Monday, November 7, 2022

S.139 - சிவன் - முருகன் - சிலேடை

2013-03-26 (பங்குனி உத்தரம்)

S.139 - சிவன் - முருகன் - சிலேடை

-------------

நெற்றிக்கண் தோன்றிடும் நீர்தாங்கும் இவ்வுலகு

சுற்றிவரு மான்மலரான் தோத்திரிக்கும் - பெற்றியினன்

காவடி வேலன்பன் மாமலையாள் மைந்தனவன்

சேவற் கொடியன் சிவன்.


சொற்பொருள்:

மான்மலரான் - 1. மான் மலரான்; / 2. மால் மலரான்;

மான் - பெரியோன்; தலைவன்; (எம்மான் முதலிய பிரயோகங்களைக் காண்க);

தோத்திரித்தல் - துதித்தல்;

காவடிவேலன்பன்மா - 1. கா வடிவேலன், பல் மா; / 2. கா வடிவு ஏல் அன்பன், மா;

கா - காத்தல்;

வடி - கூர்மை;

ஏல் - ஏற்றல்;

மலையாள் - 1. மலை ஆள் (மலையை ஆளும்); / 2. மலையாள் (பார்வதி);

மைந்தன் - 1. மகன்; இளைஞன்; / 2. கணவன்;


முருகன்:

நெற்றிக்கண் தோன்றிடும், நீர் தாங்கும்; இவ்வுலகு

சுற்றிவரு மான்; மலரான் தோத்திரிக்கும் பெற்றியினன்;

கா வடிவேலன்; பல்-மா-மலை ஆள் மைந்தன்; அவன்

சேவற் கொடியன் சிவன்.


(ஈசனது) நெற்றிக்கண்ணில் தோன்றியவன், கங்கையால் தாங்கப்பெற்றவன்; (மாங்கனி வேண்டி மயில்மேல் ஏறி) இந்த உலகைச் சுற்றிவந்த பெருமான்; (இவ்வுலகு சுற்றிவருமான்மலரான் = "இவ்வுலகு சுற்றிவருமால்; மலரான்" என்றும் பிரிக்கலாம். "சுற்றிவருமால்" = சுற்றிவருவான்; "ஆல்" - அசைச்சொல்); (பிரணவப்-பொருளை அறியாத பிரமனைச் சிறையில் அடைத்துப் பின்) பிரமனால் துதிக்கப்படும் பெருமையை உடையவன்; காக்கும் கூரிய வேலை உடையவன்; பல அழகிய மலைகளில் வீற்றிருக்கும் குமரன் (குன்றுதோறாடும் குமரன்); சேவற்கொடி உடைய முருகன்.


சிவன்:

நெற்றிக்கண் தோன்றிடும்; நீர் தாங்கும்; இவ்வுலகு

சுற்றிவரும்; மால், மலரான் தோத்திரிக்கும் பெற்றியினன்;

கா வடிவு ஏல் அன்பன்; மாமலையாள் மைந்தன்; அவன்

சேவற் கொடியன் சிவன்.


நெற்றியில் கண் உடையவன், முடிமேல் கங்கையைத் தாங்குவான்; உலகமக்கள் வலம்செய்து வணங்குவர்; (அடிமுடி தேடிய) திருமாலாலும் பிரமனாலும் துதிக்கப்படும் பெருமையினான்; (அன்பர் விரும்பிய வண்ணம் அவர்களைக்) காக்கும் உருவம் ஏற்கும் அன்புடையவன்; அழகிய மலைமகள் கணவன்; சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment