2015-01-04
P.268 - கோயில் (சிதம்பரம்)
-----------------------
(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")
1)
கட்டத் தொடர்தீரக் கையால் மலர்தூவி
இட்டத் தொடுநாளும் ஏத்திப் பணிகின்ற
சிட்டர்க் கருள்வானைச் சிற்றம் பல(ம்)மேய
நட்டப் பெருமானை நம்பித் தொழுவோமே.
கட்டத்-தொடர் தீரக், கையால் மலர் தூவி, இட்டத்தொடு நாளும் ஏத்திப் பணிகின்ற சிட்டர்க்கு அருள்வானைச் - துன்பத்தொடர் தீரக், கைகளால் பூக்களைத் தூவி, அன்போடு தினமும் துதித்து வணங்குகின்ற சிரேஷ்டர்களுக்கு அருள்பவனை; (கட்டத்தொடர் - கஷ்டத்தொடர்); (இட்டம் - விருப்பம்); (சிட்டர் - உயர்ந்தோர்);
சிற்றம்பல(ம்) மேய நட்டப் பெருமானை - சிற்றம்பலத்தில் உறையும் கூத்தப்பெருமானை; (நட்டம் - கூத்து);
நம்பித் தொழுவோமே - விரும்பி வழிபாடு செய்வோம்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);
2)
ஓடும் புனல்திங்கள் உரகம் அணிகொன்றை
சூடும் முடியானைச் சுண்ணப் பொடியானை
மாடு வளர்தில்லை மன்றில் திருநட்டம்
ஆடும் கழலானை அன்பால் தொழுவோமே.
ஓடும் புனல் திங்கள் உரகம் அணிகொன்றை சூடும் முடியானைச் - பாய்கின்ற கங்கைநதி, பிறை, பாம்பு, அழகிய கொன்றைமலர் இவற்றையெல்லாம் திருமுடிமேல் அணிந்தவனை; (உரகம் - பாம்பு); (அணி - அழகு);
சுண்ணப் பொடியானை - திருநீற்றைப் பூசியவனை; திருநீற்றையே நறுமணப் பொடியாகப் பூசிக் கொள்பவனை; (சுண்ணம் - வாசனைப்பொடி);
மாடு வளர் தில்லை மன்றில் திருநட்டம் ஆடும் கழலானை - செல்வம் உயர்கின்ற தில்லை அம்பலத்தில் கூத்தாடும் திருப்பாதனை; (மாடு - செல்வம்); (கழல் - கழல் அணிந்த திருவடி); (சம்பந்தர் தேவாரம் - 1.80.5 - "செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலமேய செல்வன்");
அன்பால் தொழுவோமே - அன்போடு வணங்குவோம்;
3)
முடிக்குத் தலைமாலை முளைவெண் மதிசூடி
வெடிக்கும் துடியேந்தி விண்ணின் றிழியாற்றைக்
குடிக்கும் சடையானைக் தில்லைக் குடியானை
நடிக்கும் பெருமானை நம்பித் தொழுவோமே.
முடிக்குத் தலைமாலை முளைவெண் மதிசூடி - தலைக்குத் தலைமாலையும் இளவெண்திங்களையும் அணிந்து;
வெடிக்கும் துடி ஏந்தி - வெடி போலப் பெருத்த ஓசையோடு அதிரும் உடுக்கையைக் கையில் ஏந்தி; (4.73.6 - "வெடிபடு தமருகம் கை தரித்ததோர் கோல");
விண்ணின்று இழி ஆற்றைக் குடிக்கும் சடையானைக் - வானிலிருந்து இறங்கிய கங்கையை உள்ளடக்கிய சடையை உடையவனை; (நின்று - ஐந்தாம்வேற்றுமை உருபு);
தில்லைக் குடியானை - தில்லையில் நீங்காது உறைபவனை; (குடி - உறைவிடம்);
நடிக்கும் பெருமானை - நடராஜனை;
நம்பித் தொழுவோமே - விரும்பி வழிபாடு செய்வோம்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);
4)
பார்த்தற் கருள்செய்யப் பன்றிப் பின்சென்ற
மூர்த்தம் உடையானை முடிவில் புகழானைத்
தீர்த்தச் சடையானைச் சிற்றம் பல(ம்)மேய
கூத்தப் பெருமானைக் கூறி மகிழ்வோமே.
பார்த்தற்கு அருள்செய்யப் பன்றிப்பின் சென்ற மூர்த்தம் உடையானை - அர்ஜுனனுக்கு அருள்செய்ய ஒரு பன்றியைத் துரத்திச் சென்ற வேடன் கோலம் உடையவனை; (பார்த்தற்கு - பார்த்தனுக்கு); (மூர்த்தம் - வடிவம்); (கிராதர் - வேட்டுவ வடிவம் - மாஹேஸ்வர மூர்த்தங்களுள் ஒன்று);
முடிவு இல் புகழானைத் - என்றும் இருக்கும் (/ எல்லையற்ற) புகழ் உடையவனை;
தீர்த்தச் சடையானைச் - கங்கைச்சடையானை; (தீர்த்தம் - நீர்; தூய்மை);
சிற்றம்பல(ம்) மேய கூத்தப் பெருமானைக் - சிற்றம்பலத்தில் உறையும் கூத்தனை;
கூறி மகிழ்வோமே - போற்றிப் பாடி மகிழ்வோம்;
5)
சனித்துத் தரைமீது தவிக்கும் நிலைமாற்றி
இனித்தொல் வினைநண்ணா இன்ப நிலைநல்கும்
தனித்தன் மையினானைக் கனக சபைதன்னில்
குனித்தல் உடையானைக் கூறி மகிழ்வோமே.
சனித்துத் தரைமீது தவிக்கும் நிலை மாற்றி - பிறந்து மண்ணுலகில் வாடும் துன்பநிலையை நீக்கி; (சனித்தல் - ஜனித்தல் - பிறத்தல்);
இனித் தொல்வினை நண்ணா இன்பநிலை நல்கும் - இனிமேல் பழவினைகள் அணுகாத பேரின்பத்தை வழங்கும்; (நண்ணுதல் - நெருங்குதல்); (நல்குதல் - அளித்தல்);
தனித்தன்மையினானைக் - ஒப்பற்ற தன்மை உடையவனை; (தனி - ஒப்பற்ற);
கனகசபைதன்னில் குனித்தல் உடையானைக் - பொன்னம்பலத்தில் ஆடும் கூத்தனை; (கனகசபை - பொன்னம்பலம்); (குனித்தல் - ஆடுதல்);
கூறி மகிழ்வோமே - போற்றிப் பாடி மகிழ்வோம்;
6)
தலையின் மிசைநாகம் தண்வெண் மதியோடு
குலவும் பெருமானைக் கூடார் புரமெய்த
சிலைவில் உடையானைச் சிற்றம் பல(ம்)மேய
அலகில் நடத்தானை அன்பால் தொழுவோமே.
தலையின்மிசை நாகம் தண்-வெண்-மதியோடு குலவும் பெருமானை - திருமுடிமேல் பாம்பு குளிர்ந்த வெண்திங்களோடு விளங்குகின்ற பெருமானை; (குலவுதல் - விளங்குதல்; மகிழ்தல்; உலாவுதல்);
கூடார் புரம் எய்த சிலைவில் உடையானை - பகைவர்களது முப்புரங்கள்மேல் கணையைச் செலுத்தி அழித்த, மலையை வில்லாக உடையவனை; (கூடார் - பகைவர்); (சிலை - மலை);
சிற்றம்பலம் மேய அலகு இல் நடத்தானை - தில்லையில் சிற்றம்பலத்தில் உறைகின்ற, அளவில்லாத திருக்கூத்து ஆடுபவனை; (அலகு - அளவு); (நடம் - கூத்து);
அன்பால் தொழுவோமே - பக்தியோடு வழிபடுவோம்.
7)
பருக்கைம் மதமாவைப் பற்றி உரிசெய்தான்
இருக்கை மொழிநாவன் ஏத்தும் அடியார்வான்
இருக்க அருள்செய்து தில்லை எழில்மன்றில்
நிருத்தம் புரிவானை நித்தம் நினைவோமே.
பருக்-கைம்-மதமாப் பற்றி உரிசெய்தான் - பருத்த துதிக்கையை உடைய ஆண்யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தவன்; (மதமா - ஆண்யானை);
இருக்கை மொழி நாவன் - வேதத்தை மொழிந்தவன்; (இருக்கு - ரிக்வேதம் - வேதம்);
ஏத்தும் அடியார் வான் இருக்க அருள்செய்து - துதிக்கும் பக்தர்களுக்குச் சிவலோக-வாழ்வை அருளி;
தில்லை எழில்மன்றில் நிருத்தம் புரிவானை - அழகிய தில்லை அம்பலத்தில் ஆடுபவனை; (நிருத்தம் - ஆடல்);
நித்தம் நினைவோமே - எப்பொழுதும் நினைப்போம்; (நித்தம் - அனவரதம்);
8)
தடந்தோள் வலியுன்னித் தருக்கிக் கயிலாயம்
இடந்தான் முடிபத்தை இறுத்த விரலானை
மடந்தை பிரியானைத் தில்லை மணிமன்றில்
நடஞ்செய் பெருமானை நம்பித் தொழுவோமே.
தடம்-தோள் வலி உன்னித் தருக்கி - தன் பெரிய புஜங்களின் வலிமையை எண்ணிக் கருவத்தோடு;
கயிலாயம் இடந்தான் முடி பத்தை இறுத்த விரலானை - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துத் தலைகளையும் (ஊன்றி நசுக்கி)அழித்த திருப்பாதவிரல் உடையவனை;
மடந்தை பிரியானைத் - உமைபங்கனை; (மடந்தை - பெண்);
தில்லை மணிமன்றில் நடம் செய் பெருமானை - அழகிய தில்லை அம்பலத்தில் ஆடுபவனை; (மணி - அழகு);
நம்பித் தொழுவோமே - விரும்பி வணங்குவோம்;
9)
பன்றி அடிநேடப் பறவை முடிநேட
அன்று வரையின்றி நின்ற அழலானைத்
துன்றி அடியார்கள் துதிக்க அணிதில்லை
மன்றில் நடிகோனை வாழ்த்தி மகிழ்வோமே.
பன்றி அடி நேடப், பறவை முடி நேட, அன்று வரை இன்றி நின்ற அழலானைத் - பன்றி (திருமால்) திருவடியைத் தேட, அன்னப்பறவை (பிரமன்) திருமுடியைத் தேட, அன்று எல்லையின்றி ஓங்கிய ஜோதியை; (பன்றி - பன்றி உருக்கொண்ட திருமால்); (பறவை - அன்ன உருக்கொண்ட பிரமன்);(நேடுதல் - தேடுதல்); (வரை - எல்லை; அளவு); (அழலான் - அழல் வடிவினன்; அழல் - நெருப்பு);
துன்றி அடியார்கள் துதிக்க அணி-தில்லை மன்றில் நடி-கோனை - நெருங்கி அடியார்கள் துதிக்க அழகிய தில்லை அம்பலத்தில் கூத்தாடும் அரசனை; (துன்றுதல் - நெருங்குதல்); (நடி கோன் - நடிக்கின்ற தலைவன் - நடராஜன்);
வாழ்த்தி மகிழ்வோமே - வாழ்த்தி இன்புறுவோம்;
10)
வருத்தம் மிகவாக்கும் வழிகள் தமில்நின்று
பொருத்தம் இலசொல்லும் பொய்யர்க் கருளானைத்
திருத்தம் உடையானைச் சிற்றம் பல(ம்)மேய
நிருத்தப் பெருமானை நித்தம் நினைவோமே.
வருத்தம் மிக ஆக்கும் வழிகள்-தமில் நின்று, பொருத்தம் இல சொல்லும் பொய்யர்க்கு அருளானைத் - மிகுந்த துன்பம் தரும் நெறிகளில் ஒழுகித், தகாத வார்த்தைகள் பேசும் பொய்யர்களுக்கு அருளாதவனை; (வழிகள்தமில் - வழிகள்தம்மில் - வழிகளில்; நெறிகளில்); (நின்று - நின்றுகொண்டு; ஒழுகி); ("வருத்தம் மிக ஆக்கும் பொய்யர்; வழிகள்தமில் நின்று, பொருத்தம் இல சொல்லும் பொய்யர்" என்றும் இயைக்கலாம்);
திருத்தம் உடையானைச் - புனிதனை / கங்காதரனை; (திருத்தம் - புனிதம்; தீர்த்தம்);
சிற்றம்பல(ம்) மேய நிருத்தப் பெருமானை - சிற்றம்பலத்தில் உறைகின்ற கூத்தப்பெருமானை; (நிருத்தம் - நடனம்);
நித்தம் நினைவோமே - எப்பொழுதும் தியானிப்போம்;
11)
மட்டு மலிபூவார் மாலை தமிழ்மாலை
இட்டு மனமார ஏத்தின் வினையென்ற
கட்டைக் களைவானைக் கனக சபைமேய
நட்டப் பெருமானை நம்பித் தொழுவோமே.
மட்டு மலி பூ ஆர் மாலை - தேனும் வாசனையும் மிகுந்த பூக்கள் நிறைந்த மாலை; (மட்டு - தேன்; வாசனை); (மலிதல் - மிகுதல்; நிறைதல்); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);
தமிழ்மாலை - தமிழ்ப் பாமாலை;
மட்டு மலி பூ ஆர் மாலை தமிழ்மாலை இட்டு மனமார ஏத்தின் - வாசப்-பூமாலையும் மணம் கமழும் பாமாலையும் சூட்டி மனம் மகிழ்ந்து துதித்தால்; (மட்டு - வாசனை; தேன்); ("மட்டு மலி" இந்த அடைமொழியைப் பூமாலைக்கும் தமிழ்மாலைக்கும் தனித்தனியே இயைக்கலாம்); (இடுதல் - அணிவித்தல்); (ஆர்தல் - நிறைதல்);
வினை என்ற கட்டைக் களைவானைக் - பழவினைப் பந்தத்தைத் தீர்ப்பவனை;
கனகசபை மேய நட்டப் பெருமானை - பொன்னம்பலத்தில் உறைகின்ற நடராஜனை; (நட்டம் - கூத்து);
நம்பித் தொழுவோமே - விரும்பி வணங்குவோம்; (நம்புதல் - விரும்புதல்);
வி. சுப்பிரமணியன்
-------------------
No comments:
Post a Comment