2009-11-01
T.116 - மயிலாப்பூர் - அன்று புரிவினை
-----------------
(வண்ணவிருத்தம்;
தந்த தனதன தந்த தனதன
தந்த தனதன .. தனதான)
அன்று புரிவினை இன்று துயர்தர
.. .. அஞ்சி உழல்நிலை .. அதுமாற
.. அங்கை குவிதர அன்பு கொடுதினம்
.. .. அண்ட உனதடி .. தொழுவேனோ
கொன்றை மலருடன் இண்டை மதிபுனை
.. .. குஞ்சி மிசையர .. வணிவோனே
.. குன்று சிலைகணை கொண்டல் வணனிவை
.. .. கொண்டு திரிபுரம் .. எரிவீரா
ஒன்றி அடிநினை சிந்தை உடையவர்
.. .. உன்றன் உலகுற .. அருள்வோனே
.. உம்பர் கடைகடல் நஞ்சை அமுதென
.. .. உண்ட கறைமிட .. றுடையானே
மன்றில் நடமிடும் எங்கள் இறையவ
.. .. மங்கை மலைமகள் .. ஒருகூறா
.. வந்து திரைபொரு கின்ற மயிலையில்
.. .. வண்கை யொடுதிகழ் .. பெருமானே.
பதம் பிரித்து:
அன்று புரி வினை இன்று துயர் தர,
.. அஞ்சி உழல் நிலை அது மாற,
அங்கை குவிதர அன்பு-கொடு தினம்,
.. அண்ட, உனது அடி தொழுவேனோ?
கொன்றைமலருடன் இண்டை-மதி புனை
.. குஞ்சிமிசை அரவு அணிவோனே;
குன்று சிலை, கணை கொண்டல்-வணன், இவை
.. கொண்டு திரிபுரம் எரி-வீரா;
ஒன்றி அடி நினை சிந்தை உடையவர்
.. உன்றன் உலகு உற அருள்வோனே;
உம்பர் கடை-கடல் நஞ்சை அமுது என
.. உண்ட கறை-மிடறு உடையானே;
மன்றில் நடமிடும் எங்கள் இறையவ;
.. மங்கை மலைமகள் ஒரு கூறா;
வந்து திரை பொருகின்ற மயிலையில்,
.. வண்-கையொடு திகழ் பெருமானே.
அன்று புரி வினை இன்று துயர் தர, அஞ்சி உழல் நிலை அது மாற - முன்பு செய்த வினை இப்பிறவியில் துன்பம் தருவது கண்டு அஞ்சி உழல்கின்ற இந்த நிலை மாறும்படி; (மாறுதல் - வேறுபடுதல்; இல்லையாதல்);
அங்கை குவிதர அன்பு-கொடு தினம், அண்ட, உனது அடி தொழுவேனோ - கைகள் குவிய அன்பால் தினமும், அண்டனே, உன் திருவடியை வழிபட அருள்வாயாக; (தருதல் - ஒரு துணைவினை); (கொடு - கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு); (அண்டன் - எல்லா உலகங்களுக்கும் தலைவன்);
கொன்றைமலருடன் இண்டை-மதி புனை குஞ்சிமிசை அரவு அணிவோனே - கொன்றைமலர், இண்டைமாலை போலத் திங்கள் இவற்றை அணிந்த திருமுடிமேல் பாம்பை அணிந்தவனே; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை); (குஞ்சி - தலை);
குன்று சிலை, கணை கொண்டல்-வணன், இவை கொண்டு திரிபுரம் எரி-வீரா - மேருமலை வில், மேகம் போன்ற நிறமுடைய திருமால் கணை, இவற்றால் முப்புரங்களை எரித்த வீரனே; (சிலை - வில்); (கொண்டல் - மேகம்; கொண்டல்வணன் - கொண்டல்வண்ணன் - மேகநிறமுடைய திருமால்);
ஒன்றி அடி நினை சிந்தை உடையவர் உன்றன் உலகு உற அருள்வோனே - உன் திருவடியை மனம் ஒன்றி நினைக்கின்ற மனம் உடைய தொண்டர்கள் உன் உலகம் (சிவலோகம்) பெற அருள்பவனே;
உம்பர் கடை-கடல் நஞ்சை அமுது என உண்ட கறை-மிடறு உடையானே - வானோர் கடைந்த கடலில் தோன்றிய ஆலகாலத்தை அமுதம்போல் உண்ட கறை திகழும் கண்டம் உடையவனே;
மன்றில் நடமிடும் எங்கள் இறையவ - அம்பலத்தில் கூத்தாடும் எம் இறைவா;
மங்கை மலைமகள் ஒரு கூறா - மலைமகளை ஒரு கூறாக உடையவனே;
வந்து திரை பொருகின்ற மயிலையில், வண்-கையொடு திகழ் பெருமானே - அலை வந்து மோதுகின்ற மயிலாப்பூரில், வள்ளன்மை மிக்க கையோடு வீற்றிருக்கும் பெருமானே; (திரை - அலை); (பொருதல் - தாக்குதல்); (வண்மை - ஈகை; வண்கை - வரதஹஸ்தம்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment