Friday, August 27, 2021

P.269 - வேட்களம் (திருவேட்களம்) - இசைமலிந்த இணையடியை

2015-01-19

P.269 - வேட்களம் (திருவேட்களம்)

-----------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")


1)

இசைமலிந்த இணையடியை ஏத்தியதிங் களைச்சடையின்

மிசையணிந்த சிவபெருமான் விரைமலர்த்தாள் மனத்திருத்தித்

திசையனைத்தும் இருள்சூழ்ந்த செறிகானில் தவம்செய்த

விசயனுக்குப் படையீந்த வேடனிடம் வேட்களமே.


இசை மலிந்த இணையடியை ஏத்திய திங்களைச் சடையின்மிசைணிந்த சிவபெருமான் - புகழ் மிக்க இருதிருவடிகளைத் துதித்த சந்திரனைச் சடையின்மேல் சூடிய சிவபெருமான்; (இசை - புகழ்); (மிசை - மேல்);

விரைமலர்த்தாள் மனத்து இருத்தித் - வாசம் மிக்க மலர் போன்ற திருவடியை மனத்தில் வைத்து; (விரை - வாசனை);

திசை அனைத்தும் இருள் சூழ்ந்த செறி-கானில் தவம் செய்த - எல்லாத் திசைகளிலும் இருள் சூழும் அடர்ந்த காட்டில் தவம் செய்த; (செறிதல் - அடர்தல்); (கான் - காடு);

விசயனுக்குப் படை ஈந்த வேடன் இடம் வேட்களமே - அர்ஜுனனுக்குப் பாசுபாதாஸ்திரத்தை அருளிய வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்; (விசயன் - விஜயன்); (படை - அஸ்திரம்; ஆயுதம்); (வேடன் - வேட்டுவன்; வேடதாரி);


2)

அல்லேந்து கண்டத்தன் அடியிணையை மறவாது

சொல்லேந்து தமிழ்பாடித் துதிப்போர்க்குத் துணையாவான்

மல்லேந்து திரள்தோளன் விசயற்கு வரம்நல்க

வில்லேந்திக் கானிற்செல் வேடனிடம் வேட்களமே.


அல் ஏந்து கண்டத்தன் அடியிணையை மறவாது சொல் ஏந்து தமிழ் பாடித் துதிப்போர்க்குத் துணை ஆவான் - இருள் தங்கும் கண்டத்தை உடையவனது இருதிருவடிகளை மறத்தல் இன்றி என்றும் சிறந்த சொற்களைத் தாங்கும் பாமாலைகளைப் பாடி ஏத்தும் அன்பர்களைக் காக்கும் துணைவன் ஆனவன்; (அல் - இருள்);

மல் ஏந்து திரள்-தோளன் விசயற்கு வரம் நல்க - வலிமை மிக்க திரண்ட தோள்களை உடையவனான அர்ஜுனனுக்கு வரம் அருள; (மல் - வலிமை);

வில் ஏந்திக் கானில் செல் வேடன் இடம் வேட்களமே - வில்லை ஏந்திக் காட்டில் சென்ற வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்;


3)

செங்கோலன் மனுவுக்குத் திருவருள்செய் ஆரூரன்

கங்காளன் கரிகாடன் கலவமயில் மடமாது

பங்காளன் தவஞ்செய்த பார்த்தனுக்குப் படைநல்க

வெங்கானிற் கேழலெய்த வேடனிடம் வேட்களமே.


செங்கோலன் மனுவுக்குத் திருவருள்செய் ஆரூரன் - நீதி தவறாது ஆட்சி செய்த மனுநீதிச் சோழன்ணுக்கு அருள்செய்த திருவாரூர்ப் பெருமான்;

கங்காளன் - எலும்பை அணிந்தவன்;

கரிகாடன் - சுடுகாட்டில் இருப்பவன்; (கரிகாடு - சுடுகாடு);

கலவமயில் மடமாது பங்காளன் - ஏழை பங்காளன் - அர்த்தநாரீஸ்வரன்; (கலவமயில் - கலாபமயில் - தோகையுடைய மயில்); (மடமாது - அழகிய பெண்);

தவம் செய்த பார்த்தனுக்குப் படை நல்க - தவம் செய்த அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருள;

வெங்கானில் கேழல் எய்த வேடன் இடம் வேட்களமே - கொடிய காட்டில் பன்றியை அம்பால் எய்த வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்; (கேழல் - பன்றி);


4)

ஆண்டுபதி னாறாயிற்(று) என்றடைந்த அடற்கூற்றே

மாண்டுவிட உதைத்தருளி மார்க்கண்டர் உயிர்காத்தான்

பாண்டுமகன் பார்த்தனுக்குப் பரிந்தன்று பன்றியெய்து

வேண்டுபடை தந்தருளும் வேடனிடம் வேட்களமே.


ஆண்டு பதினாறு ஆயிற்று என்று அடைந்த அடல்-கூற்றே மாண்டுவிட உதைத்தருளி மார்க்கண்டர் உயிர் காத்தான் - மார்க்கண்டேயருக்குப் பதினாறு வயது ஆயிற்று என்று அவரைக் கொல்ல நெருங்கிய வலிய எமனே மாளும்படி எமனை உதைத்து மார்க்கண்டேயர் உயிரைக் காத்தவன்; (அடல் - வலிமை; கொலை); (கூற்று - இயமன்);

பாண்டுமகன் பார்த்தனுக்குப் பரிந்து - பாண்டுவின் மகனாகிய அர்ஜுனனுக்கு இரங்கி;

அன்று பன்றி எய்து, வேண்டு-படை தந்தருளும் வேடன் இடம் வேட்களமே - முன்பு ஒரு பன்றியை அம்பால் எய்து, அர்ஜுனன் விரும்பிய பாசுபதாஸ்திரத்தை அருளிய வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்;


5)

பண்ணமரும் தமிழ்பாடிப் பரவடியார் தமக்குவினை

நண்ணலிலா நன்னிலையை நல்கியருள் நம்பெருமான்

கண்ணமரும் நெற்றியினான் கானகத்தே கருங்குழலி

வெண்ணகையா ளோடடைந்த வேடனிடம் வேட்களமே.


பண் அமரும் தமிழ் பாடிப் பரவு அடியார் தமக்கு - இசையோடு பாடும் தேவாரம் பாடித் துதிக்கும் பக்தர்களுக்கு;

வினை நண்ணல் இலா நன்னிலை நல்கியருள் நம் பெருமான் - வினைகள் நெருங்காத நற்கதியைக் கொடுக்கும் நம் பெருமான்;

கண்மரும் நெற்றியினான் - நெற்றிக்கண்ணன்;

கானகத்தே கருங்குழலி வெண்ணகையாளோடு அடைந்த வேடன் இடம் வேட்களமே - கரிய குழலும் வெண்பற்களும் உடைய உமாதேவியுடன் வேடன் கோலத்தில் காட்டில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்; (கானகம் - காடு); (குழல் - கூந்தல்);


6)

வஞ்சியவள் வெருவுறவே வந்தெதிர்ந்த மலைபோன்ற

குஞ்சரத்தை உரிசெய்து போர்வையெனக் கொண்டுகந்தான்

அஞ்செழுத்தே நினைந்திருந்த அருச்சுனனுக் கருள்செய்ய

வெஞ்சரத்தாற் கேழலெய்த வேடனிடம் வேட்களமே.


வஞ்சியவள் வெருவுறவே வந்து எதிர்ந்த மலை போன்ற குஞ்சரத்தை உரிசெய்து போர்வைனக் கொண்டு-கந்தான் - உமை அஞ்ச, வந்து போர்செய்த மலை போன்ற யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்தவன்; (வஞ்சி - பெண்); (வெரு - அச்சம்); (எதிர்தல் - எதிர்த்தல்); (குஞ்சரம் - யானை);

அஞ்செழுத்தே நினைந்திருந்த அருச்சுனனுக்கு அருள்செய்ய - திருவைந்தெழுத்தையே தியானித்துத் தவம் செய்த அர்ஜுனனுக்கு அருள்புரிய;

வெஞ்சரத்தால் கேழல் எய்த வேடன் இடம் வேட்களமே - கொடிய அம்பால் பன்றியை எய்த வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்; (சரம் - அம்பு); (கேழல் - பன்றி);


7)

வாரத்தால் தொழுவார்தம் வல்வினைகள் எல்லாமே

தீரத்தான் அருள்புரியும் சிவபெருமான் மார்பிலரா

ஆரத்தான் அடர்கானில் அருச்சுனனோ டமர்செய்த

வீரத்தான் ஈர(ம்)மிகு வேடனிடம் வேட்களமே.


வாரத்தால் தொழுவார்தம் வல்வினைகள் எல்லாமே தீரத்தான் அருள்புரியும் சிவபெருமான் - அன்போடு தொழும் பக்தர்களது வலிய வினையெல்லாம் தீரவே அருளும் சிவபெருமான்; (வாரம் - அன்பு);

மார்பில் அரா-ஆரத்தான் - மார்பில் பாம்பு-மாலை அணிந்தவன்; (அரா - பாம்பு); (ஆரம் - மாலை);

அடர்-கானில் அருச்சுனனோடு அமர்செய்த வீரத்தான் - அடர்ந்த காட்டில் அர்ஜுனனோடு போரிட்ட வீரம் மிக்கவன்; (அமர்செய்தல் - போரிடுதல்); (சுந்தரர் தேவாரம் 7.66.4 - "வீரத்தால் ஒரு வேடுவனாகி விசைத்தொர் கேழலைத் துரந்துசென் றணைந்து");

ஈரம் மிகு வேடன் இடம் வேட்களமே - தயை மிக்க வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்; (ஈரம் - தயை);


8)

குன்றையெறி இலங்கைக்கோன் கோலமுடி பத்துமிற

அன்றுவிரல் ஒன்றூன்றி ஆரருள்கள் செய்தபிரான்

பன்றியதன் பின்சென்று பார்த்தற்குப் பரிந்தபரன்

வென்றிவிடை ஒன்றுடைய வேடனிடம் வேட்களமே.


குன்றை எறி இலங்கைக்கோன் கோலமுடி பத்தும் இற - கயிலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனது அழகிய கிரீடம் அணிந்த பத்துத்தலைகளும் நசுங்கும்படி; (குன்று - கயிலைமலை); (கோலம் - அழகு);

அன்று விரல் ஒன்று ஊன்றி ஆரருள்கள் செய்த பிரான் - முன்பு திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கிப் பின் அவனுக்குப் பேரருள் செய்த பெருமான்; (ஆரருள்கள் - பேரருள்); (அப்பர் தேவாரம் - 4.57.10 - "உலப்பிலா விரலால் ஊன்றி ஒறுத்து அவற்கு அருள்கள் செய்து");

பன்றிஅதன்பின் சென்று பார்த்தற்குப் பரிந்த பரன் - பன்றிப்பின் போய் அர்ஜுனனுக்கு இரங்கி அருளிய பரமன்;

வென்றி-விடை ஒன்றுடைய வேடன் இடம் வேட்களமே - வெற்றியை உடைய இடபத்தை வாகனமாக உடைய, வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்; (வென்றி - வெற்றி);


9)

வளைகோடு திகழ்கேழல் வானிலுயர் அன்னமிவர்

தளர்வாகிக் கழல்போற்றத் தழலாகி நின்றபிரான்

தளையேதும் இலன்முன்னம் தனஞ்சயனோ டமர்செய்து

விளையாடிப் படையருள்செய் வேடனிடம் வேட்களமே.


வளை-கோடு திகழ் கேழல் - வளைந்த கொம்பு உடைய பன்றி - பன்றி வடிவில் சென்ற திருமால்; (கோடு - பன்றி, யானை இவற்றின் தந்தம்); (கேழல் - பன்றி);

வானில் உயர் அன்னம் - வானில் பறந்து சென்ற அன்னப்பறவை - அன்னவடிவில் சென்ற பிரமன்;

இவர் தளர்வாகிக் கழல்போற்றத் தழலாகி நின்ற பிரான் - இவ்விருவரும் அடிமுடி காணாமல் தளர்ந்து திருவடியை வணங்குமாறு ஜோதி வடிவில் ஓங்கிய தலைவன்;

தளை ஏதும் இலன் - மும்மலக்கட்டு இல்லாதவன்; (தளை - பந்தம்);

முன்னம் தனஞ்சயனோடு அமர்செய்து விளையாடி - முன்பு அர்ஜுனனோடு போரிட்டுத் திருவிளையாடல் புரிந்து; (அமர் - போர்);

படைருள்செய் வேடன் இடம் வேட்களமே - அர்ஜுனன் விரும்பிய பாசுபதாஸ்திரத்தை அருளிய வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்;


10)

வாட்டமறு மறைநெறியை மருவாத மதியீனர்

காட்டுவழி மதியேன்மின் கண்ணுதலான் கழல்மனத்தில்

நாட்டிவழி படுவார்க்கு நல்லவன்பாண் டவனுக்கு

வேட்டுவனாய்ச் சென்றருள்செய் வேடனிடம் வேட்களமே.


வாட்டம் அறு மறைநெறியை மருவாத - துன்பத்தைத் தீர்க்கின்ற வேதநெறியைப் பின்பற்றாத; (மருவுதல் - தழுவுதல்);

மதியீனர் காட்டுவழி மதியேன்மின் - அறிவற்றோர் காட்டுகின்ற நெறியை நீங்கள் மதிக்கவேண்டா; (காட்டுவழி - 1. காட்டுகின்ற வழி; 2. நல்வழி இருக்கக், காட்டின் வழியே செல்லும் ஆபத்தான வழி); (மதியேன்மின் - மதியேல்+மின் - எதிர்மறைப் பன்மை ஏவல் - மதியாதீர்);

கண்ணுதலான் கழல் மனத்தில் நாட்டி வழிபடுவார்க்கு நல்லவன் - நெற்றிக்கண்ணன் தன் திருவடியை மனத்தில் வைத்து வழிபடும் பக்தர்களுக்கு நன்மை செய்பவன்;

பாண்டவனுக்கு வேட்டுவனாய்ச் சென்று அருள்செய் வேடன் இடம் வேட்களமே - அர்ஜுனனுக்கு வேடனாகச் சென்று அருளிய கோலம் உடையவன் உறையும் தலம் திருவேட்களம்; (வேடன் - கோலம் உடையவன்);


11)

கரும்புதனை வளைத்தமர்செய் காமனைக்காய் கயிலாயன்

சுரும்புமுரல் கொன்றையொடு தூமதியும் புனைமுடியன்

பெரும்புகழே பேசியடி பேணுகின்ற அடியார்கள்

விரும்புவரம் தந்தருளும் வேடனிடம் வேட்களமே.


கரும்புதனை வளைத்து அமர்செய் காமனைக் காய்- கயிலாயன் - கரும்பை வில்லாக வளைத்துப் (பஞ்சபாணங்களை எய்து) போர்செய்யும் காமனை எரித்த கயிலைமலைநாதன்; (அமர் - போர்); (காய்தல் - கோபித்தல்; எரித்தல்);

சுரும்பு முரல் கொன்றையொடு தூ-மதியும் புனை முடியன் - வண்டுகள் ரீங்காரம் செய்யும் கொன்றைமலரையும் வெண்திங்களையும் முடிமேல் அணிந்தவன்; (சுரும்பு - வண்டு);

பெரும்-புகழே பேசி அடி பேணுகின்ற அடியார்கள் விரும்பு-வரம் தந்தருளும் வேடன் இடம் வேட்களமே - ஈசனது பெரிய புகழையே பேசித் திருவடியைப் போற்றும் பக்தர்கள் விரும்பிய வரங்களைத் தந்தருளும் கோலம் உடையவன் உறையும் தலம் திருவேட்களம்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment