Saturday, February 22, 2025

P.354 - கன்றாப்பூர் - உம்பனை முப்புரங்கள்

2016-08-18

P.354 - கன்றாப்பூர்

---------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - "வேதியா வேத கீதா")


1)

உம்பனை முப்பு ரங்கள் ஒருங்கெரி வீழ ஒற்றை

அம்பினை ஏவி னானை அணிதிகழ் கொன்றை சூடும்

நம்பனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னை

வம்பவிழ் மலர்கொண் டேத்த வல்வினை மாயு மன்றே.


உம்பனை - மேலானவனை; (உம்பன் - மேலோன்);

முப்புரங்கள் ஒருங்கு எரி வீழ ஒற்றை அம்பினை ஏவினானை - மூன்று கோட்டைகளும் ஒரே சமயத்தில் தீயில் விழும்படி ஓர் அம்பைச் செலுத்தியவனை;

அணிதிகழ் கொன்றை சூடும் நம்பனைக் - அழகிய கொன்றைமலரைச் சூடிய சிவனை; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

கன்றாப்பூரில் நடுதறி அப்பன் தன்னை - திருக்கன்றாப்பூரில் உறைகின்ற நடுதறியப்பன் என்ற நாமம் உடைய ஈசனை;

வம்பு அவிழ் மலர் கொண்டு ஏத்த வல்வினை மாயுமன்றே - மணம் கமழும் மலர்களால் வழிபட்டால் வலிய வினைகள் அழியும்;


2)

வேதனைத் தேவர் போற்றும் விமலனைத் தோடி லங்கு

காதனைச் சடையின் மீது கதிர்மதி அரவம் சூடும்

நாதனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைக்

காதலால் ஏத்து வார்தம் கடுவினை கழலு மன்றே.


வேதனைத் - வேதங்களின் வடிவாயுள்ளவனை, அல்லது வேதங்களை அருளிச்செய்தவனை;

தேவர் போற்றும் விமலனைத் - வானோr வணங்கும் தூயனை; ("வேதனைத்-தேவர்" என்று சேர்த்து, "வருத்தமுற்ற தேவர்கள்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

தோடு இலங்கு காதனை - ஒரு காதில் தோடு அணிந்தவனை;

காதலால் ஏத்துவார்தம் - அன்பால் துதிப்பவர்களது;

கடுவினை கழலுமன்றே - கொடிய வினைகள் நீங்கும்; (கடுமை - கொடுமை); (கழல்தல் - நீங்குதல்);


3)

வானவர் தமக்கி ரங்கி வார்கடல் நஞ்சு தன்னைப்

போனகம் செய்த கோனைப் புனிதனை ஆல நீழல்

ஞானனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

தேனலர் தூவி வாழ்த்தத் தீவினை தீரு மன்றே.


போனகம் செய்தல் - உண்ணுதல்; (போனகம் - உணவு);

வார்-கடல் - நீண்ட கடல்;

ஆல-நீழல் ஞானனை - கல்லால-மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியை; (ஞானன் - ஞானவடிவினன்);

தேன்-அலர் - வாசமலர்கள்;


4)

மட்டினை யுடையம் பெய்த மதனுடல் நீறு செய்த

சிட்டனை ஊணி ரக்கும் செல்வனை இருளில் ஆடும்

நட்டனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னை

இட்டமாய் ஏத்து வார்தம் இருவினை மாயு மன்றே.


மட்டினையுடை அம்பு எய்த - வாசனை உடைய அம்பினை (மலர்க்கணையை) எய்த; (மட்டு - வாசனை; தேன்);

மதன் உடல் நீறு செய்த சிட்டனை - மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய மேலானவனை; (மதன் - காமன்); (சிட்டன் - சிஷ்டாசாரம் உடையவன்; சிரேஷ்டன்);

ஊண் இரக்கும் செல்வனை - உணவை யாசிக்கும் செல்வனை; (ஊண் - உணவு);

இருளில் ஆடும் நட்டனை - இருளில் ஆடுகின்ற கூத்தனை;

இட்டம் - இஷ்டம்; விருப்பம்;


5)

தக்கனைத் தலைய ரிந்த தலைவனை ஆல வாயிற்

சொக்கனை அக்க ணிந்த தூயனைப் பலிதி ரிந்த

நக்கனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

தக்கநன் மலரிட் டேத்தித் தாழ்பவர் தாழ்வி லாரே.


தக்கனைத் தலை அரிந்த தலைவனை - தக்கன் வேள்வியை அழித்து அவன் தலையை வெட்டிய தலைவனை;

ஆலவாயிற் சொக்கனை - மதுரையில் உறையும் சொக்கப்பெருமானை;

அக்கு அணிந்த தூயனைப் - எலும்பை மாலையாக அணிந்த தூயவனை;

பலி திரிந்த - பிச்சை ஏற்றுத் திரிந்த;

நக்கன் - திகம்பரன்;

தக்க நன்-மலர் இட்டு ஏத்தித் தாழ்பவர் தாழ்வு இலாரே - தகுந்த நல்ல பூக்களைத் தூவி வணங்கும் அடியவர்களுக்கு ஒரு குறையும் இல்லை; (தாழ்வு - குற்றம்; துன்பம்; வறுமை);


6)

வில்லென மலையை ஏந்தி மேவலர் எயில்கள் எய்ய

வல்லனை அடிய வர்க்கா வன்னமன் தனையு தைத்த

நல்லனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைச்

சொல்லிநை கின்ற அன்பர் தொல்வினை தொலையு மன்றே.


மேவலர் எயில்கள் எய்ய வல்லனை - பகைவர்களது முப்புரங்களை எய்த விரனை; (மேவலர் - பகைவர்); (எயில் - கோட்டை); (வல்லன் - வல்லவன் - ஆற்றல் உடையவன்);

அடியவர்க்கா வன்-நமன்-தனை உதைத்த நல்லனை - மார்க்கண்டேயருக்காகக் கொடிய கூற்றுவனை உதைத்த நல்லவனை;

சொல்லி நைகின்ற அன்பர் தொல்வினை தொலையுமன்றே - போற்றி உள்ளம் உருகுகின்ற பக்தர்களது பழவினைகள் அழியும்;


7)

பதியென உம்பர் போற்றும் பரமனை ஈறி லாத

நிதியனைத் தோளில் தூய நீற்றனைச் சென்னி மீது

நதியனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

துதிசெயும் அன்பர் தங்கள் தொல்வினை தொலையு மன்றே.


பதி என உம்பர் போற்றும் பரமனை - தலைவன் என்று தேவர்களால் போற்றப்படும் பரமனை;

ஈறு இலாத நிதியனை - முடிவில்லாத அருள்நிதியை; அளவில்லாத திரு உடையவனை;

தோளில் தூய நீற்றனை - புஜங்களில் தூய திருநீற்றைப் பூசியவனை;

சென்னிமீது நதியனை - கங்காதரனை;

தொல்வினை - பழவினை;


8)

தூயனை இகழ்ந்து வெற்பைத் தூக்கினான் தனைநெ ரித்த

தேயனை அந்தி வான்போல் செய்யனைத் தேவர் கட்கு

நாயனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

தூயநன் மலர்கொண் டேத்தத் தொல்வினை தொலையு மன்றே.


தூயன் - தூயவன்; புனிதன்;

இகழ்ந்து வெற்பைத் தூக்கினான்-தனை நெரித்த - ஏசிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கிய; (வெற்பு - மலை);

தேயன் - தியானிக்கப்படுபவன்;

அந்தி-வான் போல் செய்யனை - மாலை-நேரத்து வானம் போலச் செம்மேனி உடையவனை; (செய் - செம்மை);

தேவர்கட்கு நாயனை - தேவர்களுக்குத் தலைவனை; (நாயன் - தலைவன்; கடவுள்);


9)

அம்புய னோடு மாலும் அடிமுடி நேடி வாடி

எம்பிரான் என்று போற்ற எல்லையில் எரிய தான

நம்பியைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைக்

கும்பிடும் அன்பர் தங்கள் கொடுவினை தீரு மன்றே.


அம்புயன் - தாமரையில் உறையும் பிரமன்;

நேடி - தேடி;

எம் பிரான் - எம் தலைவன்;

எல்லை இல் எரிஅது ஆன நம்பியை - அளவு இல்லாத சோதி ஆகிய ஈசனை; (நம்பி - ஆணிற் சிறந்தவன்; கடவுள்);


10)

நெஞ்சினில் இருளை வைத்த நீசர்சொல் உரைகொள் ளேன்மின்

வெஞ்சின ஏற தேறும் விமலனை மிடறு தன்னில்

நஞ்சனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னை

வஞ்சனை இன்றி வாழ்த்த வல்வினை மாயு மன்றே.


நீசர் சொல் உரை கொள்ளேன்மின் - கீழோர் சொல்லும் சொற்களை நீங்கள் மதிக்கவேண்டா;

வெஞ்-சின ஏறுஅது ஏறும் விமலனை - கொடிய கோபம் உடைய இடபத்தை வாகனமாக உடைய, தூயனை;

மிடறு தன்னில் நஞ்சனை - கண்டத்தில் விடத்தை மறைத்தவனை;


11)

வாசனை மிக்க கொன்றை மலரணி சடையி னானைத்

தேசனைத் ஈசன் தன்னைச் செருக்குடைத் தக்கன் வேள்வி

நாசனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைப்

பூசனை செய்வார்க் கில்லை புவிமிசைப் பிறவி தானே.


தேசனை - ஒளிவடிவினனை;

செருக்குடைத் தக்கன் வேள்வி நாசனை - ஆணவம் மிக்க தக்கன் செய்த வேள்வியை அழித்தவனை;

பூசனை செய்வார்க்கு இல்லை புவிமிசைப் பிறவிதானே - வழிபடும் பக்தர்கள் இம்மண்ணுலகில் மீண்டும் பிறவாத நிலை பெறுவார்கள்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Thursday, February 20, 2025

N.043 - சுந்தரர் துதி - துயிலுங்கால் பாதமலர்

N.043 - சுந்தரர் துதி - துயிலுங்கால் பாதமலர்

2016-08-07

N.043 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2016

----------------

(நேரிசை வெண்பா)

1)

துயிலுங்கால் பாதமலர் சூட்டியருள் செய்த

அயிற்சூலம் ஏந்தியை ஆடல் பயில்வானைத்

தோழன் எனப்பெற்ற சுந்தரர்பொற் றாள்போற்றித்

தாழும் எனது தலை.


* திருவதிகைப் புறத்தே சித்தவட-மடத்தில் சுந்தரர் உறங்கிக்கொண்டிருந்தபோது இறைவன் கிழ-அந்தணர் உருவில் வந்து சுந்தரர் தலையில் தன் திருவடியை வைத்து அருளியதைச் சுட்டியது.

* சுந்தரர் தேவாரம் - 7.38.1 - "தம்மானை அறியாத சாதியார் உளரே"


துயிலுங்கால் - உறங்கும்பொழுது;

அயிற்சூலம் ஏந்தி - கூர்மை பொருந்திய சூலத்தை ஏந்தியவன்;

ஆடல் பயில்வான் - ஆடல் செய்பவன்;

பொற்றாள் - பொன் போன்ற திருவடிகள்;


2)

மழுவாளர் தாமே மறையவராய் வந்து

பழவோலை காட்டிப் பணிகொள் அழகன்

திருநாவ லூராளி செந்தமிழை நாவே

ஒருநாளும் ஓவா துரை.


மழுவாளர் தாமே மறையவராய் வந்து - மழுவாள் ஏந்தும் ஈசரே அந்தணர் உருவில் வந்து;

பழ-ஓலை காட்டிப் பணிகொள் அழகன் - ஒரு பழைய அடிமை-ஓலையைக் காட்டி ஆட்கொண்ட சுந்தரன்;

திருநாவலூராளி செந்தமிழை, நாவே, ஒரு நாளும் ஓவாது உரை - திருநாவலூர்க்கோன் ஆன சுந்தரர் பாடியருளிய தேவாரத்தை, நாக்கே, நீ நாள்தோறும் பாடு; (ஓவுதல் - ஒழிதல்; நீங்குதல்; மறத்தல்);


3)

முதலையுண்ட பிள்ளையை முக்கணுடை மூவா

முதலருளால் மீட்டளித்த மொய்ம்பர் இதழியைச்

சூடரனை ஆரூரில் தூதனுப்ப வல்லவர்

பாடல்கள் உய்க்கும் பரம்.


* புக்கொளியூர் அவிநாசியில் முதலை உண்ட பாலகனைப் பதிகம் பாடிச் சுந்தரர் மீட்டதைச்

சுட்டியது;

மொய்ம்பு - வலிமை;

இதழி - கொன்றைமலர்;

உய்த்தல் - கொண்டுபோதல்; கொடுத்தல்;

பரம் - மேலுலகம்; மோட்சம்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Wednesday, February 19, 2025

P.353 - திலதைப்பதி - கண்ணீர் மல்கி

2016-07-24

P.353 - திலதைப்பதி

---------------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.69.1 - "பூவார் மலர்கொண் டடியார்")

(சுந்தரர் தேவாரம் - 7.95.1 - "மீளா அடிமை")


1)

கண்ணீர் மல்கித் தொழுவார் தம்மைக் காக்கும் அருளாளன்

தண்ணீர் தன்னைத் தாங்கு சடையன் சாந்தம் அதுவாக

வெண்ணீ றணியும் வேத நாவன் விடையன் இடமென்பர்

தெண்ணீர் அரிசிற் கரையில் திகழும் திலதைப் பதிதானே.


கண்ணீர் மல்கித் தொழுவார் தம்மைக் காக்கும் அருளாளன் - கண்ணீர் பெருக மனம் உருகி வழிபடுவாரைக் காக்கின்ற அருளாளன்;

தண்ணீர் தன்னைத் தாங்கு சடையன் - குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கியவன்;

சாந்தம் அதுவாக வெண்ணீறு அணியும் வேத-நாவன் - சந்தனம் போல வெண்-திருநீற்றைப் பூசிய, வேதங்களைப் பாடியருளியவன்;

விடையன் இடம் என்பர் - இடபவாகனன் உறையும் தலம் ஆவது;

தெண்ணீர் அரிசிற்-கரையில் திகழும் திலதைப்பதிதானே - தெளிந்த நீர் பாயும் அரிசிலாற்றின் கரையில் உள்ள திலதைப்பதி;


2)

பால்போல் நீறு பூசிப் பணியும் பத்தர் இடர்தீர்ப்பான்

நால்வே தத்தை ஓது நாவன் நாரி ஒருபங்கன்

நால்வாய் தன்னை உரித்துப் போர்த்த நாதன் இடமென்பர்

சேல்பாய் அரிசிற் றென்பால் திகழும் திலதைப் பதிதானே.


நால்வாய் - யானை; (தொங்கும் வாய்);

அரிசிற் றென்பால் - அரிசில் + தென்பால் - அரிசிலாற்றின் தென்கரையில்;


3)

அரையா அருளாய் என்று போற்றும் அன்பர்க் கணியாவான்

விரையார் கொன்றை வேணி மீது விரும்பிப் புனையீசன்

குரையார் கழலன் நரைவெள் ளேற்றுக் குழகன் இடமென்பர்

திரையார் அரிசில் தென்பால் திகழும் திலதைப் பதிதானே.


அரையா - அரசனே;

அணி ஆவான் - அருகு இருப்பான்;

விரை ஆர் கொன்றை - மணம் பொருந்திய கொன்றைமலர்;

வேணி - சடை;

குரை ஆர் கழலன் - ஒலிக்கின்ற கழலை அணிந்தவன்;

திரை ஆர் அரிசில் தென்பால் - அலை பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில்;


4)

நீறு பூசி நித்தல் ஏத்தும் நேயர்க் கருள்நாதன்

ஆறு சூடி அங்கை மழுவன் அம்பொற் கொடிகூறன்

ஏறு காட்டும் கொடியை உடைய எந்தை இடமென்பர்

சேறு காட்டும் செய்ய ணிந்த திலதைப் பதிதானே.


அம் பொற்கொடி கூறன் - அழகிய பொற்கொடி போன்ற உமையை ஒரு கூறாக உடையவன்; (* பொற்கொடியம்மை - திலதைப்பதியில் இறைவி திருநாமம்);

சேறு காட்டும் செய் அணிந்த - சேறு திகழும் வயல்கள் சூழ்ந்த; (செய் - வயல்);


5)

அன்ற லர்ந்த பூக்கள் தூவி அடியைத் தொழுவார்க்கு

நன்று நல்கும் நம்பன் இன்பன் நஞ்சம் அணிகண்டன்

மன்றில் மங்கை காண ஆடும் மன்னன் இடமென்பர்

தென்றல் தன்னில் வாசம் வீசு திலதைப் பதிதானே.


அன்று அலர்ந்த பூக்கள் - நாண்மலர்கள்;

நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்;

நஞ்சம் - விஷம்;

மன்று - அரங்கு;

மங்கை - உமாதேவி;


6)

மறைசொல் மாணி வாழ நமனை மார்பில் உதைசெய்தான்

கறைகொள் கண்டன் அண்டர் அண்டன் கங்கைச் சடைமீது

குறைவெண் திங்கள் சூடி ஆடு கூத்தன் இடமென்பர்

சிறைவண் டறையும் நறையார் சோலைத் திலதைப் பதிதானே.


மறை - வேதம்;

மாணி - மார்க்கண்டேயர்;

அண்டர் அண்டன் - தேவதேவன்;

சிறை-வண்டு அறையும் நறை ஆர் சோலை - சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற தேன் (/ வாசனை) நிறைந்த சோலை சூழ்ந்த; (நறை - தேன்; வாசனை);


7)

போதை இட்டுப் பொற்ப தத்தைப் போற்றும் அடியார்தம்

வாதை தீர்த்து வரம ளிக்கும் வள்ளல் ஒருபக்கம்

மாதை வைத்த முக்கட் பரமன் வைகும் இடமென்பர்

சீதை கேள்வன் வந்து வாழ்த்து திலதைப் பதிதானே.


போதை இட்டு - பூக்களைத் தூவி;

வாதை - துன்பம்;

வைகுதல் - தங்குதல்; உறைதல்;

சீதை கேள்வன் வந்து வாழ்த்து - இராமன் வந்து வழிபாடு செய்த; (வாழ்த்துதல் - துதித்தல்); (* இராமர் இத்தலத்தில் வழிபாடு, தர்ப்பணம் செய்தார் என்பது இத்தலபுராணச் செய்தி);


8)

வான்வெற் பசைத்த வல்ல ரக்கன் வாய்பத் தழவூன்று

கோன்கற் சிலையைக் கையில் ஏந்திக் கூடார் புரமெய்தான்

நான்கி ரட்டி தோளன் நாக நாணன் இடமென்பர்

தேன்கள் ஆர்க்கும் சோலை சூழ்ந்த திலதைப் பதிதானே.


வான்-வெற்பு அசைத்த வல்-அரக்கன் வாய் பத்து அழ ஊன்று கோன் - பெருமை மிக்க உயர்ந்த கயிலைமலையை அசைத்த வலிய அரக்கனான இராவணனின் வாய்கள் பத்தும் அழும்படி விரலை ஊன்றி அவனை நசுக்கிய தலைவன்;

கற்சிலையைக் கையில் ஏந்திக் கூடார் புரம் எய்தான் - மேருமலையை வில்லாகக் கையில் ஏந்திப் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (கல் - மலை); (சிலை - வில்); (கூடார் - பகைவர்);

நான்கு இரட்டி தோளன் - எட்டுப்-புஜங்கள் உடையவன்;

நாக-நாணன் - நாகப்பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;

தேன்கள் ஆர்க்கும் - வண்டுகள் ஒலிக்கின்ற; (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்);


9)

அன்னம் ஏனம் ஆய இருவர் அறியா அழல்வண்ணன்

சென்னி தாழ்த்தும் அன்பர் தங்கள் சிந்தை பிரியாதான்

கன்னல் வில்லி தன்னைக் காய்முக் கண்ணன் இடமென்பர்

செந்நெல் வளரும் செய்ய ணிந்த திலதைப் பதிதானே.


அன்னம் ஏனம் ஆய இருவர் அறியா அழல்வண்ணன் - அன்னப்பறவையும் பன்றியும் ஆகிய பிரமன் திருமால் என்ற இருவரால் அறிய ஒண்ணாத ஜோதிவடிவினன்;

சென்னி - தலை;

கன்னல் வில்லி தன்னைக் காய் முக்கண்ணன் - கரும்பை வில்லாக ஏந்தும் மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்; (கன்னல் - கரும்பு); (வில்லி - வில்லை ஏந்தியவன்);

செந்நெல் வளரும் செய் அணிந்த - சிறந்த நெற்பயிர் வளர்கின்ற வயல் சூழ்ந்த; (செய் - வயல்);


10)

கோனைத் தெளியாக் குருடர் சொல்லும் குற்ற மொழிநீங்கும்

மானைத் தீயை மழுவை ஏந்து வானோர் பெருமான்வெங்

கானை ஆடும் களமென் றுடைய கருத்தன் இடமென்பர்

தேனை உண்டு வண்டு பாடு திலதைப் பதிதானே.


கோனைத் தெளியாக் குருடர் - இறைவனை அறியாதவர்கள்;

நீங்கும் - அவற்றை நீங்குங்கள்; ("அவை அழியும்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

மானைத் தீயை மழுவை ஏந்து வானோர் பெருமான் - கையில் மான், மழு, நெருப்பு இவற்றை ஏந்திய, தேவர்கள் தலைவன்;

வெங்கானை ஆடும் களம் என்று உடைய கருத்தன் - சுடுகாட்டைத் திருநடம் செய்யும் சபை என்று உடைய கடவுள்; (வெங்கான் - கொடிய சுடுகாடு); (களம் - சபை; இடம்); (கருத்தன் - கர்த்தா - கடவுள்)


11)

மௌவல் நந்தி வட்டம் தூவி வணங்கும் அடியார்கள்

எவ்வ ரங்கள் இரப்ப ரேனும் என்றும் இலையென்னா(து)

அவ்வ ரங்கள் அருளும் சடையன் அமரும் இடமென்பர்

செவ்வ ழிப்பண் வண்டார் சோலைத் திலதைப் பதிதானே.


மௌவல் நந்தி வட்டம் தூவி வணங்கும் அடியார்கள் - மல்லிகை, நந்தியாவட்டம் முதலிய பூக்களைத் தூவி வழிபடும் அடியவர்கள்; (மௌவல் - மல்லிகை); (அப்பர் தேவாரம் - 4.98.1 - "நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே");

எவ்வரங்கள் இரப்பரேனும் என்றும் இலை என்னாது - என்ன வரங்களை யாசித்தாலும், ஒருநாளும் "இல்லை" என்று சொல்லாமல்;

அவ்வரங்கள் அருளும் சடையன் அமரும் இடம் என்பர் - அந்த வரங்களையெல்லாம் அருள்கின்ற பெருமான், சடையை உடையவன் விரும்பி உறையும் தலம் ஆவது; (அமர்தல் - விரும்புதல்);

செவ்வழிப் பண் வண்டு ஆர் சோலைத் திலதைப்பதிதானே - செவ்வழி என்ற பண்ணை வண்டுகள் பாடுகின்ற சோலை திகழும் திலதைப்பதி ஆகும்; (செவ்வழி - ஒரு பண்ணின் பெயர்);

(சம்பந்தர் தேவாரம் - 1.132.7 - "வண்டு வேறாய உரு ஆகிச் செவ்வழி நற்பண் பாடும் மிழலையாமே");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


M.071 - அடியார் - பரவு - மடக்கு

2016-07-16

M.071 - அடியார் - பரவு - மடக்கு

------------------------------------

அடியார் தொழினும் அருளும் அரன்றன்

அடியார் அகத்தினர் ஆய - அடியார்

பரவு மதிசூடி பாற்கடல் நஞ்சு

பரவு மிடற்றுப் பரன்.


சொற்பொருள்:

அடியார் - 1. அடி + யார் (எவர்) ; 2. அடி + ஆர் (பொருந்துதல்); 3. அடியார் (தொண்டர்);

பரவுதல் - 1. துதித்தல்; புகழ்தல்; 2. பரந்திருத்தல்;


அடி யார் தொழினும் அருளும் அரன் - திருவடியை எவர் தொழுதாலும் அருள்கின்ற ஹரன்;

தன் அடி ஆர் அகத்தினர் ஆய அடியார் பரவு மதிசூடி - அப்பெருமானுடைய திருவடி பொருந்திய மனத்தினர் ஆகிய அடியவர்கள் துதித்துப் போற்றும் சந்திரசேகரன்;

பாற்கடல் நஞ்சு பரவு மிடற்றுப் பரன் - பாற்கடலில் தோன்றிய விடம் (நீலமணி போலப்) பரந்திருக்கும் கண்டத்தை உடைய பரமன்;


வி. சுப்பிரமணியன்

------------ ------------


Sunday, February 2, 2025

N.042 - மாணிக்க வாசகர் துதி - குருந்தடியில்

N.042 - மாணிக்க வாசகர் துதி குருந்தடியில்

2016-07-03

N.042 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2016

----------------

1) --- நேரிசை வெண்பா ---

குருந்தடியில் ஞான குருவின் வடிவில்

பெருந்துறையில் வந்த பெருமான் திருந்தடிக்கே

கோத்தும்பி சென்றூதக் கூறியவர் தீந்தமிழை

நாத்தழுவி வாழ்தல் நலம்.


குருந்தடியில் - குருந்த-மரத்தின் கீழே;

திருந்தடி - திருந்து அடி - அழகிய திருவடி;

கோத்தும்பி சென்று ஊதக் கூறியவர் - திருவாசகத்தின் ஒரு பகுதி "திருக்கோத்தும்பி";

தீந்தமிழை நாத் தழுவி வாழ்தல் நலம் - திருவாசகத்தை நாவில் அணிந்து வாழ்வது நன்மை தரும்;


(திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.14 -

கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே

மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி

அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட

திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. )


2) --- நேரிசை வெண்பா ---

உத்தர கோசமங்கை உத்தமன்தாள் தம்மனத்தே

வைத்தமணி வாசகர் மண்ணோர்க்கு முத்தி

வழிகாட்டிச் சொன்னதமிழ் மாலைமொழி நாவே

பழிபாவம் தீரும் படி.


* "நாவே, பழி பாவம் தீரும்படி மொழி" என்ற சொற்றொடரை முதலில் வைத்துப் பொருள்கொள்க.

உத்தரகோசமங்கை - ஒரு தலத்தின் பெயர்;

முத்தி-வழி காட்டி - முக்தி-நெறியைக் காண்பித்து; முக்திக்கு வழியைக் காட்டி;

பழி - குற்றம்; குறை; பாவம்;

பாவம் - தீவினை;


(திருவாசகம் - பண்டாய நான்மறை - 8.48.7 -

பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த

மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப்

பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல

மருந்தினடி என்மனத்தே வைத்து. )


வி. சுப்பிரமணியன்

------------- -------------

Saturday, February 1, 2025

P.352 - சாட்டியக்குடி - வெண்மலை போலொரு

P.352 - சாட்டியக்குடி - வெண்மலை போலொரு


2016-07-02

P.352 - சாட்டியக்குடி

---------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")


1)

வெண்மலை போலொரு விடைவி ரும்பியை

எண்வடி வுடையனை ஈறில் ஈசனைத்

தண்வயல் புடையணி சாட்டி யக்குடி

ஒண்மதி சூடியை உன்னு நெஞ்சமே.


வெண்மலை போல் ஒரு விடை விரும்பியை - வெண்ணிறம் உடைய ஒரு மலை போன்ற இடபத்தை ஊர்தியாக விரும்பியவனை;

எண்வடிவு உடையனை - அஷ்டமூர்த்தங்கள் உடையவனை;

ஈறு இல் ஈசனைத் - முடிவு (அந்தம்) இல்லாத ஈசனை;

தண்-வயல் புடை அணி சாட்டியக்குடி ஒண்-மதி சூடியை உன்னு நெஞ்சமே - குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற, ஒளிவீசும் சந்திரனை அணிந்த பெருமானை, நெஞ்சே, நீ நினை. (உன்னுதல் - நினைதல்);


2)

அக்கரம் அஞ்சுரை அன்பு மாணிதன்

துக்கம் அழித்தவன் சூல பாணியன்

தக்கனைத் தலையரி சாட்டி யக்குடி

முக்கணன் சீர்தனை முன்னு நெஞ்சமே.


அக்கரம் அஞ்சு உரை அன்பு மாணிதன் துக்கம் அழித்தவன் - பஞ்சாட்சரம் ஓதி வழிபட்ட, பக்தி மிகுந்த மார்க்கண்டேயருடைய மனக்கலக்கத்தைத் தீர்த்தவன்; (காலனை உதைத்தவன்); (அக்கரம் - அக்ஷரம்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);

சூல-பாணியன் - திரிசூலத்தை ஏந்தியவன்; (பாணி - கை); (பெரியபுராணம் - காரைக்காலம்மையார் புராணம் - 12.24.55 - "சூலபாணியனார் மேவும் படரொளிக் கயிலை");

தக்கனைத் தலை அரி - தக்கனது தலையை வெட்டிய; (அரிதல் - வெட்டுதல்);

சாட்டியக்குடி முக்கணன் சீர்தனை முன்னு நெஞ்சமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற, முக்கட்-பெருமானின் புகழை, நெஞ்சே, நீ எண்ணு. (முன்னுதல் - கருதுதல்; எண்ணுதல்);


3)

அழுதடை சுரர்களுக் கருள்மி டற்றனைத்

தொழுதவர் துணைவனைத் துடிம ருங்கினள்

தழுவிய நாதனைச் சாட்டி யக்குடி

மழுவனை நாடொறும் வாழ்த்து நெஞ்சமே.


அழுது அடை சுரர்களுக்கு அருள் மிடற்றனைத் - அழுது சரண்புகுந்த தேவர்களுக்கு அருளிய நீலகண்டனை; (சுரர் - தேவர்); (மிடறு - கண்டம்);

தொழுதவர் துணைவனைத் - தொழும் பக்தர்களுக்குத் துணையாக உள்ளவனை;

துடி-மருங்கினள் தழுவிய நாதனைச் - உடுக்குப் போலச் சிற்றிடை உடைய உமை தழுவிய தலைவனை; (துடி - உடுக்கு); (மருங்கு - இடை);

சாட்டியக்குடி மழுவனை நாள்தொறும் வாழ்த்து நெஞ்சமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற, மழுவாள் ஏந்திய பெருமானைத் தினந்தோறும், நெஞ்சே, நீ போற்று.


4)

நாவியல் பாவினர் நந்தி வட்டமும்

தூவிய கையினர் துதிசெய் தூயவன்

சாவிலன் நோயிலன் சாட்டி யக்குடி

மேவிய வேதியன் வினைகள் தீர்ப்பனே.


நா இயல் பாவினர், நந்திவட்டமும் தூவிய கையினர் துதிசெய் தூயவன் - நாவில் பாமாலைகள் பொருந்தியவர்களும், நந்தியாவட்டம் முதலிய பூக்களைத் தூவிய கையினர்களும் வழிபடும் புனிதன்; (இயல்தல் = பொருந்துதல்; தங்குதல்); (நந்திவட்டம் - நந்தியாவட்டம் என்ற பூ);

சாவு இலன், நோய் இலன் - நோய்களும் இறப்பும் இல்லாதவன்;

சாட்டியக்குடி மேவிய வேதியன் வினைகள் தீர்ப்பனே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற வேதமுதல்வன் நம் வினைகளைத் தீர்ப்பான்;


5)

புதியவன் பழையவன் பொலிந்த வேணியில்

நதியினன் அரையினில் நாகக் கச்சினன்

சதுர்மறை நாவினன் சாட்டி யக்குடி

பதியென நின்றவன் பத்தர்க் கன்பனே.


புதியவன் பழையவன் - காலத்தைக் கடந்தவன்;

பொலிந்த வேணியில் நதியினன் - அழகிய சடையில் கங்கையை உடையவன்;

அரையினில் நாகக்-கச்சினன் - அரைக்கச்சாகப் பாம்பைக் கட்டியவன்;

சதுர்மறை நாவினன் - நான்கு வேதங்களையும் பாடியவன்;

சாட்டியக்குடி பதி என நின்றவன் பத்தர்க்கு அன்பனே - திருச்சாட்டியக்குடியில் நீங்காது உறைகின்ற பெருமான் பக்தர்களுக்கு அன்பு உடையவன்; (பதி - உறைவிடம்; கோயில்; தலம்);


6)

கையினிற் சூலனைக் கரிய கண்டனைச்

செய்யனைச் செஞ்சடைத் திங்கள் சூடியைத்

தையலொர் பங்கனைச் சாட்டி யக்குடி

ஐயனைக் கைதொழும் அன்பர்க் கின்பமே.


கையினில் சூலனைக் - கையில் சூலத்தை ஏந்தியவனை;

கரிய கண்டனைச் - நீலகண்டனை;

செய்யனைச் - செம்மேனியனை; (செய்யன் - சிவந்த நிறம் உடையவன்);

செஞ்சடைத் திங்கள் சூடியைத் - செஞ்சடையில் சந்திரனைச் சூடியவனை;

தையல் ஒர் பங்கனைச் - உமையை ஒரு பங்கில் உடையவனை; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

சாட்டியக்குடி ஐயனைக் கைதொழும் அன்பர்க்கு இன்பமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற தலைவனைக் கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு என்றும் இன்பமே.


7)

கங்குலிற் பிணமெரி காட்டில் கூத்தமர்

சங்கரன் ஐங்கரன் தாதை ஓர்புறம்

சங்கணி கையினன் சாட்டி யக்குடி

அங்கணன் அடிதொழும் அன்பர்க் கின்பமே.


கங்குலில் பிணம் எரி காட்டில் கூத்து அமர் சங்கரன் - இருளில் சுடுகாட்டில் திருநடம் செய்து மகிழும் சங்கரன்; (கங்குல் - இரவு); (அமர்தல் - மகிழ்தல்; விரும்புதல்); (சங்கரன் - சிவன் திருநாமம் - நன்மை செய்பவன்);

ஐங்கரன் தாதை - விநாயகனுக்குத் தந்தை; (தாதை - தந்தை);

ஓர் புறம் சங்கு அணி கையினன் - ஒரு பக்கம் கையில் வளையல் அணிந்தவன் - உமைபங்கன்; (சங்கு - சங்கினால் செய்த கைவளை); (சம்பந்தர் தேவாரம் - 3.81.1 - "சங்கமரும் முன்கை மடமாதை ஒருபால் உடன் விரும்பி");

சாட்டியக்குடி அங்கணன் அடிதொழும் அன்பர்க்கு இன்பமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற, அருள்நோக்கம் உடைய பெருமான் திருவடியை வணங்கும் பக்தர்களுக்கு என்றும் இன்பமே.


8)

தருக்கிய தசமுகன் தனைய டர்த்தவர்

கருப்புவிற் காமனைக் காய்ந்த கண்ணினர்

தருக்களிற் குயில்பயில் சாட்டி யக்குடி

இருக்குரை எந்தையை எண்ண இன்பமே.


தருக்கிய தசமுகன்-தனை அடர்த்தவர் - ஆணவம் மிக்க இராவணனை நசுக்கியவர்; (தருக்குதல் - ஆணவம் கொள்ளுதல்); (தசமுகன் - பத்துமுகம் உடைய இராவணன்);

கருப்பு-வில் காமனைக் காய்ந்த கண்ணினர் - கரும்பை வில்லாக ஏந்திய மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண்ணர்;

தருக்களில் குயில் பயில் சாட்டியக்குடி, இருக்கு உரை எந்தையை எண்ண இன்பமே - (சோலையில்) மரங்களில் குயில்கள் தங்கி ஒலிக்கின்ற திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற, ரிக்வேதம் ஓதும் எம் தந்தையைப் போற்றி எண்ணும் பக்தர்களுக்கு என்றும் இன்பமே. (தரு - மரம்); (பயில்தல் - தங்குதல்; ஒலித்தல்); (இருக்கு - ரிக்வேதம்; வேதம்); (* ரிக்வேதநாதர் - இத்தல இறைவன் திருநாமம்);


9)

கடலிடைத் துயிலரி கமலன் என்றிவர்

அடையவொண் ணாச்சுடர் ஆகி நின்றவன்

சடைமிசைப் பிறையினன் சாட்டி யக்குடி

உடையவன் புகழ்தனை ஓத இன்பமே.


கடலிடைத் துயில் அரி கமலன் என்றிவர் - பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமால், தாமரையில் உறையும் பிரமன் என்ற இவர்களால்; (என்றிவர் - என்ற இவர்; "என்ற" என்பதில் ஈற்று அகரம் தொக்கது); (சம்பந்தர் தேவாரம் - 3.33.1 - "நீரிடைத் துயின்றவன்");

அடைய ஒண்ணாச் சுடர் ஆகி நின்றவன் - அடைய இயலாத ஜோதி ஆகி ஓங்கியவன்;

சடைமிசைப் பிறையினன் - சடையின்மேல் சந்திரனை அணிந்தவன்;

சாட்டியக்குடி உடையவன் புகழ்தனை ஓத இன்பமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற, சுவாமியின் புகழைப் பாடும் பக்தர்களுக்கு என்றும் இன்பமே. (உடையவன் - உடையான் - சுவாமி);


10)

காரணி நெஞ்சினர் கத்து சொற்கொளேல்

நீரணி சடையினன் நீறு கொன்றையந்

தாரணி மார்பினன் சாட்டி யக்குடிப்

பூரணன் பொன்னடி போற்ற இன்பமே.


கார் அணி நெஞ்சினர் கத்து சொல் கொளேல் - கருமை பொதிந்த மனம் உடைய வஞ்சகர்கள் கத்துகின்ற சொற்களை மதிக்கவேண்டா; (கார் - கருமை; வஞ்சம்; அஞ்ஞானம்); (கத்துதல் - கூவுதல்; பிதற்றுதல்); (கொளேல் - கொள்ளேல் - மதிக்கவேண்டா);

நீர் அணி சடையினன் - கங்கையைச் சடையில் அணிந்தவன்;

நீறு கொன்றையந் தார் அணி மார்பினன் - திருநீற்றையும் கொன்றைமாலையையும் மார்பில் அணிந்தவன்; (தார் - மாலை);

சாட்டியக்குடிப் பூரணன் பொன்னடி போற்ற இன்பமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற, குறைவில்லாத பெருமானின் பொற்பாதத்தை வழிபடும் பக்தர்களுக்கு என்றும் இன்பமே.


11)

வனிதையை ஒருபுடை வைத்த மாண்பினன்

குனிமதி மாசுணம் குலவு சென்னியன்

தனிமணி மிடறினன் சாட்டி யக்குடி

இனிதுறை எந்தையை ஏத்த இன்பமே.


வனிதையை ஒரு-புடை வைத்த மாண்பினன் - உமாதேவியை ஒரு பக்கத்தில் பாகமாக ஏற்ற பெருமை உடையவன்; (மாண்பு - பெருமை; அழகு);

குனி-மதி மாசுணம் குலவு சென்னியன் - வளைந்த பிறையும் பாம்பும் நெருங்கி இருக்கின்ற திருமுடியினன்; (குனிதல் - வளைதல்; வணங்குதல்); (மாசுணம் - பாம்பு); (குலவுதல் - விளங்குதல்; நெருங்கி உறவாடுதல்);

தனி மணி மிடறினன் - ஒப்பற்ற நீலமணிகண்டம் உடையவன்; (தனி - ஒப்பற்ற); (மிடறினன் - மிடற்றினன் - கண்டம் உடையவன்);

சாட்டியக்குடி இனிது உறை எந்தையை ஏத்த இன்பமே - திருச்சாட்டியக்குடியில் மகிழ்ந்து உறைகின்ற, எம் தந்தையைத் துதிக்கும் பக்தர்களுக்கு என்றும் இன்பமே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------