Saturday, July 9, 2022

06.01.129 - சிவன் - சோலை - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்


2011-03-18

06.01.129 - சிவன் - சோலை - சிலேடை

-------------------------------------------------------

பைங்கிளி சேருமிடம் வான்மதி தீண்டுமுடி

அங்கயல் ஓடுமோர் ஆறிருக்கும் - தங்கநிழல்

கொண்டிருக்கும் கூவிளம் கொன்றை திகழ்ந்திருக்கும்

வண்டறை சோலையரன் மாண்பு.


சொற்பொருள்:

பைங்கிளி - 1) பச்சைக்கிளி; / 2) அழகிய இளம்பெண்;

வான்மதி - வான் மதி; வால் மதி;

வான் - ஆகாயம்; அழகு;

வால் - வெண்மை; தூய்மை;

முடி - 1) உச்சி; / 2) தலை;

அங்கயல் - 1) அம் கயல்; / 2) அங்கு அயல்;

அம் - அழகு;

அயல் - அருகு;

தங்கநிழல் - 1) தங்குவதற்கு நிழல்; / 2) பொன் போன்ற ஒளி; (நிழல் - ஒளி);

கூவிளம் - வில்வம்;

மாண்பு - பெருமை;


சோலை:

பைங்கிளி சேரும் இடம் - பச்சைக் கிளிகள் கூடும் இடம்;

வான் மதி தீண்டும் முடி - வானத்துச் சந்திரனை அதன் உச்சி தொடும்;

அம் கயல் ஓடும் ஓர் ஆறு இருக்கும் - அழகிய கயல் மீன்கள் ஓடும் நதி இருக்கும்;

தங்க நிழல் கொண்டிருக்கும் - (மக்களும் விலங்குகளும்) தங்கி இளைப்பாற நிழல் இருக்கும்;

கூவிளம் கொன்றை திகழ்ந்திருக்கும் - வில்வம், கொன்றை போன்ற மரங்கள் இருக்கும்;

வண்டு அறை சோலை - வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலை.

மாண்பு - பெருமை; அழகு;


சிவன்:

பைங்கிளி சேரும் இடம் - அழகிய உமை இடப்பக்கம் சேர்வாள்;

வால் மதி தீண்டும் முடி - வெண் திங்கள் தலைமேல் இருக்கும்; ("வான் மதி = அழகிய திங்கள்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

அங்கு அயல் ஓடும் ஓர் ஆறு இருக்கும் - அங்கு அந்தச் சந்திரன் அருகே கங்கையும் ஓடும்;

தங்கநிழல் கொண்டிருக்கும் - பொன்னொளி திகழும்; (பொற்சடை); (சம்பந்தர் தேவாரம் - 1.86.3 - "சூடு மிளந்திங்கட் சுடர்பொற் சடைதாழ" - சுடர் பொன் சடை - ஒளிவிடுகின்ற பொன்போலும் திருச்சடை);

கூவிளம் கொன்றை திகழ்ந்திருக்கும் - வில்வ இலையும், கொன்றை மலரும் திருமுடிமேல் இருக்கும்;

அரன் - ஹரன்;

மாண்பு - பெருமை; அழகு;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள்:

1) சிவபெருமானது திருமுடி அழகு:

காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி - 11.4.53 -

சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி

நீரார்ந்த பேர்யாறு நீத்தமாய்ப் - போரார்ந்த

நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்

காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.


2) இலக்கணக் குறிப்பு: "ல்+= ன்ம" என்று ஆகும்;

இலக்கணச் சுருக்கம் - ஆறுமுக நாவலர் - லகர ளகர வீற்றுப் புணர்ச்சி -

154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.


No comments:

Post a Comment