Saturday, July 30, 2022

06.02.149 – புகலி (காழி) - அலையு மனமும் - (வண்ணம்)

06.02.149 – புகலி (காழி) - அலையு மனமும் - (வண்ணம்)

2011-06-11

06.02.149 - அலையு மனமும் - (புகலி (காழி))

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தனன தனன தனன

தனன தனன .. தனதான )


(திமிர உததி - திருப்புகழ் - பழநி)

(கரிய பெரிய - திருப்புகழ் - பழநி)


அலையு மனமும் உலகில் நசையும்

.. .. அதிக வினையும் .. அடியேனை

.. அவதி மலியு நெறியில் அழிவை

.. .. அடைய விரைய .. உகையாமுன்

இலையு மலரும் இயலும் இசையும்

.. .. இசையும் இனிய .. தமிழோடே

.. இயலும் வகையில் உனது சரண

.. .. இணையை அடைய .. அருளாயே

உலவு நதியும் ஒளிரு மதியும்

.. .. உரகம் அருகு .. முடிமீதே

.. உடைய ஒருவ மயிலை அனைய

.. .. உமையும் உடலில் .. ஒருபாதி

இலகும் இறைவ புகலி நகரில்

.. .. எழுது மறையை .. மகிழ்வோனே

.. இருவர் பரவு பரம கொடியில்

.. .. எருதை உடைய பெருமானே.


பதம் பிரித்து:

அலையும் மனமும் உலகில் நசையும்

.. .. அதிக வினையும் அடியேனை

.. அவதி மலியும் நெறியில் அழிவை

.. .. அடைய விரைய உகையாமுன்,

இலையும் மலரும் இயலும் இசையும்

.. .. இசையும் இனிய தமிழோடே

.. இயலும் வகையில் உனது சரண

.. .. இணையை அடைய அருளாயே;

உலவும் நதியும் ஒளிரும் மதியும்

.. .. உரகம் அருகு முடிமீதே

.. உடைய ஒருவ; மயிலை அனைய

.. .. உமையும் உடலில் ஒரு பாதி

இலகும் இறைவ; புகலி நகரில்

.. .. எழுது மறையை மகிழ்வோனே;

.. இருவர் பரவு பரம; கொடியில்

.. .. எருதை உடைய பெருமானே.


அலையும் மனமும் உலகில் நசையும் அதிக வினையும் அடியேனை அவதி மலியும் நெறியில் அழிவை அடைய விரைய உகையாமுன் - அலைபாய்கின்ற மனமும், உலக ஆசைகளும், மிகுந்திருக்கும் பழைய வினைகளும் என்னைத் துன்பம் மிகும் பாதையில் அழிவை அடைய விரையும்படி செலுத்துவதன்முன்னம்; (நசை - ஆசை); (அவதி - துன்பம்); (உகைத்தல் - செலுத்துதல்);

இலையும், மலரும், இயலும் இசையும் இசையும் இனிய தமிழோடே, இயலும் வகையில் உனது சரண இணையை அடைய அருளாயே - வில்வ இலைகளாலும், பலவகை மலர்களாலும், இயல் இசை என்ற இரண்டும் பொருந்திய தமிழ்ப்பாடல்களோடும், இயன்ற வகையில் உன்னைப் போற்றி உன் இணையடியை அடைவதற்கு அருள்வாயாக; (சரண இணை - இரண்டு திருவடிகள்); (அடைதல் - சரண்புகுதல்; சேர்தல்);

உலவும் நதியும், ஒளிரும் மதியும், உரகம் அருகு முடிமீதே உடைய ஒருவ - கங்கையையும் ஒளிவீசும் சந்திரனையும் பாம்பின் அருகே தலைமீது அணியும் ஒப்பற்றவனே; (உரகம் - பாம்பு);

மயிலை அனைய உமையும் உடலில் ஒரு பாதி இலகும் இறைவ - மயில் போன்ற பார்வதியை ஒரு கூறாக உடையவனே;

புகலி நகரில் எழுது மறையை மகிழ்வோனே - புகலி நகரில் (சீகாழியில்) எழுதப்பெறும் வேதமாகிய சம்பந்தர் தேவாரத்தை விரும்பியவனே; (எழுது மறை - சம்பந்தர் தேவாரம்); (பெரிய புராணம்: "வண்டமிழால் எழுதுமறை மொழிந்தபிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார்")

இருவர் பரவு பரம - திருமால் பிரமன் இருவரும் வணங்கும் பரமனே;

கொடியில் எருதை உடைய பெருமானே - இடபக் கொடியை உடைய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment