06.02.145 – நின்றவூர் (திருநின்றவூர்) - தந்தை தாயொடு - (வண்ணம்)
2011-04-09
06.02.145 - தந்தை தாயொடு - (நின்றவூர் (திருநின்றவூர்))
-------------------------
(வண்ணவிருத்தம்;
தந்த தானன தான தனதன
தந்த தானன தான தனதன
தந்த தானன தான தனதன .. தனதான )
(ஐந்து பூதமும் ஆறு சமயமும் - திருப்புகழ் - விராலிமலை)
தந்தை தாயொடு தாரம் உறவுகள்
.. .. என்று சூழ்தரு பாச வலையது
.. .. தங்க மார்தளை போல வரவுனை .. நினையாமல்
.. சங்கை வேதனை யான விரவிட
.. .. நொந்து மேதினி மீது துயர்மிகு
.. .. சங்கை யேயில தான பிறவியில் .. உழல்வேனும்
நிந்தை போலுன சீரை மொழிசெயும்
.. .. அன்பர் தோழமை யோடு நினைதரு
.. .. நெஞ்சர் நாவல ஊரர் உரைதமிழ் .. அவைபாடி
.. நின்று தூமலர் தூவி அலையென
.. .. வந்து சேர்வினை யாவும் அழிவுற
.. .. நின்றன் ஆர்கழல் நாடி வழிபட .. அருளாயே
எந்தை யேஇடர் தீரும் எனமுனம்
.. .. உம்ப ராரவர் ஓடி வரவரை
.. .. என்ற மாசிலை யோடு புரமெரி .. அதிவீரா
.. இண்டை மாமதி நாகம் நதியிவை
.. .. குஞ்சி மேலணி ஈச அழகிய
.. .. இஞ்சி சூழ்தளி பூசல் உளமென .. மகிழ்வோனே
வந்தி யார்அறி யாத வடிவின
.. .. அண்டர் நாயக ஆல விடமது
.. .. மஞ்சி னேர்மணி ஆக அணிதிரு .. மிடறானே
.. வண்டி னோசைய றாத பொழிலணி
.. .. நின்ற வூர்தனில் நேயர் தொழமலை
.. .. மங்கை யோடினி தாக உறைசிவ .. பெருமானே.
பதம் பிரித்து:
தந்தை தாயொடு தாரம் உறவுகள்
.. .. என்று சூழ்தரு பாச வலை-அது
.. .. தங்கம் ஆர் தளை போல வர, உனை நினையாமல்,
.. சங்கை வேதனையான விரவிட,
.. .. நொந்து, மேதினி மீது துயர் மிகு
.. .. சங்கையே இலது ஆன பிறவியில் உழல்வேனும்,
நிந்தை போல் உன சீரை மொழிசெயும்
.. .. அன்பர், தோழமையோடு நினைதரு
.. .. நெஞ்சர், நாவல ஊரர் உரை-தமிழ் அவை பாடி
.. நின்று, தூமலர் தூவி, அலை என
.. .. வந்து சேர் வினை யாவும் அழிவுற,
.. .. நின்றன் ஆர்-கழல் நாடி வழிபட அருளாயே;
"எந்தையே; இடர் தீரும்" என முனம்
.. .. உம்பரார்-அவர் ஓடி வர, வரை
.. .. என்ற மா-சிலையோடு புரம் எரி அதிவீரா;
.. இண்டை மாமதி நாகம் நதி இவை
.. .. குஞ்சிமேல் அணி ஈச; அழகிய
.. .. இஞ்சி சூழ் தளி பூசல் உளம் என மகிழ்வோனே;
வந்தியார் அறியாத வடிவின;
.. .. அண்டர் நாயக; ஆலவிடம்-அது
.. .. மஞ்சின்-நேர் மணி ஆக அணி திரு மிடறானே;
.. வண்டின் ஓசை அறாத பொழில் அணி
.. .. நின்றவூர்தனில் நேயர் தொழ, மலை
.. .. மங்கையோடு இனிதாக உறை சிவபெருமானே.
தந்தை தாயொடு தாரம் உறவுகள் என்று சூழ்தரு பாச வலை அது தங்கம் ஆர் தளை போல வர, உனை நினையாமல் - தந்தை, தாய், மனைவி, உறவினர் என்று என்னைச் சூழும் பந்தபாசம் என்ற வலை பொன்விலங்கு போல் ஆகி, அதனால் உன்னை நினையாமல்; (சூழ்தர - சூழ); (தருதல் - ஒரு துணைவினை);
சங்கை வேதனையான விரவிட நொந்து, மேதினி மீது துயர்மிகு சங்கையே இலதான பிறவியில் உழல்வேனும் - ஐயம், அச்சம், துன்பம் எல்லாம் வந்தடைய, அதனால் வருந்தி, பூமியின்மேல் எண்ணற்ற, துயரம் மிக்க பிறவிகளில் உழல்கின்ற நானும்; (சங்கை - 1. ஐயம்; அச்சம்; 2. எண்; அளவு); (மேதினி - பூமி);
நிந்தை போல் உன சீரை மொழிசெயும் அன்பர், தோழமையோடு நினைதரு நெஞ்சர், நாவல ஊரர் உரைதமிழ் அவை பாடி - பழிப்பது போல உன் புகழைப் பாடும் பக்தரும், நட்போடு நினைக்கும் மனத்தை உடையவரும், நாவலூரரும் ஆன சுந்தரர் அருளிய தேவாரத்தைப் பாடி; (உன - உனது); (அ - ஆறாம் வேற்றுமை உருபு); (சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே"); (நாவல ஊரர் - நாவலூரர் - சுந்தரர்; "நாவல" என்பதில் அகரம் சாரியை); (சுந்தரர் தேவாரம் - 7.100.10 - "நாவல ஊரன்சொன்ன");
நின்று தூமலர் தூவி, அலை என வந்து சேர்வினை யாவும் அழிவு உற, நின்றன் ஆர் கழல் நாடி வழிபட அருளாயே - நன்மலர்களைத் தூவி நின்று, அலைபோல முடிவின்றி வந்தடையும் வினைகள் எல்லாம் அழியும்படி, உன் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியை விரும்பி வழிபட அருள்புரிவாயாக; (ஆர்த்தல் - ஒலித்தல்);
"எந்தையே; இடர் தீரும்" என முனம் உம்பரார் அவர் ஓடி வர, வரை என்ற மா சிலையோடு புரம் எரி அதிவீரா - "எந்தையே! எம் இடர்களைத் தீருங்கள்" என்று முன்பு தேவர்கள் உன்னிடம் ஓடி வரவும், அவர்களைக் காக்க மேருமலை என்ற பெரும் வில்லால் முப்புரங்களையும் எரித்த மாவீரனே; (உம்பரார் - மேலிடத்து இருப்பவர்; தேவர்); (வரை - மலை); (சிலை - வில்); ("எந்தையே இடர் தீரும்" - ஒருமைபன்மை மயக்கம் என்று கொள்ளல் ஆம்);
இண்டை மாமதி நாகம் நதி இவை குஞ்சிமேல் அணி ஈச - தலைக்கு அணியும் மாலைபோல் பிறைச்சந்திரனையும், பாம்பையும், கங்கையையும் திருமுடிமேல் அணிண்த ஈசனே; (இண்டை - தலையில் அணியும் மாலை); (குஞ்சி - தலைமயிர் - தலைக்கு ஆகுபெயர்);
அழகிய இஞ்சி சூழ் தளி பூசல் உளம் என மகிழ்வோனே - மதில் சூழ்ந்த பெரும் கோயிலாகப் பூசலார் நாயனாரின் உள்ளத்தில் விரும்பி வீற்றிருப்பவனே; (இஞ்சி - மதில்); (தளி - கோயில்); (பூசல் - பூசலார் நாயனார்);
வந்தியார் அறியாத வடிவின - போற்றாதவர்களால் காண இயலாத வடிவம் உடையவனே;
அண்டர் நாயக - எல்லா அண்டங்களுக்கும் தலைவனே; தேவர் தலைவனே;
ஆலவிடம்-அது மஞ்சின்-நேர் மணி ஆக அணி திரு மிடறானே - கடல் நஞ்சை மேகத்தின் நிறத்தை ஒக்கும் மணி போல அணிந்த திருநீலகண்டனே; (ஆலம் - கடல்); (மஞ்சு - மேகம்); (நேர் - ஒப்பு); (மிடறு - கண்டம்; கழுத்து); (மிடறானே - மிடற்றானே); (பெரிய புராணம் - சம்பந்தர் புராணம் - 12.28.895 - "ஆலவிட முண்டவரை அடிகள் போற்றி");
வண்டின் ஓசை அறாத பொழில் அணி நின்றவூர்தனில் நேயர் தொழ, மலைமங்கையோடு இனிதாக உறை சிவபெருமானே - எப்பொழுதும் வண்டினங்கள் ரீங்காரம் செய்யும் சோலை சூழ்ந்த திருநின்றவூரில் பக்தர்கள் தொழப் பார்வதியோடு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment