06.02.144 – நின்றவூர் (திருநின்றவூர்) - என்றும் ஆசைகள் - (வண்ணம்)
2011-04-07
06.02.144 - என்றும் ஆசைகள் - (நின்றவூர் (திருநின்றவூர்))
-------------------------
(வண்ணவிருத்தம்;
தந்த தானன தான தனதன
தந்த தானன தான தனதன
தந்த தானன தான தனதன .. தனதான )
(ஐந்து பூதமும் ஆறு சமயமும் - திருப்புகழ் - விராலிமலை)
என்றும்
ஆசைகள் மோது மடமனம்
..
இன்ப
வாழ்வென மாய வலையினில்
..
இங்கு
வீழ்வுறு மாறு செயவுனை ..
நினையாமல்
குன்று
போல்வினை கூடி மிகவிடர்
..
கொண்டு
வாடடி யேனும் மதிபுனை
..
குஞ்சி
யாயுன தாளை வழிபட ..
அருளாயே
அன்று
மாணியின் ஆவி கொளவரும்
..
அன்பி
லாநம னாரை விழவுதை
..
அங்க
ணாவழி யாத புகழுடை ..
முதலோனே
நின்றன்
ஏர்மலி பாத நினைபவர்
..
நெஞ்ச
மேதளி யாக மகிழ்பவ
..
நின்ற
வூரிட மாக இனிதுறை ..
பெருமானே.
பதம் பிரித்து:
என்றும் ஆசைகள் மோது மட-மனம்
.. இன்ப வாழ்வு என மாய-வலையினில்
.. இங்கு வீழ்வுறுமாறு செய, உனை நினையாமல்
குன்று போல் வினை கூடி, மிக இடர்
.. கொண்டு வாடு அடியேனும், மதி புனை
.. குஞ்சியாய், உன தாளை வழிபட அருளாயே;
அன்று மாணியின் ஆவி கொள வரும்
.. அன்பு இலா நமனாரை விழ உதை
.. அங்கணா; அழியாத புகழுடை முதலோனே;
நின்றன் ஏர் மலி பாதம் நினைபவர்
.. நெஞ்சமே தளியாக மகிழ் பவ;
.. நின்றவூர் இடமாக இனிது உறை பெருமானே.
என்றும் ஆசைகள் மோது மட-மனம் இன்ப வாழ்வு என மாய-வலையினில் இங்கு வீழ்வுறுமாறு செய - எப்பொழுதும் ஆசைகள் அலைமோதுகின்ற பேதைமனம் இன்ப வாழ்வு என்று வஞ்சவலையில் இங்கே விழும்படி செய்ய;
உனை நினையாமல் குன்று போல் வினை கூடி, மிக இடர் கொண்டு வாடு அடியேனும் - உன்னை எண்ணாமல், மலைபோல் வினைகள் கூடி, துன்புற்று மிகவும் வாடுகின்ற அடியேனும்;
மதி புனை குஞ்சியாய், உன தாளை வழிபட அருளாயே - சந்திரனைத் தலைமேல் அணிந்தவனே, உன்னுடைய திருவடிகளை வழிபட அருள்வாயாக; (குஞ்சி - தலைமயிர். ஈண்டுத் தலைக்கு ஆகுபெயர்); ("மதி புனை குஞ்சி ஆய் - அறிவை அணியும் தலை ஆகி" என்று கொண்டு, "நான் அறிவு தெளிந்து" என்றும் கொள்ளலாம்); (உன - உனது; அ - ஆறாம் வேற்றுமை உருபு);
அன்று மாணியின் ஆவி கொள வரும் அன்பு இலா நமனாரை விழ உதை அங்கணா - முன்பு மார்க்கண்டேயரைக் கொல்ல வந்த கொடிய காலனை விழுந்து இறக்கும்படி உதைத்த அருட்கண்ணனே; (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்); (நமனார் - நமன் - இயமன்); (அங்கணன் - அருட்கண்ணன்);
அழியாத புகழுடை முதலோனே - என்றும் திகழும் புகழை உடைய ஆதிமூர்த்தியே;
நின்றன் ஏர் மலி பாதம் நினைபவர் நெஞ்சமே தளியாக மகிழ் பவ - உனது அழகிய திருவடியை நினைத்தவர் நெஞ்சத்தையே கோயிலாக மகிழும் பவனே; (ஏர் மலி - அழகு மிகும்); (தளி - கோயில்); (பவன் - சிவன் திருநாமம் - என்றும் இருப்பவன்); (பூசலார் நாயனாரைக் குறிப்பால் உணர்த்தியது என்றும் கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 4.40.8 - "தொண்டர் அகமலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே");
நின்றவூர் இடமாக இனிது உறை பெருமானே - திருநின்றவூர் கோயிலாகக்கொண்டு இனிது உறைகின்ற பெருமானே; (சம்பந்தர் தேவாரம் - 2.24.9 - "நாகேச்சுர நகரே இடமா உறைவா யெனஇன் புறுமே");
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment