Tuesday, March 15, 2022

M.049 - தினமும் - பிழைகளை - மடக்கு

2010-01-26

M.049 - தினமும் - பிழைகளை - மடக்கு

--------------

தினமும் பணிவீர் சிவனையவன் முன்னோர்

தினமும் மதில்செற்றான் தீச்சேர் - தினமும்

பிழைகளை எண்ணுநமன் பேணிப்போ மாறு

பிழைகளை காப்பெம் பிரான்.


பதம் பிரித்து:

தினமும் பணிவீர் சிவனை; அவன் முன் ஓர்

தினம் மும்மதில் செற்றான்; தீச் சேர் தினம், உம்

பிழைகளை எண்ணும் நமன் பேணிப் போமாறு,

பிழை களை காப்பு எம் பிரான்.


சொற்பொருள்:

தினமும் - 1. தினந்தோறும்; 2. தினம் மும்; 3. தினம் உம்;

பிழைகளை - 1. குற்றங்களை; 2. பிழையைத் தீர்க்கும்;

செறுதல் - அழித்தல்;

களைதல் - நீக்குதல்;

காப்பு - பாதுகாவல்; இரட்சை;


தினமும் பணிவீர் சிவனை - தினந்தோறும் சிவபெருமானை வணங்குங்கள்;

அவன் முன் ஓர் தினம் மும்மதில் செற்றான் - அவன் முன்னொரு நாள் முப்புரங்களை அழித்தவன்;

தீச் சேர் தினம் உம் பிழைகளை எண்ணும் மன் பேணிப் போமாறு - (உயிர்போய் உடல்) தீயில் சேர்கின்ற நாளில் உங்கள் பாவங்களை எண்ணுகின்ற இயமன் உங்களை வணங்கிச் செல்லும்படி;

* (அப்பர் தேவாரம் - 5.92 - காலபாசத் திருக்குறுந்தொகைப் பதிகப் பாடல்களைக் காண்க); (சுந்தரர் தேவாரம் - 7.55.1 - "எனை நமன்தமர் நலியில் இவன்மற்று என் அடியான் என விலக்கும் சிந்தையால் வந்துன் திருவடி அடைந்தேன்");

பிழை களை காப்பு எம் பிரான் - (உங்கள்) குற்றங்களையெல்லாம் நீக்கிவிடும் காப்பாக எம்பெருமான் இருப்பான்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

M.048 - மருளார் - தருவாய் - மடக்கு

2010-01-23

M.048 - மருளார் - தருவாய் - மடக்கு

--------------

மருளார் மனத்தர் வழியறியார் பின்னேன்

மருளார் அடியார்க்கும் உண்டோ - மருளார்

தருவாய் அருளெனினும் சங்கரன் ஓர்வான்

தருவாய் அளிப்பான் தமர்க்கு.


பதம் பிரித்து:

மருள் ஆர் மனத்தர் வழி அறியார்; பின் ஏன்

மருளார்? அடியார்க்கும் உண்டோ - மருள்? ஆர்

"தருவாய் அருள்" எனினும், சங்கரன் ஓர்வான்

தருவாய் அளிப்பான் தமர்க்கு.


சொற்பொருள்:

மருள் - 1. மயக்கம்; 2. அச்சம்;

மருளுதல் - 1. மயங்குதல்; 2. அஞ்சுதல்;

ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்

ஆர் - யார்;

தரு - கற்பகமரம்;

மருளார் - 1. மயக்கம் மிகுந்த; 2. அஞ்சமாட்டார்; 3. அச்சம்; யார்;

ஓர் - ஒப்பற்ற;

ஓர்தல் - எண்ணுதல்;

ஓர்வான் - 1. திருவுளம் செய்வான்; 2. ஒப்பற்ற வானுலக;

தரு - மரம்;

வான்தரு - கற்பகமரம்;

தருவாய் - 1. கொடுப்பாய் / கொடுப்பவனே; 2. கற்பகமரமாகி;

தமர் - தொண்டர்;


மருள் ஆர் மனத்தர் வழி அறியார் - அறியாமை மிகுந்த மனம் உடையவர்கள் தக்க நெறியை அறியமாட்டார்கள்;

பின் ஏன் மருளார்? - பிறகு அவர்கள் ஏன் அஞ்சமாட்டார்கள்? (= அதனால்தான் அவர்கள் அஞ்சுகின்றார்கள்);

அடியார்க்கும் உண்டோ மருள்? - பக்தர்களுக்கும் அச்சம் உண்டோ? (இல்லை என்பது குறிப்பு);

ஆர் "தருவாய் அருள்" எனினும் சங்கரன் ஓர்வான் தருவாய் அளிப்பான் தமர்க்கு - "அருள்புரிவாயாக / அருள்செய்பவனே" என்று யார் தொழுதாலும் சங்கரன் திருவுளம் செய்வான்; (அப்படித் திருவுளம் செய்து) ஒப்பற்ற கற்பகமரத்தைப் போலத் தொண்டர்களுக்கு வரம் தருவான்; ("ஓர்வான்" என்ற சொற்றொடரை இடைநிலைத்-தீவகமாக இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளலாம். "சங்கரன் ஓர்வான்" & " ஓர் வான்தருவாய் அளிப்பான்");


வி. சுப்பிரமணியன்

------------- -------------

Monday, March 14, 2022

M.047 - வானஞ்சு - கண்டம் - மடக்கு

2010-01-10

M.047 - வானஞ்சு - கண்டம் - மடக்கு

--------------

வானஞ்சு வாயரவால் வாரிகடை நாளிலெழு

வானஞ்சு வாதைசெய வாடியுய் - வானஞ்சு

கண்டந் தவிர்த்தருளாய் கண்ணுதலே என்னவது

கண்டந் தரித்தான்நம் காப்பு.


பதம் பிரித்து:

வான், அஞ்சு வாய் அரவால் வாரி கடை நாளில் எழு

வான்-நஞ்சு வாதை-செய, வாடி உய்வான், "அஞ்சு

கண்டம் தவிர்த்து அருளாய் கண்ணுதலே" என்ன, அது

கண்டம் தரித்தான் நம் காப்பு.


சொற்பொருள்:

வான் - 1. தேவர்கள்; 2. பெரிய; 3. ஒரு வினையெச்ச விகுதி;

அஞ்சு - 1. ஐந்து; 2. அஞ்சுகின்ற;

நஞ்சு - 1. விடம்; 2. நைந்து என்பதன் போலி; (நைந்து - மனம் குழைந்து);

வானஞ்சு - 1. வான் அஞ்சு (தேவர்கள் ஐந்து); 2. வான் நஞ்சு (பெரிய விடம்); "வல்+நஞ்சு" (கொடிய விடம்) என்பது "வால்+நஞ்சு" என்று நீட்டல் விகாரம் பெற்றதாகவும் கொள்ளலாம்; 3. உய்வான் அஞ்சு / உய்வான் நஞ்சு (நைந்து); (உய்வான் = உய்வதற்காக);

கண்டம் - 1. ஆபத்து; 2. மிடறு; கழுத்து;

வாரி - கடல்;


வான், அஞ்சு-வாய் அரவால் வாரி கடை நாளில் எழு - தேவர்கள், ஐந்தலை-நாகமான வாசுகியைக் கயிறாகக்கொண்டு கடலைக் கடைந்த சமயத்தில் எழுந்த;

வான் நஞ்சு வாதை-செய, வாடி உய்வான் - பெரிய கொடிய ஆலகாலம் என்ற விஷம் மிகவும் துன்பம் செய்ய, அதனால் வருந்தி, உய்வதற்காக;

"அஞ்சு கண்டம் தவிர்த்து அருளாய் கண்ணுதலே" என்ன - "யாம் அஞ்சுகின்ற இந்தப் பேராபத்தைப் போக்கி அருள்வாய் முக்கண்ணனே" என்று வேண்ட;

(உய்வான் நஞ்சு, "கண்டந் தவிர்த்து அருளாய் கண்ணுதலே" என்ன --- என்றும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்; அப்படிக் கொண்டால், "மனம் நைந்து, உய்யும்பொருட்டு, இந்த ஆபத்தைப் போக்கி அருள்வாய் முக்கண்ணனே என்று வேண்ட");

து கண்டம் தரித்தான் நம் காப்பு - அவ்விஷத்தை உண்டு கண்டத்தில் வைத்த சிவபெருமானே நம் காவல்/துணை;


பிற்குறிப்பு - இலக்கணக் குறிப்பு:

வினையெச்சம், "செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர்" என்னும் ஒன்பது வாய்பாடுகளில் அமையும். "வான், பான், பாக்கு" ஆகிய விகுதிகளைப் பெற்றும் வரும்.

வான் : மழை பெய்வான் மரம் வளர்ப்போம் = மழை பெய்ய மரம் வளர்ப்போம்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

M.046 - ஆனஞ்சு - கொண்டாடு - மடக்கு

2010-01-10

M.046 - ஆனஞ்சு - கொண்டாடு - மடக்கு

--------------

ஆனஞ்சு வேங்கை அதள்அணிவான்; தேவர்க்கா

ஆனஞ்சு கண்டத் தடைத்தருள்வான்; - ஆனஞ்சு

கொண்டாடு முக்கணனைக் கோனென்று நெஞ்சேநீ

கொண்டாடு; தீரும் குறை.


பதம் பிரித்து:

ஆன் அஞ்சு வேங்கை-அதள் அணிவான்; தேவர்க்கா

ஆல்-நஞ்சு கண்டத்து அடைத்து-அருள்வான்; ஆன்-அஞ்சு

கொண்டு ஆடு முக்கணனைக் கோன் என்று நெஞ்சே நீ

கொண்டாடு; தீரும் குறை.


சொற்பொருள்:

ஆனஞ்சு - 1. ஆன் அஞ்சு (பசுக்கள் அஞ்சுகின்ற); 2. ஆல் நஞ்சு (ஆலகாலமாகிய விஷம்); 3. ஆன் அஞ்சு (பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்கள் - பஞ்சகவ்வியம் - பால், தயிர், நெய், கோசலம், கோமயம்);

கொண்டாடு - 1. கொண்டு ஆடுகின்ற (கொண்டு அபிஷேகம் செய்யப்பெறும்); 2. புகழ்தல்; பாராட்டுதல்;


ன் அஞ்சு வேங்கை-அதள் அணிவான் - பசுக்கள் அஞ்சுகின்ற புலியின் தோலை ஆடையாகக் கட்டியவன்; (வேங்கை - புலி); (அதள் - தோல்);

தேவர்க்கா ஆல்-நஞ்சு கண்டத்து அடைத்து-அருள்வான் - தேவர்களுக்காக (= தேவர்கள் உய்யும் பொருட்டு); ஆலகாலமாகிய விஷத்தை கண்டத்தில் அடைத்து அருளியவன்; (தேவர்க்கா - தேவர்க்காக; கடைக்குறை விகாரம்);

ஆன்-அஞ்சு கொண்டு ஆடு முக்கணனைக் கோன் என்று நெஞ்சே நீ கொண்டாடு - பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் மகிழ்ந்த முக்கண்ணனைத் தலைவன் என்று மனமே நீ போற்று; (கோன் - தலைவன்); (சுந்தரர் தேவாரம் - 7.17.4 - "அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினில்")

தீரும் குறை - (அப்படிச் செய்தால்) உன் குறைகள் தீரும்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

Monday, January 10, 2022

S.111 - சிவன் - சிங்கம் - முருகன் - சிலேடை

2010-01-09

S.111 - சிவன் - சிங்கம் - முருகன் - சிலேடை

------------------

கானில் நடமாடும் கண்ணிற் பொறிபறக்கும்

மான்மேலே பாயுமா றோடுமே - கோனென்று

வான்புகழ்நற் கோலமா மானஞ்சு கண்டமுடை

யான்மிசையூர் மைந்தன் அரி.


சொற்பொருள்:

கான் - 1. சுடுகாடு; 2. காடு;

நடமாடுதல் - 1. திருநடம் செய்தல்; 2. சஞ்சரித்தல்;

பொறிபறத்தல் - 1. தீப்பொறி சிதறுகை; 2. சினத்தோடு பார்த்தல்;

மான் - 1. ஒரு விலங்கு - Deer; 2. மான் போன்ற பெண்; 3. பெரியோன் - e.g. "எம்மான்";

பாயுமாறு - 1. பாயும் ஆறு; 2. பாயும்படி;

ஓடு - 1. மண்டையோடு; 2. ஓடுதல்;

வான் புகழ் - 1. வானோர் புகழும்; 2. பெரும்புகழ் உடைய;

கோலம் - 1. வேடம்; 2. உருவம்; அழகு; தன்மை;

கோலமா மானஞ்சு - 1. கோலம் ஆம், மால் நஞ்சு/ஆல் நஞ்சு; 2. கோலம் ஆம், மான் அஞ்சு/ஆன் அஞ்சு;

மால் - 1. கருமை (Blackness); 2. பெருமை (greatness);

ஆல் - ஓர் அசைநிலை;

ஆல் நஞ்சு - ஆலகாலமாகிய விஷம்;

மால் நஞ்சு - கரிய விடம்;

ஆன் - 1. இடபம்; 2. எருமை, பெற்றம், மரை இவற்றின் பெண்;

கண்டம் - 1. தொண்டை; கழுத்து; 2. குரல்;

ஆன் மிசை ஊர் - இடபத்தின்மேல் செல்லும்;

மைந்தன் - 1. வீரன்; 2. மகன்; 3. இளையோன்;

அரி - சிங்கம்;


சிங்கம்:

கானில் நடமாடும் - காட்டில் சஞ்சரிக்கும்;

கண்ணிற் பொறிபறக்கும் - சினத்தோடு பார்க்கும் - மிகுந்த கோபம் உடையது;

மான்மேலே பாயுமாறு ஓடுமே - மான்மேல் பாயும்படி ஓடும்;

கோன் என்று வான்புகழ் நற்கோலம் ஆம் - காட்டுக்கு அரசன் என்று சொல்லும்படி பெரும்புகழ் உடைய வடிவம்/தன்மை இருக்கும்;

மான்/ஆன் அஞ்சு கண்டம் உடை - மிருகங்கள் அஞ்சி நடுங்கும்படி குரலை உடைய (கர்ஜிக்கின்ற);

அரி - சிங்கம்;


முருகன்:

கானில் நடமாடும் கண்ணில் பொறிபறக்கும் மான் மேலே பாயுமாறு ஓடுமே - காட்டில் வாழ்கின்ற, கோபிக்கும் கண்ணைக் காட்டும், மான் போன்ற வள்ளி அஞ்சித் தன் மேல் பாய்ந்து கட்டிக்கொள்ளும்படி (அந்தத் தினப்புனத்தை) விரைந்து அடைந்தவன்;

கோன் என்று வான் புகழ் நற்கோலம் ஆமால் - தலைவன் என்று தேவர்கள் புகழும் அழகிய கோலம் உடையவன்;

நஞ்சு கண்டம் உடையான்மிசை ஊர் மைந்தன் - (குழந்தையாக) நீலகண்டன்மேல் ஏறி அமர்ந்து வரும் (விளையாடும்) மகன்; (ஈசன் தோளில் இருந்து காதில் பிரணவத்தைச் சொன்னவன்);


சிவன்:

கானில் நடம் ஆடும் - சுடுகாட்டில் திருநடம் செய்பவன்;

கண்ணிற் பொறிபறக்கும் - நெற்றிக்கண்ணில் தீப்பொறி பறக்கின்றவன்;

மான், மேலே பாயும் ஆறு, ஓடுமே கோன் என்று வான் புகழ் நற்கோலம் ஆம் - அரசன் என்று தேவர்கள் எல்லாம் புகழும் வேடமாக (ஒரு கையில்) மானையும், தலைமேல் பாயும் கங்கையையும், (பிரமனின்) மண்டையோட்டையுமே தாங்குவார்; (--அல்லது-- "கண்ணிற் பொறிபறக்கும் மான், மேலே பாயும் ஆறு ஓடுமே" - நெற்றிக்கண்ணில் தீப்பொறி பறக்கும் சுவாமி, உச்சிமேல் பாயும் கங்கை ஓடும் - என்றும் கொள்ளலாம்);

மால்/ஆல் நஞ்சு கண்டம் உடை - கரிய ஆலகாலமாகிய விஷத்தைக் கண்டத்தில் உடைய;

ஆன்மிசை ஊர் மைந்தன் - இடபத்தின்மேல் வரும் வீரனான சிவபெருமான்;


பிற்குறிப்பு - இலக்கணக் குறிப்புகள்:

  • மால் நஞ்சு = மானஞ்சு --- # 154/155 காண்க.

  • கோலம் ஆம் மான் அஞ்சு = கோலமா மானஞ்சு --- # 146 காண்க.

ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம்:

146. மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும்.

154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.

155. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும்.)


வி. சுப்பிரமணியன்

------------- -------------

Wednesday, January 5, 2022

S.110 - சிவன் - இணையக்குழு (internet group) - சிலேடை

2010-01-02

S.110 - சிவன் - இணையக்குழு (internet group) - சிலேடை

------------------

பித்தரென்றே பேசிப் பெரிதுவக்கும் அன்பருளர்

பத்திரம் தாமிட்டுப் பார்த்திருப்பர் - எத்தனையோ

பேர்திகழப் பெண்ணாணும் ஆவர்காண் ஓர்குழு

வார்சடைமேல் வன்னியணி வார்.


சொற்பொருள்:

பித்தர் - பைத்தியம்;

பத்திரம் - 1. கடிதம் / மடல் (letter / posting); 2. இலை;

பார்த்தல் - 1. எதிர்பார்த்தல்; 2. வணங்குதல்; 3. கண்ணால் நோக்குதல்;

பேர் - 1. பெயர்; நாமம்; 2. மனிதர்கள்;

காண் - 1. காணுதல்; 2. முன்னிலை அசைச்சொல்;


இணையக்குழு (an internet group):

பித்தர் என்றே பேசிப் பெரிது உவக்கும் அன்பர் உளர் - மடலாடல்களில் தமக்கு ஏற்பில்லாத கருத்தைச் சொல்வோரை ஏசி மகிழ்வோரும் உள்ளனர்; (--அல்லது-- பித்தரைப் போலவே தொடர்பின்றிப் பேசி வாதம் செய்து மகிழ்வோரும் இருப்பார்கள் --அல்லது-- chat முதலியவற்றில் பெரும்பித்தாக இருப்போர் உள்ளனர்);

பத்திரம் தாம் இட்டுப் பார்த்திருப்பர் - பல மடல்களை இட்டு மற்றோர் அதற்குக் கூறும் மறுமொழிகளை (replies / responses) எதிர்பார்த்திருப்பர்;

எத்தனையோ பேர் திகழப் பெண்ணும் ஆவர் - ஒருவரே பல பெயர்களில் (இஷ்டப்படி தங்களுக்குப் பெயர்சூட்டிக்கொண்டு), ஆண் ஒரு பெண் போலவும், பெண் ஓர் ஆண் போலவும் குழுவில் மாறுவேடத்தில் இருப்பதும் உண்டு; (--அல்லது-- குழுக்களில் ஆண்கள் பெண்கள் எனப் பலர் இருப்பார்கள்);

காண் ஓர் குழு - இப்படிக் காண்பது ஓர் இணையக் குழு (internet group);


சிவன்:

பித்தர் என்றே பேசிப் பெரிது உவக்கும் அன்பர் உளர் - "பித்தரே" என்று போற்றி மகிழும் பக்தர்கள் உள்ளனர்;

பத்திரம் தாம் இட்டுப் பார்த்திருப்பர் - வில்வம் போன்ற இலைகளைத் திருவடியில் இட்டு வணங்குவர்;

எத்தனையோ பேர் திகழப் பெண்ணாணும் ஆவர் காண் - எண்ணற்ற நாமங்கள் உடையவர்; அர்த்தநாரீஸ்வரர்;

வார்சடைமேல் வன்னி அணிவார் - நீண்ட சடைமேல் வன்னியை அணியும் சிவபெருமானார்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


M.045 - இழுக்குமொழி - நஞ்சுகந்தான் - மடக்கு

2009-12-30

M.045 - இழுக்குமொழி - நஞ்சுகந்தான் - மடக்கு

--------------

இழுக்குமொழி பேசுவிழிப் பெண்களையும், என்றும்

இழுக்குமொழி சொல்வோர்கூட் டென்னும் - இழுக்குமொழி

நஞ்சுகந்தான் தாளிணையை நாளும் தொழுநிலைக்கும்

நஞ்சுகந்தான் தீரும் நலிவு.


பதம் பிரித்து:

இழுக்கும் மொழி பேசு விழிப் பெண்களையும், என்றும்

இழுக்கு-மொழி சொல்வோர் கூட்டு என்னும் - இழுக்கும் ஒழி;

நஞ்சு உகந்தான் தாளிணையை நாளும் தொழு; நிலைக்கும்

நம் சுகம் தான்; தீரும் நலிவு.


சொற்பொருள்:

இழுக்குமொழி - 1. இழுக்கும் (ஈர்க்கின்ற) மொழி; 2. இழுக்கு மொழி (வழு/குற்றம் உடைய சொற்கள்); 3. இழுக்கும் ஒழி (குற்றத்தையும் நீங்கு);

கூட்டு - உறவு; சினேகம்;

நஞ்சுகந்தான் - 1. நஞ்சு உகந்தான் (ஆலகாலத்தை விரும்பியவன்); 2. நம் சுகம்தான்;

நலிவு - துன்பம்;


இழுக்கும் மொழி பேசு விழிப் பெண்களையும், என்றும் இழுக்கு-மொழி சொல்வோர் கூட்டு என்னும் இழுக்கும் ஒழி - ஈர்க்கின்ற மொழியைக் கண்களால் பேசும் பெண்களையும், எப்பொழுதும் குற்றமுடைய வார்த்தைகளையே பேசுபவர்களது சினேகம் என்ற இழுக்கையும் நீங்கு;

நஞ்சு உகந்தான் தாளிணையை நாளும் தொழு - ஆலகாலத்தை விரும்பி உண்ட ஈசனது இருதிருவடிகளைத் தினமும் வணங்கு;

நிலைக்கும் நம் சுகம்தான் - நம் சுகம் என்றும் நிலைக்கும்; (தான் - தேற்றச்சொல்; அசைச்சொல் என்றும் கொள்ளலாம்);

தீரும் நலிவு - துன்பம் தீரும்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------