06.02.135 – புகலி (காழி) - எந்தநொடி உயிர்நாடி - (வண்ணம்)
2011-02-09
06.02.135 - எந்தநொடி உயிர்நாடி - (புகலி (காழி))
-------------------------
(வண்ணவிருத்தம்;
தந்ததன தனதான தந்ததன தனதான
தந்ததன தனதான .. தனதான )
(அண்டர்பதி குடியேற - திருப்புகழ் - சிறுவை)
எந்தநொடி உயிர்நாடி அந்தநமன் விடுதூதர்
.. .. என்றனிடம் வருவேளை .. அறியேனே
.. என்பிரிய உடல்மீது கந்தமலி மலர்தூவ
.. .. இந்தனம தணையாக .. எரிமூழ்கும்
அந்தநிலை அடையாமு னண்டுவினை அவையோட
.. .. அன்பொடுன கழல்பாட .. அருளாயே
.. அந்தமொடு முதலாகி அண்டமிவை பலவாகி
.. .. அஞ்சொலுமை ஒருபாகம் .. உடையானே
வெந்தபொடி அதுபூசும் அந்திவண அடிதேடி
.. .. விண்டுசெல முடிதேடி .. அயனேக
.. வெந்தழலின் உருவாகி அன்றுயரும் ஒருநாத
.. .. வென்றிவிடை மிசையேறி .. வருவோனே
சந்திரனை இளநாகம் ஒன்றுதனை அலையாறு
.. .. தங்குசடை அதன்மீது .. புனைவோனே
.. சந்தமிகு தமிழ்பாடு பந்தனுரை மகிழ்காத
.. .. தண்புகலி நகர்மேவு .. பெருமானே.
பதம் பிரித்து:
எந்த நொடி உயிர் நாடி அந்த நமன் விடு தூதர்
என்றனிடம் வரு வேளை அறியேனே;
என் பிரிய உடல்மீது கந்தமலி மலர் தூவ,
இந்தனம்-அது அணையாக எரி மூழ்கும்
அந்த நிலை அடையாமுன், அண்டு வினை அவை ஓட,
அன்பொடு உன கழல் பாட அருளாயே;
அந்தமொடு முதல் ஆகி, அண்டம் இவை பல ஆகி,
அஞ்சொல்-உமை ஒரு பாகம் உடையானே;
வெந்த பொடி அது பூசும் அந்தி-வண; அடி தேடி
விண்டு செல, முடி தேடி அயன் ஏக,
வெந்தழலின் உரு ஆகி அன்று உயரும் ஒரு நாத;
வென்றி-விடைமிசை ஏறி வருவோனே;
சந்திரனை, இளநாகம் ஒன்றுதனை, அலை-ஆறு
தங்கு சடை அதன்மீது புனைவோனே;
சந்தமிகு தமிழ் பாடு பந்தன் உரை மகிழ் காத;
தண் புகலி நகர் மேவு பெருமானே.
எந்த நொடி உயிர் நாடி அந்த நமன் விடு தூதர் என்றனிடம் வரு வேளை அறியேனே - எந்தக் கணம் என் உயிரைக் கொல்ல அந்தக் கூற்றுவன் அனுப்புகின்ற எமதூதர்கள் என்னிடம் வருகின்ற சமயம் என்று நான் அறியமாட்டேன்; (சம்பந்தர் தேவாரம் - 2.41.3 - "நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் ஆரறிவார் சாநாளும் வாழ்நாளும்");
என் பிரிய உடல்மீது கந்தமலி மலர் தூவ, இந்தனம்-அது அணையாக எரி மூழ்கும் அந்த நிலை அடையாமுன் - (அப்படி அத்தூதர்கள் வந்து என் உயிர் பிரிந்துவிட) எனக்கு மிகவும் பிரியமான இவ்வுடல்மேல் வாசமலர்களைத் தூவி, விறகுப் படுக்கையில் கிடத்தத், தீயில் மூகும் அந்த நிலையை அடைவதன்முன்னமே; (பிரியம் - அன்பு); (இந்தனம் - விறகு; அது - பகுதிப்பொருள்விகுதி); (அணை - படுக்கை);
அண்டு வினை அவை ஓட, அன்பொடு உன கழல் பாட அருளாயே - என்னை நெருங்குகின்ற வினையெல்லாம் ஒழிய, பக்தியொடு உனது திருவடிகளைப் போற்றிப் பாட அருள்வாயாக; (அண்டுதல் - கிட்டுதல்); (ஓடுதல் - விரைந்து நீங்குதல்); (உன - உன்+அ - உன்னுடைய); (அ - ஆறாம் வேற்றுமையுருபு);
அந்தமொடு முதல் ஆகி, அண்டம் இவை பல ஆகி, அஞ்சொல்-உமை ஒரு பாகம் உடையானே - அனைத்திற்கும் முதலும் முடிவும் ஆகி, இவ்வண்டங்கள் எல்லாம் ஆகி, இன்மொழி பேசும் உமையை ஒரு பாகமாக உடையவனே;
வெந்த பொடி அது பூசும் அந்தி-வண - சுட்ட திருநீற்றைப் பூசுகின்ற, அந்திநேரத்து வானம் போல் செம்மேனியனே; (அந்திவண - அந்திவண்ணனே); (அந்தி - சாயங்காலம்; அந்தீ (அம் தீ - அழகிய தீ) என்பதன் குறுக்கல் விகாரம் என்றும் கருதலாம்);
அடி தேடி விண்டு செல, முடி தேடி அயன் ஏக - திருவடியைத் தேடி விஸ்ஹ்னு செல்ல, திருமுடியைத் தேடிப் பிரமன் செல்ல; (விண்டு - விஷ்ணு); (ஏகுதல் - போதல்);
வெந்தழலின் உரு ஆகி அன்று உயரும் ஒரு நாத - வெம்மையான சோதி வடிவில் முன்பு எல்லையின்றி நீண்ட ஒப்பற்ற தலைவனே; (ஒரு - ஒப்பற்ற);
வென்றி-விடைமிசை ஏறி வருவோனே - வெற்றியுடைய இடபத்தின்மேல் ஏறி வருபவனே; (வென்றி - வெற்றி);
சந்திரனை, இளநாகம் ஒன்றுதனை, அலை-ஆறு தங்கு சடை அதன்மீது புனைவோனே - திங்களையும் இளம் பாம்பையும் அலையுடைய கங்கை தங்கிய சடையின்மேல் அணிந்தவனே; (அலை - திரை); (சம்பந்தர் தேவாரம் - 1.52.4 - "கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா");
சந்தமிகு தமிழ் பாடு பந்தன் உரை மகிழ் காத - சந்தம் மிகுந்த தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் திருஞான சம்பந்தரின் பாடல்களை விரும்பிக் கேட்பவனே; (பந்தன் - சம்பந்தன் - ஒருபுடைப் பெயர்); (உரை - சொல்); (காத - காதனே - காதினை உடையவனே); (சுந்தரர் தேவாரம் - 7.58.5 - "குண்டலங் குழைதிகழ் காதனே");
தண் புகலி நகர் மேவு பெருமானே - குளிர்ந்த புகலிநரில் (சீகாழியில்) விரும்பி உறைகின்ற பெருமானே; (புகலி - சீகாழியின் 12 பெயர்களில் ஒன்று);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment