Thursday, August 26, 2021

P.268 - கோயில் (சிதம்பரம்) - கட்டத் தொடர்தீர

2015-01-04

P.268 - கோயில் (சிதம்பரம்)

-----------------------

(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")


1)

கட்டத் தொடர்தீரக் கையால் மலர்தூவி

இட்டத் தொடுநாளும் ஏத்திப் பணிகின்ற

சிட்டர்க் கருள்வானைச் சிற்றம் பல(ம்)மேய

நட்டப் பெருமானை நம்பித் தொழுவோமே.


கட்டத்-தொடர் தீரக், கையால் மலர் தூவி, இட்டத்தொடு நாளும் ஏத்திப் பணிகின்ற சிட்டர்க்கு அருள்வானைச் - துன்பத்தொடர் தீரக், கைகளால் பூக்களைத் தூவி, அன்போடு தினமும் துதித்து வணங்குகின்ற சிரேஷ்டர்களுக்கு அருள்பவனை; (கட்டத்தொடர் - கஷ்டத்தொடர்); (இட்டம் - விருப்பம்); (சிட்டர் - உயர்ந்தோர்);

சிற்றம்பல(ம்) மேய நட்டப் பெருமானை - சிற்றம்பலத்தில் உறையும் கூத்தப்பெருமானை; (நட்டம் - கூத்து);

நம்பித் தொழுவோமே - விரும்பி வழிபாடு செய்வோம்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);


2)

ஓடும் புனல்திங்கள் உரகம் அணிகொன்றை

சூடும் முடியானைச் சுண்ணப் பொடியானை

மாடு வளர்தில்லை மன்றில் திருநட்டம்

ஆடும் கழலானை அன்பால் தொழுவோமே.


ஓடும் புனல் திங்கள் உரகம் அணிகொன்றை சூடும் முடியானைச் - பாய்கின்ற கங்கைநதி, பிறை, பாம்பு, அழகிய கொன்றைமலர் இவற்றையெல்லாம் திருமுடிமேல் அணிந்தவனை; (உரகம் - பாம்பு); (அணி - அழகு);

சுண்ணப் பொடியானை - திருநீற்றைப் பூசியவனை; திருநீற்றையே நறுமணப் பொடியாகப் பூசிக் கொள்பவனை; (சுண்ணம் - வாசனைப்பொடி);

மாடு வளர் தில்லை மன்றில் திருநட்டம் ஆடும் கழலானை - செல்வம் உயர்கின்ற தில்லை அம்பலத்தில் கூத்தாடும் திருப்பாதனை; (மாடு - செல்வம்); (கழல் - கழல் அணிந்த திருவடி); (சம்பந்தர் தேவாரம் - 1.80.5 - "செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலமேய செல்வன்");

அன்பால் தொழுவோமே - அன்போடு வணங்குவோம்;


3)

முடிக்குத் தலைமாலை முளைவெண் மதிசூடி

வெடிக்கும் துடியேந்தி விண்ணின் றிழியாற்றைக்

குடிக்கும் சடையானைக் தில்லைக் குடியானை

நடிக்கும் பெருமானை நம்பித் தொழுவோமே.


முடிக்குத் தலைமாலை முளைவெண் மதிசூடி - தலைக்குத் தலைமாலையும் இளவெண்திங்களையும் அணிந்து;

வெடிக்கும் துடி ஏந்தி - வெடி போலப் பெருத்த ஓசையோடு அதிரும் உடுக்கையைக் கையில் ஏந்தி; (4.73.6 - "வெடிபடு தமருகம் கை தரித்ததோர் கோல");

விண்ணின்று இழி ஆற்றைக் குடிக்கும் சடையானைக் - வானிலிருந்து இறங்கிய கங்கையை உள்ளடக்கிய சடையை உடையவனை; (நின்று - ஐந்தாம்வேற்றுமை உருபு);

தில்லைக் குடியானை - தில்லையில் நீங்காது உறைபவனை; (குடி - உறைவிடம்);

நடிக்கும் பெருமானை - நடராஜனை;

நம்பித் தொழுவோமே - விரும்பி வழிபாடு செய்வோம்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);


4)

பார்த்தற் கருள்செய்யப் பன்றிப் பின்சென்ற

மூர்த்தம் உடையானை முடிவில் புகழானைத்

தீர்த்தச் சடையானைச் சிற்றம் பல(ம்)மேய

கூத்தப் பெருமானைக் கூறி மகிழ்வோமே.


பார்த்தற்கு அருள்செய்யப் பன்றிப்பின் சென்ற மூர்த்தம் உடையானை - அர்ஜுனனுக்கு அருள்செய்ய ஒரு பன்றியைத் துரத்திச் சென்ற வேடன் கோலம் உடையவனை; (பார்த்தற்கு - பார்த்தனுக்கு); (மூர்த்தம் - வடிவம்); (கிராதர் - வேட்டுவ வடிவம் - மாஹேஸ்வர மூர்த்தங்களுள் ஒன்று);

முடிவு இல் புகழானைத் - என்றும் இருக்கும் (/ எல்லையற்ற) புகழ் உடையவனை;

தீர்த்தச் சடையானைச் - கங்கைச்சடையானை; (தீர்த்தம் - நீர்; தூய்மை);

சிற்றம்பல(ம்) மேய கூத்தப் பெருமானைக் - சிற்றம்பலத்தில் உறையும் கூத்தனை;

கூறி மகிழ்வோமே - போற்றிப் பாடி மகிழ்வோம்;


5)

சனித்துத் தரைமீது தவிக்கும் நிலைமாற்றி

இனித்தொல் வினைநண்ணா இன்ப நிலைநல்கும்

தனித்தன் மையினானைக் கனக சபைதன்னில்

குனித்தல் உடையானைக் கூறி மகிழ்வோமே.


சனித்துத் தரைமீது தவிக்கும் நிலை மாற்றி - பிறந்து மண்ணுலகில் வாடும் துன்பநிலையை நீக்கி; (சனித்தல் - ஜனித்தல் - பிறத்தல்);

இனித் தொல்வினை நண்ணா இன்பநிலை நல்கும் - இனிமேல் பழவினைகள் அணுகாத பேரின்பத்தை வழங்கும்; (நண்ணுதல் - நெருங்குதல்); (நல்குதல் - அளித்தல்);

தனித்தன்மையினானைக் - ஒப்பற்ற தன்மை உடையவனை; (தனி - ஒப்பற்ற);

கனகசபைதன்னில் குனித்தல் உடையானைக் - பொன்னம்பலத்தில் ஆடும் கூத்தனை; (கனகசபை - பொன்னம்பலம்); (குனித்தல் - ஆடுதல்);

கூறி மகிழ்வோமே - போற்றிப் பாடி மகிழ்வோம்;


6)

தலையின் மிசைநாகம் தண்வெண் மதியோடு

குலவும் பெருமானைக் கூடார் புரமெய்த

சிலைவில் உடையானைச் சிற்றம் பல(ம்)மேய

அலகில் நடத்தானை அன்பால் தொழுவோமே.


தலையின்மிசை நாகம் தண்-வெண்-மதியோடு குலவும் பெருமானை - திருமுடிமேல் பாம்பு குளிர்ந்த வெண்திங்களோடு விளங்குகின்ற பெருமானை; (குலவுதல் - விளங்குதல்; மகிழ்தல்; உலாவுதல்);

கூடார் புரம் எய்த சிலைவில் உடையானை - பகைவர்களது முப்புரங்கள்மேல் கணையைச் செலுத்தி அழித்த, மலையை வில்லாக உடையவனை; (கூடார் - பகைவர்); (சிலை - மலை);

சிற்றம்பலம் மேய அலகு இல் நடத்தானை - தில்லையில் சிற்றம்பலத்தில் உறைகின்ற, அளவில்லாத திருக்கூத்து ஆடுபவனை; (அலகு - அளவு); (நடம் - கூத்து);

அன்பால் தொழுவோமே - பக்தியோடு வழிபடுவோம்.


7)

பருக்கைம் மதமாவைப் பற்றி உரிசெய்தான்

இருக்கை மொழிநாவன் ஏத்தும் அடியார்வான்

இருக்க அருள்செய்து தில்லை எழில்மன்றில்

நிருத்தம் புரிவானை நித்தம் நினைவோமே.


பருக்-கைம்-மதமாப் பற்றி உரிசெய்தான் - பருத்த துதிக்கையை உடைய ஆண்யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தவன்; (மதமா - ஆண்யானை);

இருக்கை மொழி நாவன் - வேதத்தை மொழிந்தவன்; (இருக்கு - ரிக்வேதம் - வேதம்);

ஏத்தும் அடியார் வான் இருக்க அருள்செய்து - துதிக்கும் பக்தர்களுக்குச் சிவலோக-வாழ்வை அருளி;

தில்லை எழில்மன்றில் நிருத்தம் புரிவானை - அழகிய தில்லை அம்பலத்தில் ஆடுபவனை; (நிருத்தம் - ஆடல்);

நித்தம் நினைவோமே - எப்பொழுதும் நினைப்போம்; (நித்தம் - அனவரதம்);


8)

தடந்தோள் வலியுன்னித் தருக்கிக் கயிலாயம்

இடந்தான் முடிபத்தை இறுத்த விரலானை

மடந்தை பிரியானைத் தில்லை மணிமன்றில்

நடஞ்செய் பெருமானை நம்பித் தொழுவோமே.


தடம்-தோள் வலி உன்னித் தருக்கி - தன் பெரிய புஜங்களின் வலிமையை எண்ணிக் கருவத்தோடு;

கயிலாயம் இடந்தான் முடி பத்தை இறுத்த விரலானை - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துத் தலைகளையும் (ஊன்றி நசுக்கி)அழித்த திருப்பாதவிரல் உடையவனை;

மடந்தை பிரியானைத் - உமைபங்கனை; (மடந்தை - பெண்);

தில்லை மணிமன்றில் நடம் செய் பெருமானை - அழகிய தில்லை அம்பலத்தில் ஆடுபவனை; (மணி - அழகு);

நம்பித் தொழுவோமே - விரும்பி வணங்குவோம்;


9)

பன்றி அடிநேடப் பறவை முடிநேட

அன்று வரையின்றி நின்ற அழலானைத்

துன்றி அடியார்கள் துதிக்க அணிதில்லை

மன்றில் நடிகோனை வாழ்த்தி மகிழ்வோமே.


பன்றி அடி நேடப், பறவை முடி நேட, அன்று வரை இன்றி நின்ற அழலானைத் - பன்றி (திருமால்) திருவடியைத் தேட, அன்னப்பறவை (பிரமன்) திருமுடியைத் தேட, அன்று எல்லையின்றி ஓங்கிய ஜோதியை; (பன்றி - பன்றி உருக்கொண்ட திருமால்); (பறவை - அன்ன உருக்கொண்ட பிரமன்);(நேடுதல் - தேடுதல்); (வரை - எல்லை; அளவு); (அழலான் - அழல் வடிவினன்; அழல் - நெருப்பு);

துன்றி அடியார்கள் துதிக்க அணி-தில்லை மன்றில் நடி-கோனை - நெருங்கி அடியார்கள் துதிக்க அழகிய தில்லை அம்பலத்தில் கூத்தாடும் அரசனை; (துன்றுதல் - நெருங்குதல்); (நடி கோன் - நடிக்கின்ற தலைவன் - நடராஜன்);

வாழ்த்தி மகிழ்வோமே - வாழ்த்தி இன்புறுவோம்;


10)

வருத்தம் மிகவாக்கும் வழிகள் தமில்நின்று

பொருத்தம் இலசொல்லும் பொய்யர்க் கருளானைத்

திருத்தம் உடையானைச் சிற்றம் பல(ம்)மேய

நிருத்தப் பெருமானை நித்தம் நினைவோமே.


வருத்தம் மிகக்கும் வழிகள்-தமில் நின்று, பொருத்தம் இல சொல்லும் பொய்யர்க்கு அருளானைத் - மிகுந்த துன்பம் தரும் நெறிகளில் ஒழுகித், தகாத வார்த்தைகள் பேசும் பொய்யர்களுக்கு அருளாதவனை; (வழிகள்தமில் - வழிகள்தம்மில் - வழிகளில்; நெறிகளில்); (நின்று - நின்றுகொண்டு; ஒழுகி); ("வருத்தம் மிக ஆக்கும் பொய்யர்; வழிகள்தமில் நின்று, பொருத்தம் இல சொல்லும் பொய்யர்" என்றும் இயைக்கலாம்);

திருத்தம் உடையானைச் - புனிதனை / கங்காதரனை; (திருத்தம் - புனிதம்; தீர்த்தம்);

சிற்றம்பல(ம்) மேய நிருத்தப் பெருமானை - சிற்றம்பலத்தில் உறைகின்ற கூத்தப்பெருமானை; (நிருத்தம் - நடனம்);

நித்தம் நினைவோமே - எப்பொழுதும் தியானிப்போம்;


11)

மட்டு மலிபூவார் மாலை தமிழ்மாலை

இட்டு மனமார ஏத்தின் வினையென்ற

கட்டைக் களைவானைக் கனக சபைமேய

நட்டப் பெருமானை நம்பித் தொழுவோமே.


மட்டு மலி பூ ஆர் மாலை - தேனும் வாசனையும் மிகுந்த பூக்கள் நிறைந்த மாலை; (மட்டு - தேன்; வாசனை); (மலிதல் - மிகுதல்; நிறைதல்); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);

தமிழ்மாலை - தமிழ்ப் பாமாலை;

மட்டு மலி பூ ஆர் மாலை தமிழ்மாலை இட்டு மனமார ஏத்தின் - வாசப்-பூமாலையும் மணம் கமழும் பாமாலையும் சூட்டி மனம் மகிழ்ந்து துதித்தால்; (மட்டு - வாசனை; தேன்); ("மட்டு மலி" இந்த அடைமொழியைப் பூமாலைக்கும் தமிழ்மாலைக்கும் தனித்தனியே இயைக்கலாம்); (இடுதல் - அணிவித்தல்); (ஆர்தல் - நிறைதல்);

வினை என்ற கட்டைக் களைவானைக் - பழவினைப் பந்தத்தைத் தீர்ப்பவனை;

கனகசபை மேய நட்டப் பெருமானை - பொன்னம்பலத்தில் உறைகின்ற நடராஜனை; (நட்டம் - கூத்து);

நம்பித் தொழுவோமே - விரும்பி வணங்குவோம்; (நம்புதல் - விரும்புதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------  

Wednesday, August 25, 2021

P.267 - சிக்கல் - தக்கன் வேள்வியில்

2014-12-28

P.267 - சிக்கல்

-----------------------

(வஞ்சித்துறை - மா விளம் - வாய்பாடு) (திருவிருக்குக்குறள் அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")

(சம்பந்தர் தேவாரம் - 3.40.1 - "கல்லால் நீழல்")


முற்குறிப்பு -

1. இப்பாடல்களில் 4 சிறிய அடிகள். அடியின் சிறுமை கருதி, இங்கே, ஒவ்வொரு வரியிலும் 2 அடிகள் இடப்பட்டுள்ளன.

2. படிப்போர்-வசதி கருதிச், சில இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.


1)

தக்கன் வேள்வியில் .. துக்கம் செய்தவன்

நக்கன் சிக்கலைப் .. புக்குப் போற்றுமே.


தக்கன் செய்த வேள்வியை அழித்தவனும் திகம்பரனுமான சிவபெருமான் உறையும் சிக்கலை அடைந்து போற்றுங்கள்; (நக்கன் - திகம்பரன்); (புக்கு - புகுந்து);


2)

அல்லில் ஆடுவான் .. கொல்லை ஏறமர்

செல்வன் சிக்கலைச் .. சொல்லி உய்ம்மினே.


இருளில் கூத்தாடுபவனும் இடபவாகனம் உடைய செல்வனுமான சிவபெருமான் உறையும் சிக்கலைப் போற்றி உய்யுங்கள்; (அல் - இருள்); (கொல்லை ஏறு - கொல்லேறு - போர்செய்யவல்ல எருது);


3)

காவ லார்புரம் .. வேவ நக்கமா

தேவன் சிக்கலிற் .. கோவைக் கூறுமே.


காவல் ஆர் புரம் - காவல் பொருந்திய முப்புரங்கள்; (சம்பந்தர் தேவாரம் - 1.100.6 - "கடியரண் மூன்றும்");

வேவ நக்க மாதேவன் - வெந்து அழியச் சிரித்த மகாதேவன்; (நகுதல் - சிரித்தல்);

சிக்கலிற் கோவைக் கூறுமே - சிக்கலில் உறையும் தலைவனைப் புகழுங்கள்; (கோ - தலைவன்);


4)

தையல் பங்கமர் .. செய்யன் சிக்கலில்

ஐயன் தாள்தொழ .. உய்யல் திண்ணமே.


தையல் பங்கு அமர் செய்யன் - உமாதேவியை ஒரு பங்காக விரும்பும் செம்மேனிப் பெருமான்;

சிக்கலில் ஐயன் - சிக்கலில் உறையும் தலைவன்;

தாள் தொழ உய்யல் திண்ணமே - அவனது திருவடியைத் தொழுதால் உய்தி நிச்சயம்;


5)

கொக்கின் தூவலார் .. செக்கர் அஞ்சடைச்

சிக்க லானடி .. துக்கம் நீக்குமே.


கொக்கிறகை அணிந்த அழகிய செஞ்சடையை உடைய, சிக்கலில் உறையும் பெருமான் திருவடி நம் துக்கத்தைப் போக்கும்; (தூவல் - இறகு); (கொக்கிறகு - 1. ஒரு பூவின் பெயர்; 2. கொக்கு வடிவுடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்); (செக்கர் - சிவப்பு); (அஞ்சடை - அம் சடை - அழகிய சடை);


6)

கண்ணில் தீயினன் .. விண்ணி னார்தொழும்

அண்ணல் சிக்கலை .. நண்ணல் நன்மையே.


தீ உமிழும் நெற்றிக்கண்ணனும், தேவர் தொழும் தலைவனுமான சிவபெருமான் உறையும் சிக்கலை அடைந்தால் நன்மை கிட்டும்; (நண்ணல் - நண்ணுதல் - அடைதல்);


7)

வாசப் பூவினால் .. தேசன் சிக்கலில்

ஈசன் தாள்தொழ .. நாசம் பாவமே.


("தேசன், சிக்கலில் ஈசன் தாள் வாசப் பூவினால் தொழப் பாவம் நாசமே" - என்று இயைக்க).

ஒளிவடிவினனும் சிக்கலில் உறைபவனுமான ஈசனது திருவடியை மணம் மிக்க பூக்கள் தூவி வணங்கினால் நம் பாவங்கள் அழியும்; (தேசன் - ஒளியுருவினன்);


8)

மலையெ டுத்தவன் .. அலற ஊன்றிய

தலைவன் சிக்கலை .. வலம்வந் துய்ம்மினே.


கயிலையைப் பெயர்த்த இராவணனை அவன் அலறும்படி ஒரு திருப்பாதவிரலை ஊன்றி நசுக்கிய சிவபெருமான் உறையும் சிக்கலை வலம்செய்து உய்யுங்கள்;


9)

அரிய யன்தொழும் .. பெரியன் ஆலமர்

குரவன் சிக்கலை .. உரைசெய் துய்ம்மினே.


அரி அயன் தொழும் பெரியன் - திருமாலும் பிரமனும் வணங்கும் பெரியவன்;

ஆல் அமர் குரவன் - கல்லால-மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தி;

சிக்கலை உரைசெய்துய்ம்மினே - அப்பெருமான் உறையும் சிக்கலைப் போற்றி உய்யுங்கள்;


10)

சைவன் தாள்தொழாக் .. கையர் சொல்விடும்

மெய்யன் சிக்கலை .. எய்தி உய்ம்மினே.


சைவன் தாள் தொழாக் கையர் சொல் விடும் - சிவபெருமான் திருவடியைத் தொழாத கீழோர்களது (வஞ்சகர்களது) சொற்களை மதியாமல் நீங்குங்கள்; (சைவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று); (கையர் - கீழோர்; வஞ்சகர்);

மெய்யன் சிக்கலை எய்தி உய்ம்மினே - மெய்ப்பொருளாக உள்ள சிவபெருமானது சிக்கலை அடைந்து உய்யுங்கள்;


11)

நிகரி லான்பொழில் .. திகழும் சிக்கலில்

பகவன் தாள்தொழ .. மிகவும் நன்மையே.


நிகர் இலான் - ஒப்பற்றவனும்;

பொழில் திகழும் சிக்கலில் பகவன் - சோலை சூழ்ந்த சிக்கலில் உறைகின்ற பகவானுமான;

தாள் தொழ மிகவும் நன்மையே - சிவபெருமானது திருவடியைத் தொழுதால் பேரின்பம் கிட்டும்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

Tuesday, August 24, 2021

P.266 - கொண்டீச்சரம் (திருக்கொண்டீஸ்வரம்) - பண்டரங்கனை

2014-12-28

P.266 - கொண்டீச்சரம் (திருக்கொண்டீஸ்வரம்)

(நன்னிலத்தை அடுத்து உள்ள தலம்)

-----------------------

(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.81.1 - "சிட்டனைச் சிவனை");

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.50.1 - "விரும்புந் திங்களும்");



1)

பண்ட ரங்கனைப் பார்வதி பங்கனை

அண்டர் அண்டனை அன்பின் உருவனைக்

கொண்டற் கண்டனைக் கொண்டீச் சரவனைத்

தொண்ட ராய்த்தொழு வார்க்கிலை துன்பமே.


பண்டரங்கனைப் - பாண்டரங்கக் கூத்தனை; (பண்டரங்கன் - பாண்டரங்கக் கூத்தாடுவோன்); (பாண்டரங்கம் - கூத்துப் பதினொன்றனுள் திரிபுரத்தை அழித்த போது சிவபிரான் வெண்ணீறணிந்து ஆடியது);

பார்வதி பங்கனை - உமைபங்கனை;

அண்டர-அண்டனை - தேவதேவனை;

அன்பின் உருவனைக் - அன்பே வடிவானவனை;

கொண்டற் கண்டனைக் - மேகம் போன்ற நிறம் திகழும் கண்டத்தை உடையவனை; (கொண்டல் - மேகம்); (திருக்கோவையார் - 23.10 - "திண்டோட்கொண்டற் கண்டன்");

கொண்டீச்சரவனைத் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

தொண்டராய்த் தொழுவார்க்கு இலை துன்பமே - தொண்டர்களாகி வணங்குபவர்களுக்குத் துன்பம் இல்லை;


2)

சூல னைப்புலித் தோலனை முப்புரி

நூல னைப்பத்து நூறு பெயரனைக்

கோல வார்சடைக் கொண்டீச் சரவனை

ஏலு மாறு வணங்குவார்க் கின்பமே.


சூலனைப், புலித்தோலனை, முப்புரி நூலனைப் - சூலபாணியைப், புலித்தோல் ஆடை அணிந்தவனை, பூணூல் திகழும் மார்பினனை;

பத்து நூறு பெயரனை - ஆயிரம் திருநாமங்கள் உடையவனை; (சம்பந்தர் தேவாரம் - 1.56.11 - "பாற்றுறை மேவிய பத்து நூறு பெயரனை");

கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

ஏலுமாறு வணங்குவார்க்கு இன்பமே - இயன்றவகையில் (/ பொருந்துமாறு) வணங்கும் பக்தர்களுக்கு இன்பமே; (அப்பர் தேவாரம் - 5.43.9 - "காலமான கழிவதன் முன்னமே ஏலுமாறு வணங்கிநின்று ஏத்துமின்");


3)

மன்றில் ஆடியை மாதவர் நெஞ்சினில்

நின்ற சோதியை நெற்றியிற் கண்ணனைக்

குன்ற வில்லியைக் கொண்டீச் சரவனைச்

சென்று வாழ்த்திடத் தீவினை தீருமே.


மன்றில் ஆடியை - அம்பலக் கூத்தனை;

மாதவர் நெஞ்சினில் நின்ற சோதியை - பெரும்-தவத்தோர் நெஞ்சில் குடிகொண்ட ஜோதிவடிவினனை;

நெற்றியில் கண்ணனைக் - நெற்றிக்கண் உடையவனை;

குன்ற-வில்லியைக் - மேருமலையை வில்லாக ஏந்தியவனை;

கொண்டீச்சரவனைச் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

சென்று வாழ்த்திடத் தீவினை தீருமே - சென்று வழிபட்டால் தீவினை நீங்கும்;


4)

பெற்றம் ஏறும் பிரானைப் பெருவிடம்

துற்ற கண்டனைத் தூமதி சூடியைக்

குற்றம் இல்லியைக் கொண்டீச் சரவனைப்

பற்றி னார்தம் பழவினை பாறுமே.


பெற்றம் ஏறும் பிரானைப் - இடபவாகனனை; (பெற்றம் - இடபம்);

பெருவிடம் துற்ற கண்டனைத் - ஆலகாலத்தை உண்ட நீலகண்டனை; (துற்றுதல் - உண்ணுதல்);

தூமதி சூடியைக் - வெண்மையான சந்திரனைச் சூடியவனை;

குற்றம் இல்லியைக் - மாசற்றவனை;

கொண்டீச்சரவனைப் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

பற்றினார்தம் பழவினை பாறுமே - சரணடைந்த பக்தர்களது பழைய வினை அழியும்; (பாறுதல் - அழிதல்);


5)

போதை இட்டடி போற்றிய வானவர்

வாதை தீர்த்த வரைச்சிலை ஏந்தியைக்

கோதை பங்கனைக் கொண்டீச் சரவனை

வேத னைத்தொழ வீடும் வினைகளே.


போதை இட்டு அடி போற்றிய வானவர் வாதை தீர்த்த வரைச்சிலை ஏந்தியைக் - பூக்களைத் தூவி வழிபட்ட தேவர்களது துன்பத்தை தீர்த்த, மேருவில் ஏந்தியவனை; (போது - மலர்); (வாதை - துன்பம்); (வரை - மலை); (சிலை - வில்);

கோதை பங்கனைக் - உமைபங்கனை; (கோதை - பெண்);

கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

வேதனைத் - வேதநாயகனை;

தொழ வீடும் வினைகளே - வழிபட்டால் வினை அழியும்; (வீடுதல் - அழிதல்);


6)

நாறு கூவிளம் நாகம் இளமதி

ஏறு செஞ்சடை ஏந்தலை மேனியிற்

கூறு பெண்ணனைக் கொண்டீச் சரவனைக்

கூறு வாரைக் குறுகா வினைகளே.


நாறு கூவிளம் நாகம் இளமதி ஏறு செஞ்சடை ஏந்தலை - மணம் கமழும் வில்வம், பாம்பு, பிறை இவற்றையெல்லாம் சிவந்த சடையின்மேல் அணிகின்ற தலைவனை; (கூவிளம் - வில்வம்); (ஏந்தல் - பெருமையிற் சிறந்தவன்);

மேனியில் கூறு பெண்ணனைக் - திருமேனியில் ஒரு பாதி பெண் ஆனவனை;

கொண்டீச்சரவனைக் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

கூறுவாரைக் குறுகா வினைகளே - துதிக்கும் பக்தர்களை வினைகள் நெருங்கமாட்டா; (குறுகுதல் - அணுகுதல்);


7)

அமரர் கோனை அடிதொழு மாணிக்கா

நமனைச் செற்றருள் நம்பனை மஞ்ஞையூர்

குமரன் தாதையைக் கொண்டீச் சரவனை

விமல னைத்தொழ வீடும் வினைகளே.


அமரர் கோனை - தேவர்கள் தலைவனை;

அடிதொழு மாணிக்கா நமனைச் செற்றருள் நம்பனை - வணங்கிய மார்க்கண்டேயரைக் காப்பதற்காகக் காலனை உதைத்த நம்பனை; (மாணிக்கா - மாணிக்காக - மார்க்கண்டேயருக்காக); (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

மஞ்ஞை ஊர் குமரன் தாதையைக் - மயில்மேல் ஏறும் முருகனுக்குத் தந்தையை; (மஞ்ஞை - மயில்); (ஊர்தல் - ஏறுதல்); (தாதை - தந்தை);

கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

விமலனைத் தொழ வீடும் வினைகளே - தூயனை வழிபட்டால் வினை அழியும்; (வீடுதல் - அழிதல்);


8)

இடிபோல் கத்தி எழில்மலை பேர்த்தவன்

முடிபத் திற்றிட ஊன்றிய மூர்த்தியைக்

கொடிமேல் ஏற்றனைக் கொண்டீச் சரவனை

அடிக ளைத்தொழும் அன்பருக் கின்பமே.


இடிபோல் கத்தி எழில்மலை பேர்த்தவன் - இடிபோலப் பெருமுழக்கம் செய்து அழகிய கயிலைமலையைப் பெயர்த்த இராவணனுடைய; (சம்பந்தர் தேவாரம் - 1.112.8 - "எழின்மலை எடுத்த வல்லிராவணன்றன் முழுவலி அடக்கிய முதல்வனகர்");

முடி பத்து இற்றிட ஊன்றிய மூர்த்தியைக் - பத்துத்தலைகளும் நசுங்கும்படி திருப்பாதவிரலை ஊன்றிய பெருமானை; (இறுதல் - அழிதல்);

கொடிமேல் ஏற்றனை - இடபச்-சின்னம் திகழும் கொடியை உடையவனை;

கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

அடிகளைத் தொழும் அன்பருக்கு இன்பமே. - இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு இன்பமே; (அடிகள் - கடவுள்);


9)

அரவின் மேல்துயில் அச்சுதன் நான்முகன்

பரவ நின்ற பரஞ்சுட ரைக்கொன்றை

குரவம் சூடிய கொண்டீச் சரவனை

விரவும் அன்பர்தம் வெவ்வினை வீடுமே.


அரவின்மேல் துயில் அச்சுதன் நான்முகன் பரவ நின்ற பரஞ்சுடரைக் - பாம்பின்மேல் பள்ளிகொள்ளும் திருமாலும் பிரமனும் (அடிமுடி தேடிப்) போற்றுமாறு ஓங்கிய மேலான ஜோதியை; (பரவுதல் - துதித்தல்);

கொன்றை குரவம் சூடிய - கொன்றைமலரையும் குராமலரையும் சூடிய;

கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

விரவும் அன்பர்தம் வெவ்வினை வீடுமே - அடையும் பக்தர்களது கொடியவினை அழியும்; (விரவுதல் - அன்பு கலந்து ஒன்றாதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.94.5 - "பரவுவாரையும் உடையார் ... விரவுவாரையும் உடையார்");


10)

அல்லி ருக்கும் அகத்தினர் பொய்ம்மொழி

புல்லர் புன்னெறி அல்லற் புகுத்துமால்

கொல்லை ஏற்றனைக் கொண்டீச் சரவனைச்

சொல்ல வல்லவர் தொல்வினை தீருமே.


அல் இருக்கும் அகத்தினர் - வஞ்சமும் அறியாமையும் நிறைந்த மனத்தை உடையவர்கள்; (அல் - இருள்; அறியாமை; மயக்கம்); (அகம் - மனம்);

பொய்ம்மொழி புல்லர் புன்னெறி - பொய்களையே உரைக்கும் கீழோர்களது சிறுநெறிகள்;

அல்லல் புகுத்துமால் - துன்பத்தில் சேர்க்கும்; (அல்லல் - துன்பம்); (ஆல் - அசைச்சொல்);

கொல்லை ஏற்றனைக் - இடபவாகனனை; (கொல்லை ஏறு - 1. "கொல்லேறு" என்பது ஐகாரச் சாரியை பெற்று , "கொல்லை ஏறு" என நின்றது. 2. கொல்லை - முல்லைநிலக்காடு; முல்லை நிலத்துக்குரிய இடபம். முல்லைக்குத் திருமால் தெய்வமாதலால் திருமாலை ஏறாக உடையவன் என்றும் அமையும்);

கொண்டீச்சரவனைச் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

சொல்ல வல்லவர் தொல்வினை தீருமே - துதிப்பவர்களது பழவினைகள் தீரும்;


11)

ஓட்டை ஏந்தி உழலும் ஒருவனை

நாட்டம் மூன்றுடை யானை நகையினாற்

கோட்டை மூன்றெரி கொண்டீச் சரவனைப்

பாட்டி னால்தொழு வார்வினை பாறுமே.


ஓட்டை ஏந்தி உழலும் ஒருவனை - பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சைக்குத் திரியும் ஒப்பற்றவனை;

நாட்டம் மூன்று உடையானை - முக்கண்ணனை; (நாட்டம் - கண்);

நகையினால் கோட்டை மூன்று எரி - சிரிப்பினால் முப்புரங்களை எரித்த; (நகை - சிரிப்பு);

கொண்டீச்சரவனைப் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

பாட்டினால் தொழுவார் வினை பாறுமே - துதிகள் பாடி வழிபடுவார்களது வினைகள் அழியும்; (பாறுதல் - அழிதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.57.5 - "வேற்காடு பாட்டினாற் பணிந்தேத்திட வல்லவர் ஓட்டினார் வினை ஒல்லையே");


வி. சுப்பிரமணியன்

----------- --------------

Monday, August 23, 2021

P.265 - கன்றாப்பூர் - தண்ணாரும் புனல்தங்கும்

2014-12-28

P.265 - கன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர்)

–--------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")


1)

தண்ணாரும் புனல்தங்கும் சடையானைத் தடவரையன்

பெண்ணாரும் மேனியனைப் பிழைசெய்த மதனையெரி

கண்ணாரும் நெற்றியனைக் கன்றாப்பூர் நடுதறியைப்

பண்ணாரும் தமிழ்பாடிப் பணிவார்க்குப் பயமிலையே.


தண் ஆரும் புனல் தங்கும் சடையானைத் - குளிர்ச்சி பொருந்திய கங்கை தங்கிய சடையை உடையவனை; (சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "திருப்புன்கூர்க் கங்கை தங்கு சடையார் அவர்போலும்");

தடவரையன் பெண் ஆரும் மேனியனைப் - மலைமகளை ஒரு பாகமாக உடையவனை; (தடவரை - பெரிய மலை);

பிழை செய்த மதனை எரி கண் ஆரும் நெற்றியனைக் - குற்றம் செய்த மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணனை;

கன்றாப்பூர் நடுதறியைப் - கன்றாப்பூரில் உறைகின்ற நடுதறியப்பனை; (* நடுதறியப்பன் - கன்றாப்பூரில் ஈசன் திருநாமம்);

பண் ஆரும் தமிழ் பாடிப் பணிவார்க்குப் பயம் இலையே - இசை பொருந்திய தமிழ்ப்பாமாலைகள் பாடி வழிபடும் பக்தர்களுக்கு அவன் அபயம் அளிப்பான்;


2)

மினலேந்து முகிலனைய மெல்லிடையாள் பங்கினனை

அனலேந்திக் கணங்களிசை ஆர்க்கநடம் ஆடிதனைக்

கனலேந்து கையானைக் கன்றாப்பூர் நடுதறியைப்

புனலேந்து சடையானைப் புகழ்வார்க்குத் துயரிலையே.


மினல் ஏந்து முகில் அனைய மெல்லிடையாள் பங்கினனை - மின்னலைத் தாங்கும் மேகம் போல் நிறமும் மெல்லிய இடையும் உடைய உமையம்மையை ஒரு பங்காக உடையவனை; (மினல் - மின்னல் - இடைக்குறை);

அனல் ஏந்திக் கணங்கள் இசை ஆர்க்க நடம் ஆடிதனைக் - கொள்ளித்தீயை ஏந்திப் பூதகணங்கள் இசை பாடக் கூத்து ஆடுபவனை; (ஆர்க்க - ஒலிக்க); (ஆடி - ஆடுபவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.98.7 - "பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார் தீயுகந்தாடல்");

கனல் ஏந்து கையானைக் - கையில் நெருப்பை ஏந்தியவனை;

கன்றாப்பூர் நடுதறியைப் - கன்றாப்பூரில் உறைகின்ற நடுதறியப்பனை;

புனல் ஏந்து சடையானைப் புகழ்வார்க்குத் துயர் இலையே - கங்கையைச் சடையில் தரித்தவனைத் துதிக்கும் பக்தர்களுக்குத் துயரம் இல்லை;


3)

மறைநாலின் பொருளானை வார்சடைமேல் வளர்கின்ற

பிறையானைப் பிறவாத பெருமானை நஞ்சுண்டு

கறையாரும் மிடற்றானைக் கன்றாப்பூர் நடுதறியை

மறவாது தினமேத்த வல்லார்கள் நல்லாரே.


மறைநாலின் பொருளானை - நால்வேதப்பொருள் ஆனவனை;

வார்சடைமேல் வளர்கின்ற பிறையானைப் - நீள்சடையின்மீது வரும் பிறையைச் சூடியவனை; (வார்தல் - நீள்தல்); (பெரியபுராணம் - 12.29.220 - "சென்னி வளர்வெண் பிறையணிந்த சிவனார்")

பிறவாத பெருமானை - பிறப்பு இல்லாத கடவுளை;

நஞ்சு உண்டு கறை ஆரும் மிடற்றானைக் - ஆலகாலத்தை உண்டு கரிய நிறத்தை ஏற்ற கண்டத்தை உடையவனை; (மிடறு - கண்டம்);

கன்றாப்பூர் நடுதறியை - திருக்கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;

மறவாது தினம் ஏத்த வல்லார்கள் நல்லாரே - தினமும் எண்ணித் துதிப்பவர்கள் நல்லவரே. (அப்பர் தேவாரம் - 6.61.1 - "வைகல் மறவாது வாழ்த்தி யேத்தி");


4)

அண்டத்துக் கிப்பாலாய் அப்பாலும் ஆயவனை

முண்டத்தில் நீற்றானை முந்நீரின் நஞ்சத்தைக்

கண்டத்தில் ஏற்றானைக் கன்றாப்பூர் நடுதறியைக்

கண்டத்த அருளென்று கைதொழுவார் கவலாரே.


அண்டத்துக்கு இப்பாலாய் அப்பாலும் ஆயவனை - இப்பிரபஞ்சத்தின் உள்ளும் புறமும் இருப்பவனை; (அப்பர் தேவாரம் - 6.4.3 - "அண்டத்துக்கு அப்பாலாய் இப்பாலானே அவனாகில் அதிகை வீரட்டனாமே");

முண்டத்தில் நீற்றானை - நெற்றியில் திருநீற்றைப் பூசியவனை; (முண்டம் - நெற்றி);

முந்நீரின் நஞ்சத்தைக் கண்டத்தில் ஏற்றானைக் - கடல்விஷத்தைக் கண்டத்தில் அணிந்தவனை; (முந்நீர் - கடல்);

கன்றாப்பூர் நடுதறியைக் கண்டு "அத்த அருள்" என்று கைதொழுவார் கவலாரே - திருக்கன்றாப்பூரில் நடுதறியப்பனைத் தரிசித்துத், "தந்தையே அருள்வாயாக" என்று கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்குக் கவலை இல்லை; (அத்தன் - தந்தை); (கவல்தல் - மனம்வருந்துதல்; கவலார் - கவலைப்படார்; மனம்வருந்தார்);


5)

பொங்கரவைத் தாராகப் புனைந்தானைப் போர்செய்த

வெங்கரியின் உரிபோர்த்த விகிர்தனைவெண் திரைமல்கு

கங்கையடை சடையானைக் கன்றாப்பூர் நடுதறியை

மங்கையிடம் மகிழ்வானை வாழ்த்தஅறும் வல்வினையே.


பொங்கு-அரவைத் தாராகப் புனைந்தானைப் - சீறும் பாம்பை மாலையாக அணீந்தவனை; (தார் - மாலை);

போர்செய்த வெங்கரியின் உரி போர்த்த விகிர்தனை - போரிட்ட கொடிய யானையின் தோலைப் போர்த்த மாறுபட்ட செயலினனை; (கரி - யானை); (விகிர்தன் - மாறுபட்ட செயலினன்);

வெண்-திரை மல்கு கங்கை அடை சடையானைக் - வெண்மையான அலை மிகுந்த கங்கையை அடைத்த சடையை உடையவனை; (அப்பர் தேவாரம் - 4.111.9 - "வெண்டிரைக் கங்கை விகிர்தா என் விண்ணப்பம்");

கன்றாப்பூர் நடுதறியை - திருக்கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;

மங்கை இடம் மகிழ்வானை - உமையை இடப்பாகமாக விரும்பியவனை;

வாழ்த்த அறும் வல்வினையே - வாழ்த்தி வழிபட்டால் வலிய வினைகள் தீரும்;


6)

பலதேவர் திரளாகப் பணிந்தேத்த அவர்க்கிரங்கிச்

சிலையாவோர் மலையேந்தித் திரிபுரங்கள் செற்றானைக்

கலையேந்து கையானைக் கன்றாப்பூர் நடுதறியை

மலர்தூவி வழிபடுவார் வல்வினைகள் மாயுமன்றே.


பல தேவர் திரளாகப் பணிந்து ஏத்த, அவர்க்கு இரங்கிச் சிலையா ஓர் மலை ஏந்தித் திரிபுரங்கள் செற்றானைக் - தேவரெல்லாம் கூடி வணங்கித் துதிக்க, அவர்களுக்கு இரங்கி, வில்லாக ஒப்பற்ற மேருமலையை ஏந்தி, முப்புரங்களை எரித்து அழித்தவனை; (சிலை - வில்); (ஓர் - ஒப்பற்ற); (செறுதல் - அழித்தல்);

கலை ஏந்து கையானைக் - கையில் மானை ஏந்தியவனை; (கலை - மான்);

கன்றாப்பூர் நடுதறியை - திருக்கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;

மலர் தூவி வழிபடுவார் வல்வினைகள் மாயுமன்றே - மலர்களைத் தூவி வழிபாடு செய்யும் பக்தர்களது வலிய வினையெல்லாம் அழியும்; (அப்பர் தேவாரம் - 4.39.4 - "வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயுமன்றே");


7)

ஏலமலர்க் குழலாளுக் கிடப்பாகம் ஈந்தானைச்

சீலமிகு பாலனிடம் சீற்றமொடு வந்தடைந்த

காலனுயிர் காலவுதை கன்றாப்பூர் நடுதறியை

நீலமணி மிடற்றானை நினையவினை நெருங்காவே.


ஏல-மலர்க்-குழலாளுக்கு இடப்பாகம் ஈந்தானைச் - மயிர்ச்சாந்து அணிந்த, நறுமலர்களைச் சூடிய கூந்தலையுடைய உமாதேவிக்கு தன் திருமேனியில் இடப்பாகத்தைத் தந்தவனை; (ஏலம் - மயிர்ச்சாந்து); (குழல் - கூந்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.107.3 - "ஏல மலர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளி");

சீல(ம்)மிகு பாலனிடம் சீற்றமொடு வந்தடைந்த காலன் உயிர் கால உதை - சிவபக்தியில் சிறந்த மார்க்கண்டேயரிடம் சீறி வந்தடைந்த காலன் தன் உயிரைக் கக்குமாறு அவனை உதைத்த; (கால்தல் - கக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.31.4 - "காலனுயிர் காலவொரு காலால் கடந்தவன்");

கன்றாப்பூர் நடுதறியை - கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;

நீலமணி மிடற்றானை - நீலகண்டனை;

நினைய வினை நெருங்காவே - மறவாமல் எண்ணி வணங்கும் பக்தர்களை வினைகள் நெருங்கமாட்டா; (சம்பந்தர் தேவாரம் - 1.116.1 - "நாம் அடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்");


8)

பொல்லாத இராவணனைப் பொருப்பின்கீழ் நசுக்கியருள்

வல்லானை நால்வர்க்கு மறைப்பொருளை விரித்துரைக்கக்

கல்லாலின் புடையமர்ந்த கன்றாப்பூர் நடுதறியைச்

சொல்லாலும் செயலாலும் தொழுவார்க்குத் துயரிலையே.


பொல்லாத இராவணனைப் பொருப்பின்கீழ் நசுக்கியருள் வல்லானை - கொடியவனான இராவணனைக் கயிலைமலையின் அடியில் நசுக்கியருளிய, ஆற்றல் உடையவனை; (பொருப்பு - மலை); (வல்லான் - சர்வவல்லமை உடையவன்);

நால்வர்க்கு மறைப்பொருளை விரித்து-உரைக்கக் கல்லாலின் புடை அமர்ந்த - சனகாதியர் நால்வர்க்கு வேதத்தின் பொருளை உபதேசிக்கக் கல்லாலமரத்தின்கீழ் இருந்த;

கன்றாப்பூர் நடுதறியை - கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;

சொல்லாலும் செயலாலும் தொழுவார்க்குத் துயர் இலையே - மனம், வாக்கு, காயம் இவை மூன்றாலும் வழிபடுபவர்களுக்குத் துயரம் இல்லை; (மனம் என்பது குறிப்பால் பெறப்பெற்றது);


9)

படந்திகழும் பாம்பணையான் பன்றியுருக் கொண்டுநிலம்

இடந்துசென்றும் அயன்விசும்பில் ஏறியும்கா ணாவண்ணம்

கடந்துநின்ற சோதியனைக் கன்றாப்பூர் நடுதறியை

மடந்தையொன்று மேனியனை வாழ்த்தஅறும் வல்வினையே.


படம் திகழும் பாம்பு-அணையான் பன்றி உருக்கொண்டு நிலம் இடந்துசென்றும் - படம் உடைய பாம்பைப் படுக்கையாக உடைய திருமால் ஒரு பன்றி உருவில் நிலத்தை அகழ்ந்துசென்றும்; (அணை - படுக்கை); (இடத்தல் - தோண்டுதல்);

அயன் விசும்பில் ஏறியும் - பிரமன் வானில் பறந்து உயர்ந்தும்; (விசும்பு - ஆகாயம்);

காணாவண்ணம் கடந்து நின்ற சோதியனைக் - அவர்களால் அடைய இயலாதபடி எல்லையின்றி நின்ற ஒளிப்பிழம்பை;

கன்றாப்பூர் நடுதறியை - கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;

மடந்தை ஒன்று மேனியனை - உமாதேவி ஒன்றுகின்ற திருமேனி உடையவனை; (ஒன்றுதல் - ஒன்றாகப் பொருந்துதல்);

வாழ்த்த அறும் வல்வினையே - வாழ்த்தினால் வலிய வினைகளெல்லாம் தீரும்;


10)

புதியவழி எனச்சொல்லிப் புன்னெறிகட் கழைக்கின்ற

மதியிலிகள் வஞ்சத்தில் மயங்கேன்மின் வார்சடைமேல்

கதிர்மதியம் புனைந்தானைக் கன்றாப்பூர் நடுதறியைப்

பதியையடி பணிகின்ற பத்தர்க்குப் பயமிலையே.


புதிய வழி எனச் சொல்லிப் புன்னெறிகட்கு அழைக்கின்ற மதியிலிகள் வஞ்சத்தில் மயங்கேன்மின் - புது மார்க்கம் என்று சொல்லிச் சிறுநெறிகளுக்குக் கூப்பிடுகின்ற அறிவீனர்களது வஞ்சத்தில் நீங்கள் மயங்கவேண்டா; (மயங்கேன்மின் - மயங்கேல்+மின்); (மின் - முன்னிலைப் பன்மை விகுதி);

வார்சடைமேல் கதிர்-மதியம் புனைந்தானைக் - னீள்சடைமேல் ஒளி திகழும் சந்திரனை அணிந்தவனை; (வார்தல் - நீள்தல்); (கதிர் - ஒளி; கிரணம்);

கன்றாப்பூர் நடுதறியை - கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;

பதியை அடி பணிகின்ற பத்தர்க்குப் பயம் இலையே - தலைவனான சிவபெருமானை வணங்கும் பக்தர்களுக்கு அவன் அபயம் அளிப்பான்;


11)

கவினாரும் பொழில்சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியை

அவிர்வேணி உடையானை அன்போடு தமிழ்பாடிச்

செவியாரச் சீர்கேட்கும் சிந்தையர்க்குப் புவிமீது

தவியாத நிலைதன்னைத் தந்தருள்வான் சங்கரனே.


கவின் ஆரும் பொழில் சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியை - அழகிய சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறைகின்ற நடுதறியப்பனை; (கவின் - அழகு);

அவிர்-வேணி உடையானை - பிரகாசிக்கும் சடை உடையவனை; (அவிர்தல் - பிரகாசித்தல்); (வேணி - சடை); (உடையான் - உடையவன்; சுவாமி);

அன்போடு தமிழ் பாடிச் - பக்தியோடு தமிழ்ப்-பாமாலைகளைப் பாடி;

செவியாரச் சீர் கேட்கும் சிந்தையர்க்குப் - காதார அவன் புகழைக் கேட்கின்ற மனம் உடையவர்களுக்கு;

புவிமீது தவியாத நிலைதன்னைத் தந்தருள்வான் சங்கரனே - இம்மண்மேல் தவிக்கின்ற நிலையை நீக்கிப், பிறவா நிலையைத் தந்து, சிவலோகம் அருள்வான் சங்கரனாகிய சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------