2017-10-30
P.410 - கள்ளில்
- (திருக்கண்டலம்)
(சென்னைக்கு
வடமேற்கே உள்ள தலம்)
---------------------------------
(கலிவிருத்தம்
- விளம்
விளம் மா கூவிளம் -
வாய்பாடு;
மூன்றாம்
சீர் குறிலில் முடியும்)
(அப்பர்
தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை
வேதியன்")
(சம்பந்தர்
தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும்
துஞ்சலி லாத")
1)
கூர்மழு
வாளினன் கூவி ளங்குரா
நீர்மலி
வேணியன் நெற்றிக் கண்ணினன்
கார்வயல்
சூழ்திருக் கள்ளில் மேயவன்
ஊர்விடை
யான்கழல் உன்னு நெஞ்சமே.
கூர்
மழுவாளினன் - கூர்மையுடைய
மழுவை ஏந்தியவன்;
கூவிளம்
குரா நீர் மலி வேணியன் -
வில்வம்,
குராமலர்,
கங்கை
இவற்றைச் சடையில் தரித்தவன்;
நெற்றிக்
கண்ணினன் - முக்கண்ணன்;
கார்வயல்
சூழ் திருக் கள்ளில் மேயவன்
- நீர்வளம்
மிக்க பசிய வயல்கள் சூழ்ந்த
திருக்கள்ளிலில் உறைகின்றவன்;
(கார்
- மேகம்;
மழை;
நீர்;
பசுமை);
ஊர்-விடையான்
கழல் - இடபத்தை
வாகனமாக உடையவன் திருவடியை;
(ஊர்தல்
- ஏறுதல்);
உன்னு
நெஞ்சமே - நெஞ்சே
நினைவாயாக; (உன்னுதல்
- நினைதல்);
2)
மறையுரை
நாவினன் மாது பங்கமர்
இறையவன்
முப்புரம் எய்த வில்லினன்
கறையணி
கண்டனம் கள்ளில் மேயவன்
பிறையணி
அரனடி பேணு நெஞ்சமே.
மறை
உரை நாவினன் - வேதங்களைப்
பாடியருளியவன்;
மாது
பங்கு அமர் இறையவன் -
உமையை
ஒரு பங்கில் விரும்பிய இறைவன்;
முப்புரம்
எய்த வில்லினன் -
திரிபுரங்களை
எரிக்க வில்லேந்தியவன்;
கறை
அணி கண்டன் அம் கள்ளில் மேயவன்
- நீலகண்டன்;
அழகிய
திருக்கள்ளிலில் உறைகின்றவன்;
(அம்
- அழகு);
(கண்டனம்
கள்ளில் மேயவன் =
"கண்டன்,
நம்
கள்ளில் மேயவன்"
என்றும்
பிரித்துப் பொருள்கொள்ளல்
ஆம்);
பிறை
அணி அரன் அடி பேணு நெஞ்சமே
- சந்திரனைச்
சூடிய ஹரனது திருவடியைப்
போற்று நெஞ்சே;
3)
கொடிமிசை
ஏற்றினன் கொடிய கூற்றுதை
அடியினன்
பாம்பினை அரையில் ஆர்த்தவன்
கடிமலர்ப்
பொழிலணி கள்ளில் மேயவன்
பொடியணி
கோன்கழல் போற்று நெஞ்சமே.
கொடிமிசை
ஏற்றினன் - இடபச்-சின்னம்
பொறித்த கொடியை உடையவன்;
கொடிய
கூற்று உதை அடியினன் -
கொடிய
நமனைக் காலால் உதைத்தவன்;
பாம்பினை
அரையில் ஆர்த்தவன் -
நாகத்தை
அரையில் கச்சாகக் கட்டியவன்;
(ஆர்த்தல்
- கட்டுதல்);
கடிமலர்ப்
பொழில் அணி கள்ளில் மேயவன்
- மணம்
மிக்க பூக்கள் நிறைந்த சோலை
சூழ்ந்த திருக்கள்ளிலில்
உறைகின்றவன்; (கடி
- வாசனை);
பொடி
அணி கோன் கழல் போற்று நெஞ்சமே
- திருநீற்றைப்
பூசிய தலைவனது திருவடியைப்
போற்று நெஞ்சே;
4)
மழவிடை
ஊர்தியன் மார்பில் நூலினன்
தழலொரு
கையினில் தாங்கி ஆடுவான்
கழனிகள்
சூழ்தரு கள்ளில் மேயவன்
அழல்நிறத்
தரனடி அடையென் நெஞ்சமே.
மழ
விடை ஊர்தியன் - இளைய
எருதை வாகனமாக உடையவன்;
மார்பில்
நூலினன் - மார்பில்
பூணூல் அணிந்தவன்;
தழல்
ஒரு கையினில் தாங்கி ஆடுவான்
- ஒரு
கையில் தீயை ஏந்தி ஆடுபவன்;
கழனிகள்
சூழ்தரு கள்ளில் மேயவன்
- வயல்கள்
சூழ்ந்த திருக்கள்ளிலில்
உறைகின்றவன்; (கழனி
- வயல்);
(தருதல்
- ஒரு
துணைவினை);
அழல்
நிறத்து அரன் அடி அடை என்
நெஞ்சமே - தீப்
போல் செம்மேனி உடைய ஹரனது
திருவடியை, என்
நெஞ்சே, அடைவாயாக;
5)
விளித்துளம்
நைபவர் வினைகள் தீர்த்துவான்
அளிப்பவன்
கிளைகளில் ஆடி மந்திகள்
களித்திடு
காவணி கள்ளில் மேயவன்
ஒளிச்சடை
யான்கழல் உன்னு நெஞ்சமே.
விளித்து
உளம் நைபவர் வினைகள் தீர்த்து
வான் அளிப்பவன் -
வாயார
ஈசன் திருநாமங்களைச் சொல்லி
அழைத்து உள்ளம் உருகும்
பக்தர்களது வினைகளையெல்லாம்
தீர்த்து அவர்களுக்குச்
சிவலோக வாழ்வைத் தருபவன்;
(விளித்தல்
- அழைத்தல்;
சொல்லுதல்;
பாடுதல்);
(வான்
- வானுலகம்
- சிவலோகம்);
(அப்பர்
தேவாரம் - 6.31.1 - "ஆரமுதே
ஆதீ என்றும், ஆரூரா
என்றென்றே அலறா நில்லே");
கிளைகளில்
ஆடி மந்திகள் களித்திடு கா
அணி கள்ளில் மேயவன் -
மரக்கிளைகளில்
குரங்குகள் ஆடி மகிழும் சோலை
சூழ்ந்த திருக்கள்ளிலில்
உறைகின்றவன்; (கா
- சோலை);
ஒளிச்சடையான்
கழல் உன்னு நெஞ்சமே -
பிரகாசிக்கும்
சடையை உடைய சிவபெருமான்
திருவடியை நினை நெஞ்சே;
(ஒளிச்சடை
- ஒளி
உடைய சடை); (அப்பர்
தேவாரம் - 4.76.10 - "கிளரொளிச்
சடையினீரே");
6)
புவியினர்
விண்ணவர் போற்று பூரணன்
அவிதலி
லாச்சுடர் ஆய பெற்றியன்
கவினுறு
வயலணி கள்ளில் மேயவன்
சிவனவன்
அடியிணை சிந்தி நெஞ்சமே.
புவியினர்
விண்ணவர் போற்று பூரணன் -
மண்ணுலகோரும்
விண்ணுலகோரும் போற்றுகின்ற
முழுமுதற்பொருள்;
அவிதல்
இலாச் சுடர் ஆய பெற்றியன்
- என்றும்
அவியாத ஜோதி என்ற பெருமை
உடையவன்; (பெற்றி
- இயல்பு;
பெருமை);
(அவிதல்
- அணைந்துபோதல்;
சாதல்);
கவின்
உறு வயல் அணி கள்ளில் மேயவன்
- அழகிய
வயல் சூழ்ந்த திருக்கள்ளிலில்
உறைகின்றவன்; (கவின்
- அழகு);
சிவன்அவன்
அடியிணை சிந்தி நெஞ்சமே -
சிவபெருமானது
இரு-திருவடிகளை,
நெஞ்சே,
எண்ணுவாயாக;
7)
மாமணம்
ஆர்மலர் வாளி ஐந்துடைக்
காமனைப்
பொடிபடக் கண்ட கண்ணுதல்
காமரம்
ஆர்பொழிற் கள்ளில் மேயவன்
தூமலர்
அடியிணை துதியென் நெஞ்சமே.
மா-மணம்
ஆர் மலர்-வாளி
ஐந்துடைக் - அழகிய,
மணம்
நிறைந்த மலரம்புகள் ஐந்தினை
உடைய; (வாளி
- அம்பு);
காமனைப்
பொடிபடக் கண்ட கண்ணுதல் -
மன்மதனைச்
சாம்பல் ஆக்கிய நெற்றிக்கண்ணன்;
காமரம்
ஆர் பொழில் கள்ளில் மேயவன்
- வண்டுகள்
இசை பாடுகின்ற சோலை சூழ்ந்த
திருக்கள்ளிலில் உறைகின்றவன்;
(காமரம்
- ஒரு
பண்ணின் பெயர்; இசை);
(ஆர்த்தல்
- ஒலித்தல்);
தூ-மலர்
அடியிணை துதி என் நெஞ்சமே
- அப்பெருமானது
தூய மலர் போன்ற இரு-திருவடிகளை,
என்
நெஞ்சே, துதிப்பாயாக;
8)
திண்ணிய
தசமுகன் சென்னி தோளவை
புண்ணுற
ஒருவிரல் பொருப்பில் ஊன்றினான்
கண்ணியல்
நெற்றியன் கள்ளில் மேயவன்
புண்ணியன்
பொன்னடி போற்று நெஞ்சமே.
திண்ணிய
தசமுகன் சென்னி தோளவை
புண்ணுற ஒருவிரல் பொருப்பில்
ஊன்றினான் - வலிமை
மிக்க இராவணனது தலைகளும்
புஜங்களும் புண்ணாகும்படி
திருவடி-விரல்
ஒன்றைக் கயிலைமலைமேல் ஊன்றியவன்;
கண்
இயல் நெற்றியன் -
நெற்றிக்கண்ணன்;
(இயல்தல்
- தங்குதல்;
பொருந்துதல்);
கள்ளில்
மேயவன் - திருக்கள்ளிலில்
உறைகின்றவன்;
புண்ணியன்
பொன்னடி போற்று நெஞ்சமே -
புண்ணியமூர்த்தியான
அப்பெருமானது பொன் போன்ற
திருவடியை, நெஞ்சே,
போற்றுவாயாக;
9)
கரியவன்
நான்முகன் காணொ ணாதுயர்
எரியவன்
அடியவர்க் கென்றும் எளியவன்
கரியுரி
போர்த்தவன் கள்ளில் மேயவன்
புரிசடை
யான்கழல் போற்று நெஞ்சமே.
கரியவன்
நான்முகன் காணொணாது
உயர் எரி அவன் -
திருமால்
பிரமன் இவர்களால் காண்பதற்கு
அரிதாகி ஓங்கிய ஜோதி;
(கரியவன்
- திருமால்);
(காணொணாது
- காண
ஒண்ணாது; தொகுத்தல்
விகாரம்); (சம்பந்தர்
தேவாரம் - 3.33.9 - "அயனொடு
மாலுக்கும் காணொணா வண்ணத்தான்");
அடியவர்க்கு
என்றும் எளியவன் -
அடியவர்களால்
எளிதில் அடையப்படுபவன்;
கரி-உரி
போர்த்தவன் -
யானைத்தோலைப்
போர்த்தவன்; (உரி
- தோல்);
கள்ளில்
மேயவன் - திருக்கள்ளிலில்
உறைகின்றவன்;
புரிசடையான்
கழல் போற்று நெஞ்சமே -
முறுக்கிய
சடையை உடைய அப்பெருமானது
திருவடியை, நெஞ்சே,
போற்றுவாயாக;
(புரிதல்
- முறுக்குக்கொள்ளுதல்);
10)
பொய்யுரை
வீணர்சொல் போற்றி டேன்மினீர்
மையணி
மிடறினன் வன்னி மான்மறி
கையினில்
ஏந்திய கள்ளில் மேயவன்
செய்யவன்
அடிதொழச் சேரும் இன்பமே.
பொய்
உரை வீணர் சொல் போற்றிடேன்மின்
நீர் - பொய்களை
உரைக்கின்ற வீணர்களது பேச்சை
நீங்கள் மதிக்கவேண்டா;
(ஏல்
- எதிர்மறை
ஏவல் ஒருமை விகுதி);
(மின்
- முன்னிலை
ஏவற்பன்மை விகுதி);
மை
அணி மிடறினன் -
நீலகண்டன்;
வன்னி
மான்மறி கையினில் ஏந்திய
- தீயையும்
மான்கன்றையும் கையில் ஏந்திய;
(வன்னி
- நெருப்பு);
கள்ளில்
மேயவன் - திருக்கள்ளிலில்
உறைகின்றவன்;
செய்யவன்
அடிதொழச் சேரும் இன்பமே -
செம்மேனி
உடைய சிவபெருமானது திருவடியை
வழிபட்டால் இன்பமே வந்தடையும்;
இன்பமே
மிகும்; (செய்
- சிவப்பு);
11)
புதியவன்
பழையவன் புற்ற ராவணி
பதியவன்
வெண்மழுப் படையை ஏந்தினான்
கதிர்மதி
முடியினன் கள்ளில் மேயவன்
அதிர்கழல்
தொழுதெழ ஆரும் இன்பமே.
புதியவன்
பழையவன் - என்றும்
புதியவன்; மிகத்
தொன்மையானன்;
புற்று-அரா
அணி பதி அவன் - புற்றில்
வாழும் இயல்பை உடைய பாம்பை
அணியும் தலைவன்;
வெண்மழுப்
படையை ஏந்தினான் -
கையில்
ஒளி வீசும் மழுவாயுதத்தை
ஏந்தியவன்; (படை
- ஆயுதம்);
கதிர்மதி
முடியினன் - கதிர்
வீசும் சந்திரனை முடிமேல்
அணிந்தவன்; (கதிர்
- கிரணம்;
ஒளி);
கள்ளில்
மேயவன் - திருக்கள்ளிலில்
உறைகின்றவன்;
அதிர்-கழல்
அடி தொழ ஆரும் இன்பமே -
அப்பெருமானது
அதிர்கின்ற கழல் அணிந்த
திருவடியை வழிபட்டால் இன்பமே
மிகும்; (அதிர்தல்
- முழங்குதல்
- ஒலித்தல்);
வி.
சுப்பிரமணியன்
-----------
--------------