2013-11-15
T.176 - ஐயாறு (திருவையாறு) - மாடிளங்கொடி
--------------
(வண்ணவிருத்தம்;
தான தந்தன தானான தானன
தான தந்தன தானான தானன
தான தந்தன தானான தானன .. தனதான)
(நாத விந்துக லாதீ நமோநம - திருப்புகழ் - திருவாவினன்குடி)
மாடி ளங்கொடி யார்மாது பேர்புகழ்
.. .. .. நாளு(ம்) நெஞ்சினி லேயாசை யாகிட
.. .. மாயை என்றறி யாதேயி ராவொடு .. பகல்வேளை
.. வாடி இங்கிடர் தீராது தீவினை
.. .. .. மூடி நொந்துழ லாதேச தாமொழி
.. .. மாலை கொண்டிரு தாளேப ராவிட .. அருளாயே
நேடி உம்பரின் மேலோடு நான்முகன்
.. .. .. நீணி லங்குடை மாமாய னார்தொழ
.. .. நேரி லஞ்சுட ரானாய்கு ராவொடு .. திரையாரும்
.. நீரி ளம்பிறை ஆர்வேணி யாய்மறை
.. .. .. ஆக மம்பகர் நாவாப ராபர
.. .. நீடும் அன்பொடு நாடோறும் ஏர்மலி .. மலர்தூவிப்
பாடி நின்பத மேயோரு(ம்) மாணியை
.. .. .. ஓடி வந்தடை கார்மேதி யானுயிர்
.. .. பாற அன்றுதை காலாவ ராவணி .. திருமார்பா
.. பாரி டம்பல சூழ்கானி லேநடம்
.. .. .. ஆடி டுங்கழ லார்பாத ஓர்சுடு
.. .. பாணம் உந்திட மாநாகம் ஆர்சிலை .. தொடுவோனே
தோடி லங்கிய பூவாளி யாலமர்
.. .. .. ஆடு பண்புடை வேள்வேவ வேமுனி
.. .. தூய மங்கையை ஓர்பாக மாமகிழ் .. மணவாளா
.. சோறி ரந்திடு(ம்) மாதேவ காவிரி
.. .. .. ஆறும் வண்டறை ஓவாத பூமலி
.. .. சோலை யுந்திகழ் சீராரை யாறுறை .. பெருமானே.
பதம் பிரித்து:
மாடு, இளங்கொடி ஆர் மாது, பேர் புகழ்,
.. .. .. நாளு(ம்) நெஞ்சினிலே ஆசை ஆகிட,
.. .. மாயை என்று அறியாதே இராவொடு பகல்வேளை
.. வாடி, இங்கு இடர் தீராது, தீவினை
.. .. .. மூடி, நொந்து உழலாதே, சதா மொழி
.. .. மாலை கொண்டு இருதாளே பராவிட அருளாயே;
நேடி உம்பரின்மேல் ஓடு நான்முகன்,
.. .. .. நீள்-நிலம் குடை மா-மாயனார் தொழ,
.. .. நேர் இல் அஞ்சுடர் ஆனாய்; குராவொடு திரை ஆரும்
.. நீர் இளம்பிறை ஆர் வேணியாய்; மறை
.. .. .. ஆகமம் பகர் நாவா; பராபர;
.. .. நீடும் அன்பொடு நாள்தோறும் ஏர் மலி மலர் தூவிப்
பாடி, நின் பதமே ஓரு(ம்) மாணியை
.. .. .. ஓடி வந்தடை கார்-மேதியான் உயிர்
.. .. பாற அன்று உதை காலா; அரா அணி திருமார்பா;
.. பாரிடம் பல சூழ் கானிலே நடம்
.. .. .. ஆடிடும் கழல் ஆர் பாத; ஓர் சுடு
.. .. பாணம் உந்திட மாநாகம் ஆர்-சிலை தொடுவோனே;
தோடு இலங்கிய பூவாளியால் அமர்
.. .. .. ஆடு பண்புடை வேள் வேவவே முனி
.. .. தூய; மங்கையை ஓர் பாகமா மகிழ் மணவாளா;
.. சோறு இரந்திடு(ம்) மாதேவ; காவிரி
.. .. .. ஆறும், வண்டு-அறை ஓவாத பூ மலி
.. .. சோலையும் திகழ் சீர் ஆர் ஐயாறு உறை பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
மாடு, இளங்கொடி ஆர் மாது, பேர் புகழ், நாளு(ம்) நெஞ்சினிலே ஆசை ஆகிட - பொருள், இளங்கொடி போன்ற பெண், பேர் புகழ், என்று தினமும் மனத்தில் பல ஆசைகள் பெருக; (மாடு - செல்வம்); (ஆர்தல் - ஒத்தல்);
மாயை என்று அறியாதே இராவொடு பகல்வேளை வாடி, இங்கு இடர் தீராது, தீவினை மூடி, நொந்து உழலாதே - இது மாயை என்று அறியாமல் இரவும் பகலும் வாடி, இங்குத் தீராத துன்பம் அடைந்து, தீவினையால் மூடப்பெற்று, வருந்தி உழலாமல்;
சதா மொழிமாலை கொண்டு இருதாளே பராவிட அருளாயே - எப்பொழுதும் பாமாலைகளால் உன் இருதிருவடிகளையே போற்றித் துதிக்க அருள்வாயாக;
நேடி உம்பரின்மேல் ஓடு நான்முகன், நீள்-நிலம் குடை மா-மாயனார் தொழ, நேர் இல் அஞ்சுடர் ஆனாய் - (அடிமுடியைத்) தேடி ஆகாயத்தில் மேலே சென்ற பிரமனும், பெரிய நிலத்தைக் குடைந்து சென்ற திருமாலும் தொழும்படி, ஒப்பற்ற அழகிய ஜோதியாய் நின்றவனே; (நேடுதல் - தேடுதல்); (உம்பர் - ஆகாயம்); (நீணிலம் - நீள் நிலம் - நீண்டவுலகு - பூமி); (மாயன் - திருமால்); (நேர் - நிகர்; ஒப்பு); (அம் - அழகு); (ஆனாய் - ஆனவனே);
குராவொடு திரை ஆரும் நீர் இளம்பிறை ஆர் வேணியாய் - குராமலர், அலை மிகுந்த கங்கை, இளந்திங்கள் இவற்றை அணிந்த சடையினனே; (குரா - குராமலர்); (திரை - அலை); (வேணி - சடை);
மறை ஆகமம் பகர் நாவா - வேதங்களையும் ஆகமங்களையும் ஓதியவனே; (பகர்தல் - சொல்லுதல்);
பராபர - பாரபரனே - பரம்பொருளே;
நீடும் அன்பொடு நாள்தோறும் ஏர் மலி மலர் தூவிப் பாடி - மிகுந்த பக்தியோடு தினமும் அழகு மிக்க மலர்களைத் தூவித் துதிகள் பாடி; (நீடுதல் - நீள்தல்); (ஏர் - அழகு);
நின் பதமே ஓரு(ம்) மாணியை ஓடி வந்தடை கார்-மேதியான் உயிர் பாற அன்று உதை காலா - உன் திருவடியையே தியானித்து வணங்கிய மார்க்கண்டேயரைக் கொல்ல விரைந்துவந்த கரிய எருமைவாகனம் உடைய காலன் இறக்கும்படி அன்று அவனை உதைத்த காலனே (காலகாலனே); (ஓர்தல் - எண்ணுதல்); (மாணி - இங்கே மார்க்கண்டேயர்); (மாணியை ஓடி - 1. மாணியைக் கொல்ல ஓடி; 2. மாணியிடம் ஓடி; உருபுமயக்கம்); (கார் - கருமை); (மேதி - எருமை); (பாறுதல் - அழிதல்);
அரா அணி திருமார்பா - பாம்பை மார்பில் அணிந்தவனே;
பாரிடம் பல சூழ் கானிலே நடம் ஆடிடும் கழல் ஆர் பாத - பல பூதங்கள் சூழும் சுடுகாட்டில் கூத்து ஆடும், கழல் அணிந்த திருப்பாதனே; (பாரிடம் - பூதம்); (கான் - காடு - சுடுகாடு);
ஓர் சுடு-பாணம் உந்திட மா-நாகம் ஆர்-சிலை தொடுவோனே - (முப்புரங்களை) எரிக்கும் கணையொன்றை எய்யப் பெரிய பாம்பைக் கட்டிய வில்லை ஏந்தியவனே; (உந்துதல் - செலுத்துதல்); (ஆர்த்தல் - கட்டுதல்); (சிலை - வில்);
தோடு இலங்கிய பூவாளியால் அமர் ஆடு பண்புடை வேள் வேவவே முனி தூய - இதழ்கள் திகழும் மலர்கள் என்ற அம்புகளால் போர்செய்யும் குணமுடைய மன்மதன் வெந்து சாம்பலாகும்படி அவனைக் கோபித்த தூயனே; (தோடு - பூவிதழ்); (வாளி - அம்பு); (அமர் - போர்); (ஆடுதல் - செய்தல்); (வேள் - மன்மதன்); (முனிதல் - கோபித்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.2.3 - "தோடார் மலர்க்கொன்றையும் துன்னெருக்கும்");
மங்கையை ஓர் பாகமா மகிழ் மணவாளா - உமையை ஒரு பாகமாக மகிழும் மணவாளனே; (பாகமா - பாகமாக);
சோறு இரந்திடு(ம்) மாதேவ - பிச்சை யாசிக்கும் மகாதேவனே; ("சோறு இரந்து இடும் மாதேவ - பிச்சையெடுத்து அடியார்க்கு உணவிடும் மகாதேவனே" என்றும் பொருள்கொள்ளலாம்; ஈசன் திருக்கச்சூரில் உணவை இரந்து பெற்றுச் சுந்தரருக்கு இட்ட வரலாற்றைக் காண்க; பெரியபுராணம் - ஏயர்கோன்கலிக்காமர் புராணம் - 12.29.177 - "இப்பொழுதே சோறிரந்திங்கு யான் உமக்குக் கொணர்கின்றேன்");
காவிரியாறும், வண்டு-அறை ஓவாத பூ மலி-சோலையும் திகழ் சீர் ஆர் ஐயாறு உறை பெருமானே - காவிரிநதியும், வண்டுகள் செய்யும் ஒலி எப்பொழுதும் இருக்கும் பூக்கள் நிறைந்த சோலையும் விளங்கும் அழகிய திருவையாற்றில் எழுந்தருளிய பெருமானே; (சிறை - சிறகு); (அறை - ஓசை); (சம்பந்தர் தேவாரம் - 1.80.40 - "சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய"); (சீர் - அழகு; புகழ்; பெருமை);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment