2013-08-12
N.026 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2013
நீரிரு - மாமகிழ்வாய் - மடக்கு
--------------
(வெண்பா)
நீரிரு வானதியை நீள்சடை வைத்தவரை
நீரிரு தாரத்தீர் சூளுறுங்கால் - நீரிரு
மாமகிழ்வாய் என்றுரைக்க வல்லவர்சொல் பாடவரும்
மாமகிழ்வாய் வந்தித்து வாழ்.
பதம் பிரித்து:
நீர் இரு-வான் நதியை நீள்சடை வைத்தவரை,
"நீர் இரு-தாரத்தீர்! சூளுறுங்கால் - நீர் இரு(ம்)
மா மகிழ்வாய்" என்று உரைக்க வல்லவர் சொல் பாட வரும்
மா மகிழ்வு; ஆய்; வந்தித்து வாழ்.
நீர் இரு-வான்-நதியை நீள்-சடை வைத்தவரை - நீர் நிறைந்த பெரிய கங்கையை நீண்ட சடையில் தாங்கியவரை; (இருமை - பெருமை); (வானதி - வான்நதி - கங்கை); (சம்பந்தர் தேவாரம் - 1.128 - திருவெழுகூற்றிருக்கை - "இருநதி அரவமோ டொருமதி சூடினை"); ("இருமை + வானதி = இருவானதி" என்று புணரும்; உதாரணம்: இருமை + விசும்பு = இருவிசும்பு);
நீர் இரு-தாரத்தீர் - நீங்கள் இரண்டு மனைவியரை உடையவர்; (தாரம் - மனைவி);
சூளுறுங்கால் - (நான்) சபதஞ் செய்யும்போது;
நீர் இரும் மா-மகிழ்-வாய் - நீங்கள் அழகிய மகிழமரத்தில் இருங்கள்; (இரும் - இருங்கள்); (மகிழ் - மகிழமரம்); (வாய் - ஏழாம் வேற்றுமை உருபு); (இரும் + மா = இருமா; புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும்);
என்று உரைக்க வல்லவர் சொல் பாட வரும் மா மகிழ்வு - என்று சொன்ன சுந்தரர் பாடியருளிய தேவாரத்தைப் பாடினால் பேரின்பம் வந்தடையும்;
ஆய்; வந்தித்து வாழ் - (இதனைச்) சிந்திப்பாயாக; சுந்தரரையும் சிவபெருமானையும் வந்தனைசெய்து வாழ்வாயாக; (ஆய்தல் - ஆராய்தல்; சிந்தித்தல்);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment