06.05 – பலவகை
2011-05-13
06.05.020 - ஏகமும் ஆகி
----------------------------------------
(ஆறடிக் கட்டளைக்கலித்துறை)
(கூவிளம் தேமா கருவிளம் தேமா கருவிளங்காய் - என்ற வாய்பாடு)
ஏகமும் ஆகி அனேகமும் ஆகி எரியதனேர்
ஆகமும் காட்டும் அணிமணி கண்டன் அரையினிலோர்
நாகமும் வீக்கி நரைவிடை ஏறி நறுங்குழலி
பாகமும் ஆகும் பரமனை நாளும் பணிமனமே
சோகமும் நோயும் துடைத்தடி யார்க்குத் துணையெனவாய்ப்
போகமும் நல்கிப் புரந்தருள் வான்நம் புகலவனே.
பதம் பிரித்து:
ஏகமும் ஆகி, அனேகமும் ஆகி, எரி அதன் நேர்
ஆகமும் காட்டும் அணி மணிகண்டன்; அரையினில் ஓர்
நாகமும் வீக்கி, நரைவிடை ஏறி, நறும் குழலி
பாகமும் ஆகும் பரமனை நாளும் பணி மனமே;
சோகமும் நோயும் துடைத்து, அடியார்க்குத் துணை எனவாய்ப்,
போகமும் நல்கிப் புரந்து அருள்வான்; நம் புகல் அவனே.
ஏகமும் ஆகி, அனேகமும் ஆகி - ஒன்றும் பலவும் ஆயவன்;
எரி அதன் நேர் ஆகமும் காட்டும் அணி மணிகண்டன் - செந்தழல் போல் செம்மேனியில் அழ்கிய நீலமணிகண்டம் உடையவன்;
அரையினில் ஓர் நாகமும் வீக்கி, நரைவிடை ஏறி, நறும் குழலி பாகமும் ஆகும் பரமனை நாளும் பணி மனமே - அரையில் பாம்பைக் கட்டியவன், வெள்ளெருதின்மேல் ஏறியவன், வாசக்குழல் உமையை ஒரு பாகமாக உடைய பரமனைத் தினமும் வணங்கு மனமே;
சோகமும் நோயும் துடைத்து, அடியார்க்குத் துணை எனவாய்ப், போகமும் நல்கிப் புரந்து அருள்வான் - சோகத்தையும் பிணியையும் தீர்த்து, அடியார்களுக்குத் துணையாகிப், போகங்களும் அருளிக் காப்பவன்;
நம் புகல் அவனே - அவனே நம் புகல்; (புகல் - பற்றுக்கோடு; அடைக்கலம்; சரண்);
பிற்குறிப்பு:
யாப்புக் குறிப்பு: இப்பாடல் ஆறடிகளில் அடிதோறும் கட்டளைக்கலித்துறை அடிகளின் இலக்கணம் அமைய எழுதியது.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment