Tuesday, November 29, 2022

T.176 - ஐயாறு (திருவையாறு) - மாடிளங்கொடி

2013-11-15

T.176 - ஐயாறு (திருவையாறு) - மாடிளங்கொடி

--------------

(வண்ணவிருத்தம்;

தான தந்தன தானான தானன

தான தந்தன தானான தானன

தான தந்தன தானான தானன .. தனதான)

(நாத விந்துக லாதீ நமோநம - திருப்புகழ் - திருவாவினன்குடி)


மாடி ளங்கொடி யார்மாது பேர்புகழ்

.. .. .. நாளு(ம்) நெஞ்சினி லேயாசை யாகிட

.. .. மாயை என்றறி யாதேயி ராவொடு .. பகல்வேளை

.. வாடி இங்கிடர் தீராது தீவினை

.. .. .. மூடி நொந்துழ லாதேச தாமொழி

.. .. மாலை கொண்டிரு தாளேப ராவிட .. அருளாயே

நேடி உம்பரின் மேலோடு நான்முகன்

.. .. .. நீணி லங்குடை மாமாய னார்தொழ

.. .. நேரி லஞ்சுட ரானாய்கு ராவொடு .. திரையாரும்

.. நீரி ளம்பிறை ஆர்வேணி யாய்மறை

.. .. .. ஆக மம்பகர் நாவாப ராபர

.. .. நீடும் அன்பொடு நாடோறும் ஏர்மலி .. மலர்தூவிப்

பாடி நின்பத மேயோரு(ம்) மாணியை

.. .. .. ஓடி வந்தடை கார்மேதி யானுயிர்

.. .. பாற அன்றுதை காலாவ ராவணி .. திருமார்பா

.. பாரி டம்பல சூழ்கானி லேநடம்

.. .. .. ஆடி டுங்கழ லார்பாத ஓர்சுடு

.. .. பாணம் உந்திட மாநாகம் ஆர்சிலை .. தொடுவோனே

தோடி லங்கிய பூவாளி யாலமர்

.. .. .. ஆடு பண்புடை வேள்வேவ வேமுனி

.. .. தூய மங்கையை ஓர்பாக மாமகிழ் .. மணவாளா

.. சோறி ரந்திடு(ம்) மாதேவ காவிரி

.. .. .. ஆறும் வண்டறை ஓவாத பூமலி

.. .. சோலை யுந்திகழ் சீராரை யாறுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

மாடு, இளங்கொடி ஆர் மாது, பேர் புகழ்,

.. .. .. நாளு(ம்) நெஞ்சினிலே ஆசை ஆகிட,

.. .. மாயை என்று அறியாதே இராவொடு பகல்வேளை

.. வாடி, இங்கு இடர் தீராது, தீவினை

.. .. .. மூடி, நொந்து உழலாதே, சதா மொழி

.. .. மாலை கொண்டு இருதாளே பராவிட அருளாயே;

நேடி உம்பரின்மேல் ஓடு நான்முகன்,

.. .. .. நீள்-நிலம் குடை மா-மாயனார் தொழ,

.. .. நேர் இல் அஞ்சுடர் ஆனாய்; குராவொடு திரை ஆரும்

.. நீர் இளம்பிறை ஆர் வேணியாய்; மறை

.. .. .. ஆகமம் பகர் நாவா; பராபர;

.. .. நீடும் அன்பொடு நாள்தோறும் ஏர் மலி மலர் தூவிப்

பாடி, நின் பதமே ஓரு(ம்) மாணியை

.. .. .. ஓடி வந்தடை கார்-மேதியான் உயிர்

.. .. பாற அன்று உதை காலா; அரா அணி திருமார்பா;

.. பாரிடம் பல சூழ் கானிலே நடம்

.. .. .. ஆடிடும் கழல் ஆர் பாத; ஓர் சுடு

.. .. பாணம் உந்திட மாநாகம் ஆர்-சிலை தொடுவோனே;

தோடு இலங்கிய பூவாளியால் அமர்

.. .. .. ஆடு பண்புடை வேள் வேவவே முனி

.. .. தூய; மங்கையை ஓர் பாகமா மகிழ் மணவாளா;

.. சோறு இரந்திடு(ம்) மாதேவ; காவிரி

.. .. .. ஆறும், வண்டு-அறை ஓவாத பூ மலி

.. .. சோலையும் திகழ் சீர் ஆர் ஐயாறு உறை பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

மாடு, ளங்கொடி ர் மாது, பேர் புகழ், நாளு(ம்) நெஞ்சினிலேசை கிட - பொருள், இளங்கொடி போன்ற பெண், பேர் புகழ், என்று தினமும் மனத்தில் பல ஆசைகள் பெருக; (மாடு - செல்வம்); (ஆர்தல் - ஒத்தல்);

மாயை என்று அறியாதேராவொடு பகல்வேளை வாடி, இங்கு இடர் தீராது, தீவினை மூடி, நொந்துழலாதே - இது மாயை என்று அறியாமல் இரவும் பகலும் வாடி, இங்குத் தீராத துன்பம் அடைந்து, தீவினையால் மூடப்பெற்று, வருந்தி உழலாமல்;

சதா மொழிமாலை கொண்டு இருதாளே பராவி ருளாயே - எப்பொழுதும் பாமாலைகளால் உன் இருதிருவடிகளையே போற்றித் துதிக்க அருள்வாயாக;

நேடி உம்பரின்மேல் ஓடு நான்முகன், நீள்-நிம் குடை மா-மாயனார் தொழ, நேர் இல் அஞ்சுர் ஆனாய் - (அடிமுடியைத்) தேடி ஆகாயத்தில் மேலே சென்ற பிரமனும், பெரிய நிலத்தைக் குடைந்து சென்ற திருமாலும் தொழும்படி, ஒப்பற்ற அழகிய ஜோதியாய் நின்றவனே; (நேடுதல் - தேடுதல்); (உம்பர் - ஆகாயம்); (நீணிலம் - நீள் நிலம் - நீண்டவுலகு - பூமி); (மாயன் - திருமால்); (நேர் - நிகர்; ஒப்பு); (அம் - அழகு); (ஆனாய் - ஆனவனே);

குராவொடு திரைரும் நீர் இளம்பிறை ஆர் வேணியாய் - குராமலர், அலை மிகுந்த கங்கை, இளந்திங்கள் இவற்றை அணிந்த சடையினனே; (குரா - குராமலர்); (திரை - அலை); (வேணி - சடை);

மறை ஆகமம் பகர் நாவா - வேதங்களையும் ஆகமங்களையும் ஓதியவனே; (பகர்தல் - சொல்லுதல்);

பராபர - பாரபரனே - பரம்பொருளே;

நீடும் அன்பொடு நாள்தோறும் ஏர் மலி மலர் தூவிப் பாடி - மிகுந்த பக்தியோடு தினமும் அழகு மிக்க மலர்களைத் தூவித் துதிகள் பாடி; (நீடுதல் - நீள்தல்); (ஏர் - அழகு);

நின் பதமே ஓரு(ம்) மாணியை ஓடி வந்தடை கார்-மேதியான் உயிர் பாற அன்றுதை காலா - உன் திருவடியையே தியானித்து வணங்கிய மார்க்கண்டேயரைக் கொல்ல விரைந்துவந்த கரிய எருமைவாகனம் உடைய காலன் இறக்கும்படி அன்று அவனை உதைத்த காலனே (காலகாலனே); (ஓர்தல் - எண்ணுதல்); (மாணி - இங்கே மார்க்கண்டேயர்); (மாணியை ஓடி - 1. மாணியைக் கொல்ல ஓடி; 2. மாணியிடம் ஓடி; உருபுமயக்கம்); (கார் - கருமை); (மேதி - எருமை); (பாறுதல் - அழிதல்);

அராணி திருமார்பா - பாம்பை மார்பில் அணிந்தவனே;

பாரிடம் பல சூழ் கானிலே நடம் ஆடிடும் கழல் ஆர் பாத - பல பூதங்கள் சூழும் சுடுகாட்டில் கூத்து ஆடும், கழல் அணிந்த திருப்பாதனே; (பாரிடம் - பூதம்); (கான் - காடு - சுடுகாடு);

ஓர் சுடு-பாணம் உந்திட மா-நாகம் ஆர்-சிலை தொடுவோனே - (முப்புரங்களை) எரிக்கும் கணையொன்றை எய்யப் பெரிய பாம்பைக் கட்டிய வில்லை ஏந்தியவனே; (உந்துதல் - செலுத்துதல்); (ஆர்த்தல் - கட்டுதல்); (சிலை - வில்);

தோடு இலங்கிய பூவாளியால் அமர் ஆடு பண்புடை வேள் வேவவே முனி தூய - இதழ்கள் திகழும் மலர்கள் என்ற அம்புகளால் போர்செய்யும் குணமுடைய மன்மதன் வெந்து சாம்பலாகும்படி அவனைக் கோபித்த தூயனே; (தோடு - பூவிதழ்); (வாளி - அம்பு); (அமர் - போர்); (ஆடுதல் - செய்தல்); (வேள் - மன்மதன்); (முனிதல் - கோபித்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.2.3 - "தோடார் மலர்க்கொன்றையும் துன்னெருக்கும்");

மங்கையை ஓர் பாகமா மகிழ் மணவாளா - உமையை ஒரு பாகமாக மகிழும் மணவாளனே; (பாகமா - பாகமாக);

சோறு இந்திடு(ம்) மாதேவ - பிச்சை யாசிக்கும் மகாதேவனே; ("சோறு இரந்து இடும் மாதேவ - பிச்சையெடுத்து அடியார்க்கு உணவிடும் மகாதேவனே" என்றும் பொருள்கொள்ளலாம்; ஈசன் திருக்கச்சூரில் உணவை இரந்து பெற்றுச் சுந்தரருக்கு இட்ட வரலாற்றைக் காண்க; பெரியபுராணம் - ஏயர்கோன்கலிக்காமர் புராணம் - 12.29.177 - "இப்பொழுதே சோறிரந்திங்கு யான் உமக்குக் கொணர்கின்றேன்");

காவிரியாறும், வண்டு-றை ஓவாத பூ மலி-சோலையும் திகழ் சீர் ஆர் ஐயாறுறை பெருமானே - காவிரிநதியும், வண்டுகள் செய்யும் ஒலி எப்பொழுதும் இருக்கும் பூக்கள் நிறைந்த சோலையும் விளங்கும் அழகிய திருவையாற்றில் எழுந்தருளிய பெருமானே; (சிறை - சிறகு); (அறை - ஓசை); (சம்பந்தர் தேவாரம் - 1.80.40 - "சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய"); (சீர் - அழகு; புகழ்; பெருமை);


வி. சுப்பிரமணியன்

----------- -----------


Tuesday, November 22, 2022

T.175 - கற்குடி (உய்யக்கொண்டான்மலை) - அந்தோ சென்றீர்

2013-10-17

T.175 - கற்குடி (உய்யக்கொண்டான்மலை) - அந்தோ சென்றீர்

--------------

(வண்ணவிருத்தம்;

தந்தா தந்தா தந்தா தந்தா

தந்தா தந்தத் .. தனதான)

(தண்டேனுண்டே வண்டார் - திருப்புகழ் - திருச்செந்தூர்)


அந்தோ சென்றீர் என்றே பெண்டோ

.. .. டன்பா ரும்புத் .. திரர்கூவி

.. அம்போ தென்றே கந்தூய் வெங்கான்

.. .. அங்கே கொண்டிட் .. டெரியாமுன்

செந்தேன் மென்பூ இன்பால் கொண்டே

.. .. செந்தாள் வந்தித் .. திடுவேனே

.. தென்பால் வெங்கோன் நெஞ்சே விண்டாய்

.. .. திண்போர் வெங்கட் .. பசுவேறீ

நந்தாய் எங்கோன் என்றார் தஞ்சாய்

.. .. நஞ்சார் கண்டக் .. கறையானே

.. நம்பா எண்டோள் அண்டா என்றே

.. .. நைந்தார் தங்கட் .. கணியாகி

வந்தே தந்தீர் எந்தாய் தண்சேர்

.. .. மஞ்சா ருங்கற் .. குடியானே

.. மைந்தா பெண்பா கஞ்சேர் பண்பா

.. .. மங்கா இன்பப் .. பெருமானே.


பதம் பிரித்து:

"அந்தோ, சென்றீர்" என்றே பெண்டோடு

.. .. அன்பு ஆரும் புத்திரர் கூவி,

.. அம்-போது என் தேகம் தூய், வெங்கான்

.. .. அங்கே கொண்டு இட்டு எரியாமுன்,

செந்தேன் மென்-பூ இன்-பால் கொண்டே

.. .. செந்தாள் வந்தித்திடுவேனே;

.. தென்பால் வெங்கோன் நெஞ்சே விண்டாய்;

.. .. திண்-போர் வெங்கட் பசுவேறீ;

"நம் தாய், எம் கோன்" என்றார் தஞ்சாய்,

.. .. நஞ்சு ஆர் கண்டக்-கறையானே;

.. "நம்பா, எண்-தோள் அண்டா" என்றே

.. .. நைந்தார்-தங்கட்கு அணி ஆகி

வந்து ஏதம் தீர் எந்தாய்; தண்-சேர்

.. .. மஞ்சு ஆரும் கற்குடியானே;

.. மைந்தா; பெண் பாகஞ் சேர் பண்பா;

.. .. மங்கா இன்பப் பெருமானே.


"அந்தோ, சென்றீர்" என்றே பெண்டோடு ன்பு ஆரும் புத்திரர் கூவி - "ஐயோ போய்விட்டீரே" என்று மனைவியும் அன்புடைய மகன்களும் கூவி அழுது; (அந்தோ - அதிசய இரக்கச் சொல்); (பெண்டு - பெண்; மனைவி);

அம்-போது என் தேகம் தூய் - அழகிய பூக்களை என் உடம்பின்மேல் தூவி; (அம் - அழகிய); (போது - பூ); (தூய் - தூவி); (அப்பர் தேவாரம் - 6.61.2 - "கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சினுள்ளே");

வெங்கான் அங்கே கொண்டு இட்டு ரியாமுன் - கொடிய சுடுகாட்டில் கொண்டு வைத்து எரிப்பதன்முன்பே; (வெங்கான் - கொடிய சுடுகாடு); (அப்பர் தேவாரம் - 5.47.3 - "வெங்கானில் ஆடுவர் கச்சியேகம்பரே"); (அங்கே - அசை என்று கொள்ளலாம்);

செந்தேன் மென்-பூ இன்-பால் கொண்டே செந்தாள் வந்தித்திடுவேனே - சிறந்த தேன், மென்மையான பூக்கள், இனிய பால் இவற்றால் உன் சிவந்த திருவடியை வழிபடுவேன்; (கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு);

தென்பால் வெங்கோன் நெஞ்சே விண்டாய் - தென்திசைக்குத் தலைவனும் கொடியவனுமான காலனது மார்பை உதைத்துப் பிளந்தவனே; (தென் பால் - தென் திசை); (வெம்மை - கொடுமை); (விள்தல் - பிளத்தல்);

திண்-போர் வெங்கட் பசுவேறீ - வலிய, போர்செய்யும் சினம் மிக்க எருதை வாகனமாக உடையவனே; (திண் - வலிய); (வெங்கட்பசு - வெங்கண்+பசு); (வெங்கண் - கோபம் மிக்க); (பசு - இங்கே எருது என்ற பொருளில்); (சம்பந்தர் தேவாரம் - 2.85.9 - "பசுவேறும் எங்கள் பரமன்"); (ஏறீ - ஏறியவனே);

"ம் தாய், எம் கோன்" என்றார் தஞ்சாய், நஞ்சு ஆர் ண்டக்-கறையானே - "எங்கள் தாய், எங்கள் தலைவன்" என்றெல்லாம் இறைஞ்சிய தேவர்களுக்குத் தஞ்சம் அளித்து, நஞ்சை உண்ட நீலகண்டனே; (தஞ்சு - தஞ்சம்; பற்றுக்கோடு); (ஆர்தல் - உண்தல்); ("நந்தாய் - அழியாதவனே, இறவாதவனே" என்றும் பொருள்கொள்ளலாம்; நந்துதல் - சாதல்; அவிதல்);

"நம்பா, எண்-தோள் அண்டா" என்றே நைந்தார்-தங்கட்கு அணிகி வந்து ஏம் தீர் எந்தாய் - "நம்பனே, எட்டுப் புஜங்கள் உடைய கடவுளே" என்று மனம் உருகும் அன்பர்களுக்குப் பக்கத்தில் இருந்து அவர்களது துன்பத்தைத் தீர்க்கும் எம் தந்தையே; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்); (அண்டன் - அண்டங்களுக்கெல்லாம் தலைவன்); (நைதல் - மனம் உருகுதல்); (அணி - சமீபத்தில்); (ஏதம் - துன்பம்; குற்றம்);

தண்-சேர் மஞ்சு ஆரும் கற்குடியானே - குளிர்ச்சி பொருந்திய மேகம் வந்தடையும் கற்குடிமலைமேல் எழுந்தருளியவனே; (தண் - குளிர்ச்சி); (மஞ்சு - மேகம்);

மைந்தா - வீரனே; அழகனே; (மைந்தன் - இளையோன்; வீரன்);

பெண் பாகம் சேர் பண்பா - உமையை ஒரு பாகமாக உடையவனே;

மங்கா இன்பப் பெருமானே - அழியாத இன்பமே வடிவமாக உடைய பெருமானே; (மங்குதல் - குறைதல்; கெடுதல்);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

T.174 - குறுக்கை வீரட்டம் - மயக்க மாசுற்ற

2013-09-28

T.174 - குறுக்கை வீரட்டம் - மயக்க மாசுற்ற

(கொருக்கை)

--------------

(வண்ணவிருத்தம்;

தனத்த தானத்த தனத்த தானத்த

தனத்த தானத்த .. தனதான)


மயக்க மாசுற்ற மனத்தி னால்மிக்க

.. .. வருத்த மேயுற்று .. மரியாமல்

.. மணத்தல் நீடித்த தமிழ்ச்சொ லால்நித்தல்

.. .. வழுத்து ஞானத்தை .. அருளாயே

இயக்கம் யாவைக்கும் இயக்கும் ஓர்சத்தி

.. .. எனப்ப ராவற்கும் .. உரியானே

.. எடுத்த ஓர்வெற்பை அழுத்தி மாதுட்டன்

.. .. இசைத்த கீதத்தை .. மகிழ்வோனே

கயத்தை யேபற்றி உரித்த வீரத்த

.. .. கயத்தை வேணிக்க .. ணுடையானே

.. கடுத்த ஆலத்தை மடுத்த ஏருற்ற

.. .. களத்தில் நீலத்தை .. அணிவோனே

பெயர்ச்சி தானற்ற குறுக்கை வீரட்ட

.. .. பிழைத்த வேளட்ட .. விழியானே

.. பெணுக்கொர் பாகத்தை அளித்த கோலத்த

.. .. பிறப்பு சாவற்ற .. பெருமானே.


பதம் பிரித்து:

மயக்க(ம்) மாசு உற்ற மனத்தினால் மிக்க

.. .. வருத்தமே உற்று மரியாமல்,

.. மணத்தல் நீடித்த தமிழ்ச்சொலால் நித்தல்

.. .. வழுத்து ஞானத்தை அருளாயே;

இயக்கம் யாவைக்கும் இயக்கும் ஓர் சத்தி

.. .. எனப் பராவற்கும் உரியானே;

.. எடுத்த ஓர் வெற்பை அழுத்தி, மா-துட்டன்

.. .. இசைத்த கீதத்தை மகிழ்வோனே;

கயத்தையே பற்றி உரித்த வீரத்த;

.. .. கயத்தை வேணிக்கண் உடையானே;

.. கடுத்த ஆலத்தை மடுத்த ஏர் உற்ற

.. .. களத்தில் நீலத்தை அணிவோனே;

பெயர்ச்சிதான் அற்ற குறுக்கை வீரட்ட;

.. .. பிழைத்த வேள் அட்ட விழியானே;

.. பெணுக்கு ஒர் பாகத்தை அளித்த கோலத்த;

.. .. பிறப்பு சாவு அற்ற பெருமானே.


மயக்க(ம்) மாசுற்ற மனத்தினால் மிக்க வருத்தமேற்று மரியாமல், - அறியாமையும் அழுக்குகளும் இருக்கும் மனத்தால் நான் மிகுந்த வருத்தமே அடைந்து, வாழ்நாளும் முடிந்து இறந்தொழியாமல்; (மயக்கம் - அறியாமை); (மாசு - அழுக்கு); (மயக்கமாசு - மயக்கமாகிய மாசு - என்றும் பொருள்கொள்ளலாம்); (மரித்தல் - சாதல்);

மணத்தல் நீடித்த தமிழ்ச்சொலால் நித்தல் வழுத்து ஞானத்தை அருளாயே - மணம் நிலைத்த தமிழ்ப்பாமாலைகளால் உன்னை எந்நாளும் வழிபடும் அறிவை அருள்வாயாக; (நீடித்தல் - நிலைநிற்றல்); (நித்தல் - எந்நாளும்);

இயக்கம் யாவைக்கும் இயக்கும் ஓர் சத்தி எனப் பராவற்கும் உரியானே - "இயங்கும் அனைத்திற்கும் இயக்குகின்ற ஒரு சக்தி நீ" என்று புகழத்தக்கவனே ; (இயக்கம் - இயங்குதல்); (பராவற்கு - பராவல்+கு - பராவுதற்கு; பராவல் - பராவுதல் = பரவுதல் = புகழ்தல்; துதித்தல்; வணங்குதல்); (பராவற்கும் - உம் - எச்சவும்மை; அசை என்றும் கொள்ளல் ஆம்); (திருவாசகம் - திருவம்மானை - 8.8.12 - "எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும்")

எடுத்த ஓர் வெற்பை அழுத்தி, மா-துட்டன் இசைத்த கீதத்தை மகிழ்வோனே - ஒப்பற்ற கயிலைமலையைப் பெயர்த்த பெரிய துஷ்டனான இராவணனை அந்த மலைமேல் விரலை ஊன்றி அழுத்தி நசுக்கிப், பின் அவன் பாடிய இசையைக் கேட்டு மகிழ்ந்தவனே; (வெற்பு - மலை); (துட்டன் - துஷ்டன்);

கயத்தையே பற்றி உரித்த வீரத்த - போர்செய்த யானையைப் பற்றி அதன் தோலை உரித்த வீரம் உடையவனே; (கயம் - யானை); (- அசை); (வீரத்தன் - வீரத்தனே - வீரம் உடையவனே; "வீர அத்தனே" என்று அகரம் தொகுத்தல் விகாரமாகவும் கருதலாம்); (கண்டம் - கண்டத்தன், என்று வருவதுபோல், வீரம் - வீரத்தன்); (திருவாசகம் - திருப்பொன்னூசல் - 8.16.4 - "நஞ்சமர் கண்டத்தன்"); (அத்தன் - தந்தை);

கயத்தை வேணிக்கண் உடையானே - கங்கையைச் சடையில் உடையவனே; (கயம் - நீர்நிலை; நீர்); (வேணி - சடை); (கண் - ஏழாம் வேற்றுமையுருபு); (சுந்தரர் தேவாரம் - 7.28.9 - "கயம் ஆரும் சடையாய்");

கடுத்த ஆலத்தை டுத், ர் உற்ற த்தில் நீலத்தை அணிவோனே - விரைந்து பரவிய, உண்ணலாகாத ஆலாகாலத்தை உண்ட, அழகிய கண்டத்தில் கருமையை அணிந்தவனே; (கடுத்தல் - விரைந்து ஓடுதல்; உறைத்தல்); (மடுத்தல் - உண்ணுதல்); (ஏர் - அழகு); (களம் - கண்டம்);

பெயர்ச்சிதான் அற்ற குறுக்கை வீரட்ட - நீங்காமல் குறுக்கை வீரட்டத்தில் எழுந்தருளியவனே; (பெயர்ச்சி - நீங்குதல்; பிரிதல்; இடமாறுகை);

பிழைத்த வேள் அட்ட விழியானே - குற்றம் செய்த மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண் உடையவனே; (பிழைத்தல் - குற்றம்செய்தல்); (வேள் - மன்மதன்); (அடுதல் - எரித்தல்; அழித்தல்);

பெணுக்கு ஒர் பாகத்தை அளித்த

பெணுக்கு ஒர் பாகத்தை அளித்த கோலத்த - உமாதேவிக்குத் திருமேனியில் ஒரு பாகத்தை அளித்த வடிவம் உடையவனே; (பெணுக்கு - பெண்ணுக்கு; இடைக்குறை விகாரம்); (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

பிறப்பு சாவு அற்ற பெருமானே - பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமானே; (பிறப்பு சாவு - பிறப்பும் சாவும்; உம்மைத்தொகையில் வல்லெழுத்து மிகாது);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

Thursday, November 17, 2022

S.141 - சிவன் - வேட்டி - சிலேடை

2013-09-06

S.141 - சிவன் - வேட்டி - சிலேடை

-------------

அற்ற மறைக்கும் பணியே அரையினில்

சுற்று முலகுமிகு தொன்மையுடைப் - பெற்றியுண்

டேறும்வெள் வண்ணம்நாம் வேண்டில் எளிதிலடை

ஆறுபுனைந் தான்வேட்டி ஆங்கு.


சொற்பொருள்:

அற்றம் - மறைக்கத்தக்கது (That which should be covered);

பணி - 1. செயல்; தொழில்; / 2. நாகம்;

சுற்றுதல் - 1. உடுத்துதல் - சுற்றி அணிதல்; / 2. வலம்செய்தல்;

உடை - 1. உடுக்கின்ற உடை; / 2. உடைய;

பெற்றி - 1. தன்மை; / 2. பெருமை;

ஏறுதல் - மிகுதல்;

ஏறு - இடபம்;

வேண்டுதல் - 1. விரும்புதல்; / 2. பிரார்த்தித்தல்;

ஆங்கு - உவம உருபு (A word of comparison); அப்படி (thus); அசைச்சொல்;


வேட்டி:

அற்ற(ம்) மறைக்கும் பணியே; அரையினில்

சுற்றும் உலகு; மிகு-தொன்மை உடைப் பெற்றி உண்டு;

ஏறும் வெள்-வண்ணம்; நாம் வேண்டில் எளிதில் அடை

ஆறு புனைந்தான் வேட்டி ஆங்கு.


அற்றம் மறைக்கும் பணியே - மறைக்கத்தக்க உறுப்புகளை மறைக்கும் தொழில் செய்யும்;

அரையினில் சுற்றும் உலகு - மக்கள் இடுப்பில் சுற்றி உடுத்துவார்கள்;

மிகு-தொன்மை உடைப் பெற்றி உண்டு - தொன்மை மிகு உடைப் பெற்றி உண்டு - பழமை மிகுந்த உடை என்ற பெருமை உண்டு;

ஏறும் வெள்-வண்ணம் - வெண்மையாக இருக்கும்;

நாம் வேண்டில் எளிதில் அடை - நாம் விரும்பினால் எளிதில் பெறப்படுகின்ற;

வேட்டி - வேஷ்டி;



சிவன்:

அற்ற(ம்) மறைக்கும் பணியே அரையினில்;

சுற்றும் உலகு; மிகு-தொன்மையுடைப் பெற்றி உண்டு;

ஏறும் வெள்-வண்ணம்; நாம் வேண்டில் எளிதில் அடை

ஆறு புனைந்தான் வேட்டி ஆங்கு.


அற்றம் மறைக்கும் பணியே அரையினில் - (பிக்ஷாடனர் கோலத்தில்) அரையில் கட்டியிருக்கும் நாகப்பாம்பே மானத்தைக் காக்கும்; (சம்பந்தர் தேவாரம் - 3.113.1 - "அற்ற மறைப்பது முன்பணியே" - அற்றம் மறைப்பது - உனது மானத்தைக் காப்பது. பணியே - பாம்பே);

சுற்றும் உலகு - மக்கள் வலம்செய்வார்கள்;

மிகு-தொன்மையுடைப் பெற்றி உண்டு - எல்லாவற்றினும் பழையவன் ஆன பெருமை உடையவன்;

ஏறும் வெள்-வண்ணம் - 1. உடல்முழுதும் வெண்ணீறு பூசியதால் மேனிமேல் வெண்ணிறம் திகழும்; 2. ஊர்தியான இடபமும் வெண்ணிறம்; (உம் - எச்சவும்மை; அசை என்றும் கொள்ளலாம்);

நாம் வேண்டில் எளிதில் அடை - நாம் விரும்பிப் பிரார்த்தித்தால் நம்மால் எளிதில் அடையப்படுகின்ற;

ஆறு புனைந்தான் - கங்காதரன்;


வி. சுப்பிரமணியன்

----------- -----------

T.173 - ஆக்கூர் - படியாப் பேய்மனம்

2013-09-03

T.173 - ஆக்கூர் - படியாப் பேய்மனம்

(இத்தலம் திருக்கடவூர் அருகே உள்ளது)

--------------

(வண்ணவிருத்தம்;

தனனாத் தானன தானன .. தனதான)


படியாப் பேய்மனம் ஏவிட .. அதனாலே

.. பதராய்ப் பார்மிசை நாளவை .. அழியாமல்

விடியாப் பேரிரு ளேபுக .. விரையாமல்

.. வெளைநீற் றாயுனை ஓதுணர் .. வருளாயே

முடியாச் சோதிய தாகிய .. முதல்வோனே

.. முடிமேற் போழ்மதி வானதி .. புனைவோனே

அடியாற் காலனை மார்பினில் .. உதையீசா

.. அணியாக் கூரினில் மேவிய .. பெருமானே.


பதம் பிரித்து:

படியாப் பேய்-மனம் ஏவிட அதனாலே

.. பதராய்ப் பார்மிசை நாள்-அவை அழியாமல்,

விடியாப் பேர்-இருளே புக விரையாமல்,

.. வெளை-நீற்றாய் உனை ஓது-உணர்வு அருளாயே;

முடியாச் சோதியது ஆகிய முதல்வோனே;

.. முடிமேற் போழ்-மதி, வானதி புனைவோனே;

அடியாற் காலனை மார்பினில் உதை ஈசா;

.. அணி ஆக்கூரினில் மேவிய பெருமானே.


படியாப் பேய்-மனம் ஏவிட அதனாலே - அடங்காத பேய் போன்ற மனம் என்னைச் செலுத்த, அதன் காரணமாக; (படிதல் - கீழ்ப்படிதல்; அடங்குதல்); (ஏவுதல் - கட்டளையிடுதல்; உந்துதல்);

பதராய்ப் பார்மிசை நாள்-அவை அழியாமல் - பயனிலியாகிப் பூமியில் வாழ்நாளை வீணாக்காமல் ; (பதர் - உபயோகமற்றவன்; உள்ளீடற்ற நெல்); (பார் - பூமி); (அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல்);

விடியாப் பேர்-இருளே புக விரையாமல் - விடிவே இல்லாத பெருந்துன்பத்தில் புகுவதற்கு விரைந்து செல்லாமல்; (விடிதல் - உதயம் ஆதல்; முடிவுறுதல்); (இருள் - துன்பம்);

வெளை-நீற்றாய், உனை ஓது-உணர்வு அருளாயே - வெண்ணீறு பூசியவனே, உன்னை ஓதும் அறிவை அருள்வாயாக; (வெளை - வெள்ளை; இடைக்குறையாக வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 1.15.6 - "விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்");

முடியாச் சோதியது ஆகிய முதல்வோனே - எல்லையற்ற ஜோதி ஆகிய முதல்வனே; (முடிதல் - முற்றுப்பெறுதல்);

முடிமேல் போழ்-மதி, வாதி புனைவோனே - சென்னிமேல் பிறையையும் கங்கையையும் அணிந்தவனே; (போழ் - துண்டம்); (சம்பந்தர் தேவாரம் - 3.4.2 - "போழிள மதிவைத்த புண்ணியனே"); (வானதி - வான் நதி - கங்கை);

அடியால் காலனை மார்பினில் உதை ஈசா - திருவடியால் காலனை மார்பில் உதைத்த ஈசனே; (அடி - திருவடி);

அணி ஆக்கூரினில் மேவிய பெருமானே - அழகிய ஆக்கூரில் எழுந்தருளிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- -----------