Monday, December 13, 2021

S.105 - சிவன் - அணு - சிலேடை

2009-12-13

S.105 - சிவன் - அணு - சிலேடை

------------------

அளப்பரும் சத்தியோ டுள்ளபொருள் ஆகி

வளப்ப(ம்)நல்கு(ம்) மாய்விட(ம்) மன்னும் - களத்தையும்

காட்டு(ம்) நிறைந்தும் கரந்திருக்கும் கானகத்தே

ஆட்டுகந்த அண்ணல் அணு.


சொற்பொருள்:

அளப்பு - அளத்தல்; எல்லை;

சத்தி - சக்தி - 1. ஆற்றல்; 2. உமை;

உள்ள பொருள் - 1. இருக்கின்ற பொருள்; 2. மெய்ப்பொருள்;

வளப்பம் - நன்மை;

மாய்த்தல் - மறைத்தல்; கொல்லுதல்; அழித்தல்;

மாய்வு - சாவு;

மாய்விடம் - 1. மாய்வு இடம்; 2. மாய் விடம் - கொல்லும் விஷம்; மறைத்த விஷம்;

மன்னுதல் - நிலைபெறுதல்; மிகுதல்;

களம் - 1. இடம்; போர்க்களம்; 2. கழுத்து; கருமை;

கரத்தல் - ஒளித்தல்; மறைத்தல்;

கானகம் - சுடுகாடு;

ஆட்டு - ஆடல்; கூத்து;


அணு:

அளப்பு-அரும்-த்தியோடு உள்ள பொருள் ஆகி - அளவற்ற ஆற்றலை உள்ளடக்கிய வஸ்து ஆகி;

வளப்பம் நல்கும் - பல நன்மைகள் செய்யும்;

மாய்வு இடம் மன்னும் களத்தையும் காட்டும் - (குண்டின் வடிவத்தில்) சாவின் இடம் நிலைத்த போர்க்களத்தையும் காட்டும்;

நிறைந்தும் கரந்து இருக்கும் - எப்பொருளிலும் நிறைந்தாலும் கண்ணால் காண இயலாதபடி (மிகவும் நுண்ணியதாக) இருக்கும்;

அணு - அணு (atom);


சிவன்:

அளப்பு அரும், த்தியோடு உள்ள பொருள் ஆகி - "அளப்பு-அரும் பொருள் ஆகி & சத்தியோடு உள்ள பொருள் ஆகி" - அளவில்லாதவன் ஆகி, உமையோடு கூடி இருக்கும் மெய்ப்பொருள் ஆகி;

வளப்பம் நல்கும் - நன்மை அளிப்பவன்;

மாய்-விடம் மன்னும் களத்தையும் காட்டும் - கொல்லும் விஷம் தங்கிய கண்டத்தைக் காட்டுபவன்;

நிறைந்தும் கரந்து இருக்கும் - எங்கும் நிறைந்து இருந்தாலும் காணற்கு அரியவன்;

கானகத்தே ஆட்டு உகந்த அண்ணல் - சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய பெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 2.81.6 - "சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்");


வி. சுப்பிரமணியன்

------------- -------------

M.044 - பாலை - மகிழும் - மடக்கு

2009-11-21

M.044 - பாலை - மகிழும் - மடக்கு

--------------

பாலை வழிபோய்ப் படும்மனமே தேன்கலந்த

பாலை நிகர்த்தானைப் பத்தரிசை - பாலை

மகிழும் பரமனை வார்சடைமேல் வாச

மகிழும் புனைவானை வாழ்த்து.


சொற்பொருள்:

பாலை - 1. பாலைவனம்; வறண்ட பிரதேசம்; 2. பசுவின் பாலை; 3. பாலை என்ற பண்;

மகிழும் - 1. விரும்பும்; 2. மகிழம்பூவும்;

படுதல் - அழிதல்; துன்பம் அடைதல்;


பாலை வழிபோய்ப் படும் மனமே - (நல்ல வழியில் போகாமல்) வினையின் வெப்பம் மிகும் வழியில் போய்த் துன்புறுகின்ற மனமே;

தேன் கலந்த பாலை நிகர்த்தானை - தேன் கலந்த பால் போன்றவனை (= மிகவும் இனிமை பயப்பவனை);

பத்தர் இசை பாலை மகிழும் பரமனை - பக்தர்கள் இசைக்கும் பாலை என்ற பண்ணில் அமைந்த பாடல்களைக் கேட்டு மகிழ்கின்ற பரம்பொருளை; (சம்பந்தர் தேவாரம் - 1.108.10 - "பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே");

வார்-சடைமேல் வாச-மகிழும் புனைவானை வாழ்த்து - நீள்சடைமேல் மணம் கமழும் மகிழம்பூவையும் அணிகின்ற சிவபெருமானைத் துதிப்பாயாக. (உம் - எச்சவும்மை; ஈசன் சடைமேல் கங்கை, நாகம், பிறை, என வேறு பலவும் சூடியவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.77.7 - "எருக்கொடு முருக்கு மகிழ்இள வன்னியும் இவைநலம் பகர ஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்");


வி. சுப்பிரமணியன்

------------- -------------

S.104 - சிவன் - மின்விளக்கு (incandescent lamp) - சிலேடை

2009-12-09

S.104 - சிவன் - மின்விளக்கு (incandescent lamp) - சிலேடை

------------------

இருளை அகற்றியே கம்பத் திருக்கும்

உருவுண் டருகுறு வேளை - நெருப்பாய்ச்

சுடினும் எரியா தணைவதுண்டு தொண்டர்

மிடிதீர் அரன்மின் விளக்கு.


சொற்பொருள்:

இருள் - 1. மயக்கம்; அஞ்ஞானம்; 2. அந்தகாரம் (darkness);

கம்பம் - 1. தூண் (post, pillar); 2. விளக்குத்தண்டு (lamp-stand);

ஏகம்பம் - கச்சியில் உள்ள ஏகம்பம் என்ற தலம்;

அருகு - சமீபம்;

உறுதல் - அடைதல் (to approach, reach);

வேளை - 1. காமனை (வேள் - மன்மதன்); 2. பொழுது;

அணைதல் - 1. சார்தல் (to approach, come near); 2. அவிதல் (to be extinguished);

மிடி - துன்பம்; தரித்திரம்;


மின்விளக்கு:

இருளை அகற்றியே கம்பத்து இருக்கும் உரு உண்டு - புற-இருளைப் போக்கி ஒரு கம்பத்தில் இருக்கும் வடிவம் உண்டு; (- அசை);

அருகு-உறு வேளை நெருப்பாய்ச் சுடினும் - நெருங்கினால் தீயைப் போலச் சுட்டாலும்;

எரியாது அணைவது உண்டு - (நாம் அணைப்பதாலோ, மின்சாரம் இல்லாததாலோ, விளக்குப் பழுதாகிவிட்டதாலோ) எரியாமல் அவிவதும் உண்டு;

மின்விளக்கு - மின்சார விளக்கு (incandescent lamp);


சிவன்:

இருளை அகற்றி ஏகம்பத்து இருக்கும் - அக-இருளைப் போக்கிக் கச்சியில் ஏகம்பம் என்ற தலத்தில் உறைபவன்;

உரு உண்டு - உருவம் உண்டு;

("இருளை அகற்றியே கம்பத்து இருக்கும் உரு உண்டு" - என்று கொண்டு - "அயன் திருமால் இவர்களது மயக்கத்தைப் போக்கி ஒளித்-தூணாக நிற்கும் வடிவம் உண்டு" என்றும் பொருள் கொள்ளலாம்);

அருகு-உறு வேளை நெருப்பாய்ச் சுடினும் - அருகில் வந்த காமனை நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தாலும்;

எரியாது அணைவது உண்டு - குளிர்ச்சியோடு (அருள்புரிய அடிவர்களை) அடைபவன்; (அப்பர் தேவாரம் - 5.42.9 - "வல்லரண் சுட்ட கொள்கையர் ஆயினும் சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும் சிட்டர்");

தொண்டர் மிடி தீர் அரன் - பக்தர்களது துன்பத்தைத் தீர்க்கும் சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

------------- -------------

T.119 - மயிலாப்பூர் - மலவிருளு(ம்) மூடி

2009-12-07

T.119 - மயிலாப்பூர் - மலவிருளு(ம்) மூடி

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தான தனதனன தான

தனதனன தான .. தனதான)

(எழுகுநிறை நாபி - திருப்புகழ் - திருக்கழுக்குன்றம்)


மலவிருளு(ம்) மூடி உளமதனில் ஆசை

.. .. வரையறையி லாது .. வரநாளும்

.. மடமையொடு பாவம் இடர்பெருகும் ஈன

.. .. வழியிலுழ லாது .. பவரோகம்

விலகவெளி தான வழியெனவு ளாயை

.. .. மிகவு(ம்)நினை நேய .. அடியாரை

.. விரவியவ ரோடு திருமுறைகள் ஓதி

.. .. வினைகளறு மாறு .. மதிதாராய்

அலைகடலில் நீல நிற(ம்)மலியும் ஆலம்

.. .. அதுவிளைய ஓலம் .. எனவானோர்

.. அவர்பணிய வேலை விட(ம்)மிடறு பூணும்

.. .. அருமணியும் ஆக .. அருள்வோனே

மலரவனு(,) மாலும் அடிமுடியை நேட

.. .. வளருமெரி யாகி .. வருவோனே

.. வலியதிரை மோது கரையினரு கேர்கொள்

.. .. மயிலைநகர் மேவு .. பெருமானே.


பதம் பிரித்து:

மலவிருளு(ம்) மூடி, உளம்-அதனில் ஆசை

.. .. வரையறை இலாது வர, நாளும்

.. மடமையொடு பாவம் இடர் பெருகும் ஈன-

.. .. வழியில் உழலாது, பவரோகம்

விலக எளிதான வழி என உளாயை

.. .. மிகவு(ம்) நினை நேய அடியாரை

.. விரவி, அவரோடு திருமுறைகள் ஓதி,

.. .. வினைகள் அறுமாறு மதி தாராய்;

அலை-கடலில் நீலநிற(ம்) மலியும் ஆலம்

.. .. அது விளைய, "ஓலம்" என வானோர்

.. அவர் பணிய, வேலை-விட(ம்) மிடறு பூணும்

.. .. அருமணியும் ஆக அருள்வோனே;

மலரவனு(ம்) மாலும் அடிமுடியை நேட,

.. .. வளரும் எரியாகி வருவோனே;

.. வலிய திரை மோது கரையின் அருகு ஏர்கொள்

.. .. மயிலைநகர் மேவு பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

மல-இருளு(ம்) மூடி, உளம்-அதனில் ஆசை வரையறை இலாது வர - மும்மலங்கள் சூழ்ந்துகொள்ள, மனத்தில் அளவின்றி ஆசைகள் எழ; (வரையறை - அளவு; எல்லை);

நாளும் மடமையொடு பாவம் இடர் பெருகும் ஈன-வழியில் உழலாது - தினமும் அறியாமையால் பாவமும் துன்பமும் பெருகுகின்ற இழிந்த வழியில் சென்று வருந்தாமல்; (இடர் - துன்பம்); (ஈனம் - இழிவு);

பவரோகம் விலக எளிதான வழி என உளாயை மிகவு(ம்) நினை நேய அடியாரை விரவி - பிறவிப்பிணி தீரச் சுலபமான வழியாக இருக்கும் உன்னை மிகவும் எண்ணுகின்ற அன்புடைய பக்தர்களை அடைந்து; (பவம் - பிறப்பு; ரோகம் - நோய்); (உளாயை - உள்ளாயை - உள்ள உன்னை); (விரவுதல் - அடைதல்; கலத்தல்);

அவரோடு திருமுறைகள் ஓதி - அவர்களோடு திருமுறைகளைப் பாடி;

வினைகள் அறுமாறு மதி தாராய் - என் வினைகள் அறும்படி அறிவைத் தருவாயாக; (மதி - அறிவு);

அலை-கடலில் நீலநிற(ம்) லியும் ஆலம் அது விளைய, "ஓலம்" வானோர் அவர் பணிய - அலைவீசும் பாற்கடலில் கரியநிறம் மிக்க ஆலகாலம் தோன்றவும், அஞ்சி "ஓலம்" என்று தேவர்கள் தொழவும்; (ஓலம் - அபயம் வேண்டி ஓலமிடுதல்);

வேலை-விட(ம்) மிடறு பூணும் அருமணியும் ஆக அருள்வோனே - அந்தக் கடல்விஷத்தைக் கழுத்தில் அணியும் அரிய நீலமணியாகும்படி அதனை உண்டருளியவனே; (வேலை - கடல்); (மிடறு - கண்டம்);

மலரவனு(ம்) மாலும் அடி முடியை நேட, வளரும் எரியாகி வருவோனே - பிரமனும் திருமாலும் அடியும் முடியும் தேடும்படி ஓங்கிய ஜோதியே; (மலரவன் - பிரமன்); (நேடுதல் - தேடுதல்);

வலிய திரை மோது கரையின் அருகு ஏர்கொள் மயிலை நகர் மேவு பெருமானே - வலிமையான அலை மோதுகின்ற கடலின் கரையின் அருகே அமைந்த அழகிய மயிலாப்பூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே; (திரை - அலை); (ஏர் - அழகு);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

T.118 - மயிலாப்பூர் - உலகமிதில் நாளும்

2009-12-05

T.118 - மயிலாப்பூர் - உலகமிதில் நாளும்

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தான தனதனன தான

தனதனன தான .. தனதான)

(எழுகுநிறை நாபி - திருப்புகழ் - திருக்கழுக்குன்றம்)


உலகமிதில் நாளு(ம்) நிலையிலதில் ஆசை

.. .. உடையனென வாகி .. அதனாலே

.. உறுபிணிக ளோடு மிகுதுயரும் ஆகி

.. .. உழலுமடி யேனை .. மறவாதே

இலயமிடு தூய மலரனைய தாளை

.. .. இனியதமிழ் மாலை .. ணிநாவால்

.. இருபொழுதும் ஓதி இடர்களணு காமல்

.. .. இருநிலனில் வாழ .. அருளாயே

தலைமலியு(ம்) மாலை மணமலர்கள் ஆறு

.. .. தலையிலழ காக .. அணிவோனே

.. தலைகலனு மாக இடுபலியை நாடு

.. .. தலைவதிரு நீல .. மிடறானே

மலைமகளொர் பாதி எனமகிழும் ஈச

.. .. மழவிடைய தேறி .. வருவோனே

.. வலியவினை தீர எளியவழி யாகி

.. .. மயிலைநகர் மேவு .. பெருமானே.


பதம் பிரித்து:

உலகம்-இதில் நாளு(ம்) நிலை இலதில் ஆசை

.. .. உடையன் என ஆகி அதனாலே,

.. உறு-பிணிகளோடு மிகு-துயரும் ஆகி

.. .. உழலும் அடியேனை மறவாதே;

இலயம் இடு தூய மலர் அனைய தாளை

.. .. இனிய தமிழ்-மாலை அணி-நாவால்

.. இருபொழுதும் ஓதி, இடர்கள் அணுகாமல்

.. .. இருநிலனில் வாழ அருளாயே;

தலை மலியு(ம்) மாலை, மண-மலர்கள், ஆறு,

.. .. தலையில் அழகாக அணிவோனே;

.. தலை கலனும் ஆக, இடுபலியை நாடு

.. .. தலைவ; திரு-நீல- மிடறானே;

மலைமகள் ஒர் பாதி என மகிழும் ஈச;

.. .. மழ-விடையது ஏறி வருவோனே;

.. வலிய வினை தீர எளிய வழி ஆகி,

.. .. மயிலைநகர் மேவு பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

உலகம் இதில் நாளும் நிலை இலதில் ஆசை உடையன் என ஆகி அதனாலே - இவ்வுலகில் நிலையில்லாதவற்றின்மேல் எப்பொழுதும் ஆசை கொண்டு, அதனால்; (இலதில் - இல்லாததில்);

உறு-பிணிகளோடு மிகு-துயரும் ஆகி உழலும் அடியேனை மறவாதே - மிகுந்த பந்தங்களும் (/ நோய்களும்) பெருந்துயரும் உண்டாகி வருந்தும் என்னை மறந்துவிடாதே; (உறு - மிகுந்த); (பிணி - பந்தம்/கட்டு; நோய்); (ஆதல் - உண்டாதல்; சம்பவித்தல்); (மறவாதே - மறந்துவிடாதே; மறவாமல்); (அப்பர் தேவாரம் - 5.57.1 - "திருக்கோளிலி மன்னனே அடியேனை மறவலே" - மறவல் = மறவாதே);

இலயம் இடு தூய மலர் அனைய தாளை இனிய தமிழ் மாலை அணி-நாவால் இருபொழுதும் ஓதி - கூத்தாடும் உன் தூய மலர் போன்ற திருவடிகளைக் காலையும் மாலையும் இனிய தமிழ்ப்-பாமாலைகளைத் தாங்கிய நாவால் போற்றிப் பாடி; (இலயம் - கூத்து);

இடர்கள் அணுகாமல் இருநிலனில் வாழ அருளாயே - எவ்விதத் துன்பமும் என்னை நெருங்காமல் இந்தப் பரந்த உலகில் வாழ்வதற்கு அருள்வாயாக! (இடர் - துன்பம்); (இருநிலன் - இருநிலம் - பரந்த உலகம்);

தலை மலியு(ம்) மாலை, மண-மலர்கள், ஆறு, தலையில் அழகாக அணிவோனே - மண்டையோடுகளால் ஆன மாலையையும், வாசம் கமழும் பூக்களையும், கங்கையையும் தலையில் அழகுறச் சூடியவனே; (மலிதல் - மிகுதல்); (தலை மலியும் மாலை - கரோடி - சிரமாலை);

தலை கலனும் ஆக, இடுபலியை நாடு தலைவ - மண்டையோடு பிச்சைப்பாத்திரமும் ஆக, இடும் பிச்சையை விரும்பும் தலைவனே; (இடுபலி - பிச்சை); (அப்பர் தேவாரம் - 4.9.1 - "தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலி தேருந் தலைவனை");

திரு-நீல-மிடறானே - திருநீலகண்டனே; (மிடறு - கண்டம்);

மலைமகள் ஒர் பாதி என மகிழும் ஈச - பார்வதியை உடலில் ஓர் கூறாக உடைய ஈசனே; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

மழவிடையது ஏறி வருவோனே - ளைய எருதினை வாகனமாக உடையவனே; (மழ - இளைய);

வலிய வினை தீர எளிய வழி ஆகி, மயிலைநகர் மேவு பெருமானே - வலிய வினைகள் எல்லாம் தீர்வதற்கு ஓர் எளிய வழியாகி, மயிலாப்பூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

S.103 - சிவன் - சீப்பு - சிலேடை

2009-11-18

S.103 - சிவன் - சீப்பு - சிலேடை

------------------

தலையாய தான மலையும் கரத்திற்

கலையும் கருங்குழலி யோர்பால் - நிலைகொள்ளும்

பல்லுருக் கொள்கின்ற பண்பிருக்கும் ஏற்றின்மேற்

செல்லும் சிவபெருமான் சீப்பு.


சொற்பொருள்:

தானம் - இடம்; உறைவிடம்;

அலை - 1. அலைதல்; / 2. நதியின் அலை;

கலை - 1. கலைதல் (குலைதல்); / 2. மான்;

கருங்குழலியோர் - 1. கரிய கூந்தலை உடைய பெண்கள்; / 2. பார்வதி ஒரு;

பால் - 1. ஏழாம்வேற்றுமை உருபு - இடம்; 2. பக்கம்; பகுதி

பல் - 1. சீப்புப்பல் (tooth of a comb); / 2. பல;

உரு - உடல்; வடிவம்;

ஏற்றின் - 1. உயர்த்தினால்; தூக்கினால்; / 2. ஏறு - எருது;

சீப்பு:

தலை ஆய தானம் அலையும் - தலை என்ற இடத்தில் அங்குமிங்கும் செல்லும்;

கரத்தில் கலையும் கருங்குழலியோர்பால் நிலைகொள்ளும் - கலையும் கரிய கூந்தலை உடைய பெண்களிடம் கையில் இருக்கும்;

பல் உருக் கொள்கின்ற பண்பு இருக்கும் - சீப்புப்பல் இருக்கும்;

ஏற்றின் மேல் செல்லும் - உயர்த்தினால் மேலே போகும்; (-- அல்லது -- "ஏற்றின்மேற் செல்லும்" என்பதைச் சிவனுக்கு மட்டுமே பொருத்திக்கொள்ளலாம்);

சீப்பு - தலைவாரும் சீப்பு;


சிவன்:

தலை ஆய தானம் அலையும் / மலையும் - திருமுடிமேல் (கங்கையின்) அலையும்; (-- அல்லது-- தலையாய உறைவிடமாகக் கயிலைமலையும்);

கரத்தில் கலையும் - கையில் மானும்;

கருங்குழலி ஓர் பால் நிலைகொள்ளும் - கரிய கூந்தலை உடைய பார்வதி ஒரு பக்கமும் இருக்கும்;

பல்-உருக் கொள்கின்ற பண்பு இருக்கும் - பல்வேறு வடிவங்கள் கொள்ளும் இயல்பும் இருக்கும்; (பண்பு - பண்பும்; உம் தொக்கது);

ஏற்றின்மேல் செல்லும் சிவபெருமான் - இடபவாகனனாகிய சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

------------- -------------

Sunday, December 12, 2021

S.102 - சிவன் - பேனா (Fountain pen) - சிலேடை

2009-11-15

S.102 - சிவன் - பேனா (Fountain pen) - சிலேடை

------------------

உண்மை வழிஒழுக ஓரக் கரங்காட்டும்

எண்ணெழுத் தேறு விடைகாட்டும் - வண்ணம்

இருக்குமிங் கெம்மையும் ஏற்குமொரு பேனா

எருக்குமதி சூடும் இறை.


சொற்பொருள்:

உண்மை - 1. உண் + மை - உண்ட மை; / உள் + மை - உள்ள மை; 2. மெய்;

ஒழுகுதல் - 1. கசிதல்; சொட்டுதல்; 2. முறைப்படி நடத்தல்;

அக்கரம் - அக்ஷரம் - அழிவில்லாதது; எழுத்து;

ஓரக்கரம் - 1. ஓரக் கரம் - விரல் நுனி; 2. ஓர் அக்கரம் - ஒப்பற்ற அழிவற்ற வஸ்து;

ஏறுதல் - 1. மிகுதல்; 2. மேலேறுதல் (to mount, climb);

விடை - 1. பதில் (Answer); 2. இடபம்;

வண்ணம் - 1. நிறம்; வகை; 2. தன்மை; குணம்;

மை - 1. மசி (ink); 2. கருநிறம்; கறை; (விடம்);

எம்மையும் - 1. எந்த மையையும்; 2. எங்களையும்; எந்த விடத்தையும்;

எருக்கு - எருக்கமலர்;


("ink" நிரப்பி எழுதும்) பேனா (Fountain pen):

உண் மை வழி ஒழுக ஓரக் கரம் காட்டும் - (அது) உண்ட மை வழியில் ஒழுக, (அதன் கறையை) விரல் நுனி காட்டும்; ("உண்மை= உள் + மை = உள்ளே இருக்கும் மை" என்றும் பொருள்கொள்ளலாம்);

எண் எழுத்து ஏறு விடை காட்டும் வண்ணம் இருக்கும் - (பரீட்சை வினாக்களுக்கு) எண்ணும் எழுத்தும் மிகுகின்ற விடையைக் (காகிதத்தில்) காட்டும்படி இருக்கும்;

இங்கு எம்-மையும் ஏற்கும் - எவ்வித மையையும் ஏற்கும்; (பல நிறங்களில் உள்ள மைகள்);

ஒரு பேனா - ("ink" நிரப்பி எழுதும்) பேனா (Fountain pen);


சிவன்:

உண்மை வழி ஒழுக ஓர் அக்கரம் காட்டும் எண் எழுத்து - மெய்ந்நெறியில் ஒழுகினால் ஒப்பற்ற அழிவற்ற பொருள் எண்ணும் எழுத்துமாய் இருப்பதைக் காட்டும்; (ஒப்பற்ற அழிவற்ற பொருளான சிவன், நாம் மெய்ந்நெறியில் ஒழுகுவதற்கு எண்ணும் ஐந்தெழுத்தைக் காட்டும் - என்றும் பொருள்கொள்ளலாம்); (அப்பர் தேவாரம் - 6.55.7 - "எண்ணும் எழுத்தும்சொல் ஆனாய் போற்றி");

ஏறு விடை காட்டும் - (தான்) ஏறுகின்ற இடபத்தைக் காட்டும்;

வண்ணம் இருக்கும் - குணம் உடைய பொருளாக இருக்கும்; (அப்பர் தேவாரம் - 5.28.4 - "இருளின் வண்ணமும் ஏழிசை வண்ணமும் .... ஆவர் ஐயாறரே");

இங்கு எம்மையும் ஏற்கும் - எங்களையும் (பக்தர்களாக) ஏற்றுக்கொள்ளும்;

எருக்கு மதி சூடும் இறை - எருக்கமலரையும் திங்களையும் சூடும் இறைவனான சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------