Saturday, July 9, 2022

06.05.019 - இரவில் - (மடக்கு)

06.05 – பலவகை

2011-03-01

06.05.019) இரவில் - (மடக்கு)

----------------------------------------

(இன்னிசை வெண்பா - முதற்சீர் மடக்குப் பெற்று வருமாறு அமைந்தது)


இரவில் எரியேந்தி ஆடும் இறைவன்

இரவில் வரும்பலிக் கெவ்வூரும் செல்வான்

இரவில் பொழுதும் இரவும்பேர் எண்ணின்

இரவில் நிலைதருவான் இங்கு.


சொற்பொருள்:

இரவு - 1. ராத்திரி; 2. பிச்சை;

இரவில் - 1. ராத்திரியில்; 2. பிச்சையில்; 3. ராத்திரி இல்லாத; 4. யாசிப்பு இல்லாத;

பலி - உணவு;

எண்ணின் - எண்ணினால்;


நள்ளிருளில் தீயை ஏந்தி ஆடுகின்ற இறைவன்; பிச்சையில் வரும் உணவுக்காகப் பல ஊர்களில் திரிபவன்; பகலிலும் இரவிலும் அவன் திருநாமத்தைத் தியானித்தால், நமக்கு ஒரு குறையுமில்லாமல் செல்வமெல்லாம் தந்து அருள்வான்;


பிற்குறிப்புகள்:

1) இப்பாடல் 2011 மார்ச் மாதத்தில் மகாசிவராத்திரியை ஒட்டி எழுதப்பெற்றது.


2) சம்பந்தர் தேவாரம் - 3.22.1 -

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்

நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்;

வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று

அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.


3) சுந்தரர் தேவாரம் - 7.34.1 -

தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்கினும் தொண்டர் தருகிலாப்

பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்;

இம்மையே தரும் சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;

அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment