06.02.134 – நின்றவூர் (திருநின்றவூர்) - தினமண்டு மாசை - (வண்ணம்)
2011-01-23
06.02.134 - தினமண்டு மாசை - (நின்றவூர் (திருநின்றவூர்))
-------------------------
(வண்ணவிருத்தம்;
தனதந்த தானத் தனதந்த தானத்
தனதந்த தானத் .. தனதான )
(* திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்)
தினமண்டு மாசைப் புயலுந்த ஆடித்
.. .. திருவின்றி வாடித் .. தவியாமல்
.. செறிசந்த மாலைத் தமிழ்கொண்டு பாடித்
.. .. திகழ்கின்ற தாளைத் .. தொழுவேனோ
இனலின்றி வாழற் கருளென்று சேவித்
.. .. தெழில்பொங்கு பூவிட் .. டடைமாணி
.. இனியென்றும் வாழற் கியமன்றன் மார்பத்
.. .. திடுகின்ற வீரக் .. கழலானே
உனையென்றும் ஓதித் தெருள்கொண்ட பூசற்
.. .. குளம்நின்ற மாணத் .. தளியானே
.. உடையென்று தோலைப் புனையின்ப ஆகத்
.. .. துமைதங்கு வேணிச் .. சடையானே
சினம்வென்று வாசக் கணைகொண்ட காமற்
.. .. செருவென்ற சீலர்க் .. கினியானே
.. சினைநின்று கோலக் கிளிகொஞ்சு சோலைத்
.. .. திருநின்ற வூரிற் .. பெருமானே.
பதம் பிரித்து:
தினம் மண்டும் ஆசைப் புயல் உந்த ஆடித்,
திரு இன்றி வாடித் தவியாமல்,
செறி-சந்த மாலைத் தமிழ்கொண்டு பாடித்,
திகழ்கின்ற தாளைத் தொழுவேனோ;
"இனல் இன்றி வாழற்கு அருள்" என்று சேவித்து,
எழில் பொங்கு பூ இட்டு அடை-மாணி
இனி என்றும் வாழற்கு, இயமன்றன் மார்பத்து
இடுகின்ற வீரக் கழலானே;
உனை என்றும் ஓதித் தெருள்கொண்ட பூசற்கு
உளம் நின்ற மாணத் தளியானே;
உடை என்று தோலைப் புனை இன்ப; ஆகத்து
உமை தங்கு வேணிச்-சடையானே;
சினம் வென்று, வாசக்-கணைகொண்ட காமற்
செரு வென்ற சீலர்க்கு இனியானே;
சினை-நின்று கோலக்-கிளி கொஞ்சு சோலைத்
திருநின்றவூரிற் பெருமானே.
தினம் மண்டும் ஆசைப் புயல் உந்த ஆடித், திரு இன்றி வாடித் தவியாமல் - தினமும் மிகுகின்ற ஆசைப்புயலானது என்னைத் தள்ள அங்குமிங்கம் அலைந்து, திரு இல்ளாம வாடித் துன்புறும் நிலையை அடையாமல்; (மண்டுதல் - மிகுதல்); (ஆடுதல் - அசைதல்; சஞ்சரித்தல்;)
செறி-சந்த மாலைத் தமிழ்கொண்டு பாடித், திகழ்கின்ற தாளைத் தொழுவேனோ - சந்தம் செறிந்த தமிழ்ப்பாமாலைகளைப் பாடி, விளங்குகின்ற திருவடியை வணங்க அருள்வாயாக; (செறி-சந்த மாலைத் தமிழ் = சந்தம் செறி தமிழ் மாலை); (சம்பந்தர் தேவாரம் - 1.57.11 - "சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டு பாடக் குணமாமே");
"இனல் இன்றி வாழற்கு அருள்" என்று சேவித்து, எழில் பொங்கு பூ இட்டு அடை-மாணி - "துன்பம் இல்லாமல் வாழ அருள்வாயாக" என்று துதித்து, அழகிய பூக்களைத் தூவிச் சரண்புகுந்த மார்க்கண்டேயர்; (இனல் - இன்னல் - இடைக்குறையாக வந்தது); (ஆடைதல் - சரண்புகுதல்); (மாணி - அந்தணச் சிறுவன்);
இனி என்றும் வாழற்கு இயமன்றன் மார்பத்து இடுகின்ற வீரக் கழலானே - இனிமேல் என்றும் இறப்பின்று வாழும் பொருட்டு காலனது மார்பில் உதைத்த வீரக்கழல் அணிந்த திருவடியினனே; (மார்பம் - மார்பு); (இடுதல் - வைத்தல்; குத்துதல்);
உனை என்றும் ஓதித் தெருள்கொண்ட பூசற்கு உளம் நின்ற மாணத் தளியானே - உன்னை என்றும் போற்றி வழிபட்டுத் தெளிந்த பூசலார்க்கு அவர் உள்ளத்தில் இருந்த சிறந்த கோயிலில் உறைபவனே; (பூசற்கு - பூசல் + கு - பூசலார்க்கு); (மாணம் - மாட்சிமை); (தளி - கோயில்);
உடை என்று தோலைப் புனை இன்ப - புலித்தோலை உடையாக அணியும் இன்பனே;
ஆகத்து உமை தங்கு வேணிச்-சடையானே - திருமேனியில் உமை ஒரு பாகமாகத் தங்கிய, கங்கைச் சடையானே; (ஆகம் - மேனி); (வேணி - நதி);
சினம் வென்று, வாசக்-கணைகொண்ட காமற் செரு வென்ற சீலர்க்கு இனியானே - சினத்தையும் வென்று, வாசம் மிக்க பூங்கணை ஏவும் காமனது போரையும் வென்ற சீலர்களுக்கு இனிமை பயப்பவனே; (செரு - போர்); (காமற் செரு - காமன் செய்யும் போர்); ("காமற் செரு வென்ற - மன்மதனைப் போரில் வென்ற" என்றும் பொருள்கொள்ளல் ஆம்; இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள்தெளிவு கருதி, முதற்சொல்லின் ஈற்றில் உள்ள னகர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்); ("உனைத் தினம்" என்று தொடங்கும் திருப்புகழ் - திருப்பரங்குன்றம் - "சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ மகிழ்வோனே");
சினை-நின்று கோலக்-கிளி கொஞ்சு சோலைத் திருநின்றவூரிற் பெருமானே - மரக்கிளையில் தங்கி அழகிய கிளிகள் இன்னொலி செய்யும் பொழில் சூழ்ந்த திருநின்றவூறில் உறைகின்ற பெருமானே; (சினை - மரக்கிளை); (நிற்றல் - தங்குதல்); (கோலம் அழகு); (கொஞ்சுதல் - இனிதாய் ஒலித்தல்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment