Friday, July 8, 2022

T.142 - நின்றவூர் (திருநின்றவூர்) - மத்திடு சுரர்க்கு

2011-02-25

T.142 - நின்றவூர் (திருநின்றவூர்) - மத்திடு சுரர்க்கு

-----------------

(வண்ணவிருத்தம்;

தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன .. தந்ததான)


(Somewhat similar to the syllabic pattern - சுத்திய நரப்புடன் - திருப்புகழ் - சுவாமிமலை - but with 9 தத்ததன instead of 12 தத்ததன in the pattern)


மத்திடுசு ரர்க்கிடர்த விர்த்தருவி

.. டத்தினைம டுத்திருள்மி டற்றனறு

.. மத்தமல ரைச்சடையி னிற்புனையும் .. உம்பர்நாதன்

உத்தமியை முத்தனைய பற்றிகழு(ம்)

.. மட்டவிழ்ம லர்க்குழலி யைப்பிரியம்

.. உற்றவளை நச்சியிடம் வைத்தவிறை .. கங்கைசூடி

முத்தமிழின் நித்தமடி யைத்துதிசெய்

.. பத்தர்அவர் இப்புவியி னிப்பிறவில்

.. முத்திநிலை பெற்றிடவ ரத்தையளி .. அங்கணாளன்

கத்திமலை யைப்பெயர ரக்கனழ

.. ஒற்றைவிரல் வைத்தவன ரைக்கணொரு

.. கட்செவிய சைத்தவனி ருக்குமிட(ம்) .. நின்றவூரே.


பதம் பிரித்து:

மத்திடு சுரர்க்கு இடர் தவிர்த்து, அரு

.. விடத்தினை மடுத்து இருள்-மிடற்றன்; நறு

.. மத்த-மலரைச் சடையினிற் புனையும் உம்பர்-நாதன்;

உத்தமியை, முத்து அனைய பல்-திகழு(ம்)

.. மட்டு அவிழ் மலர்க்குழலியைப், பிரியம்

.. உற்றவளை, நச்சி இடம் வைத்த இறை; கங்கைசூடி;

முத்தமிழின் நித்தம் அடியைத் துதிசெய்

.. பத்தர்அவர் இப்-புவி இனிப் பிறவு-இல்

.. முத்திநிலை பெற்றிட வரத்தை அளி அங்கணாளன்;

கத்தி மலையைப் பெயர் அரக்கன் அழ

.. ஒற்றை-விரல் வைத்தவன்; அரைக்கண் ஒரு

.. கட்செவி அசைத்தவன் இருக்கும் இட(ம்) நின்றவூரே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

மத்திடு சுரர்க்கு இடர் தவிர்த்து, ருவிடத்தினை மடுத்து இருள்-மிடற்றன் - பாற்கடலைக் கடைந்த தேவர்களுக்குத் துன்பத்தைத் தீர்த்துக், கொடிய விஷத்தை உண்டு கறுத்த கண்டத்தன்; (மத்து இடுதல் - கடைதல்); (தவிர்த்தல் - நீக்குதல்); (மடுத்தல் - உண்ணுதல்);

நறுமத்த-மலரைச் சடையினிற் புனையும் உம்பர்-நாதன் - மணம் வீசும் ஊமத்த மலர்ரைச் சடையில் அணிந்த தேவர் தலைவன்;

உத்தமியை - உத்தமியை;

முத்து அனைய பல்-திகழு(ம்) மட்டு அவிழ் மலர்க்குழலியைப் - முத்துப் போன்ற பற்கள் உடையவளும், வாசம் கமழும் மலர்களை அணிந்த கூந்தலை உடையவளுமான உமாதேவியை; (மட்டு - தேன்; வாசனை);

பிரியம் உற்றவளை - அன்பு உடையவளை;

நச்சி இடம் வைத்த இறை - விரும்பித் திருமேனியில் இடப்பக்கம் பாகமாக வைத்த இறைவன்; (நச்சுதல் - விரும்புதல்);

கங்கை-சூடி - கங்காதரன்;

முத்தமிழின் நித்தம் அடியைத் துதிசெய் பத்தர்அவர் இப்-புவி இனிப் பிறவு-இல் முத்திநிலை பெற்றிட வரத்தை அளி அங்கணாளன் - முத்தமிழினால் நாள்தோறும் திருவடியைத் துதிக்கும் பக்தர்கள் இந்த நிலவுலகில் இனிமேல் பிறவி இல்லாத முக்திநிலை பெற வரம் அருளும் பெருங்கருணையாளன்; (முத்தமிழின் - முத்தமிழினால்); (அப்பர் தேவாரம் - 4.11.4 - "அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாம் உற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே"); (பிறவு - பிறவி); (சம்பந்தர் தேவாரம் - 1.110.1 - "பெருந்தகை பிறவினொ டிறவுமானான்" - பிறவு இறவு - பிறப்பு, இறப்பு. 'வு' விகுதிபெற்ற தொழிற்பெயர்); (அங்கணாளன் - பெருங்கருணையாளன்; கண்ணோட்டமுடையவன்);

கத்தி மலையைப் பெயர் அரக்கன் அழ ஒற்றை-விரல் வைத்தவன் - மிகவும் ஆரவாரம் செய்துகொண்டு கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அழுமாறு ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கியவன்;

அரைக்கண் ஒரு கட்செவி அசைத்தவன் - அரையில் ஒரு பாம்பைக் கட்டியவன்; (அரைக்கண் - அரையில்; கண் - ஏழாம்வேற்றுமை உருபு); (கட்செவி - பாம்பு); (அசைத்தல் - கட்டுதல்);

இருக்கும் இட(ம்) நின்றவூரே - அப்பெருமான் உறையும் தலம் திருநின்றவூர்.


வி. சுப்பிரமணியன்

----------- -----------

T.141 - நின்றவூர் (திருநின்றவூர்) - ஒற்றையென நிற்குமிறை

2011-02-24

T.141 - நின்றவூர் (திருநின்றவூர்) - ஒற்றையென நிற்குமிறை

-----------------

(வண்ணவிருத்தம்;

தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன .. தந்ததான)


(Somewhat similar to the syllabic pattern - சுத்திய நரப்புடன் - திருப்புகழ் - சுவாமிமலை - but with 9 தத்ததன instead of 12 தத்ததன in the pattern)


ஒற்றையென நிற்குமிறை அற்றவரின்

.. உற்றதுணை பொற்கொடியை ஒத்தவுமை

.. ஒட்டியுறை முக்கணன்வி டத்தையணி .. கண்டநேயன்

சுற்றுமெரி மிக்கெழநி ருத்தமிடு

.. சொக்கனிடு பிச்சைமகிழ் பிச்சனொரு

.. துக்கமிலன் நச்சரவன் நற்பெயரை .. என்றுமோதும்

நற்றவர கத்தளித னைக்கருதி

.. நச்சியவர் உச்சியுறை அத்தன்முன(ம்)

.. நக்குமதில் அட்டவன திச்சடையன் .. அண்டவாணன்

சிற்றிடையர் மட்டலர்தொ டுத்துநிறை

.. சித்தமொடு சுற்றிவர இட்டமருள்

.. சிற்பரனி ருப்பதுதி ருப்பொலியு(ம்) .. நின்றவூரே.


பதம் பிரித்து:

ஒற்றை என நிற்கும் இறை; அற்றவரின்

.. உற்ற துணை; பொற்கொடியை ஒத்த உமை

.. ஒட்டி உறை முக்கணன்; விடத்தை அணி கண்ட நேயன்;

சுற்றும் எரி மிக்கு எழ நிருத்தம் இடு

.. சொக்கன்; இடு பிச்சை மகிழ் பிச்சன்; ஒரு

.. துக்கம் இலன்; நச்சரவன்; நற்பெயரை என்றும் ஓதும்

நற்றவர் அகத்-தளிதனைக் கருதி;

.. நச்சியவர் உச்சி உறை அத்தன்; முன(ம்)

.. நக்கு மதில் அட்டவன்; நதிச்-சடையன்; அண்டவாணன்;

சிற்றிடையர் மட்டு-அலர் தொடுத்து, நிறை

.. சித்தமொடு சுற்றிவர, இட்டம் அருள்

.. சிற்பரன், இருப்பது திருப்-பொலியு(ம்) நின்றவூரே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

ஒற்றை என நிற்கும் இறை - தனியன் ஆனவன்; ஒப்பற்றவன்; ஏகன்; இறைவன்; (ஒற்றை - ஒன்று; தனிமை; ஒப்பின்மை);

அற்றவரின் உற்ற துணை - அன்பர்க்கு அன்பன்; வேறு பற்றின்றித் தன்னை அடைந்தவர்களைக் காப்பவன்; (அறுதல் - அன்புகொள்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.120.2 - "அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய்");

பொற்கொடியை ஒத்த உமை ஒட்டி உறை முக்கணன் - அழகிய கொடி போன்ற உமாதேவி திருமேனியில் சேர்ந்து இருக்கின்ற முக்கண்ணன்;

விடத்தைணி ண்ட நேயன் - ஆலகாலத்தைக் கண்டத்தில் அணிந்த அன்பன்;

சுற்றும் எரி மிக்கு எழ நிருத்தம் இடு சொக்கன் - சுற்றிலும் தீ மிகுந்து எழும் சுடுகாட்டில் கூத்து ஆடுகின்ற சொக்கன்; (சுற்றும் - சூழ); (சொக்கன் - சொக்கம் என்ற தாண்டவம் ஆடுபவன்; அழகன்; சிவன்);

இடு பிச்சை மகிழ் பிச்சன் - பிச்சையை விரும்பும் பேரருளாளன்; (பிச்சன் - பித்தன்); (பித்தன் - பேரருளாளன் என்ற பொருள்); (அப்பர் தேவாரம் - 4.80.4 - "தில்லை அம்பலத் தாடுகின்ற பிச்சன் பிறப்பிலி");

ஒரு துக்கம் இலன் - எந்தத் துக்கமும் இல்லாதவன் - இன்பவடிவினன்;

நச்சரவன் - விஷப்பாம்பை அணிந்தவன்;

நற்பெயரை என்றும் ஓதும் நற்றவர் அகத்-தளிதனைக் கருதி - நல்ல திருநாமத்தை எப்பொழுதும் ஓதிய நல்ல தவம் உடையவரான பூசலார் நாயனாரது மனக்கோயிலை விரும்பியவன்; (அகத் தளி - மனக்கோயில்); (கருதுதல் - விரும்புதல்; மதித்தல்); (கருதி - கருதியவன்; ஏறி, சூடி, முதலான பெயர்ச்சொற்கள் ஒத்த அமைப்பு); (* திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்); (பெரியபுராணம் - பூசலார் புராணம் - 12.65.10 - "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டாலயத்து நாளை நாம் புகுவோம்");

நச்சியவர் உச்சி உறை அத்தன் - தன்னை விரும்பியவர்களது உச்சிமேல் உறையும் தந்தை; (நச்சுதல் - விரும்புதல்); (அத்தன் - தந்தை); (சம்பந்தர் தேவாரம் - 1.76.4 - "உளங்கொள்வார் உச்சியார் கச்சியேகம்பன்");

முன(ம்) நக்கு மதில் அட்டவன் - முன்பு சிரித்தே முப்புரங்கள் அழித்தவன்; (நகுதல் - சிரித்தல்); (அடுதல் - அழித்தல்);

நதிச்-சடையன் - சடையில் கங்கையை அணிந்தவன்;

அண்டவாணன் - எங்கும் நிறைந்தவன்; சர்வவியாபி; (அண்டவாணன் - அண்டம் முழுதும் வாழ்நன். வாணன் மரூஉமொழி);

சிற்றிடையர் மட்டு-அலர் தொடுத்து, நிறை சித்தமொடு சுற்றிவர, இட்டம் அருள் சிற்பரன் - சிறிய இடையை உடைய பெண்கள் வாசமலர்களைத் தொடுத்து, அன்பு நிறைந்த மனத்தோடு வலம்செய்து வழிபாடு செய்ய, அவர்களுக்கு இரங்கி அவர்களது விருப்பங்களை (விரும்பிய வரங்களை) அருள்கின்றவன், அறிவுக்கு எட்டாதவன்; (மட்டு - தேன்; வாசனை); (நிறை சித்தம் - அன்பு நிறைந்த மனம்); (இட்டம் - இஷ்டம் - விருப்பம்); (சிற்பரன் - சித் பரன் - அறிவிற்கு எட்டாதவன்; ஞானத்தால் மேலானவன்);

இருப்பது திருப்-பொலியும் நின்றவூரே - அப்பெருமான் உறையும் தலம் திரு விளங்குகின்ற திருநின்றவூர்;


வி. சுப்பிரமணியன்

----------- -----------

T.140 - நின்றவூர் (திருநின்றவூர்) - மினற்சடை யிடைப்புனல்

2011-02-22

T.140 - நின்றவூர் (திருநின்றவூர்) - மினற்சடை யிடைப்புனல்

-----------------

(வண்ணவிருத்தம்;

தனத்தன தனத்தன தனத்தன

தனத்தன தனத்தன தனத்தன .. தந்ததான)

(Similar to - இருப்பவல் திருப்புகழ் - திருப்புகழ் - திருத்தணி - but with தந்ததான instead of தனதான at the end of the pattern.)


முற்குறிப்பு: அரையடிகளின் ஆரம்பத்தில் மோனை வரும் இடத்தில் எதுகை வருமாறு அமைந்த பாடல். அதனால் எட்டு அடிகள் உடைய பாடல் போலவும் தோற்றம் தரும்.

இதுபோல அரையடியில் எதுகை அமைந்த ஒரு திருப்புகழ் - கொடாதவனையே புகழ்ந்து - என்று தொடங்கும் விராலிமலைத் திருப்புகழ்.


மினற்சடை யிடைப்புனல் நிலைத்திட

.. .. விரித்தவன் அலர்க்கணை விடுத்தவன் .. வெந்துவீழ

.. அனற்பொறி செலுத்திடு நுதற்கணன்

.. .. அரைக்கர வசைத்தவன் விடத்தையும் .. உண்டவீசன்

மனைக்கிடம் அளித்தவன் அரிக்கொரு

.. .. வலத்திகி ரியைத்தரு கரத்தினன் .. அங்கணாதன்

.. வனப்புறு மலைக்குற மகட்கிறை

.. .. வரச்சுரர் தொழத்தரு கருத்தினன் .. அண்டவாணன்

முனர்த்தவம் இயற்றிடு கருத்துடை

.. .. முனிக்கிடர் கொடுத்திடு நமற்கொல .. வந்தகாலன்

.. வனத்திடை அருச்சுனன் விருப்பொடு

.. .. வழுத்திட அவற்கொரு விறற்படை .. தந்தவேடன்

மனத்தளி அமைத்தவர் சிறப்பினை

.. .. மனர்க்கிர வினிற்கன வினிற்புகல் .. அன்பர்நேயன்

.. நினைப்பவர் வினைக்கரு அழித்திடு

.. .. நெருப்பவன் இருப்பது மதிற்றிரு .. நின்றவூரே.


பதம் பிரித்து:

மினற்-சடையிடைப் புனல் நிலைத்திட

.. .. விரித்தவன்; அலர்க்கணை விடுத்தவன் .. வெந்து வீழ

.. அனற்பொறி செலுத்திடு நுதற்கணன்;

.. .. அரைக்கு அரவு அசைத்தவன்; விடத்தையும் .. உண்ட ஈசன்;

மனைக்கு இடம் அளித்தவன்; அரிக்கு ஒரு

.. .. வலத்-திகிரியைத் தரு கரத்தினன்; .. அங்கண் நாதன்;

.. வனப்புறு மலைக்குறமகட்கு இறை

.. .. வரச் சுரர் தொழத் தரு கருத்தினன்; .. அண்டவாணன்;

முனர்த் தவம் இயற்றிடு கருத்துடை

.. .. முனிக்கு இடர் கொடுத்திடு நமற்கொல .. வந்த காலன்

.. வனத்திடை அருச்சுனன் விருப்பொடு

.. .. வழுத்திட அவற்கு ஒரு விறற்படை .. தந்த வேடன்;

மனத்-தளி அமைத்தவர் சிறப்பினை

.. .. மனர்க்கு இரவினிற் கனவினிற் புகல் .. அன்பர் நேயன்;

.. நினைப்பவர் வினைக்கரு அழித்திடு

.. .. நெருப்பு-அவன் இருப்பது மதில்-திரு .. நின்றவூரே.


மினற்-சடையிடைப் புனல் நிலைத்திட விரித்தவன் - மின்னல் போன்ற சடையில் கங்கை தங்குமாறு அச்சடையை விரித்தவன்; (மினற்சடை - மின்னற்சடை - இடைக்குறை விகாரம்);

அலர்க்-கணை விடுத்தவன் வெந்து வீழ அனற்-பொறி செலுத்திடு நுதற்-கணன் - மலரம்பை எய்த மன்மதன் சாம்பலாகும்படி தீப்பொறியை உமிழ்ந்த நெற்றிக்கண்ணன்; (அலர்க்கணை - மலர் அம்பு); (செலுத்துதல் - செல்லச்செய்தல்; எய்தல்); (உகைத்தல் - செலுத்துதல்); (நுதற்கணன் - நெற்றிக்கண்ணன்; கணன் - கண்ணன் - இடைக்குறை);

ரைக்கு அவு அசைத்தவன் - அரையில் பாம்பைக் கட்டியவன்; (அசைத்தல் - கட்டுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.61.7 - "பையரவம் அரைக்கசைத்தான்"); (நக்கீரதேவ நாயனார் - கார் எட்டு - 11.15.1 - "அரவம் அரைக்கசைத்த அண்ணல்" - "அரைக்கு" என்பதை "அரைக்கண்" எனத் திரிக்க. இஃது உருபு மயக்கம்);

விடத்தையும் ண்ட ஈசன் - ஆலகாலத்தையும் உண்டருளிய ஈசன்;

மனைக்கு இடம் அளித்தவன் - மனைவிக்கு இடப்பாகம் அளித்தவன்; (மனை - மனைவி);

அரிக்கு ஒரு வலத்-திகிரியைத் தரு கரத்தினன் - திருமாலுக்கு ஒப்பற்ற வலிமையும் வெற்றியும் உடைய சக்கராயுதத்தை வரமளித்த அருட்கரம் உடையவன்; (வலம் - வலிமை; வெற்றி); (திகிரி - சக்கரம்);

அங்கண் நாதன் - அருள்நோக்கம் உடைய நாதன்;

வனப்புறு மலைக்குறமகட்கு இறை வரச் சுரர் தொழத் தரு கருத்தினன் - அழகிய, மலையில் வாழும் குறமகளுக்குக் கணவனான முருகனை அருள்க என்று தேவர்கள் இறைஞ்ச, அவ்வாறே அருள்புரிந்தவன்; (வனப்பு - அழகு); (இறை - கணவன்);

அண்டவாணன் - தேவன்; அண்டமெங்கும் இருப்பவன்; (அண்டம் - வானம்; பிரபஞ்சம்); (அப்பர் தேவாரம் - 4.67.2 - "அண்டனே அண்டவாணா");

முனர்த் தவம் இயற்றிடு கருத்துடை முனிக்கு இடர் கொடுத்திடு நமற்கொல வந்த காலன் - முன்பு தவம் செய்த முனிவரான மார்க்கண்டேயருக்குத் துன்பம் தந்த காலனைக் கொல்ல வந்த காலகாலன்; (முனர், கொல - முன்னர், கொல்ல; இடைக்குறை விகாரம்); (நமற்கொல - நமனைக் கொல்ல; உயர்திணையில் இரண்டாம்வேற்றுமைத்தொகையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்று ன் ஒற்று ற் என்று திரியும்);

வனத்திடை அருச்சுனன் விருப்பொடு வழுத்திட அவற்கு ஒரு விறற்படை தந்த வேடன் - காட்டில் அர்ஜுனன் விரும்பித் துதிக்க, வேடன் வடிவில் சென்று அவனுக்கு ஒப்பற்ற வெற்றியுடைய பாசுபதாஸ்திரத்தைத் தந்தவன்; (அவற்கு - அவனுக்கு); (விறல் - வெற்றி; வலிமை);

மனத்-தளி அமைத்தவர் சிறப்பினை மனர்க்கு இரவினிற் கனவினிற் புகல் அன்பர் நேயன் - மனக்கோயில் கட்டிய பூசலாரது சிறப்பைப் பல்லவ மன்னருக்கு இரவில் கனவில் சொன்னவன், அன்பர்க்கு அன்பன்; (தளி - கோயில்); (மனர்க்கு - மன்னர்க்கு - இடைக்குறை விகாரம்); (புகல்தல் - சொல்லுதல்); (* திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்); (பெரியபுராணம் - பூசலார் புராணம் - 12.65.10 - "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டாலயத்து நாளை நாம் புகுவோம்");

நினைப்பவர் வினைக்கரு அழித்திடு நெருப்பு-அவன் இருப்பது மதில்-திரு நின்றவூரே - தன்னைத் தியானிப்பவர்களது வினையை வேரோடு அழிக்கின்ற தீயான அப்பெருமான் உறைவது மதில் சூழ்ந்த திருநின்றவூர்;


வி. சுப்பிரமணியன்

----------- -----------

T.139 - நின்றவூர் (திருநின்றவூர்) - இகழ்கின்றதே நாடி

2011-02-19

T.139 - நின்றவூர் (திருநின்றவூர்) - இகழ்கின்றதே நாடி

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதந்த தானான தனதந்த தானான

தனதந்த தானான .. தனதான)


இகழ்கின்ற தேநாடி இழிசிந்தை யால்நாளும்

.. .. இருள்குன்றம் ஆர்தீய .. வினைமேவி

.. இகல்கின்ற நோய்கூடி நமன்வந்து கால்வீடி

.. .. எரிகின்ற தீமூடி .. அழியாமுன்

புகழ்கின்ற பாமாலை அணிகின்ற நாவோடு

.. .. பொலிகின்ற தாளோத .. அருளாயே

.. பொரவந்த காரானை அதுவென்ற மாவீர

.. .. புலியொன்றின் ஈர்தோலின் .. உடையானே

அகமொன்றி வேறேது(ம்) நினைவின்றி வாழ்பூசல்

.. .. அவர்கண்ட ஓர்கோயில் .. மகிழ்தேவா

.. அறைகின்ற தேனாடு மலர்துன்று காரோதி

.. .. அணிமங்கை ஓர்பாகம் .. அமர்நாதா

திகழ்கின்ற பூவேதன் அரியன்று காணாத

.. .. சிரமம்பொ னார்பாதம் .. உடையானே

.. சிறுதிங்கள் வானாறு புனைசங்க ராகாமர்

.. .. திருநின்ற வூர்மேய .. பெருமானே.


பதம் பிரித்து:

இகழ்கின்றதே நாடி இழி-சிந்தையால் நாளும்

.. .. இருள்-குன்றம் ஆர் தீய .. வினை மேவி,

.. இகல்கின்ற நோய் கூடி, நமன் வந்து கால் வீடி,

.. .. எரிகின்ற தீ மூடி .. அழியாமுன்,

புகழ்கின்ற பாமாலை அணிகின்ற நாவோடு

.. .. பொலிகின்ற தாள் ஓத .. அருளாயே;

.. பொரவந்த கார்-ஆனை அது வென்ற மா-வீர;

.. .. புலியொன்றின் ஈர்-தோலின் .. உடையானே;

அகம் ஒன்றி வேறு ஏது(ம்) நினைவு இன்றி வாழ்-பூசல்

.. .. அவர் கண்ட ஓர் கோயில் .. மகிழ்-தேவா;

.. அறைகின்ற தேன் நாடு மலர் துன்று கார்-ஓதி

.. .. அணிமங்கை ஓர் பாகம் .. அமர்-நாதா;

திகழ்கின்ற பூ-வேதன் அரி அன்று காணாத

.. .. சிரம் அம்பொன் ஆர் பாதம் .. உடையானே;

.. சிறுதிங்கள் வானாறு புனை- சங்கரா; காமர்

.. .. திருநின்றவூர் மேய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

இகழ்கின்றதே நாடி இழி-சிந்தையால் நாளும் இருள்-குன்றம் ஆர் தீய வினை மேவி - (சான்றோர்களால்) இகழப்படுகின்ற விஷயங்களையே விரும்பி இழியும் மனத்தால் தினமும் இருள்கின்ற மலை போன்ற தீவினை செய்து; (இகழ்தல் - வெறுத்தல்); (இழிதல் - இழிவுபடுதல்); (இருள்தல் - கறுப்பாதல்); (ஆர்தல் - ஒத்தல்);

இகல்கின்ற நோய் கூடி, நமன் வந்து கால் வீடி, எரிகின்ற தீ மூடி அழியாமுன் - என்னைத் தாக்கும் நோய்கள் பெருகிக், காலனும் வந்தடைந்து என் உயிர் நீங்கி, எரியும் தீ என் உடலைச் சூழ்ந்து நான் அழிவதன் முன்பே; (இகல்தல் - மாறுபடுதல்; பகைத்தல்); (கால் - காற்று); (வீடுதல் - கெடுதல்; ஒழிதல்);

புகழ்கின்ற பாமாலை அணிகின்ற நாவோடு பொலிகின்ற தாள் ஓத அருளாயே - உன்னைத் துதிக்கும் பாமாலைகளை என் நாக்கில் அணிந்து, உன் அழகிய திருவடியைப் போற்றி வணங்கி உய்ய அருள்வாயாக; (ஓதுதல் - பாடுதல்);

பொரவந்த கார்-ஆனை அது வென்ற மா-வீர - போர்செய்ய வந்த கரிய யானையை வென்ற பெருவீரனே; (பொருதல் - போர்செய்தல்); (கார் - கரியநிறம்);

புலியொன்றின் ஈர்-தோலின் உடையானே - ஒரு புலியின் உரித்த தோலுடையைக் கட்டியவனே; (ஈர்த்தல் - உரித்தல்);

அகம் ஒன்றி வேறு ஏது(ம்) நினைவு இன்றி வாழ்-பூசல் அவர் கண்ட ஓர் கோயில் மகிழ்-தேவா - வேறு சிந்தனைகள் எதுவும் இன்றித் தம் மனம் ஒருமுகப்பட்டு வாழ்ந்த பூசலார் நாயனார் கட்டித் தரிசித்த ஒப்பற்ற மனக்கோயிலில் விரும்பி எழுந்தருளிய தேவனே; (அகம் - மனம்); (பூசல் - பூசலார் நாயனார்); (காண்தல் - உண்டாக்குதல்; பார்த்தல்; தரிசித்தல்); (ஓர் - ஒப்பற்ற); (* திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்); (பெரியபுராணம் - பூசலார் புராணம் - 12.65.10 - "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டாலயத்து நாளை நாம் புகுவோம்");

அறைகின்ற தேன் நாடு மலர் துன்று கார்-ஓதி அணிமங்கை ஓர் பாகம் அமர்-நாதா - ஒலிக்கும் வண்டுகள் நாடுகின்ற பூக்கள் பொருந்திய கரிய கூந்தலுடைய அழகிய உமாதேவி ஒரு பாகமாக இருக்கும் (/விரும்பிய) நாதனே; (அறைதல் - ஒலித்தல்); (தேன் - வண்டு); (துன்றுதல் - செறிதல்; பொருந்துதல்); (ஓதி - கூந்தல்); (அமர்தல் - இருத்தல்; விரும்புதல்;)

திகழ்கின்ற பூ-வேதன் அரி அன்று காணாத சிரம் அம்பொன் ஆர் பாதம் உடையானே - விளங்கும் தாமரைமலர்மேல் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால் முன்பு காண இயலாத திருமுடியும் அழகிய பொன் போன்ற திருவடியும் உடையவனே; (சிரம் - உச்சி); (அம் - அழகு); (ஆர்தல் - ஒத்தல்);

சிறுதிங்கள் வானாறு புனை- சங்கரா - பிறையையும் கங்கையையும் அணிந்த சங்கரனே; (வானாறு - வானதி - கங்கை); (புனைதல் - அணிதல்);

காமர் திருநின்றவூர் மேய பெருமானே - அழகிய திருநின்றவூரில் உறைகின்ற பெருமானே; (காமர் - அழகு);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

T.138 - நின்றவூர் (திருநின்றவூர்) - நரனென்று பேராகி

2011-02-19

T.138 - நின்றவூர் (திருநின்றவூர்) - நரனென்று பேராகி

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதந்த தானான தனதந்த தானான

தனதந்த தானான .. தனதான)


நரனென்று பேராகி நசைமண்டு வாழ்வாகி

.. .. நலமின்றி நானாடி .. மிகவாடி

.. நரைவந்து தீராத பிணிவந்து நாளோடி

.. .. நமன்வந்து நீறாகி .. அழியாமுன்

விரைகொண்ட பூவோடு கமழ்கின்ற பாவோடு

.. .. விழியங்கு நீர்வாரு(ம்) .. நெகிழ்வோடு

.. வினைகுன்ற ஆறான உனையென்று மேயோதி

.. .. மிகுமின்ப மேகாண .. அருளாயே

அரனென்று(ம்) மூவாத முதலென்று(ம்) மேலான

.. .. அறிவென்று(ம்) நால்வேதம் .. உரைநாதா

.. அளிசிந்தை யார்பூசல் அவர்நெஞ்சி லார்கோயில்

.. .. அதில்நின்ற மாதேவ .. அமுதாகத்

திரைபொங்கு பாலாழி விடமுண்ட சீராள

.. .. சிலைகொண்டு மூவூரை .. எரியீசா

.. சிறைவண்டு தேனாடி மலர்கின்ற பூவூது

.. .. திருநின்ற வூர்மேய .. பெருமானே.


பதம் பிரித்து:

நரன் என்று பேர் ஆகி, நசை மண்டு வாழ்வாகி,

.. .. நலம் இன்றி நான் ஆடி, மிக வாடி,

.. நரை வந்து, தீராத பிணி வந்து, நாள் ஓடி,

.. .. நமன் வந்து நீறு ஆகி அழியாமுன்,

விரை கொண்ட பூவோடு, கமழ்கின்ற பாவோடு,

.. .. விழி அங்கு நீர் வாரு(ம்) நெகிழ்வோடு,

.. வினை குன்ற ஆறு ஆன உனை என்றுமே ஓதி,

.. .. மிகும் இன்பமே காண அருளாயே;

அரன் என்று(ம்), மூவாத முதல் என்று(ம்), மேலான

.. .. அறிவு என்று(ம்), நால்வேதம் உரை நாதா;

.. அளி-சிந்தையார் பூசல் அவர் நெஞ்சில் ஆர் கோயில்

.. .. அதில் நின்ற மாதேவ; அமுது ஆகத்,

திரை பொங்கு பால்-ஆழி விடம் உண்ட சீராள;

.. .. சிலைகொண்டு மூவூரை எரி ஈசா;

.. சிறைவண்டு தேன் நாடி மலர்கின்ற பூ ஊது,

.. .. திருநின்றவூர் மேய பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

நரன் என்று பேர் ஆகி, நசை மண்டு வாழ்வாகி, நலம் இன்றி நான் ஆடி, மிக வாடி - மனிதன் என்ற பெயர் ஆகி (மனிதப்பிறவி பெற்று), ஆசைகள் மிகுகின்ற வாழ்வால், நன்மை இன்றி நான் மிக அலைந்து திரிந்து செயல்பட்டு, மிகவும் வருந்தி; (நரன் - மனிதன்); (நசை - ஆசை);

நரை வந்து, தீராத பிணி வந்து, நாள் ஓடி, நமன் வந்து நீறு ஆகி அழியாமுன் - மயிர் நரைத்து, தீர்த்தற்கு அரிய பெரிய நோய்கள் வந்து, பல நாள்கள் சென்று, இயமன் வந்தடையச், சுடுகாட்டில் சாம்பல் ஆகி அழிவதன் முன்பே;

விரை கொண்ட பூவோடு, கமழ்கின்ற பாவோடு, விழி அங்கு நீர் வாரும் நெகிழ்வோடு - வாசம் மிக்க பூக்களாலும், பாமாலைகளாலும், கண்ணில் நீர் கசியும் மனநெகிழ்ச்சியோடு; (விரை - வாசனை); (அங்கு - அசைச்சொல்); (வார்தல் - ஒழுகுதல்; வெளிவிடுதல்);

வினை குன்ற ஆறு ஆன உனை என்றுமே ஓதி, மிகும் இன்பமே காண அருளாயே - வினைகள் அழிவதற்கு வழி ஆன உன்னை எந்நாளும் ஓதி வணங்கி, மிகுகின்ற இன்பமே பெற அருள்வாயாக; (குன்றுதல் - அழிதல்); (ஆறு - வழி);


அரன் என்றும், மூவாத முதல் என்றும், மேலான அறிவு என்றும், நால்வேதம் உரை நாதா - ஹரன் என்றும், எப்பொழுதும் இளமையோடு இருக்கும் ஆதி என்றும், மேலான அறிவுவடிவானவன் என்றும் நால்வேதங்கள் கூறும் நாதனே; (மூத்தல் - முதுமை அடைதல்); (அறிவு - அறிவு வடிவானவன்);

அளி சிந்தையார் பூசல் அவர் நெஞ்சில் ஆர் கோயில்-அதில் நின்ற மாதேவ - குழைந்த மனத்தை உடையவரான பூசலார் நாயனாரது மனக்கோயிலில் எழுந்தருளிய மஹாதேவனே; (அளிதல் - மனம் கனிதல்); (பூசல் - பூசலார் நாயனார்); (* திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்); (பெரியபுராணம் - பூசலார் புராணம் - 12.65.10 - "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டாலயத்து நாளை நாம் புகுவோம்");

அமுது ஆகத், திரை பொங்கு பால்-ஆழி விடம் உண்ட சீராள - அமுதம் உண்டாகும்படி, அமுதம் போல, அலை பொங்கும் பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்ட பெருமையுடையவனே; (ஆதல் - உண்டாதல்; ஒப்பாதல்); (திரை - அலை); (ஆழி - கடல்); (காரைக்காலம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி - 44 - "மனக்கினிய சீராளன் கங்கை மணவாளன்");

சிலைகொண்டு மூவூரை எரி ஈசா - மேருமலை என்ற வில்லால் முப்புரங்களை எரித்த ஈசனே; (சிலை - மலை; வில்); (கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு); (1.97.1 - "தானவர் ஊர்மூன் றெரிசெய்த மையார்கண்டன்");

சிறைவண்டு தேன் நாடி மலர்கின்ற பூ ஊது, திருநின்றவூர் மே பெருமானே - சிறகுகளை உடைய வண்டுகள் மதுவை விரும்பி மலர்கின்ற பூவில் ரீங்காரம் செய்யும் (சோலை உடைய) திருநின்றவூரில் விரும்பி உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------