Wednesday, July 6, 2022

06.02.137 – புகலி (காழி) - ஐம்புலனின் நசையேவ - (வண்ணம்)

06.02.137 – புகலி (காழி) - ஐம்புலனின் நசையேவ - (வண்ணம்)


2011-02-12

06.02.137 - ஐம்புலனின் நசையேவ - (புகலி (காழி))

-------------------------

(வண்ணவிருத்தம்;

தந்ததன தனதான தந்ததன தனதான

தந்ததன தனதான .. தனதான )


(அண்டர்பதி குடியேற - திருப்புகழ் - சிறுவை)


ஐம்புலனின் நசையேவ நெஞ்சிலுனை நினையாமல்

.. .. அம்புடைய மதனேவு .. குறியாகி

.. அந்தகனும் வரவாவி சென்றுவிட எரிகானில்

.. .. அங்கிசுடு பொடியாகி .. அழியாமுன்

வெம்பவமும் அறுமாறு செந்தமிழின் மணமாலை

.. .. மென்கழலில் இடுநேயம் .. அருளாயே

.. வெண்கடலில் எழுதீய நஞ்சமது சுடவோடி

.. .. விண்பணிய மணிபோல .. அணிவோனே

நம்பிமறை மொழியோடு கந்தமலி புகையோடு

.. .. நைந்துதொழும் ஒருமாணி .. உயிர்வாழ

.. நந்திநமன் அவன்வீழ அன்றவனை உதைபாத

.. .. நங்கையுமை பிரியாத மணவாளா

வம்புலவு குரவோடு கங்கைதிகழ் சடையீச

.. .. வன்புலியின் அதளாடை .. உடையானே

.. வண்டுமது மலர்நாடி வந்தறையும் அணிசோலை

.. .. வண்புகலி நகர்மேவு .. பெருமானே.


பதம் பிரித்து:

ஐம்புலனின் நசை ஏவ, நெஞ்சில் உனை நினையாமல்,

.. .. அம்பு உடைய மதன் ஏவு குறி ஆகி,

.. அந்தகனும் வர, ஆவி சென்றுவிட, எரிகானில்

.. .. அங்கி சுடு பொடி ஆகி அழியாமுன்,

வெம்பவமும் அறுமாறு செந்தமிழின் மணமாலை

.. .. மென்கழலில் இடு நேயம் அருளாயே;

.. வெண்-கடலில் எழு தீய நஞ்சம்-அது சுட, ஓடி

.. .. விண் பணிய, மணி போல அணிவோனே;

நம்பி மறைமொழியோடு கந்தமலி புகையோடு

.. .. நைந்து தொழும் ஒரு மாணி உயிர் வாழ,

.. நந்தி நமன் அவன் வீழ அன்று அவனை உதை பாத;

.. .. நங்கை-உமை பிரியாத மணவாளா;

வம்பு உலவு குரவோடு கங்கை திகழ் சடை ஈச;

.. .. வன்-புலியின் அதள்-ஆடை உடையானே;

.. வண்டு மது-மலர் நாடி வந்து அறையும் அணி சோலை

.. .. வண்-புகலி நகர் மேவு பெருமானே.



ஐம்புலனின் நசை, நெஞ்சில் உனை நினையாமல், அம்புடைய மதன் ஏவு குறிகி - ஐம்புலன்களின் ஆசைகள் என்னை உந்த, மனத்தில் உன்னை எண்ணாமல், அம்புகளை உடைய மன்மதன் அவ்வம்புகளைச் செலுத்தும் இலக்கு ஆகி; (நசை - ஆசை; விருப்பம்); (மதன் - மன்மதன்; காமன்); (குறி - இலக்கு);

அந்தகனும் வர, வி சென்றுவிட, எரிகானில் அங்கி சுடு பொடிகி அழியாமுன் - காலனின் வரவால் உயிர் சென்றுவிட, சுடுகாட்டில் தீச் சுட்ட சாம்பல் ஆகி அழிவதன்முன்னமே; (எரிகான் - சுடுகாடு); (அங்கி - நெருப்பு); (பொடி - சாம்பல்); (சம்பந்தர் தேவாரம் - 3.76.1 "கற்பொலிசு ரத்தினெரி கானினிடை மாநடமதாடி");

வெம்பவமும் அறுமாறு செந்தமிழின் மணமாலை மென்கழலில் இடு நேயம் அருளாயே - கொடிய பிறவிப்பிணியும் தீரும்படி செந்தமிழ்ப் பாமாலைகளை உன் மென்மையான திருவடியில் இடுகின்ற அன்பை எனக்கு அருள்வாயாக;

வெண்-கடலில் எழு தீய நஞ்சம்-து சுட, டி விண் பணிய, மணி போல அணிவோனே - வெண்மையான பாற்கடலில் எழுந்த கொடிய விஷம் சுட்டெரிக்க, அஞ்சி ஓடிய தேவர்கள் உன்ன வணங்க, அவர்களுக்கு இரங்கி அதன் உண்டு மணி போலக் கண்டத்தில் அணிந்தவனே;

நம்பி மறைமொழியோடு கந்தமலி புகையோடு நைந்து தொழும் ஒரு மாணி உயிர் வாழ - விரும்பி, மனமுருகி, வேதமந்திரங்கள், நறும்புகை இவற்றால் உன்னைத் தொழுத ஒப்பற்ற மார்க்கண்டேயர் உயிரோடு வாழும்படி; (நம்புதல் - விரும்புதல்); (கந்தம் - வாசனை); (1.20.7 - "நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை யொளிமுதல் மலரவை கொடுவழி படுதிறன் மறையவன்");

நந்தி நமன் அவன் வீழ அன்று அவனை உதை பாத - கூற்றுவன் இறந்து விழ அன்று அவனை உதைத்த பாதனே; (நந்துதல் - சாதல்);

நங்கை-மை பிரியாத மணவாளா - உமைநங்கையை ஒரு பாகமாக மகிழும் மணவாளனே;

வம்புலவு குரவோடு கங்கை திகழ் சடை ஈச - வாசனை கமழும் குராமலரும் கங்கையும் திகழும் சடையை உடைய ஈசனே; (வம்பு - வாசனை);

வன்-புலியின் அதள்-ஆடை உடையானே - வலிய புலியின் தோலை ஆடையாக உடையவனே; (அதள் - தோல்); (பெரியபுராணம் - திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் - 12.19.92 - "வன்புலியி னுரியாடைத் திருவேகம்பர்");

வண்டு மது-மலர் நாடி வந்து அறையும் அணி சோலை - வண்டுகள் தேன்மலர்களை ணாடி வந்து ஒலிக்கின்ற அழகிய சோலை சூழ்ந்த;

வண்-புகலி நகர் மேவு பெருமானே - வளம் மிக்க புகலியில் (சீகாழியில்) விரும்பி உறைகின்ற பெருமானே; (புகலி - சீகாழியின் 12 பெயர்களில் ஒன்று);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment