06.04.016 – திருநாவுக்கரசர் துதி - மூண்ட பேரன்பினால்
2011-04-23
6.4.16) திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2011 (Apr 27/28)
----------------------------------
(வெண்பா)
(எல்லாப் பாடல்களும் ஒரே ஈற்றடி)
1)
மூண்டபே ரன்பினால் முக்கட் பெருமானைத்
தாண்டவம் ஆடும் தலைவனைத் - தாண்டகத்
தண்டமிழால் போற்றிய நாவரசர் தாளிணை
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
மூண்ட பேர்-அன்பினால் - உள்ளத்தில் பொங்கி எழுந்த மிகுந்த அன்பால்;
முக்கட் பெருமானைத் - முக்கண் உடைய பெருமானை;
தாண்டவம் ஆடும் தலைவனைத் - கூத்து ஆடும் தலைவனை;
தாண்டகத் தண் தமிழால் போற்றிய - திருத்தாண்டகப் பதிகங்கள் என்ற குளிர்ந்த தமிழ்ப் பாமாலைகளால் துதித்த;
நாவரசர் தாள்-இணை உண்டு என்றும் என் உள்ளத்துள் - திருநாவுக்கரசரது இரு திருவடிகள் என் நெஞ்சில் என்றும் உள்ளன;
2)
கல்லினைக் கட்டிக் கடலினுள் ஆழ்த்தினும்
எல்லையில் அன்போ டெழுத்தஞ்சைச் - சொல்லிக்கார்க்
கண்டன் அருளால் கரையேறி னார்கழல்
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
* கல்லே தெப்பமாகிக் கடலில் மிதந்து உய்ந்தது;
எல்லை இல் அன்போடு எழுத்தஞ்சைச் சொல்லிக் - அளவற்ற பக்தியோடு நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தை ஓதி;
கார்க்கண்டன் - நீலகண்டன்;
3)
நறுந்தொடையாய் நாள்தொறும் நம்பெரு மாற்குக்
குறுந்தொகைநாம் சூட்டிநம் குற்றம் - அறுந்தினி
மண்டலத்தில் வாரா வழிதந்த அப்பரடி
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
* குறுந்தொகை - ஐந்தாம் திருமுறையான திருக்குறுந்தொகைப் பாடல்கள்;
நறும் தொடை - மணம் வீசும் மாலை;
நம்பெருமாற்குக் - நம் பெருமானுக்கு;
குற்றம்- தீவினை;
அறுதல் - தீர்தல்; இல்லாமற் போதல்;
மண்டலம் - பலவகைப் புவனங்கள்; ('மண் தலம் = பூமி' என்றும் கொள்ளலாம்);
மண்டலத்தில் வாரா வழி - பிறவித்தொடரை அறுக்கும் வழி;
(அப்பர் தேவாரம் - 6.81.1 - "மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய்");
(சம்பந்தர் தேவாரம் - 3.28.11 - "ஞானசம் பந்தன்சொல் கோலத்தால் பாடுவார் குற்றம்அற் றார்களே.)
4)
அப்பூதி மைந்தனுக் காருயிர் ஈந்தவர்
இப்பூமி உய்யவந்த எம்தலைவர் - எப்போதும்
தொண்டுபுரி நாவரசர் தூமலர்ப் பாதங்கள்
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
* அரவு தீண்டி இறந்த அப்பூதி அடிகள் மகனைப் பதிகம் பாடி உயிர்ப்பித்தது;
அப்பூதி - 63 நாயன்மார்களுள் ஒருவரான அப்பூதி அடிகள்;
5)
காலையும் மாலையும் கண்ணுதலான் சீர்பரவி
மாலை அகற்றிடும் வண்டமிழ் - மாலைகள்
விண்டதிரு நாவுக் கரசரின் மென்மலர்த்தாள்
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
மாலை - 1) சாயங்காலம்; 2) அறியாமையை; 3) மலர்களால் தொடுத்த மாலை;
(* மடக்கு - ஒரு பாடலில் ஒரு சொல்லோ சொற்றொடரோ பொருள்வேறுபட்டு மீண்டும் மீண்டும் வருவதாகிய சொல்லணிவகை);
வண்டமிழ் - வண் தமிழ் - வளமான தமிழ் - தேவாரம்;
விண்ட - சொன்ன; (விள்ளுதல் - சொல்லுதல்);
6)
வஞ்சத்தை நெஞ்சத்தில் வைத்தவர்கள் அன்புடைமை
கிஞ்சித்தும் இல்லாத கேடரளி - நஞ்சத்தை
உண்டு சிவனருளால் உய்ந்தவப்பர் தாளிணை
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
* சமணர் தந்த நஞ்சு கலந்த உணவை உண்டு சிவனருளால் உய்ந்தது;
அரவு தீண்டி இறந்த அப்பூதி அடிகள் மகனைப் பதிகம் பாடி உயிர்ப்பித்தது;
கிஞ்சித்தும் - சிறிதும்;
அளி நஞ்சத்தை - அளித்த விஷத்தை; (அப்பர்க்கு உணவில் விஷத்தைக் கலந்து உண்பித்ததைச் சுட்டியது);
உண்டு - 1) அருந்தி; 2) உள்ளது; (* மடக்கு - ஒரு பாடலில் ஒரு சொல்லோ சொற்றொடரோ பொருள்வேறுபட்டு மீண்டும் மீண்டும் வருவதாகிய சொல்லணிவகை);
உய்ந்தவப்பர் - உய்ந்த அப்பர்;
7)
நெய்யாடும் நின்மலனார் நீலகண்டர் நீண்மலைமேல்
மையார்கண் மாதொடுறை கோலத்தை - ஐயாற்றில்
கண்டு களித்ததிரு நாவுக் கரசர்தாள்
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
* கயிலைக் காட்சியைத் திருவையாற்றில் கண்டது;
நெய் ஆடுதல் - நெய்யால் அபிஷேகம் செய்யப்பெறுதல்;
நின்மலன் - மலமற்றவன்;
நீண்மலை - நீள் மலை - புகழால் உயர்ந்த திருக்கயிலை மலை;
மை ஆர் கண் மாது - மையணிந்த கண் உடைய பார்வதி;
8)
வண்டுசேர் மாமயி லாடுதுறை வள்ளலை
அண்டர்தம் நாயகனை ஆலாலம் - உண்டுதிகழ்
கண்டனைக் காதலொடு கைதொழுத அப்பரடி
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
வண்டு சேர் மா மயிலாடுதுறை - வண்டுகள் சேரும் பொழில் சூழ்ந்த அழகிய மயிலாடுதுறை;
(அப்பர் தேவாரம் - 5.39.3 -
அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்
கண்டு வீற்றிருக்கும் கருத்தொன்றிலோம்
வண்டு சேர் மயிலாடுதுறை அரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.);
9)
பண்டை வினைகள் பறைய, எமபடர்கள்
அண்டும் அவலநிலை அற்றுய்யத் - தொண்டர்க்குத்
தண்டமிழ்த்தேன் தந்தஉழ வாரப் படையாளி
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
பண்டைவினை - பழவினை;
பறைதல் - அழிதல்;
எமபடர் - எமதூதர்;
தண்டமிழ்த்தேன் - தண் தமிழ்த் தேன் -- குளிர்ந்த தேன் போன்ற தேவாரம்;
உழவாரப் படையாளி - உழவாரப் படையால் திருக்கோயில்களைத் தூய்மை செய்து தொண்டுபுரிந்த திருநாவுக்கரசர்; (உழவாரப்படை - உழவாரம் - புல் செதுக்கும் கருவி);
10)
உலகம் இருள்நீங்கி உய்யவருஞ் சைவம்
நிலவத் தமிழும் நிலவ - நிலவணிவான்
தொண்டிற் சிறந்த திலகவதி தம்பியின்தாள்
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
உய்யவருஞ் சைவம் - உய்ய, அரும் சைவம்;
உலகத்தோர் அறியாமை நீங்கி உய்யவும், சைவநெறி தழைக்கவும், தமிழும் தழைக்கவும், சந்திரனைச் சூடிய சிவபெருமானது தொண்டில் சிறந்த திலகவதியாரின் தம்பியான திருநாவுக்கரசரின் திருப்பாதம் என்றும் என் உள்ளத்துள் உண்டு.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment