06.02.142 – நின்றவூர் (திருநின்றவூர்) - மத்திடு சுரர்க்கு - (வண்ணம்)
2011-02-25
06.02.142 - மத்திடு சுரர்க்கு - (நின்றவூர் (திருநின்றவூர்))
-------------------------
(வண்ணவிருத்தம்;
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன .. தந்த தான )
(Not same syllabic pattern but very similar - சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ - திருப்புகழ் - சுவாமிமலை)
மத்திடுசு ரர்க்குவெரு வைத்தருவி
.. டத்தினைம டுத்திருள்மி டற்றனறு
.. மத்தமல ரைச்சடையி னிற்புனையும் .. உம்பர் நாதன்
உத்தமியை முத்தனைய பற்றிகழும்
.. மட்டவிழ்ம லர்க்குழலி யைப்பிரியம்
.. உற்றவளை நச்சியிடம் வைத்தவிறை .. கங்கை சூடி
முத்தமிழில் நித்தமடி யைத்துதிசெய்
.. பத்தர்அவர் இப்புவியி னிப்பிறவில்
.. முத்திநிலை பெற்றிடவ ரத்தையளி .. அங்க ணாளன்
கத்தியரு வெற்பசைய ரக்கனழ
.. ஒற்றைவிரல் இட்டவன ரைக்கணொரு
.. கட்செவிய சைத்தவனி ருக்குமிடம் .. நின்ற வூரே.
பதம் பிரித்து:
மத்திடு சுரர்க்கு வெருவைத் தரு
.. விடத்தினை மடுத்து இருள்-மிடற்றன்; நறு
.. மத்த-மலரைச் சடையினிற் புனையும் உம்பர் நாதன்;
உத்தமியை, முத்து அனைய பல்-திகழும்
.. மட்டு அவிழ் மலர்க்குழலியைப், பிரியம்
.. உற்றவளை, நச்சி இடம் வைத்த இறை; கங்கை சூடி;
முத்தமிழில் நித்தம் அடியைத் துதிசெய்
.. பத்தர்அவர் இப்-புவி இனிப் பிறவு-இல்
.. முத்திநிலை பெற்றிட வரத்தை அளி அங்கணாளன்;
கத்தி அரு-வெற்பு அசை அரக்கன் அழ
.. ஒற்றை-விரல் இட்டவன்; அரைக்கண் ஒரு
.. கட்செவி அசைத்தவன் இருக்கும் இடம் நின்றவூரே.
மத்திடு சுரர்க்கு வெருவைத் தரு விடத்தினை மடுத்து இருள்-மிடற்றன் - பாற்கடலைக் கடைந்த தேவர்களுக்கு அச்சத்தைத் தந்த ஆலகால விஷத்தை உண்டு கறுத்த கண்டத்தன்; (மத்து இடுதல் - கடைதல்); (வெரு - அச்சம்); (மடுத்தல் - உண்ணுதல்);
நறு மத்த-மலரைச் சடையினிற் புனையும் உம்பர் நாதன் - மணம் வீசும் ஊமத்த மலர்ரைச் சடையில் அணிந்த தேவர் தலைவன்;
உத்தமியை - உத்தமியை (உமையை);
முத்து அனைய பல்-திகழும் மட்டு அவிழ் மலர்க்குழலியைப் - முத்துப் போன்ற பற்கள் உடையவளும், வாசம் கமழும் மலர்களை அணிந்த கூந்தலை உடையவளுமான உமையை;
பிரியம் உற்றவளை - அன்பு உடையவளை; (மட்டு - தேன்; வாசனை);
நச்சி இடம் வைத்த இறை - விரும்பித் திருமேனியில் இடப்பக்கம் பாகமாக வைத்த இறைவன்; (நச்சுதல் - விரும்புதல்);
கங்கை சூடி - கங்காதரன்;
முத்தமிழில் நித்தம் அடியைத் துதிசெய் பத்தர்அவர் இப்-புவி இனிப் பிறவு-இல் முத்திநிலை பெற்றிட வரத்தை அளி அங்கணாளன் - முத்தமிழால் நாள்தோறும் திருவடியைத் துதிக்கும் பக்தர்கள் இந்த நிலவுலகில் இனிமேல் பிறவி இல்லாத முக்திநிலை பெற வரம் அருளும் அருள்நோக்கம் உடையவன்; (முத்தமிழில் - முத்தமிழால் - உருபு மயக்கம்); (பிறவு - பிறவி); (சம்பந்தர் தேவாரம் - 1.110.1 - "பெருந்தகை பிறவினொ டிறவுமானான்" - பிறவு இறவு - பிறப்பு, இறப்பு. 'வு' விகுதிபெற்ற தொழிற்பெயர்); (அங்கணாளன் - பெருங்கருணையாளன்; கண்ணோட்டமுடையவன்);
கத்தி அரு-வெற்பு அசை அரக்கன் அழ ஒற்றை-விரல் இட்டவன் - மிகவும் ஆரவாரம் செய்துகொண்டு கயிலைமலையைப் பெயர்க்க முயலும் இராவணனை ஒரு விரலை ஊன்றி அழவைத்தவன்;
அரைக்கண் ஒரு கட்செவி அசைத்தவன் - அரையில் ஒரு பாம்பைக் கட்டியவன்; (அரைக்கண் - அரையில்; கண் - ஏழாம் வேற்றுமையுருபு); (கட்செவி - பாம்பு); (அசைத்தல் - கட்டுதல்);
இருக்கும் இடம் நின்றவூரே - அப்பெருமான் உறையும் தலம் திருநின்றவூர்.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment