Tuesday, November 15, 2022

N.024 - சுந்தரர் துதி - திசைமாற்றிய திருப்பங்கள்

2013-05-31

N.024 - சுந்தரர் துதி - திசைமாற்றிய திருப்பங்கள்

--------------

1) ---- (கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு) ----

இசைவாத்தியம் மறைமந்திரம் ஒலிபந்தரின் இடையே

அசையாவரன் முதியோனென அங்குற்றது தடுத்து

வசைவாக்குரை ஆரூரரை இசைபாடிடு மாறு

திசைமாற்றிய வரலாற்றினை நசையால்மொழி வேனே.


இசைவாத்தியம் மறைமந்திரம் ஒலி-பந்தரின் இடையே - மங்கல வாத்தியங்களும் வேதமந்திரங்களும் ஒலித்த (திருமணப்) பந்தலில்; (பந்தர் - பந்தல்);

அசையா-அரன் முதியோன் என அங்கு உற்று அது தடுத்து - அசலன் ஆகிய சிவபெருமான் ஒரு கிழவன் கோலத்தில் வந்து அத்திருமணத்தைத் தடுத்து; (அசையா அரன் - அசலன் - அசைவிலாதவன்);

வசைவாக்கு உரை ஆரூரரை இசைபாடிடுமாறு திசைமாற்றிய வரலாற்றினை நசையால் மொழிவேனே - இழித்துப் பேசிய சுந்தரரைப் புகழ்பாடும்படி நன்னெறியில் செலுத்திய வரலாற்றை விரும்பிச் சொல்வேன்; (இசை - புகழ்); (நசை - அன்பு; ஆசை);


2) ---- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ----

இருநிலனை ஆள்மன்னன் செல்லும்போ தெதிரேயத்

தெருவினிலே தேருருட்டும் சிறுவன்மேல் மனம்செல்ல

அருமறையோன் மகனவனை அரசகுமா ரனுமாக்கி

இருவழக்கும் கற்பித்தான் இதுவுமரன் விளையாட்டே.


இருநிலனை ஆள்-மன்னன் செல்லும்போது எதிரேத்-தெருவினிலே தேருருட்டும் சிறுவன்மேல் மனம்செல்ல - நாட்டை ஆளும் அரசன் செல்லும்வழியில் அந்தத் தெருவில் சிறுதேரை உருட்டி விளையாடும் (நம்பியாரூரராகிய) சிறுவர்மேல் ஆசைகொண்டு;

அருமறையோன் மகனவனை அரசகுமாரனும் ஆக்கி இருவழக்கும் கற்பித்தான் - வேதியர் மகனாரான அவரைத் தன் அன்புமகனாக ஆக்கி அரச அந்தணப் பழக்கவொழுக்கங்களைக் கற்பித்தான்; (வழக்கு - பழக்கவொழுக்கம்);

இதுவும் அரன் விளையாட்டே - இதுவும் சிவன் திருவிளையாடல்;


3)

மணவயது வந்தெய்தச் சடங்கவியார் மகளென்ற

குணவதியைக் குலப்பெரியோர் நிச்சயித்தார் மணநாளில்

பணைமுலையாள் பங்கனொரு பல்லில்லா வடிவிற்கோல்

துணையெனக்கொண் டணைந்ததனை நிறுத்துமென வழக்கிட்டான்.


மணவயது வந்து-ய்தச், சடங்கவியார் மகள் என்ற குணவதியைக் குலப்பெரியோர் நிச்சயித்தார் - நம்பியாரூரர் திருமண-வயதை எட்டியதும், குலப்பெரியவர்கள் சடங்கவி சிவாசாரியார் மகளை மணம்செய்விக்க நிச்சயித்தார்கள்;

மணநாளில் பணைமுலையாள் பங்கன் ஒரு பல்-இல்லா-வடிவில் கோல் துணையெனக்கொண்டு அணைந்து, அதனை நிறுத்தும் என வழக்கிட்டான் - திருமணநாளில் பருத்த முலையுடைய உமையைப் பங்கில் உடைய பெருமான், பற்களை இழந்த பழுத்த வயோதிக அந்தணர் கோலத்தில் ஒரு ஊன்றுகோலைப் பற்றி வந்தடைந்து, அந்தத் திருமணத்தை நிறுத்துங்கள் என்று வழக்கிட்டான்;


4) ---- (அறுசீர் விருத்தம் - காய் காய் காய் காய் மா தேமா - வாய்பாடு) ----

பித்தரிவர் என்றிகழப் பெருங்குழப்பம் விளைந்ததன்றே பேசா மல்வா

பத்திரமாய் உளதடிமை ஓலையெனக் கேட்டவர்மேல் பாயக் கண்டு

கத்தியவர் காவணத்தி னிடையோடிக் கடைசியிற்கால் களைக்க அந்தப்

பத்திரத்தை ஆரூரர் பற்றிக் கிழித்தெறிந்தார் பத்து நூறா.


"பித்தர் இவர்" என்று இகழப் பெரும்-குழப்பம் விளைந்தது-அன்றே - "இவர் ஒரு பித்தர்" என்று நம்பியாரூர் அந்த முதியவரை இகழ்ந்து பேச, அங்கே பெரிய குழப்பம் ஏற்பட்டது; (அன்றே - அல்லவா - தேற்றத்தைக் குறிக்கும் சொற்றொடர்);

"பேசாமல் வா; பத்திரமாய் உளது அடிமை ஓலை" எனக் கேட்டு, அவர்மேல் பாயக் கண்டு - "பேசாமல் என் பின்னே வா! அடிமைப்பத்திரம் பத்திரமாக உள்ளது" என்று அக்கிழவர் சொல்லக் கேட்டு, அவர்மேல் நம்பியாரூரர் பாயவும்; (பத்திரம் - 1. பாதுகாப்பு; 2. சாசனம்/ஓலை);

கத்தி அவர் காவணத்தினிடை ஓடிக் கடைசியில் கால் களைக்க - கத்தியபடி அவர் திருமணப்பந்தலில் அங்குமிங்கும் ஓடிக் கடைசியில் கால்கள் சோரவும்; (காவணம் - பந்தல்);

அந்தப் பத்திரத்தை ஆரூரர் பற்றிக் கிழித்து எறிந்தார் பத்து-நூறா - நம்பியாரூரர் அவரைப் பிடித்துப் பத்திரத்தை ஆயிரம் துண்டுகளாகக் கிழித்து எறிந்தார்; (பத்து நூறு - ஆயிரம்); (நூறா - நூறாக);


5) ---- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ----

பிச்சனென இவனென்னைப் பேசிடினும் பெரியோரே

இச்செயலே இவனடிமை எனக்கென்று காட்டியது

நிச்சயமா என்றுரைத்தார் நிலவியது குழப்பமொன்றே

அச்சமயம் ஆரூரர் அதுகண்டோர் முடிவெடுத்தார்.


"பிச்சன் என இவன் என்னைப் பேசிடினும், பெரியோரே, இச்செயலே இவன் அடிமை எனக்கு என்று காட்டியது நிச்சயமா" என்றுரைத்தார் - "பித்தன் என்று இவன் என்னைச் சொன்னாலும், பெரியோர்களே, இந்தச் செயலே இவன் என் அடிமை என்று உறுதிப்படுத்தியது" என்று சொன்னார்; (பிச்சன் - பித்தன்);

நிலவியது குழப்பமொன்றே - அங்கே குழப்பமே நிலவியது;

அச்சமயம் ஆரூரர் அதுகண்டு ஓர் முடிவெடுத்தார் - அப்பொழுது நம்பியாரூர் ஓரு முடிவெடுத்தார்;


6) ---- (நேரிசை வெண்பா) ----

மறையவரே உங்கள் வழக்கை முடித்தே

பிறைநுதற் பெண்ணை மணப்பேன் - பறையு(ம்)நும்மூர்

என்றார்க் கியம்பினார் எம்மூர்வெண் ணெய்நல்லூர்

மன்றார்முன் சொல்வோம் வழக்கு.


"மறையவரே! உங்கள் வழக்கை முடித்தே பிறைநுதற் பெண்ணை மணப்பேன்; பறையு(ம்) நும்ர்" என்றார்க்கு - "வேதியரே! உங்கள் வழக்கைத் தீர்த்தபின்னே பிறை போன்ற நெற்றியுடைய இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்துகொள்வேன்; உங்கள் ஊரைச் சொல்லுங்கள்" என்று வினவிய நம்பியாரூரருக்கு; (நுதல் - நெற்றி); (பறைதல் - சொல்தல்);

யம்பினார் "எம்ர் வெண்ணெய்நல்லூர் மன்றார்முன் சொல்வோம் வழக்கு" - அந்த முதியவர், "எம் ஊர் திருவெண்ணெய்நல்லூர்; அவ்வூர் நியாயசபைமுன் நம் வழக்கைச் சொல்வோம்" என்றார்; (மன்றார் - சபையோர்);


7) ----வெண்ணெய்நல்லூரில் -- (அறுசீர் விருத்தம் - விளம் விளம் காய் - அரையடி வாய்பாடு) ----

முன்னிவன் அழித்தது படியோலை

.. மூலமிங் குள்ளது சபையோரே

என்னவும் அதிலுள எழுத்தெல்லாம்

.. ஏற்புடைத் தாவென மிகவாய்ந்து

பின்னவர் அடிமையே இவனென்றார்

.. பித்தரைத் தொடர்ந்துநா வலர்கோனும்

சென்னிமேற் கரங்குவித் துடன்சென்றார்

.. சிவனுறை கோயிலை அணைந்தாரே.


"முன் இவன் அழித்தது படி-ஓலை; மூலம் இங்கு உள்ளது சபையோரே" என்னவும், அதில் உள எழுத்தெல்லாம் ஏற்புடைத்தா என மிக ஆய்ந்து, பின், "அவர் அடிமையே இவன்" என்றார்; பித்தரைத் தொடர்ந்து நாவலர்கோனும் சென்னிமேல் கரம் குவித்து உடன் சென்றார்; சிவன் உறை கோயிலை அணைந்தாரே.

(படி ஓலை - பிரதி/நகல் - copy); (மூலம் - original document); (ஏற்புடைத்தா - ஏற்கத்தக்கதா); (மிக ஆய்ந்து - மிகவும் ஆராய்ச்சி செய்து);


8) ---- (அறுசீர் விருத்தம் - மா கூவிளம் மா விளம் விளம் மா - வாய்பாடு) ----

வென்ற வேதியர் மறைந்தார் விண்ணிடை விடைமிசைத் தெரிந்தார்

அன்று சொன்னவா றுன்னை ஆண்டுகொண் டருளினோம் என்றார்

இன்ற மிழ்த்தொடை அஃதே எமக்கருச் சனையெனக் கேட்டு

மன்றில் ஆடியைப் பித்தா என்றெடுத் தோதினார் தொண்டர்.


வென்ற வேதியர் மறைந்தார்; விண்ணிடை விடைமிசைத் தெரிந்தார் - வழக்கில் வென்ற முதிய அந்தணராக வந்த பெருமானார் காட்சியிலிருந்து நீங்கினார்; வானில் இடபவாகனத்தின்மேல் காட்சிதந்தார்;

"அன்று சொன்னவாறு உன்னை ஆண்டுகொண்டருளினோம்" என்றார் - "முன்பு கயிலையில் சொன்னபடி உன்னை ஆட்கொண்டருளினோம்" என்றார்;

"இன்-தமிழ்த்தொடை அஃதே எமக்கு அருச்சனை" எனக் கேட்டு - இனிய தமிழ்ப்பாமாலையே எனக்கு அர்ச்சனை" என்று ஈசனார் சொல்லக் கேட்டு; (தொடை - மாலை);

மன்றில் ஆடியைப் பித்தா என்று எடுத்து ஓதினார் தொண்டர் - அம்பலக்கூத்தரைப் "பித்தா" என்று தொடங்கிப் பதிகம் பாடினார் வன்தொண்டர்;


(பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 216

மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம்

பெற்றனை நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க

அற்சனை பாட்டே ஆகும் ஆதலான் மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார்)


9) ---- (அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு) ----

சடையனார் மகனாய்த் தோன்றிச்

.. சடையனுக் கடிமை ஆகி

விடையினன் தோழ னாகி

.. வேட்டவர் இருவர் தம்மை

அடையவும் அவனை நாடி

.. அரும்பொருள் பெறவும் பாடிக்

கடையினில் ஆனை ஏறிக்

.. கயிலைசென் றவர்தாள் போற்றி.


சடையனாருக்கு மகனாகப் பிறந்து, சடையனாகிய ஈசனுக்கு அடிமை ஆகி, இடபவாகனனுக்குத் தோழன் ஆகி, விரும்பிய இருபெண்களைத் திருமணம் செய்துகொள்ளவும் அவனையே வேண்டி அடைந்து, அரிய பொன் பெறவும் பதிகங்கள் பாடி அவ்வாறே அடைந்து, கடைசியில் ஈசன் அனுப்பிய யானைமேல் ஏறிக் கயிலை சென்றவரான சுந்தரரது திருவடிகளுக்கு வணக்கம்.


10) ---- (அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா மா - வாய்பாடு) ----

சின்ன வயதில் தெருவில் ஆடும் போதோர் திருப்பம்

பின்னர்த் திரும ணத்தைப் பெரியோன் நிறுத்தும் திருப்பம்

மின்னல் இடையாள் பரவை தன்னை வேட்டல் திருப்பம்

கன்னல் மொழியாள் சங்கி லியார்பால் காதல் திருப்பம்

சொன்ன சூளை மீறிக் குருடாம் துக்கம் திருப்பம்

முன்னும் பின்னும் முதல்வன் தூது சென்ற திருப்பம்

பொன்னை இழந்து பெற்ற முருகன் பூண்டித் திருப்பம்

இன்னும் உன்னில் ஊரர் வாழ்விங் கீயும் திருப்பம்.


(வேட்டல் - விரும்புதல்); (கன்னல் - கரும்பு); (சூள் - சபதம்); (உன்னில் - சிந்தித்தால்; எண்ணினால்); (ஊரர் - நம்பியாரூரர் - சுந்தரமூர்த்திநாயனார்);

இன்னும் உன்னில் ஊரர் வாழ்வு இங்கு ஈயும் திருப்பம் - சுந்தரர் திருவரலாற்றைச் சிந்தித்தால், அது அவர்களை நல்வழியில் திருப்பும்;


11) ---- (கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு) ----

கருப்பம்பல புகுதீவினை கழலும்திருக் கயிலைப்

பொருப்பன்புரி சடையான்அருள் புரிவான்அவன் தோழர்

திருப்பம்பல நிகழ்வாகிய திருவாழ்வது தன்னை

விருப்பங்கொடு சிந்தித்திடு(ம்) நெஞ்சத்தவர் கட்கே.


தம்பிரான்-தோழரான நம்பியாரூரரின் பல திருப்பங்கள் நிறைந்த சரிதத்தை விரும்பிச் சிந்திக்கும் மனம் உடைய அன்பர்களுக்குக், கயிலைமலையான், முறுக்கிய சடையை உடைய சிவபெருமான் அருள்புரிவான்; பல பிறவிகளைக் கொடுக்கும் தீயவினைகள் எல்லாம் விலகும்.

(கருப்பம் - கர்ப்பம் - பிறவி); (புகுதீவினை - புகுத்தும் தீய வினை); (கழலும் - நீங்கும்); (பொருப்பு - மலை); (புரிதல் - முறுக்குறுதல்);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment