையேன் - தொழில்செய்யும் நான்; வினையுடைய நான்);
உன்னித் தொழாது துயர் உறல் வீட - (திருவடியை) எண்ணி வழிபாடு செய்யாமல் துன்பம் அடைவது ஒழிய; (உன்னுதல் - நினைதல்); (துயர் - துன்பம்); (வீடுதல் - கெடுதல்; ஒழிதல்);
உள் நெக்கு நாளும் உனை நினைவேனோ - மனம் உருகித் தினமும் உன்னை எண்ணுவேனோ? (அப்படி எண்ண அருள்க); (உள் - மனம்); (நெகுதல் - உருகுதல்);
சென்னிக்கண் நாக(ம்) மதி அணிவோனே - தலைமேல் பாம்பையும் திங்களையும் அணிந்தவனே; (கண் - ஏழாம்வேற்றுமை உருபு);
திண் எட்டு நீறு திகழ் புய-நாதா - வலிய, திருநீறு பூசிய, எட்டுப் புஜங்கள் உடைய நாதனே; (புயம் - புஜம்);
உன்னைப் பராவு சுரர் உய ஆலம் உண் - உன்னைத் துதித்த தேவர்கள் உய்ய ஆலகாலத்தை உண்ட; (பராவுதல் - புகழ்தல்; வணங்குதல்); (உய - உய்ய);
ஒற்றியூரில் உறை பெருமானே - திருவொற்றியூரில் உறைகின்ற பெருமானே;
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment