06.02.133 – ஆலங்காடு (திருவாலங்காடு) - ஈனங் கேடு - (வண்ணம்)
2010-12-31
06.02.133 - ஈனங் கேடு - (ஆலங்காடு (திருவாலங்காடு))
-------------------------
(வண்ணவிருத்தம்;
தானந் தான தானந் .. தனதான )
ஈனங் கேடு சூழுஞ் .. சிறியோர்பால்
.. ஈயென் றோடி நாணங் .. கெடுவேனோ
நானன் போடு நாளுங் .. கழல்பாடி
.. வானந் தேடு ஞானந் .. தருவாயே
ஏனந் தேடு பாதம் .. பணிவோரின்
.. ஏதந் தீர ஆளுஞ் .. சடையானே
ஆனஞ் சாடி நீறும் .. புனைவோனே
.. ஆலங் காடு மேவும் .. பெருமானே.
பதம் பிரித்து:
ஈனம் கேடு சூழும் சிறியோர்பால்
.. "ஈ" என்று ஓடி நாணம் கெடுவேனோ;
நான் அன்போடு நாளும் கழல் பாடி,
.. வானம் தேடு ஞானம் தருவாயே;
ஏனம் தேடு பாதம் பணிவோரின்
.. ஏதம் தீர ஆளும் சடையானே;
ஆனஞ்சு ஆடி நீறும் புனைவோனே;
.. ஆலங்காடு மேவும் பெருமானே.
ஈனம் கேடு சூழும் சிறியோர்பால் "ஈ" என்று ஓடி நாணம் கெடுவேனோ - இழிவும் தீமையும் சூழும் அற்பர்களிடம் பொருள்நாடிப் பல்லிளித்துக்கொண்டு வெட்கமின்றிச் செல்லாமல்; (ஈனம் - இழிவு); ('ஈ' என்று - தா என்று; 'ஈ' என்று பல்லிளித்துக்கொண்டு);
நான் அன்போடு நாளும் கழல் பாடி, வானம் தேடு ஞானம் தருவாயே - நான் தினமும் பக்தியோடு உன் திருவடியைப் பாடி உய்தியை நாடும் அறிவை அருள்வாயாக; (வானம் - வான் - விண்ணுலகு; மோட்சம்);
ஏனம் தேடு பாதம் பணிவோரின் ஏதம் தீர ஆளும் சடையானே - பன்றி உருவில் திருமால் சென்று தேடிய திருவடியை வணங்குப்வர்களது துன்பம் தீர அருள்கின்ற, சடையை உடையவனே; (ஏனம் - பன்றி); (ஏதம் - பாவம்; துன்பம்);
ஆனஞ்சு ஆடி நீறும் புனைவோனே - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்துபொருள்களால் அபிஷேகம் செய்யப்பெற்றுத் திருநீற்றையும் அணிந்தவனே; (ஆனஞ்சு - பஞ்சகவ்வியம்); (ஆடுதல் - அபிஷேகம் செய்யப்பெறுதல்); (நீறும் - 'உம்' என்றது எச்சவும்மை - நதி, பாம்பு, மலர்கள் இவற்றையும் புனைவதைக் குறிப்பால் உணர்த்தியது; திருநீறானது பசுவின் சாணத்திலிருந்து பெறப்படும் பொருள் என்று கொண்டும் பொருள்கொள்ளலாம்);
ஆலங்காடு மேவும் பெருமானே - திருவாலங்காட்டில் உறைகின்ற பெருமானே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment