2013-09-28
T.174 - குறுக்கை வீரட்டம் - மயக்க மாசுற்ற
(கொருக்கை)
--------------
(வண்ணவிருத்தம்;
தனத்த தானத்த தனத்த தானத்த
தனத்த தானத்த .. தனதான)
மயக்க மாசுற்ற மனத்தி னால்மிக்க
.. .. வருத்த மேயுற்று .. மரியாமல்
.. மணத்தல் நீடித்த தமிழ்ச்சொ லால்நித்தல்
.. .. வழுத்து ஞானத்தை .. அருளாயே
இயக்கம் யாவைக்கும் இயக்கும் ஓர்சத்தி
.. .. எனப்ப ராவற்கும் .. உரியானே
.. எடுத்த ஓர்வெற்பை அழுத்தி மாதுட்டன்
.. .. இசைத்த கீதத்தை .. மகிழ்வோனே
கயத்தை யேபற்றி உரித்த வீரத்த
.. .. கயத்தை வேணிக்க .. ணுடையானே
.. கடுத்த ஆலத்தை மடுத்த ஏருற்ற
.. .. களத்தில் நீலத்தை .. அணிவோனே
பெயர்ச்சி தானற்ற குறுக்கை வீரட்ட
.. .. பிழைத்த வேளட்ட .. விழியானே
.. பெணுக்கொர் பாகத்தை அளித்த கோலத்த
.. .. பிறப்பு சாவற்ற .. பெருமானே.
பதம் பிரித்து:
மயக்க(ம்) மாசு உற்ற மனத்தினால் மிக்க
.. .. வருத்தமே உற்று மரியாமல்,
.. மணத்தல் நீடித்த தமிழ்ச்சொலால் நித்தல்
.. .. வழுத்து ஞானத்தை அருளாயே;
இயக்கம் யாவைக்கும் இயக்கும் ஓர் சத்தி
.. .. எனப் பராவற்கும் உரியானே;
.. எடுத்த ஓர் வெற்பை அழுத்தி, மா-துட்டன்
.. .. இசைத்த கீதத்தை மகிழ்வோனே;
கயத்தையே பற்றி உரித்த வீரத்த;
.. .. கயத்தை வேணிக்கண் உடையானே;
.. கடுத்த ஆலத்தை மடுத்த ஏர் உற்ற
.. .. களத்தில் நீலத்தை அணிவோனே;
பெயர்ச்சிதான் அற்ற குறுக்கை வீரட்ட;
.. .. பிழைத்த வேள் அட்ட விழியானே;
.. பெணுக்கு ஒர் பாகத்தை அளித்த கோலத்த;
.. .. பிறப்பு சாவு அற்ற பெருமானே.
மயக்க(ம்) மாசு உற்ற மனத்தினால் மிக்க வருத்தமே உற்று மரியாமல், - அறியாமையும் அழுக்குகளும் இருக்கும் மனத்தால் நான் மிகுந்த வருத்தமே அடைந்து, வாழ்நாளும் முடிந்து இறந்தொழியாமல்; (மயக்கம் - அறியாமை); (மாசு - அழுக்கு); (மயக்கமாசு - மயக்கமாகிய மாசு - என்றும் பொருள்கொள்ளலாம்); (மரித்தல் - சாதல்);
மணத்தல் நீடித்த தமிழ்ச்சொலால் நித்தல் வழுத்து ஞானத்தை அருளாயே - மணம் நிலைத்த தமிழ்ப்பாமாலைகளால் உன்னை எந்நாளும் வழிபடும் அறிவை அருள்வாயாக; (நீடித்தல் - நிலைநிற்றல்); (நித்தல் - எந்நாளும்);
இயக்கம் யாவைக்கும் இயக்கும் ஓர் சத்தி எனப் பராவற்கும் உரியானே - "இயங்கும் அனைத்திற்கும் இயக்குகின்ற ஒரு சக்தி நீ" என்று புகழத்தக்கவனே ; (இயக்கம் - இயங்குதல்); (பராவற்கு - பராவல்+கு - பராவுதற்கு; பராவல் - பராவுதல் = பரவுதல் = புகழ்தல்; துதித்தல்; வணங்குதல்); (பராவற்கும் - உம் - எச்சவும்மை; அசை என்றும் கொள்ளல் ஆம்); (திருவாசகம் - திருவம்மானை - 8.8.12 - "எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும்")
எடுத்த ஓர் வெற்பை அழுத்தி, மா-துட்டன் இசைத்த கீதத்தை மகிழ்வோனே - ஒப்பற்ற கயிலைமலையைப் பெயர்த்த பெரிய துஷ்டனான இராவணனை அந்த மலைமேல் விரலை ஊன்றி அழுத்தி நசுக்கிப், பின் அவன் பாடிய இசையைக் கேட்டு மகிழ்ந்தவனே; (வெற்பு - மலை); (துட்டன் - துஷ்டன்);
கயத்தையே பற்றி உரித்த வீரத்த - போர்செய்த யானையைப் பற்றி அதன் தோலை உரித்த வீரம் உடையவனே; (கயம் - யானை); (ஏ - அசை); (வீரத்தன் - வீரத்தனே - வீரம் உடையவனே; "வீர அத்தனே" என்று அகரம் தொகுத்தல் விகாரமாகவும் கருதலாம்); (கண்டம் - கண்டத்தன், என்று வருவதுபோல், வீரம் - வீரத்தன்); (திருவாசகம் - திருப்பொன்னூசல் - 8.16.4 - "நஞ்சமர் கண்டத்தன்"); (அத்தன் - தந்தை);
கயத்தை வேணிக்கண் உடையானே - கங்கையைச் சடையில் உடையவனே; (கயம் - நீர்நிலை; நீர்); (வேணி - சடை); (கண் - ஏழாம் வேற்றுமையுருபு); (சுந்தரர் தேவாரம் - 7.28.9 - "கயம் ஆரும் சடையாய்");
கடுத்த ஆலத்தை மடுத்த, ஏர் உற்ற களத்தில் நீலத்தை அணிவோனே - விரைந்து பரவிய, உண்ணலாகாத ஆலாகாலத்தை உண்ட, அழகிய கண்டத்தில் கருமையை அணிந்தவனே; (கடுத்தல் - விரைந்து ஓடுதல்; உறைத்தல்); (மடுத்தல் - உண்ணுதல்); (ஏர் - அழகு); (களம் - கண்டம்);
பெயர்ச்சிதான் அற்ற குறுக்கை வீரட்ட - நீங்காமல் குறுக்கை வீரட்டத்தில் எழுந்தருளியவனே; (பெயர்ச்சி - நீங்குதல்; பிரிதல்; இடமாறுகை);
பிழைத்த வேள் அட்ட விழியானே - குற்றம் செய்த மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண் உடையவனே; (பிழைத்தல் - குற்றம்செய்தல்); (வேள் - மன்மதன்); (அடுதல் - எரித்தல்; அழித்தல்);
பெணுக்கு ஒர் பாகத்தை அளித்த
பெணுக்கு ஒர் பாகத்தை அளித்த கோலத்த - உமாதேவிக்குத் திருமேனியில் ஒரு பாகத்தை அளித்த வடிவம் உடையவனே; (பெணுக்கு - பெண்ணுக்கு; இடைக்குறை விகாரம்); (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);
பிறப்பு சாவு அற்ற பெருமானே - பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமானே; (பிறப்பு சாவு - பிறப்பும் சாவும்; உம்மைத்தொகையில் வல்லெழுத்து மிகாது);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment