Saturday, July 30, 2022

06.02.151 – நின்றியூர் (திருநின்றியூர்) - தெரிகின்ற தீயை - (வண்ணம்)

06.02.151 – நின்றியூர் (திருநின்றியூர்) - தெரிகின்ற தீயை - (வண்ணம்)

2011-07-16

06.02.151 - தெரிகின்ற தீயை - (நின்றியூர் (திருநின்றியூர்))

(இக்கால வழக்கில் "திருநன்றியூர்" - மயிலாடுதுறை அருகே உள்ள தலம்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனதந்த தானத் தனதந்த தானத்

தனதந்த தானத் .. தனதான )


தெரிகின்ற தீயைத் தொடவென்று மோடித்

.. .. தெளிவின்றி வாடித் .. தவியாமல்

.. சினமின்றி ஆசைப் புயலின்றி மாயத்

.. .. திரைவென்று வாழற் .. கருளாயே

பரிகின்ற தாயிற் பெரிதுன்ற னேயப்

.. .. பதமென்று பேசப் .. படுவோனே

.. பணிகொண்ட பேருக் கணிநின்று பாவப்

.. .. படைகொன்று வானைத் .. தருவோனே

இரிகின்ற தேவர்க் குயிர்தந்து பாலித்

.. .. தெரிநஞ்சை வாயிட் .. டதனாலே

.. இருள்கண்ட தீயொத் தொளிர்கின்ற ஆகத்

.. .. திணைகின்ற மாதுக் .. கினியானே

திரிகின்ற மாமுப் புரமன்று வேவச்

.. .. சிலையொன்றில் ஏவைப் .. பிணைவீரா

.. சிறைவண்டு பாடித் திரள்கின்ற சோலைத்

.. .. திருநின்றி யூரிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

தெரிகின்ற தீயைத் தொட என்றும் ஓடித்

தெளிவு இன்றி வாடித் தவியாமல்,

சினம் இன்றி ஆசைப் புயல் இன்றி மாயத்

திரை வென்று வாழற்கு அருளாயே;


பரிகின்ற தாயிற் பெரிது உன்றன் நேயப்

பதம் என்று பேசப்படுவோனே;

பணிகொண்ட பேருக்கு அணி நின்று பாவப்

படை கொன்று வானைத் தருவோனே;


இரிகின்ற தேவர்க்கு உயிர் தந்து பாலித்து

எரி-நஞ்சை வாய் இட்டு அதனாலே

இருள்-கண்ட; தீ ஒத்து ஒளிர்கின்ற ஆகத்து

இணைகின்ற மாதுக்கு இனியானே;


திரிகின்ற மா முப்புரம் அன்று வேவச்

சிலை ஒன்றில் ஏவைப் பிணை வீரா;

சிறை வண்டு பாடித் திரள்கின்ற சோலைத்

திருநின்றியூரிற் பெருமானே.


தெரிகின்ற தீயைத் தொட என்றும் ஓடித், தெளிவு இன்றி வாடித் தவியாமல் - தீ வெளிப்படையாகத் தெரிந்தபோதும், தெளிவில்லாமல் சென்று அத்தீயில் விழுந்து வாடி வருந்தாமல்;

சினம் இன்றி, ஆசைப் புயல் இன்றி, மாயத் திரை வென்று வாழற்கு அருளாயே - கோபம், ஆசை இவற்றை நீங்கி, மாயக்கடலை வென்று இனிது வாழ்வதற்கு அருள்வாயாக; (மாயத் திரை - மாயக்கடல்);


பரிகின்ற தாயின் பெரிது உன்றன் நேயப் பதம் என்று பேசப்படுவோனே - அன்புடைய தாயை விடச் சிறந்த அன்பு உடையவன் என்று புகழப்படுபவனே; (தாயின் பெரிது - தாயினும் சிறந்தது); (உன்றன் நேயப் பதம் - உன் அன்புத் திருவடி; உன் அன்பின் தன்மை); (திருவாசகம் - சிவபுராணம் - 8.1 - "தாயிற் சிறந்த தயாவான தத்துவனே");

பணிகொண்ட பேருக்கு அணி நின்று பாவப் படை கொன்று வானைத் தருவோனே - அடியவர்களுக்கு அருகே காக்கும் படையாக நின்று, அவர்களைத் தாக்க வரும் பாவப்படையை அழித்துச் சிவலோகத்தைக் கொடுப்பவனே; (பணிகொள்ளுதல் - தொண்டனாக ஏற்றுக்கொள்ளுதல்); (அணி நின்று - சமீபத்தில் இருந்து; படையாக இருந்து); (அணி - சமீபத்தில்; படை); (அண்ணுதல் - கிட்டுதல்);


இரிகின்ற தேவர்க்கு உயிர் தந்து பாலித்து, எரி-நஞ்சை வாய் இட்டு அதனாலே இருள்-கண்ட - (பாற்கடலைக் கடைந்தபோது விளைந்த விஷத்தைக் கண்டு) அஞ்சி ஓடிய தேவர்கள் அழியாமல் அவர்களைக் காத்து, எரிக்கும் நஞ்சை உண்டு அதனால் கறுத்த கண்டத்தை உடையவனே; (இரிதல் - அஞ்சி ஓடுதல்); (பாலித்தல் - காத்தல்); (இருள்தல் - கறுத்தல்);

தீ ஒத்து ஒளிர்கின்ற ஆகத்து இணைகின்ற மாதுக்கு இனியானே - தீப்போல் ஒளிரும் செம்மேனியில் ஒரு பாகமாக இணையும் பார்வதிக்கு இனியவனே; (ஆகம் - உடல்);


திரிகின்ற மா முப்புரம் அன்று வேவச் சிலைன்றில்வைப் பிணை வீரா - எங்கும் திரியும் பெரிய முப்புரங்களும் அன்று வெந்து அழியும்படி ஒரு வில்லில் அம்பைப் பூட்டிய வீரனே; (சிலை - வில்; மலை); (- அம்பு); (பிணைத்தல் - சேர்த்தல்);

சிறை வண்டு பாடித் திரள்கின்ற சோலைத் திருநின்றியூரிற் பெருமானே - இறகுகளை உடைய வண்டுகள் ரீங்காரம் செய்து திரளும் சோலை சூழ்ந்த திருநின்றியூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே. (சிறை - இறகு);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment