Friday, July 8, 2022

06.02.140 – நின்றவூர் (திருநின்றவூர்) - மினற்சடை யிடைப்புனல் - (வண்ணம்)

06.02.140 – நின்றவூர் (திருநின்றவூர்) - மினற்சடை யிடைப்புனல் - (வண்ணம்)


2011-02-22

06.02.140 - மினற்சடை யிடைப்புனல் - (நின்றவூர் (திருநின்றவூர்))

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்தன தனத்தன தனத்தன

தனத்தன தனத்தன தனத்தன .. தந்த தான )


(* திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்)


மினற்சடை யிடைப்புனல் நிலைத்திட

.. விரித்தவன் அலர்க்கணை விடுத்தவன் .. வெந்து வீழ

அனற்பொறி செலுத்திடு நுதற்கணன்

.. அரைக்கர வசைத்தவன் விடைக்கொடி .. கொண்ட ஈசன்

மனத்தளி அமைத்தவர் சிறப்பினை

.. மனர்க்கிர வினிற்கன வினிற்புகல் .. அன்பர் நேயன்

நினைப்பவர் வினைக்கரு அழித்திடு

.. நெருப்பவன் இருப்பது மதிற்றிரு .. நின்ற வூரே.


பதம் பிரித்து:

மினற்-சடையிடைப் புனல் நிலைத்திட

.. விரித்தவன்; அலர்க்கணை விடுத்தவன் வெந்து வீழ

அனற்பொறி செலுத்திடு நுதற்கணன்;

.. அரைக்கு அரவு அசைத்தவன்; விடைக்கொடி கொண்ட ஈசன்;

மனத்-தளி அமைத்தவர் சிறப்பினை

.. மனர்க்கு இரவினிற் கனவினிற் புகல் அன்பர் நேயன்;

நினைப்பவர் வினைக்கரு அழித்திடு

.. நெருப்பு-அவன் இருப்பது மதில்-திரு நின்றவூரே.


* 3-ம் அடி பூசலார் நாயனார் வரலாற்றைச் சுட்டியது.


மினல்-சடையிடைப் புனல் நிலைத்திட விரித்தவன் - மின்னல் போன்ற சடையில் கங்கை தங்குமாறு அச்சடையை விரித்தவன்; (மினற்சடை - மின்னற்சடை - இடைக்குறை விகாரம்);

அலர்க்-கணை விடுத்தவன் வெந்து வீழ அனல்-பொறி செலுத்திடு நுதல்-கணன் - மலரம்பை எய்த மன்மதன் சாம்பலாகும்படி தீப்பொறியை உமிழ்ந்த நெற்றிக்கண்ணன்; (அலர்க்கணை - மலர் அம்பு); (செலுத்துதல் - செல்லச்செய்தல்; எய்தல்); (உகைத்தல் - செலுத்துதல்); (நுதற்கணன் - நெற்றிக்கண்ணன்; கணன் - கண்ணன் - இடைக்குறை);

ரைக்கு அவு அசைத்தவன் - அரையில் பாம்பைக் கட்டியவன்; (அசைத்தல் - கட்டுதல்); (நக்கீரதேவ நாயனார் - கார் எட்டு - 11.15.1 - "அரவம் அரைக்கசைத்த அண்ணல்" - 'அரைக்கு' என்பதை 'அரைக்கண்' எனத் திரிக்க. இஃது உருபு மயக்கம்);

விடைக்கொடி கொண்ட ஈசன் - இடபக்கொடியை உடைய ஈசன்;

மனத்-தளி அமைத்தவர் சிறப்பினை மனர்க்கு இரவினிற் கனவினிற் புகல் அன்பர் நேயன் - மனக்கோயில் கட்டிய பூசலாரது சிறப்பைப் பல்லவ மன்னருக்கு இரவில் கனவில் சொன்னவன், அன்பர்க்கு அன்பன்; (தளி - கோயில்); (மனர்க்கு - மன்னர்க்கு - இடைக்குறை விகாரம்); (புகல்தல் - சொல்லுதல்);

நினைப்பவர் வினைக்கரு அழித்திடு நெருப்பு-அவன் இருப்பது மதில்-திரு நின்றவூரே - தன்னைத் தியானிப்பவர்களது வினையை வேரோடு அழிக்கின்ற தீயான அப்பெருமான் உறைவது மதில் சூழ்ந்த திருநின்றவூர்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment