Monday, December 13, 2021

S.106 - சிவன் - வில்வீரன் - சிலேடை

2009-12-14

S.106 - சிவன் - வில்வீரன் - சிலேடை

------------------

சிலையதன் நாணரவஞ் செய்யும் பகைவர்

அலையுமதில் மாயும் அபயம் - நிலவிடும்

கையில் வளையும் தனுக்காட்டும் ஓர்வீரன்

மையணி கண்டத்தெம் மான்.


சொற்பொருள்:

சிலை - 1. வில்; 2. மலை;

அரவம் - 1. ஒலி; 2. பாம்பு;

அலையுமதில் - 1. அலையும் அதில்; 2. அலையும் மதில்;

வளையும் - 1. வளைகின்ற; 2. வளையலும்;

தனு - 1. வில்; 2. உடல்;

மை - கருமை;


வில்வீரன்:

சிலையதன் நாண் அரவம் செய்யும் - வில்லினது நாண் ஒலி எழுப்பும்;

பகைவர் அலையும் அதில் மாயும் - அலைபோல் வரும் பகைவர் படையும் அந்த வில்லால் அழியும்; (அதில் - அதனால்; உருபுமயக்கம் என்று கருதலாம்);

அபயம் நிலவிடும் - அச்சம் இல்லாத நிலை இருக்கும்;

கையில் வளையும் தனுக் காட்டும் - கையில் வளையும் வில்லைக் காட்டுகின்ற;

ஓர் வீரன் - ஒரு (விற்போர் வல்ல) வீரன்; (ஓர் - ஒரு; ஒப்பற்ற);


சிவன்:

சிலையதன் நாண் அரவம் செய்யும் - மேருமலை என்ற வில்லினது நாண் பாம்பு ஆகும்;

பகைவர் அலையும் மதில் மாயும் - அசுரர்களது திரிகின்ற மும்மதில்களும் (அந்த வில்லால்) அழியும்;

அபயம் நிலவிடும் - (தேவர்களுக்கு) அச்சமின்மை கிட்டும்;

கையில் வளையும் தனுக் காட்டும் - கையில் வளையலையும் திருமேனி காட்டும்; (அர்த்தநாரீஸ்வரக் கோலம்);

மை அணி கண்டத்து எம்மான் - கருமையைக் கண்டத்தில் அணிந்த எம்பெருமான்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

No comments:

Post a Comment