06.02.139 – நின்றவூர் (திருநின்றவூர்) - இகழ்கின்றதே நாடி - (வண்ணம்)
2011-02-19
06.02.139 - இகழ்கின்றதே நாடி - (நின்றவூர் (திருநின்றவூர்))
-------------------------
(வண்ணவிருத்தம்;
தனதந்த தானான தனதந்த தானான
தனதந்த தானான .. தனதான )
(* திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்)
இகழ்கின்ற தேநாடி இழிகின்ற வாறோடி
.. இகல்நெஞ்ச னேனானும் .. மனமாறிப்
புகழ்கின்ற பாமாலை அணிகின்ற நாவோடு
.. பொலிகின்ற தாளோத .. அருளாயே
அகமொன்றி வேறேதும் நினைவின்றி வாழ்பூசல்
.. அவர்கண்ட ஓர்கோயில் .. மகிழ்தேவா
திகழ்திங்கள் வானாறு புனைசங்க ராகாமர்
.. திருநின்ற வூர்மேவு பெருமானே.
பதம் பிரித்து:
இகழ்கின்றதே நாடி இழிகின்ற ஆறு ஓடி
.. இகல்-நெஞ்சனேன் நானும் மனமாறிப்,
புகழ்கின்ற பாமாலை அணிகின்ற நாவோடு
.. பொலிகின்ற தாள் ஓத அருளாயே;
அகம் ஒன்றி, வேறு ஏதும் நினைவு இன்றி வாழ் பூசல்
.. அவர் கண்ட ஓர் கோயில் மகிழ் தேவா;
திகழ்-திங்கள் வான்-ஆறு புனை சங்கரா; காமர்
.. திருநின்றவூர் மேவு பெருமானே.
இகழ்கின்றதே நாடி இழிகின்ற ஆறு ஓடி இகல்-நெஞ்சனேன் நானும் மனமாறிப் - (சான்றோர்களால்) இகழப்படுகின்ற விஷயங்களையே விரும்பி, கீழ்மையுறுகின்ற வழியே சென்று, மாறுபடுகின்ற நெஞ்சத்தை உடைய நானும் என் மனமானது திருந்தி அடங்கி; (இகழ்தல் - வெறுத்தல்); (இழிதல் - இழிவுபடுதல்); (ஆறு - வழி); (இகல்தல் - மாறுபடுதல்); (மனமாறி - 1. மானம் மாறி; 2. மனம் ஆறி); (மாறுதல் - சரிப்படுதல்); (ஆறுதல் - அடங்குதல்);
புகழ்கின்ற பாமாலை அணிகின்ற நாவோடு பொலிகின்ற தாள் ஓத அருளாயே - (உன்னைப்) புகழ்கின்ற பாமாலைகளை நாவில் தாங்கிப், பொலிவுடைய உன் திருவடியைப் பாட அருள்வாயாக; (ஓதுதல் - பாடுதல்);
அகம் ஒன்றி, வேறு ஏதும் நினைவு இன்றி வாழ் பூசல் அவர் கண்ட ஓர் கோயில் மகிழ் தேவா - வேறு சிந்தனைகள் எதுவும் இன்றித் தம் மனம் ஒருமுகப்பட்டு வாழ்ந்த பூசலார் நாயனார் கட்டித் தரிசித்த ஒப்பற்ற மனக்கோயிலில் விரும்பி எழுந்தருளிய தேவனே; (அகம் - மனம்); (பூசல் - பூசலார் நாயனார்); (காண்தல் - உண்டாக்குதல்; பார்த்தல்; தரிசித்தல்); (ஓர் - ஒப்பற்ற); (பெரியபுராணம் - பூசலார் நாயனார் புராணம் - 12.65.10 - "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டால யத்து நாளைநாம் புகுவோம்");
திகழ்-திங்கள் வான்-ஆறு புனை சங்கரா - ஒளிவீசும் சந்திரனையும் கங்கையையும் அணிந்த சங்கரனே; (வானாறு - வானதி - கங்கை); (புனைதல் - அணிதல்);
காமர் திருநின்றவூர் மேவு பெருமானே - அழகிய திருநின்றவூரில் உறைகின்ற பெருமானே; (காமர் - அழகு);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment