Wednesday, November 30, 2022

T.178 - நாலூர் - நாணான் மேலோர்

2013-12-31

T.178 - நாலூர் - நாணான் மேலோர்

(நாலூர் - பலாசவனநாதர் கோயில் - தேவார வைப்புத்தலம்)

--------------

(வண்ணவிருத்தம்;

தானா தானா தானா தானா

தானா தானத் .. தனதான)

(தாமா தாமா லாபா லோகா - திருப்புகழ் - திருச்செங்கோடு)


முற்குறிப்பு: அரையடிகளின் ஆரம்பத்தில் மோனை வரும் இடத்தில் எதுகை வருமாறு அமைந்த பாடல். அதனால் எட்டு அடிகள் உடைய பாடல் போலவும் தோற்றம் தரும்.

இதுபோல அரையடியில் எதுகை அமைந்த ஒரு திருப்புகழ் - கொடாதவனையே புகழ்ந்து - என்று தொடங்கும் விராலிமலைத் திருப்புகழ்.


நாணான் மேலோர் மேலாய் பேரே

.. .. நாவால் ஓதித் .. தமிழ்பாடி

.. வாணாள் பாழா காதே பூமேல்

.. .. வாழ்வே னாகப் .. பணியாயே

வீணா வாழ்வார் நாடா நேயா

.. .. வேயார் தோளிக் .. கொருகூறா

.. மாணார் தூயோர் பார்மேல் மீளா

.. .. வானார் வாழ்வைத் .. தருவோனே

நாணா வார்நா காவா னோரோர்

.. .. நாமா மேருச் .. சிலையானே

.. கோணா வீசா ஏறூர் கோனே

.. .. கூனார் கோலப் .. பிறைசூடீ

நாணா தூரூர் ஊணே தேர்வாய்

.. .. நாதா நேமிக் .. கரனேடச்

.. சேணார் தீயா னாய்தே னீயார்

.. .. சீர்நா லூரிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

நாள் நான் மேலோர் மேலாய் பேரே

.. .. நாவால் ஓதித் தமிழ் பாடி,

.. வாழ்நாள் பாழ் ஆகாதே பூமேல்

.. .. வாழ்வேன் ஆகப் பணியாயே;

வீணா வாழ்வார் நாடா நேயா;

.. .. வேய் ஆர் தோளிக்கு ஒருகூறா;

.. மாண் ஆர் தூயோர் பார்மேல் மீளா

.. .. வான் ஆர் வாழ்வைத் தருவோனே;

நாணா ஆர் நாகா; வானோர் ஓர்

.. .. நாமா; மேருச் சிலையானே;

.. கோணா ஈசா; ஏறு-ஊர் கோனே;

.. .. கூன் ஆர் கோலப் பிறைசூடீ;

நாணாது ஊர்ஊர் ஊணே தேர்வாய்;

.. .. நாதா; நேமிக்-கரன் நேடச்

.. சேண் ஆர் தீ ஆனாய்; தேனீ ஆர்

.. .. சீர் நாலூரில் பெருமானே.


நாள் நான் மேலோர் மேலாய் பேரே நாவால் ஓதித் தமிழ் பாடி - மேலோர்க்கும் மேலான உன் திருநாமத்தையே நான் நாள்தோறும் நாவால் ஓதித், தேவாரம் திருவாசகம் முதலிய தெய்வத்தமிழ் பாடி; (நாள் - நாளும் - உம்மைத்தொகை); (மேலோர் - தேவர்); (அப்பர் தேவாரம் - 6.32.8 - "மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி");

வாழ்நாள் பாழ் ஆகாதே பூமேல் வாழ்வேன் ஆகப் பணியாயே - என் வாழ்நாள் வீணாகாமல் இப்புவிமேல் பயனுள்ள வாழ்வு வாழ்வதற்கு அருள்புரிக; (பூ - பூமி); (பணித்தல் - அருளிச்செய்தல்; ஆணையிடுதல்);

வீணா வாழ்வார் நாடா நேயா - பயனின்றி வாழ்பவர்கள் நாடாத அன்பனே; (வீணா - வீணாக; கடைக்குறை விகாரம்);

வேய் ஆர் தோளிக்கு ஒருகூறா - மூங்கில் போன்ற புஜம் உடைய உமைக்குத் திருமேனியில் ஒரு பாகம் உடையவனே; (வேய் - மூங்கில்); (ஆர்தல் - ஒத்தல்); (அப்பர் தேவாரம் - 6.48.10 - "மங்கையர்க்கோர் கூறன்காண்"); (நக்கீரதேவர் - கோபப்பிரசாதம் - 11.14.1 - அடி 67 - "வேயார் தோளி மெல்லியல் கூறனைத்");

மாண் ஆர் தூயோர் பார்மேல் மீளா வான் ஆர் வாழ்வைத் தருவோனே - மாட்சிமையுடைய தூயவர்கள் மண்ணுலகில் மீண்டும் பிறவாதபடி அவர்களுக்கு வானுலக (= சிவலோக) வாழ்வைத் தருபவனே; (மாண் - மாட்சிமை); (ஆர்தல் - பொருந்துதல்);

நாணா ஆர் (/வார்) நாகா - (அரைநாணாக & வில்லில் நாணாக) ஒரு பாம்பைக் கட்டியவனே; (நாணா - நாணாக); (ஆர்த்தல் - கட்டுதல்); (வார்தல் - நீள்தல்); ("நாணா வார்-நாகா = நாணாக நீண்ட நாகத்தை உடையவனே" என்றும் பொருள்கொள்ளலாம்);

வானோர் ஓர் நாமா - தேவர்கள் தியானிக்கும் திருநாமம் உடையவனே (/புகழினனே); (ஓர்தல் - எண்ணுதல்); (நாமம் - பெயர்; புகழ்; நாமன் - நாமம் உடையவன்; வீரம்/வீரன், நேயம்/நேயன், இவை போல); (பாம்பன் சுவாமிகள் - சண்முகக் கோட்டம் பதிகம் 1 - 10 - "கோலச் செம்மலை நாமனை மெச்சியே"); (கம்பராமாயணம்? இடைச்செருகல்? - "ஓம்அ ராமரை, ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் நாமர் ஆம் அவரை");

மேருச் சிலையானே - மேருவில் ஏந்தியவனே; (சிலை - வில்);

கோணா ஈசா - கோணாத (=வஞ்சனையற்ற) ஈசனே; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்" - சலம் - வஞ்சனை);

ஏறு-ஊர் கோனே - இடபவாகனம் உடைய தலைவனே; (ஊர்தல் - ஏறுதல்);

கூன் ஆர் கோலப் பிறைசூடீ - வளைந்த அழகிய சந்திரனைச் சூடியவனே; (கூன் - வளைவு);

நாணாது ஊர்ஊர் ஊணே தேர்வாய் - கூச்சமின்றிப் பல ஊர்களில் பிச்சை ஏற்பவனே; (ஊண் - உணவு); (தேர்தல் - தேடுதல்);

நாதா - தலைவனே;

நேமிக்-கரன் நேடச் சேண் ஆர் தீ ஆனாய் - சக்கராயுதத்தைக் கையில் தாங்கிய திருமால் தேடும்படி, எல்லையின்றி வானில் ஓங்கிய ஜோதி ஆனவனே; (நேமி - சக்கராயுதம்); (கரன் - கையினன்); (சம்பந்தர் தேவாரம் - 1.22.6 - "வடமுகம் உறைதரு கரன்" - வடவைமுகத்தீ உறையும் திருக்கரம் உடையவன்); (நேடுதல் - தேடுதல்); (சேண் - உயரம்; ஆகாயம்); (ஆர்தல் - பொருந்துதல்);

தேனீ ஆர் சீர் நாலூரில் பெருமானே - தேனீக்கள் ஒலிக்கும் புகழ் உடைய நாலூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே; (தேனீ - தேன் தொகுக்கும் வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (சீர் - புகழ்); (நாலூர் - பலாசவனநாதர் கோயில் - தேவார வைப்புத்தலம்);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment