Wednesday, November 30, 2022

T.179 - ஆனைக்கா - மோகத்தோடு மிக்க

2014-02-02

T.179 - ஆனைக்கா - மோகத்தோடு மிக்க

--------------

(வண்ணவிருத்தம்;

தானத் தான தத்த

தானத் தான தத்த

தானத் தான தத்த .. தனதான)

(காதைக் காதி மெத்த - திருப்புகழ் - சிதம்பரம்)


மோகத் தோடு மிக்க காசைத் தேட வைக்கு(ம்)

.. .. மூடத் தோடு சுற்றி .. அடைவாதை

.. மூடப் பேத லித்து நோயுற் றாவி விட்டு

.. .. மூளத் தீயெ ரித்த .. பொடியா(ம்)முன்

பாகைத் தேனை ஒத்த பாவைப் பூநி கர்த்த

.. .. பாதத் தேவி ருப்பொ .. டிடுஞானம்

.. பாலித் தாற லைக்க ஓடிச் சூழ லுற்ற

.. .. பாவத் தீவி லக்கி .. அருளாயே

நாகத் தோடு மத்தம் வாசக் கூவி ளத்தை

.. .. நாடிச் சூடும் ஒற்றை .. விடையேறீ

.. நால்வர்க் கோர றத்தை மோனத் தால்வி ரித்த

.. .. ஞானத் தாய்நு தற்க .. ணுடையானே

ஆகத் தேயி டத்தை நாரிக் கீயும் அத்த

.. .. ஆமைத் தாலி யுற்ற .. திருமார்பா

.. ஆலத் தால்மி டற்றில் நீலத் தாய்செ ழித்த

.. .. ஆனைக் காநி லைத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

மோகத்தோடு, மிக்க காசைத் தேட வைக்கு(ம்)

.. .. மூடத்தோடு, சுற்றி அடை வாதை

.. மூடப், பேதலித்து, நோயுற்று, ஆவி விட்டு,

.. .. மூள் அத்-தீ எரித்த பொடி ஆ(ம்) முன்,

பாகைத் தேனை ஒத்த பாவைப் பூ நிகர்த்த

.. .. பாதத்தே விருப்பொடு இடு ஞானம்

.. பாலித்து, ஆறலைக்க ஓடிச் சூழலுற்ற

.. .. பாவத்-தீ விலக்கி அருளாயே;

நாகத்தோடு, மத்தம், வாசக் கூவிளத்தை

.. .. நாடிச் சூடும் ஒற்றை விடையேறீ;

.. நால்வர்க்கு ஓர்-அறத்தை மோனத்தால் விரித்த

.. .. ஞானத்தாய்; நுதற்கண் உடையானே;

ஆகத்தே இடத்தை நாரிக்கு ஈயும் அத்த;

.. .. ஆமைத்-தாலி உற்ற திருமார்பா;

.. ஆலத்தால் மிடற்றில் நீலத்தாய்; செழித்த

.. .. ஆனைக்கா நிலைத்த பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

மோகத்தோடு, மிக்க காசைத் தேட வைக்கும் மூடத்தோடு, சுற்றி அடை வாதை மூப், பேதலித்து - மோகத்தால், மிகுந்த பொருளைத் தேடச்செய்யும் அறியாமையால், உலகில் அலைந்து திரிந்து, அடைந்த பல துன்பங்கள் என்னைச் சுற்றி மூட, மனம் கலங்கி; (மூடம் - அறிவின்மை); (சுற்றி - உலகில் திரிந்து; என்னைச் சுற்றி); (வாதை - துன்பம்); (பேதலித்தல் - மனம் குழம்புதல்);

நோயுற்று, வி விட்டு, மூள் அத்-தீரித்த பொடி ஆம் முன் - நோய்கள் அடைந்து, உயிர் நீங்கி, மூண்டெழும் அந்த ஈமத்தீயில் சாம்பலாகும் முன்னமே; (அத்தீ - அந்தத் தீ - சுடுகாட்டுத் தீ; - பண்டறிசுட்டு);

பாகைத் தேனை த்பாவைப் பூ நிகர்த்த ாதத்தே விருப்பொடு இடு ஞானம் பாலித்து - பாகையும் தேனையும் ஒத்து இனிக்கின்ற பாமாலைகளைத் தாமரைமலர் போன்ற திருவடியில் அன்போடு இட்டு வழிபடும் அறிவை எனக்குத் தந்து; (பா - பாட்டு); (பாலித்தல் - கொடுத்தல்);

றலைக்க ஓடிச் சூழலுற்ற பாவத்-தீ விக்கி அருளாயே - என்னைக் கெடுக்க விரைந்துவந்து சூழ்கின்ற தீவினையாகிய நெருப்பை நீக்கி அருள்வாயாக; (ஆறலைத்தல் - வழிப்பறி செய்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.7.5 - "அரித்து நம்மேல் ஐவர் வந்திங்கு ஆறலைப்பான் பொருட்டால்")

நாகத்தோடு, மத்தம், வாசக்-கூவிளத்தை நாடிச் சூடும் ஒற்றை விடையேறீ - பாம்பு, ஊமத்தமலர், மணம் கமழும் வில்வம் இவற்றையெல்லாம் விரும்பி அணிந்த ஒப்பற்ற இடபவாகனனே; (மத்தம் - ஊமத்தமலர்); (கூவிளம் - வில்வம்); (ஒற்றை - ஒப்பற்ற); (சம்பந்தர் தேவாரம் - 2.38.3 - "நாறு கூவிள(ம்) நாகிள வெண்மதியத்தோ டாறு சூடும் அமரர் பிரான்");

நால்வர்க்கு ஓர் அறத்தை மோனத்தால் விரித்த ஞானத்தாய் - சனகாதி முனிவர்களுக்குக் ஒப்பற்ற அறத்தை (வேதப்பொருளை) மௌனமாகவே உபதேசித்த ஞானவடிவினனே; (மோனம் - மௌனம்); (விரித்தல் - உபதேசித்தல்);

நுதற்கண் உடையானே - நெற்றிக்கண்ணனே;

ஆகத்தேத்தை நாரிக்கு ஈயும் அத்த - திருமேனியில் இடப்பக்கத்தை உமைக்கு வழங்கிய எம் தந்தையே; (ஆகம் - உடல்); (அத்தன் - தந்தை);

ஆமைத்-தாலி ற்ற திருமார்பா - ஆமையோட்டை மார்பில் அணிந்தவனே; (தாலி - கழுத்தில் அணியும் ஆபரணம்); (சுந்தரர் தேவாரம் - 7.53.5 - " மருப்பும் ஆமைத் தாலியார்"); (சம்பந்தர் தேவாரம் - 1.1.2 - "முற்றலாமை இளநாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு");

ஆலத்தால் மிடற்றில் நீலத்தாய் - ஆலகாலத்தால் கண்டத்தில் கருமையை உடையவனே; (மிடறு - கண்டம்);

செழித்த ஆனைக்கா நிலைத்த பெருமானே - செழிப்புடைய திருவானைக்காவில் நீங்காமல் உறைகின்ற பெருமானே; (செழித்தல் - தழைத்தல்; சிறந்து விளங்குதல்);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

S.143 - சிவன் - ஏடிஎம் (ATM) - சிலேடை

2014-01-12

S.143 - சிவன் - ஏடிஎம் (ATM) - சிலேடை

-------------

சார்ந்தவர்கள் தப்பாமல் எண்ணிடத் தந்திடும்

ஏந்துபணங் கைச்சேரும் இட்டதுண்ணும் - நாந்திகைக்கச்

சிற்சமயம் இல்லையென்னுஞ் சேர்த்துவைத்த செல்வநதிப்

பொற்சடையன் ஏடிஎம் போல்.


சொற்பொருள்:

சார்தல் - 1. சென்றடைதல்; / 2. புகலடைதல்;

தப்புதல் - 1. தவறுதல் (To err, mistake, blunder); / 2. செய்யத் தவறுதல் (To fail to do);

எண்ணிடுதல் - 1. எண்களை இடுதல்; / 2. சிந்தித்தல்;

ஏந்துதல் - 1. மிகுதல்; / 2. தாங்குதல்; தரித்தல்;

பணம் - 1. நிதி; / 2. பாம்பு;

சிற்சமயம் - 1. சில நேரம்; / 2. சில மதங்கள்; (சில் - 1. சில; 2. அற்பமான);

செல்வநதி - செல்வம்+நதி; புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும்;

போல் - அசைச்சொல்;


ஏடிஎம் (ATM) (Automated Teller Machine):

சார்ந்தவர்கள் தப்பாமல் எண் இடத் தந்திடும் - சென்றடைந்தவர்கள் பிழையின்றித் தம் இரகசிய எண்ணை இட்டதும் கொடுக்கும்;

ஏந்து பணம் கைச் சேரும் - மிகுந்த பணம் கையைச் சேரும்;

இட்டது உண்ணும் நாம் திகைக்கச் சிற்சமயம் - அக்கருவியில் இட்ட நம் அட்டையை (ATM card) நாம் திகைக்கும்படி அது சில சமயங்களில் விழுங்கிவிடும்;

நாம் திகைக்கச் சில்-சமயம் இல்லை என்னும் சேர்த்து வைத்த செல்வம் - நாம் திகைக்கும்படி அது சில சமயங்களில் நம் கணக்கில் பணம் இருந்தாலும் அது கொடாது. ("நாம் திகைக்கச் சிற்சமயம்" - என்ற சொற்றொடரை இடைநிலைத்-தீவகமாக இப்படி இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்);

ஏடிஎம் - Automated Teller Machine (ATM) - தானியங்கிப் பணம் வழங்கு இயந்திரம்;


சிவன்:

சார்ந்தவர்கள் தப்பாமல் எண்ணிடத் தந்திடும் - புகலடைந்தவர்கள் தொடர்ந்து / முறைப்படி தியானிக்க அருள்புரிவான்;

ஏந்து பணம் கைச் சேரும் - தரிக்கின்ற பாம்பு கையில் இருக்கும்; (அப்பர் தேவாரம் - 6.97.7 - "பலிக்கு ஓடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்");

இட்டது உண்ணும் நாம் திகைக்க - நாம் வியப்புறும் வண்ணம் பிச்சை ஏற்று உண்பான்;

சில்-சமயம் இல்லை என்னும் - சில சமயங்கள் (மதங்கள்) சிவனை இல்லை என்று மறுக்கும்; (சம்பந்தர் தேவாரம் - 1.32.10 - "சிறுதேரருஞ் சில்சமணும் புறங்கூற");

சேர்த்து வைத்த செல்வம் - அடியவர்களுக்கு அவன் வைப்புநிதி போன்றவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.64.5 - "வைத்த நிதியே மணியே" - வைத்தநிதி - சேமவைப்பாக வைக்கப்பெற்ற செல்வம்);

நதிப்பொற்சடையன் - கங்கையைத் தரித்த பொன் போன்ற சடையை உடைய சிவபெருமான்.


பிற்குறிப்பு: - இலக்கணக் குறிப்பு:

சில்சமயம் என்பது எதுகைநோக்கிச் சிற்சமயம் என்று திரிந்தது; (சில்சமயம் என்ற பிரயோகத்தை ஒத்த பிரயோகங்கள் - 1. குசேலோபாக்கியானம் - "கண்ணன்றனைக் ... எனச் சில்பொழு துள்ளத் தெண்ணி"; 2. நற்றிணை - 42 - கீரத்தனார் - "மறத்தற் கரிதால் பாக! ..... சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய");


வி. சுப்பிரமணியன்

----------- -----------

T.178 - நாலூர் - நாணான் மேலோர்

2013-12-31

T.178 - நாலூர் - நாணான் மேலோர்

(நாலூர் - பலாசவனநாதர் கோயில் - தேவார வைப்புத்தலம்)

--------------

(வண்ணவிருத்தம்;

தானா தானா தானா தானா

தானா தானத் .. தனதான)

(தாமா தாமா லாபா லோகா - திருப்புகழ் - திருச்செங்கோடு)


முற்குறிப்பு: அரையடிகளின் ஆரம்பத்தில் மோனை வரும் இடத்தில் எதுகை வருமாறு அமைந்த பாடல். அதனால் எட்டு அடிகள் உடைய பாடல் போலவும் தோற்றம் தரும்.

இதுபோல அரையடியில் எதுகை அமைந்த ஒரு திருப்புகழ் - கொடாதவனையே புகழ்ந்து - என்று தொடங்கும் விராலிமலைத் திருப்புகழ்.


நாணான் மேலோர் மேலாய் பேரே

.. .. நாவால் ஓதித் .. தமிழ்பாடி

.. வாணாள் பாழா காதே பூமேல்

.. .. வாழ்வே னாகப் .. பணியாயே

வீணா வாழ்வார் நாடா நேயா

.. .. வேயார் தோளிக் .. கொருகூறா

.. மாணார் தூயோர் பார்மேல் மீளா

.. .. வானார் வாழ்வைத் .. தருவோனே

நாணா வார்நா காவா னோரோர்

.. .. நாமா மேருச் .. சிலையானே

.. கோணா வீசா ஏறூர் கோனே

.. .. கூனார் கோலப் .. பிறைசூடீ

நாணா தூரூர் ஊணே தேர்வாய்

.. .. நாதா நேமிக் .. கரனேடச்

.. சேணார் தீயா னாய்தே னீயார்

.. .. சீர்நா லூரிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

நாள் நான் மேலோர் மேலாய் பேரே

.. .. நாவால் ஓதித் தமிழ் பாடி,

.. வாழ்நாள் பாழ் ஆகாதே பூமேல்

.. .. வாழ்வேன் ஆகப் பணியாயே;

வீணா வாழ்வார் நாடா நேயா;

.. .. வேய் ஆர் தோளிக்கு ஒருகூறா;

.. மாண் ஆர் தூயோர் பார்மேல் மீளா

.. .. வான் ஆர் வாழ்வைத் தருவோனே;

நாணா ஆர் நாகா; வானோர் ஓர்

.. .. நாமா; மேருச் சிலையானே;

.. கோணா ஈசா; ஏறு-ஊர் கோனே;

.. .. கூன் ஆர் கோலப் பிறைசூடீ;

நாணாது ஊர்ஊர் ஊணே தேர்வாய்;

.. .. நாதா; நேமிக்-கரன் நேடச்

.. சேண் ஆர் தீ ஆனாய்; தேனீ ஆர்

.. .. சீர் நாலூரில் பெருமானே.


நாள் நான் மேலோர் மேலாய் பேரே நாவால் ஓதித் தமிழ் பாடி - மேலோர்க்கும் மேலான உன் திருநாமத்தையே நான் நாள்தோறும் நாவால் ஓதித், தேவாரம் திருவாசகம் முதலிய தெய்வத்தமிழ் பாடி; (நாள் - நாளும் - உம்மைத்தொகை); (மேலோர் - தேவர்); (அப்பர் தேவாரம் - 6.32.8 - "மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி");

வாழ்நாள் பாழ் ஆகாதே பூமேல் வாழ்வேன் ஆகப் பணியாயே - என் வாழ்நாள் வீணாகாமல் இப்புவிமேல் பயனுள்ள வாழ்வு வாழ்வதற்கு அருள்புரிக; (பூ - பூமி); (பணித்தல் - அருளிச்செய்தல்; ஆணையிடுதல்);

வீணா வாழ்வார் நாடா நேயா - பயனின்றி வாழ்பவர்கள் நாடாத அன்பனே; (வீணா - வீணாக; கடைக்குறை விகாரம்);

வேய் ஆர் தோளிக்கு ஒருகூறா - மூங்கில் போன்ற புஜம் உடைய உமைக்குத் திருமேனியில் ஒரு பாகம் உடையவனே; (வேய் - மூங்கில்); (ஆர்தல் - ஒத்தல்); (அப்பர் தேவாரம் - 6.48.10 - "மங்கையர்க்கோர் கூறன்காண்"); (நக்கீரதேவர் - கோபப்பிரசாதம் - 11.14.1 - அடி 67 - "வேயார் தோளி மெல்லியல் கூறனைத்");

மாண் ஆர் தூயோர் பார்மேல் மீளா வான் ஆர் வாழ்வைத் தருவோனே - மாட்சிமையுடைய தூயவர்கள் மண்ணுலகில் மீண்டும் பிறவாதபடி அவர்களுக்கு வானுலக (= சிவலோக) வாழ்வைத் தருபவனே; (மாண் - மாட்சிமை); (ஆர்தல் - பொருந்துதல்);

நாணா ஆர் (/வார்) நாகா - (அரைநாணாக & வில்லில் நாணாக) ஒரு பாம்பைக் கட்டியவனே; (நாணா - நாணாக); (ஆர்த்தல் - கட்டுதல்); (வார்தல் - நீள்தல்); ("நாணா வார்-நாகா = நாணாக நீண்ட நாகத்தை உடையவனே" என்றும் பொருள்கொள்ளலாம்);

வானோர் ஓர் நாமா - தேவர்கள் தியானிக்கும் திருநாமம் உடையவனே (/புகழினனே); (ஓர்தல் - எண்ணுதல்); (நாமம் - பெயர்; புகழ்; நாமன் - நாமம் உடையவன்; வீரம்/வீரன், நேயம்/நேயன், இவை போல); (பாம்பன் சுவாமிகள் - சண்முகக் கோட்டம் பதிகம் 1 - 10 - "கோலச் செம்மலை நாமனை மெச்சியே"); (கம்பராமாயணம்? இடைச்செருகல்? - "ஓம்அ ராமரை, ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் நாமர் ஆம் அவரை");

மேருச் சிலையானே - மேருவில் ஏந்தியவனே; (சிலை - வில்);

கோணா ஈசா - கோணாத (=வஞ்சனையற்ற) ஈசனே; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்" - சலம் - வஞ்சனை);

ஏறு-ஊர் கோனே - இடபவாகனம் உடைய தலைவனே; (ஊர்தல் - ஏறுதல்);

கூன் ஆர் கோலப் பிறைசூடீ - வளைந்த அழகிய சந்திரனைச் சூடியவனே; (கூன் - வளைவு);

நாணாது ஊர்ஊர் ஊணே தேர்வாய் - கூச்சமின்றிப் பல ஊர்களில் பிச்சை ஏற்பவனே; (ஊண் - உணவு); (தேர்தல் - தேடுதல்);

நாதா - தலைவனே;

நேமிக்-கரன் நேடச் சேண் ஆர் தீ ஆனாய் - சக்கராயுதத்தைக் கையில் தாங்கிய திருமால் தேடும்படி, எல்லையின்றி வானில் ஓங்கிய ஜோதி ஆனவனே; (நேமி - சக்கராயுதம்); (கரன் - கையினன்); (சம்பந்தர் தேவாரம் - 1.22.6 - "வடமுகம் உறைதரு கரன்" - வடவைமுகத்தீ உறையும் திருக்கரம் உடையவன்); (நேடுதல் - தேடுதல்); (சேண் - உயரம்; ஆகாயம்); (ஆர்தல் - பொருந்துதல்);

தேனீ ஆர் சீர் நாலூரில் பெருமானே - தேனீக்கள் ஒலிக்கும் புகழ் உடைய நாலூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே; (தேனீ - தேன் தொகுக்கும் வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (சீர் - புகழ்); (நாலூர் - பலாசவனநாதர் கோயில் - தேவார வைப்புத்தலம்);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

Tuesday, November 29, 2022

T.177 - ஆரூர் - காவார் பாலே

2013-12-30

T.177 - ஆரூர் - காவார் பாலே

--------------

(வண்ணவிருத்தம்;

தானா தானா தானா தானா

தானா தானத் .. தனதான)

(தாமா தாமா லாபா லோகா - திருப்புகழ் - திருச்செங்கோடு)


காவார் பாலே போய்நா ணாதே

.. .. காசே நாடித் .. திரியாமல்

.. காவார் நாலூர் தேனார் ஆவூர்

.. .. கானூர் நீலக் .. குடிமேயாய்

நாவார் பாவால் வீறார் தாளே

.. .. நாணாள் ஓதிப் .. பணிவேனே

.. நாவாய் ஆவாய் ஆனே றூர்வாய்

.. .. ஞானா கோலச் .. சடையானே

சாவாய் மூவாய் வானோர் கோனே

.. .. சாரா தாருக் .. கருளானே

.. தாரா மார்போர் நாகா மூலா

.. .. தாதார் போதைப் .. புனைவோனே

ஏவான் மேவார் மூவூர் தீவாய்

.. .. ஏகா வீழப் .. பொருதோனே

.. ஈசா மானேர் மாதோர் பாகா

.. .. ஏரா ரூரிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

காவார்பாலே போய் நாணாதே

.. .. காசே நாடித் திரியாமல்,

.. கா ஆர் நாலூர் தேன் ஆர் ஆவூர்

.. .. கானூர் நீலக்குடி மேயாய்,

நா ஆர் பாவால் வீறு ஆர் தாளே

.. .. நாள் நாள் ஓதிப் பணிவேனே;

.. நாவாய் ஆவாய்; ஆன் ஏறு ஊர்வாய்;

.. .. ஞானா; கோலச் சடையானே;

சாவாய்; மூவாய்; வானோர் கோனே;

.. .. சாராதாருக்கு அருளானே;

.. தாரா மார்பு ஓர் நாகா; மூலா;

.. .. தாது ஆர் போதைப் புனைவோனே;

ஏவால் மேவார் மூ ஊர் தீவாய்

.. .. ஏகா வீழப் பொருதோனே;

.. ஈசா; மான் நேர் மாது ஓர் பாகா;

.. .. ஏர் ஆரூரிற் பெருமானே.


காவார்பாலே போய் நாணாதே காசே நாடித் திரியாமல் - என்னைக் காப்பாற்றாதவர்களிடம்போய் வெட்கமின்றிப் பணத்திற்காக அலையாமல்;

கா ஆர் நாலூர், தேன் ஆர் ஆவூர், கானூர், நீலக்குடி மேயாய் - சோலை சூழ்ந்த நாலூர், வண்டுகள் ஒலிக்கும் ஆவூர், திருக்கானூர், திருநீலக்குடி என்ற தலங்களில் உறைபவனே; (கா - சோலை); (ஆர்தல் - பொருந்துதல்; உண்ணுதல்); (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (நாலூர் - பலாசவனநாதர் கோயில் - தேவார வைப்புத்தலம்); (ஆவூர், கானூர், நீலக்குடி - தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்);

நா ஆர் பாவால் வீறு ஆர் தாளே நாள் நாள் ஓதிப் பணிவேனே - நாவில் பொருந்திய நற்றமிழ்ப் பாட்டுகளால், மேன்மை மிக்க திருவடியையே நாள்தோறும் நான் போற்றிப் பணிவேன்; (பா - பாட்டு); (வீறு - தனிப்பட்ட சிறப்பு; வெற்றி; அழகு); (நாணாள் - நாள்நாள் - பலநாளும்; எந்நாளும்);

நாவாய் ஆவாய்; ஆன் ஏறு ஊர்வாய்; - பிறவிக்கடலைக் கடப்பிக்கும் மரக்கலம் ஆனவனே; இடபவாகனனே; (நாவாய் - மரக்கலம்); (ஆன் ஏறு - இடபம்); (ஊர்தல் - ஏறுதல்);

ஞானா; கோலச் சடையானே - ஞானவடிவினனே; அழகிய சடையை உடையவனே; (திருவாசகம் - திருவுந்தியார் - 8.14.17 - "கோலச் சடையற்கே உந்தீபற");

சாவாய்; மூவாய்; வானோர் கோனே - இறப்பும் மூப்பும் இல்லாதவனே; தேவர்களுக்கெல்லாம் தலைவனே; (அப்பர் தேவாரம் - 6.55.9 - "மூவாய் பிறவாய் இறவாய் போற்றி");

சாராதாருக்கு அருளானே - அடையாதவர்களுக்கு அருள்புரியாதவனே; (சார்தல் - அடைதல்; சரண்புகுதல்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");

தாரா மார்பு ஓர் நாகா; மூலா - மாலையாக மார்பில் ஒரு நாகத்தை அணிந்தவனே; முதற்பொருளே; (தாரா - தாராக; கடைக்குறை விகாரம்); (தார் - மாலை); (நாகா - நாகம் அணிந்தவனே); (சம்பந்தர் தேவாரம் - 3.117.1 - "யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா" - காண் நாகா - காணுமாறு பாம்புகளை உடையவனே);

தாது ஆர் போதைப் புனைவோனே - மகரந்தம் பொருந்திய மலர்களைச் சூடியவனே; (தாது - மகரந்தம்); (போது - பூ);

ஏவால் மேவார் மூ ஊர் தீவாய் ஏகா வீழப் பொருதோனே - அம்பினால் பகைவர்களது முப்புரங்களும் தீயின்கண் புகுந்து அழியும்படி போர்செய்தவனே; (- அம்பு); (மேவார் - பகைவர்); (வாய் - ஏழாம்வேற்றுமை உருபு); (ஏகா வீழ - ஏகி வீழ - சென்று/புகுந்து அழிய; - செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம் செய்து என்று பொருள்படும்);

ஈசா; மான் நேர் மாது ஓர் பாகா - ஈசனே; மான் போன்ற மங்கையை ஒரு பாகமாக உடையவனே; (நேர்தல் - ஒத்தல்);

ஏர்-ஆரூரில் பெருமானே - அழகிய திருவாரூரில் உறையும் சிவபெருமானே. (ஏர் - அழகு);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

S.142 - சிவன் - மேகம் - சிலேடை

2013-12-15

S.142 - சிவன் - மேகம் - சிலேடை

-------------

ஆழ்கடல் ஆலத்தை ஆர்ந்த அழகிருக்கும்

வாழ்வளிக்கும் மண்ணடைந்தால் மாவமரும் - கேழ்கிளரும்

மின்னிடை ஒன்றிடு மேன்மையுடை மேகமதி

சென்னிமிசை வைத்த சிவன்.


சொற்பொருள்:

ஆலம் - 1. நீர்; / 2. விடம்;

ஆர்தல் - உண்ணுதல்;

மண் - 1. தரை; 2. உலகினர்;

அடைதல் - 1. சேர்தல்; / 2. சரண் புகுதல்;

மா - 1. கருமை; / 2a. அழகு; 2b. விலங்கு - இங்கே எருது; 2c. மாமரம்;

அமர்தல் - 1. இருத்தல்; / 2a. பொருந்துதல்; பொலிதல்; 2b. விரும்புதல்;

கேழ் - ஒளி;

கிளர்தல் - விளங்குதல்; மிகுதல்;

ஒன்றுதல் - பொருந்துதல்; ஒன்றாதல்;

மின் இடை ஒன்றிடுதல் - 1. மின்னல் இடையே பொருந்துதல்; 2. மின்னல் போன்ற நுண்ணிடையாள் (= ஆகுபெயராக உமை) ஒன்றாதல்;


மேகம்:

ஆழ்கடல் ஆலத்தை ஆர்ந்த அழகிருக்கும் - கடல் நீரைக் குடித்த அழகு உடையது;

வாழ்வு அளிக்கும் மண் அடைந்தால் - (மழையாகி) நிலத்தை அடைந்தால் உயிர்கள் தழைக்கும்;

மா அமரும் - கருமை திகழும்; (சம்பந்தர் தேவாரம் - 1.10.2 - "தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித் தூமாமழை");

கேழ் கிளரும் மின் இடை ஒன்றிடும் மேன்மையுடை மேகம் - ஒளி விளங்கும் மின்னல் இடையே பொருந்தியிருக்கும் சிறப்பு உடைய மேகம்.


சிவன்:

ஆழ்கடல் ஆலத்தை ஆர்ந்த அழகிருக்கும் - பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்ட அழகு (கண்டத்தில்) இருக்கும்;

வாழ்வு அளிக்கும் மண் அடைந்தால் - மண்ணுலகத்தோர் சரண்புகுந்தால் அவர்களுக்கு நல்வாழ்வு கொடுப்பவன்;

மா அமரும் - அழகு பொலியும்; / (ஊர்தியாக) இடபத்தை விரும்புபவன்;

("மண் அடைந்தால்" என்ற சொற்றொடரை இடைநிலைத்-தீவகமாகக் கொண்டு, இருபக்கமும் இயைத்து, "மண் அடைந்தால் மா அமரும்" என்று கொண்டு, "காஞ்சி - ப்ருத்வி ஸ்தலம். அங்கே மாமரத்தின்கீழ் ஏகாம்பரன்" என்றும் பொருள்கொள்ளக் கூடுமாறுபோல் அமைந்துள்ளது);

கேழ் கிளரும் மின் இடை ஒன்றிடும் மேன்மையுடை - ஒளி மிகும் மின்னல் போன்ற இடையை உடைய உமை ஒன்றாகப் பொருந்தும் சிறப்புடைய; ("மா அமரும்" என்ற சொற்றொடரை இன்னொருமுறை இயைத்து, "மா அமரும் கேழ் கிளரும் மின் இடை" என்று கொண்டு, "அழகிய ஒளி மிகும் மின்னல் போன்ற இடையுடைய உமாதேவி" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

மதி சென்னிமிசை வைத்த சிவன் - சந்திரனைத் தன் தலைமேல் அணிந்த சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

----------- -----------