06.05 – பலவகை
2011-05-14
06.05.021 - உலகிற் பலிகொள - (மடக்கு)
----------------------------------------
(ஆறடிக் கட்டளைக் கலித்துறை - அடி ஈற்றில் மடக்கு அமைந்தது)
உலகிற் பலிகொள உன்கையிற் கொண்டனை ஓட்டினையே
உலராச் சடையின னேவுகந் தேற்றையும் ஓட்டினையே
கலவ மயிலன மாதொரு பாலெனக் காட்டினையே
கலந்திசை ஓங்க நடம்செய நாடினை காட்டினையே
சிலந்திக் கருள்செயப் புக்கது காவிரித் தீவினையே
சிலம்படி வாழ்த்திடு மென்குறை தீர்த்தழி தீவினையே.
பதம் பிரித்து:
உலகில் பலிகொள உன் கையில் கொண்டனை ஓட்டினையே;
உலராச் சடையினனே; உகந்து ஏற்றையும் ஓட்டினையே;
கலவ மயில் அன மாது ஒரு-பால் எனக் காட்டினையே;
கலந்து இசை ஓங்க நடம்-செய நாடினை காட்டினையே;
சிலந்திக்கு அருள்செயப் புக்கது காவிரித் தீவினையே;
சிலம்பு அடி வாழ்த்திடும் என் குறை தீர்த்து அழி தீவினையே.
சொற்பொருள்:
பலிகொள்தல் - பிச்சையேற்றல்;
ஓட்டினை - 1) பிரமனின் மண்டை ஓட்டை; 2) இடபத்தை ஏறிச் செலுத்துவாய் (உகைத்தாய்);
காட்டினை - 1) தோன்றுமாறு செய்தாய்; 2) சுடுகாட்டை;
சிலம்பு அடி - சிலம்பு அணிந்த அடி;
தீவினை - 1) காவிரியில் தீவாக அமைந்த திருவானைக்காவை; 2) பாவம்;
பிற்குறிப்பு:
யாப்புக் குறிப்பு: இப்பாடல் ஆறடிகளில் அடிதோறும் கட்டளைக்கலித்துறை அடிகளின் இலக்கணம் அமைய எழுதியது.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment